Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கண் திறந்தது
- வசுமதி ராமசாமி|டிசம்பர் 2017|
Share:
பெரியசாமியின் வீட்டில் அமைதி நிலவியது. வீட்டுக்கு முன்னால் இருந்த புளியமரத்தடியில் எப்போதுமே பாறைகள் குவிந்து கிடக்கும். ஏன், இன்னும்தான் ஏதோ இரண்டொரு பாறைகள் கிடக்கின்றன. அவற்றின்மேல் புளியமரத்துப் பழுத்த இலையும், புளியும் ஓடும் உதிர்ந்து கிடக்கின்றன. கல்லைச் செதுக்கும் மங்கள ஒலி மறைந்துவிட்டது. கல்லை உளி துளைக்கும் பொழுது பறக்கும் நெருப்புப் பொறிகள் அணைந்து விட்டன.

ஆட்கள் பாறைகளைச் சுமக்க முடியாமல் சுமந்து பாடிக்கொண்டே போவார்களே, அந்த ஒலி எங்கேயோ கேட்கிறது. பெரியசாமியின் வீட்டுக்கு அருகில் கேட்கக் காணோம். அவன் வீட்டிலிருந்து எத்தனை எத்தனை தெய்வங்கள் உயிர்பெற்றுக் கோயில்களில் குடிகொள்ளப் போயிருக்கின்றன! எத்தனை எத்தனை சிற்பங்கள் ஆலயங்களின் மேல் மண்டபத்தை அலங்கரித்திருக்கின்றன!

பெரிய பற்களைக் காட்டிக்கொண்டு வாய்திறந்து நிற்கும் சிங்கங்கள், யாளிகள், பின்னங்காலைச் சாய்த்து, முன்னங்காலை நீட்டிக்கொண்டு பாயும் குதிரைகள், அசைந்து வரும் யானைகள் இப்படி எத்தனையோ, பாருள்ள அளவும் விளங்கும் கற்கோயில்களாக இருக்கின்றன! பிரமனை வெற்றி கொண்டவனல்லவா பெரியசாமி! பிரமனின் படைப்பிலாவது அழகும் உண்டு, அவலட்சணமும் உண்டு. பெரியசாமியோ எல்லையற்ற அழகுத் தெய்வங்களைப் படைத்து இருக்கிறான். எத்தனை லிங்கங்கள், அம்பிகை, நவக்கிரகம், கணபதி… எண்ணி முடியுமா? ஏட்டில் அடங்குமா? அவன் மற்றவர்களைப்போல் கோயில் பிரகாரத்தில் சிலை செய்யவில்லை. தொலைவில் உள்ள மற்ற ஊர்களுக்கும் கூடத் திருப்பணி வேலையை மேற்கொண்டிருந்ததால், அவன் வீட்டு வாயிலில் உள்ள புளியமரத்தடியே அவனுக்குக் கல் பட்டறையாக இருந்தது.

இன்று சிற்பி பெரியசாமி மறைந்து விட்டானா? அப்படியிருந்தால் பரவாயில்லையே! அது இயற்கையின் நியதிதானே? அதே பெரியசாமி தளர்ந்த உடலுடன் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான். ஊர், உலகமெல்லாம் 'பெரியவர், பெரியவர்' என்று மரியாதை செலுத்தும் பெரியசாமி இன்று சிறியவனாகி விட்டான். அந்த நினைப்பைப் பெரியசாமியினால் தாங்க முடியவில்லை. 'எனக்கும் இப்படிச் சிறுமையா?'

சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு வரையில் அவன் இருபத்தைந்து வயதுக் காளையின் பலத்தோடுதான் இருந்தான். கல்லைக் கடவுளாக வடித்து, வானளாவிய கோயில்களுக்குக் கொடுத்த மேதையாகத்தான் திகழ்ந்தான். தெய்வம் பெரியசாமியைப் படைத்தது. பெரியசாமியோ நூற்றுக்கணக்கான சாமிகளைப் படைத்தான்.

