|
தென்றல் பேசுகிறது... |
|
- |மே 2018| |
|
|
|
|
தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று வர்ணித்துப் பெருமிதம் கொண்டிருந்த காலங்கள் உண்டு. இன்றைக்குப் பாரத நாட்டின் மிகப்பெரிய அல்லாவிட்டாலும் மிகநீண்ட போராட்டக்களம் ஒன்று உண்டென்றால் அது தமிழகம்தான். ஒரு கொள்கை அல்லது செயல்பாட்டை எதிர்க்கவோ, ஏதோ ஒரு நடவடிக்கையை எதிர்நோக்கியோ உரியவர்களின் கவனத்தை இழுப்பதற்கானதோர் உத்திதான் 'அறப்போராட்டம்'. போராட்டங்களும், போராளிகளும் தேவைதான். ஆனால், தெருவில் இறங்கிப் போராடுவதே வாழ்க்கை என்று ஆகிவிடுவது மிகத்தவறு. கல்லூரிகள் எல்லாம் மாறுபடும் கட்சிகளின் பாசறைகள் ஆகிவிடுவதும் நாட்டுக்கு நல்லதல்ல. சோற்றுக்கும் துணிக்கும் (பிற போதைகளுக்கும்) போராட்ட வருவாயை நம்பி நிற்கும் ஒரு தொழில்துறையை ஏற்படுத்துவதும் மிகவும் வருத்தத்துக்கு உரியது. தொழில்கள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு விரட்டப்படுகின்றன. விரட்டிய பின்னர் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது என்று புலம்பிப் பயனில்லை. உண்மையான விழிப்புணர்வென்பது வெற்று மார்தட்டல் அல்ல; மாறாக, தனிமனிதன் மற்றும் சமுதாயத்தை அறம்சார்ந்த வளமைக்கு, வாழ்முறைக்கு இட்டுச்செல்லும் சிந்தனை மற்றும் செயல்திட்டத்தை வளர்த்தெடுப்பது ஆகும். தலைவர் வேடம் பூண்டு வலம்வரும் வெற்றுப் பேச்சாளிகள் சுயநலத்தின் காரணமாக மக்களை எப்போதும் கொதிநிலையிலேயே வைத்திருத்தல் விரும்பத் தக்கதல்ல. ஊடகப் பரவல் எவ்வளவு அறிவை வளர்க்கிறதோ அவ்வளவே அறியாமையையும் வளர்க்கிறது என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது. நாம்தான் விழிப்போடு இருக்கவேண்டும். இல்லையென்றால் பத்தாண்டுக் காலப் பிழை நூற்றாண்டுக் கணக்கில் நமக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிடும். விழித்துக் கொள்வோம்!
*****
நியூ ஜெர்சியில் மே மாதம் 26, 27ம் நாட்களில் நடக்கவிருக்கும் தமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 44வது மாநில மாநாடு சிறப்பான வெற்றி அடையத் தென்றல் வாழ்த்துகிறது.
***** |
|
அந்த இளைஞர் தந்தையின் முகத்தையே பார்த்ததில்லை. தாயார் கூலிவேலை செய்பவர். கல்வி என்பதோ முடவன் விரும்பிய கொம்புத்தேன். தன்னுடைய ஆர்வமும் திறமையும் ஓவியத்தில்தான் என்பதை அறிந்துகொண்டார். விடாப்பிடியாக அதைத் தொடர்ந்தார். எத்தனை இடர்களுக்கிடையே அவர் வெற்றிபெற்றார் என்பதை அறிவது இளையோருக்குப் பாடமாகவும் பெரியோருக்கு வியப்புத் தருவதாகவும் அமையும். அந்த ஓவியர் S.R. வெங்கடேசன். அவரது நேர்காணலைத் தருவதில் தென்றலுக்குப் பெருமை. ரங்கோலிக் கலைஞர் மங்களம் ஸ்ரீனிவாசன், எழுத்தாளர் கோமகள் பற்றிய கட்டுரைகளுடன், சற்றே மாறுபட்ட, இனம்புரியாத உணர்வைத் தூண்டும் குறுநாவல் ஒன்றும் இவ்விதழில் உண்டு. வாருங்கள், வாசியுங்கள்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்போம்!
தென்றல் குழு
மே 2018 |
|
|
|
|
|
|
|