இறுகிப் போய்க் கல்லாக வந்ததைக் கருணை நிறைந்த, கனிந்த கடவுளாக அமைத்துக் கொடுத்த பெரியசாமியின் பெருமையெல்லாம் எங்கே? எழுபது வயதை எட்டிப் பார்க்கும் அவனுக்கு இத்தனை காலமும் உடல் தளர்ச்சி என்பதே இல்லை. ஆனால், மூன்றே மாதங்களுக்குள் கல்லைச் செதுக்கிய, அவனது உருண்டு திரண்ட தோள்கள் சரிந்து விட்டன. கல்லில் கடவுளைத் தேடிய கண்கள் குழிவிழுந்து, நீல மணிகள்போல ஒளி இழந்து இருந்தன. தெய்வத்தை வடித்து, காய்த்துப்போன விரல்கள் முரமுரத்துப் போய்விட்டன. மூன்று மாதங்களுக்குள் முப்பது ஆண்டுகளின் முதுமையை அடைந்து விட்டான்!

இன்றையச் சிறுமையான நிலையை அவனால் சிந்திக்க முடியவில்லை. அடுத்துக் கலா காமேசுவரி ஆலயத் திருப்பணி கோலாகலமாக நடக்கவிருக்கிறது… ஆனால்… துயரம் நெஞ்சைப் பிளந்தது. கையால் தடவிக்கொண்டு நிமிர்ந்தான். மனம் எழும்பியது. "நான் வருந்த மாட்டேன், ஏன் இன்பத்தை இழக்க வேண்டும்? உங்களுக்கெல்லாம் என்னைப்போல் இன்பத்தில் லயித்திருக்கத் தெரியாது எனக்குச் சக்தியிருக்கிறது" என்று மற்ற உறுப்புகளைப் பார்த்து மார்தட்டியது மனம்.

மனவேகம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்றது.

கைலாஸபுரத்தில் ஆலகால சுந்தரர் கோயில் திருப்பணி. செட்டியார் குடும்பத்துக் கைங்கரியம், பெரியசாமியின் கைராசி பிரசித்தமானது. முதலில் பூசை செய்து, கற்பூரம் ஏற்றி, பூசணிக்காய் உடைத்து, பெரியசாமி தன் சகாக்களுடன் வேலையை ஆரம்பிப்பதைப் பார்த்தாலே புல்லரிக்கும். பெரியசாமியின் முன்னோர் தமிழ்நாட்டின் கோயில்களைக் கல்லில் செதுக்கிய மேதைகள். அவன் நரம்புகளில் பரம்பரையாக வந்த தொழில் துடித்துக் கொண்டிருந்தது.

ஆலகால சுந்தரர் கோயில் நிர்மாணம் பெரியது. ஐந்து ஆண்டுகள் இரவும் பகலுமாகக் கற்கள் சிலைகளாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன. கல்யாண வயதை அடைந்த ஒரே மகனுக்குக் கால்கட்டுக் கட்ட எண்ணிய பெரியசாமியின் பெற்றோர் பிடிவாதமாக அவன் மாமன் மகள் வள்ளியை மணம் முடித்து வைத்தார்கள். காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஒன்று போக ஒன்று வேலை இருந்து கொண்டேயிருந்தது. தெய்வத்துடன் வாழ்ந்த பெரியசாமிக்குக் குடும்ப வாழ்க்கை நடத்த நேரம் இல்லை. வள்ளியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட அவனுக்குப் பொழுது இல்லை.

வள்ளி அவன் பின்னால் ஆவல் ததும்ப வந்து நிற்பாள். இளம் உள்ளத்தில் எத்தனை எத்தனை இன்ப நினைவுகளோ?

"இதோ பாரு, வள்ளி! கல்லு நல்ல வாட்டமா இருக்குது. முருகப் பெருமானுடைய வள்ளி நாயகியை இதில் செதுக்கப் போகிறேன். அப்புறம், ஷண்முகநாதர், தெய்வயானை அம்மாள் இப்படி. போ, போ வள்ளி. வேலையைப் பாரு. உன்னோடு பேசினால் என் கை வேலை தடுமாறும்" கல்லைப் பார்த்துப் பேசிய வண்ணமே பெரியசாமி வள்ளியைப் பாராமல் அனுப்பி விடுவான்.

இந்தக் காலத்துப் பெண் இல்லையே வள்ளி! கண்களில் நீர்முட்ட, தலைப்பை வருடிக்கொண்டு போய்விடுவாள். இப்படியே சில ஆண்டுகள் ஓடி விட்டன. திருநீலகண்டர் தாம்பத்தியம்தான்.

புது கண்டாங்கிச் சேலை; அள்ளிச் செருகின கொண்டையில் பூ முடிந்திருந்தாள். காதிலே தண்டட்டி, காலிலே கொலுசு, கழுத்திலே கருகமணி.

"நான் எப்படி இருக்கேங்க?" இவ்வலங்காரத்துடன், பின்னால் வந்து நின்ற வள்ளி கேட்டாள்.

திரும்பினான் பெரியசாமி.

அப்பொழுதுதான் அவன் கண்களுக்கு வள்ளியின் அழகு தெரிந்தது. ஏற இறங்கப் பார்த்தான்.

"வள்ளி! தவத்தைக் கலைக்கிற மாதிரி நிக்கிறியே! ஓகோ! இன்னிக்கி தீபாவளி நாளா! ஆறாம் நாளு என்னப்பன் சூர சம்ஹாரம் செய்கிற நாள். அதுக்குள்ளார அவன் முழு உருவத்தையும் செதுக்கி விடணும். நீ இப்படித் தடங்கல் செய்யாதே வள்ளி!"

"இல்லீங்க!" வள்ளிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்த தைரியத்தையெல்லாம் எப்படியோ திரட்டிக்கொண்டு, "என்னங்க, அந்தச் சிங்கார வேலனேகூட எப்பவும் இரண்டு பெண்சாதியுடன் இருக்கிறாரு. நீங்க என்னடான்னா இப்படி என் நெனப்பே இல்லாம இருக்கீங்களே!" என்றாள்.

பெரியசாமி திடுக்கிட்டான். வள்ளி சொல்வது உண்மைதானே? மனதில் ஒரு குழப்பம்.

அவனைப் புரிந்துகொண்ட வள்ளி "எனக்கும் வயசு ஏறிக்கொண்டே போவுது. உங்க கையைப் பிடிச்சு மாமாங்கம் ஆச்சுது!" என்றாள்.

"இதோ பாரு, வள்ளி! குன்றக்குடி கோயில் முடிந்து வேலனை அற்புதமாகப் பிரதிஷ்டை செய்த பிறகுதான் எனக்குக் குடும்ப நெனப்பு…"

காய்ச்சி உருக்கிய இரும்பு, வார்த்த பிறகு இறுகுவது போல் பெரியசாமியின் இளகின மனம் மறுபடியும் இறுகுவதை உணர்ந்தாள் வள்ளி.

பெரியசாமி சொன்ன பிரகாரம் குன்றக்குடி வேலனும் கோயில் கொண்டான். பிரதிஷ்டை ஆகி விபூதி அபிஷேகம் ஆயிற்று. அர்ச்சகர் விபூதி அபிஷேகம் செய்து கண்களைக் கையால் துடைத்து விட்டார். கண்களில் கருணை வழிந்தது. திருவாயில் புன்னகை மலர்ந்தது.

பெரியசாமி மெய்மறந்தான். அவன் செதுக்கிய சிலை தெய்வ சாந்நித்தியம் பெற்றுத் திகழ்ந்தது.

கிணற்றில் விழுந்து மூழ்கின சாமானைத் தேடி எடுத்து வருபவன் தண்ணீர் மட்டத்துக்கு வந்ததும் ஒருமுறை தலையைச் சிலுப்பிக் கொள்வதுபோல் அவன் மனம் ஆழ மூழ்கி எழுந்தது. அவன் உடல் சிலிர்த்தது.

"குவா, குவா..."

"கருங்கல்லும் இரும்பு உளியும் உராயும் ஒலியைத் தவிர வேறு ஒன்றையும் கேட்டறியாத அவன் செவிகளில் இந்த இனிய குரல் நிறைந்தது. உடம்பு புல்லரித்தது. வானை நோக்கிக் கரம் குவித்தான்.

வழக்கம்போல் சிலையை உருப்படுத்திக் கொண்டிருந்தான். பகல்நேரம். பக்கத்து வீட்டுப் பாட்டி, "வள்ளிக்கு ஜன்னி கண்டுவிட்டது; வைத்தியரை அழைத்து வா" என்றாள். அவள் குரலில் ஒரே பதற்றம். பெரியசாமி பேந்தப்பேந்த விழித்தான். இவனைச் சொல்லிப் பயனில்லை என்று பாட்டி ஊர்க்காரர்களை ஏவி வைத்தியரை வரவழைத்தாள்.

மாலை மயங்கும் நேரம். கதிரவன் தன் சிவந்த மேனியை மறைக்கக் கடலும் வானமும் தொடுமிடத்தில் குதித்தான்.

பக்கத்து வீட்டுப் பாட்டி பரபரப்புடன் ஓடிவந்து, "பெரியசாமி! உள்ளே வா, குடி முழுகிப் போச்சு! வள்ளி கல்லைப் புரட்டிவிட்டாள்!" என்று கத்தினாள்.

"கல்லைப் புரட்டினாளா? ஒவ்வொரு நாளும் நானல்லவா கல்லைப் புரட்டிப் போடுகிறேன்? உளியால் அடித்து உருவத்தைப் பொறிக்க, மாற்றி மாற்றிப் புரட்டுகிறேனே!" சிந்தனையுடன் பெரியசாமி உள்ளே நுழைந்தான்.

வெள்ளி போன்ற வள்ளி உடல்வாடிக் கிடந்தாள். பெரியசாமியின் கண்களால் அவளைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை. கண்களில் நீர் முட்டியது. அருகில் உட்கார்ந்து நெற்றியில் அலையும் அவள் தலை மயிரைக் கோதினான்.

"என்னங்க, குழந்தை நீங்க செய்கிற சிலை மாதிரியே அழகாக இல்லை?" அந்த நிலையிலும் இப்படிக் கேட்கும்போது வள்ளிக்கு வெட்கம்!

பெரியசாமி துக்கம் தொண்டையை அடைக்க, "வள்ளி!" என்றான்.

"நான் வந்த வேலை முடிஞ்சு போச்சு, குழந்தையையாவது நல்லா கவனிச்சுக்குங்க" என்றாள் வள்ளி.

வந்த வேலை முடிஞ்சு போச்சா? இது என்ன தத்துவம்? பெரியசாமி ஒரு பக்கம் தூங்கும் குழந்தையை உற்றுப் பார்த்தான்.

கூடியிருந்தவர்கள் பெரிதாகக் கத்திய போதுதான் வள்ளி பறந்து விட்டாள் என்பதை அறிந்தான். அன்று காலையில்தான் ஒரு பூ மலர்ந்தது. மாலையில் மற்றொன்று வாடிவிட்டது. ஒன்றைக் கொண்டுவர இன்னொன்று உயிரை இப்படித் தியாகம் செய்ய வேணுமா? இரண்டையும் சேர்த்து நினைக்கும்போது நினைவிழந்து விட்டான் பெரியசாமி.

இந்த நினைவிலிருந்து மனம் தாவியது. பிறகு எத்தனை எத்தனை கோயில்கள் நிர்மாணம் செய்தான்? ஆனால், ஒவ்வொரு தடவையும் வேலன் சிலை செய்யும்பொழுது மட்டும் வள்ளியின் நினைவு வர உளியை விட்டெறிந்து விட்டு வெகுநேரம் வரையில் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந்து விடுவான்.

குழந்தை வேலம்மாள் நடக்கும் பொற்சிலையாக இருந்தாள். நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பிறந்தவள், தாயில்லாக் குழந்தை என்பதால் மட்டும் பெரியசாமி அவளைச் செல்லமாக வளர்க்கவில்லை. அவளது துறுதுறுத்த முகமும், மாணிக்கப் பரல்கள் உதிர்வது போன்ற மழலைப் பேச்சும், சிலை போன்ற அழகும் பார்ப்பவர் மனத்தைப் பறிப்பவை. பெரியசாமி சிலையைச் செதுக்கும்போது, முழங்காலில் கையை ஊன்றிக் கொண்டு ஆர்வத்துடன் பார்ப்பாள்.

"தள்ளிப் போம்மா. கல் தூள் கண்ணில் தெறித்துவிடும்."

"உனக்கு மட்டும் தெறிக்காதாப்பா?" பெரியசாமி பதில் சொல்லமாட்டான். குழந்தையை வாரி அணைத்துக் கொள்வான். ஒவ்வொரு சிலையும் பூர்த்தியானதும் வேளை பார்த்து, நாழி பார்த்துப் பூஜை செய்து கண் திறப்பான்.

பெரியசாமியின் மனம் இன்னும் பின்னோக்கிச் சென்றது நினைத்ததையே நினைப்பது மனதுக்குப் பிடிக்காததுதானே? நாற்பது ஆண்டுகளுக்கு முன் அங்கயற்கண்ணி ஆலயத்தின் புனருத்தாரணப் பணி நடந்தது. அப்பொழுது கோபுரத்து பொம்மைகளையெல்லாம் புதுப்பித்தான். இலக்கியங்களை யெல்லாம் நிறைபோட்ட பொற்றாமரைப் படிகளைச் சீர்திருத்தினான். ஏன், மீனாட்சி–சொக்கநாதர் கோயில் நிர்மாணத்தையே தான் செய்யக் கொடுத்து வைத்தது போன்ற பெருமையில் மூழ்கினான். அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நிறைவேறியது. கோயில் நிர்வாகிகள் அவனுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமைப்படுத்தினார்கள். 'மயன்போல் செய்திருக்கிறாய்' எனப் பாராட்டினார்கள். இன்றுகூட அந்தப் பொன்னாடை பெட்டியில்தான் இருக்கிறது. மக்கி விடவில்லை. ஏன், அந்த எண்ணமும் பசுமையாகத்தான் இருக்கிறது!

சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் அங்கயற்கண்ணி ஆலயத் திருப்பணியில் பெரியசாமியின் பாட்டனார்தான் சிற்ப வேலைகளெல்லாம் செய்தார். எந்தக் காலத்திலோ, எப்பவோ முக்குறுணிப் பிள்ளையாரைக் கூடப் பெரியசாமியின் முன்னோர்களேதான் செய்தனர் என்று அவன் பெருமிதம் அடைந்திருக்கிறான்.

ஆனால், இன்று கலாகாமேசுவரி ஆலயம் செப்பனிடப்பட்டுச் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கின்றது. அறுபத்துநான்கு கலைகளும் களியாடும் கலாகாமேசுவரி ஆலயத்தில் தன் கையால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே! முடியவில்லையே? இரண்டு கைகளையும் ஆத்திரத்துடன் உதறிக் கொண்டான்.

"பெரியசாமி! உனக்கு வயதாகிவிட்டது. உன் கையினால் வழக்கம்போல் ஆரம்பம் செய்துவிடு. சிற்பக் கலையை முறைப்படி கற்றுத் தேறின ஓர் இளைஞன் வந்திருக்கிறான். அவன் நம் கோயில் மூர்த்திகளை அழகாகச் செய்துவிடுவான்" என்றார் கோயில் நிர்வாகி.

"சாமி! என் உடலில் வலு இருக்கிறது. இந்தத் தடவை என் கையாலேயே செய்துவிடுகிறேன்."

"வேண்டாம்பா. உனக்கு எல்லாம் பூர்த்தியான பிறகு சன்மானம் கொடுத்து விடுகிறோம். நீ இனிமேல் இந்த வேலை செய்ய வேண்டாம். வயதாகிக் கை நடுக்கம் கண்ட பிறகு உளியைப் பிடித்து, வேலை செய்தால் உருவத்தில் குறை ஏற்பட்டு விடும். அது ஊருக்குக் கெடுதல். நீ இதுவரையில் செய்ததே போதும்" என்றார் கோயில் நிர்வாகி.

பெரியசாமியின் மார்பில் சுரீர் என்ற வலி. கண்களிலிருந்து பொங்கிய கண்ணீர் சுடுநீர்ச் சொட்டுகளாகக் கைகளில் உதிர்ந்தன.

வேண்டாம் என்று சொன்னதுகூட அவன் மனதில் உறுத்தவில்லை. 'உனக்குச் சன்மானத்தைக் கொடுத்து விடுகிறோம்', அதைவிட 'நீ செய்தால் ஊருக்குக் கெடுதல்' இவை என்ன வெறும் சொற்களா? பொங்கிப் பொங்கி அழுதான். "ஐயனே! எத்தனை கோயில்களில் நீ குடிகொண்டிருக்கிறாய்? இந்தக் கையால் எவ்வளவு உருவங்களைச் செதுக்கி இருக்கிறேன்? ஊரை வாழ வைக்கும் தெய்வமாக இருக்கிறாயே, அம்பிகே!" என்றெல்லாம் பொருமினான்.

உச்சிக்காலம். கோயில் மணி ஒலித்தது. இவ்வளவு காலமாக 'ஓம் ஓம்' என்று ஒலித்த ஒலி இன்று அவனுக்காக அழுதது.

"அப்பா! இந்நேரமும் உச்சி வெயில்லே உட்கார்ந்திருக்கிறியே சாப்பிட வாப்பா" வேலம்மாளின் குரல் கேட்டு உணர்வு பெற்றான் பெரியசாமி.

'கல் கல்' என் கல் உளிச் சத்தம் காதுகளில் ரம்மியமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. வண்டி வண்டியாகப் பெரும் பாறைக்கற்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. எங்கே! பெரியசாமியின் வீட்டு வாசலிலா? இல்லை, புதிய சிற்பி பாலசுந்தரத்தின் வீட்டு வாசலில்! கலாகாமேசுவரியின் ஆலயத் திருப்பணி மும்முரமாகத் தொடங்கிவிட்டது. பெரியசாமி புறக்கணிக்கப்பட்டு விட்டான்.

அந்த ஏக்கமே அவன் கை கால்களைச் சோர வைத்துவிட்டது, மனத்தைக் கலங்க அடித்துவிட்டது.

இரவு பத்து மணியிருக்கும். பால் பொழிவது போன்ற முன்னிலவு. அந்த நேரம் கற்பாறையின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். ஆறுமுகம் சிலை முடிந்துவிட்டது. கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.

"ஐயா..!" பாலசுந்தரம் திரும்பினான். வேலம்மா இடுப்பில் கையை வைத்துக்கொண்டு மிடுக்காக நின்றாள்.

பாலசுந்தரம் வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்தான். அந்தப் பால் நிலவில் அவள் மோகினிபோல் தோன்றினாள். கொஞ்ச தூரத்தில் போடப்பட்டிருந்த கல்லின் மேல் இரண்டு பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

வேலம்மா இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக்கொண்டு "ஏன் அப்படிப் பார்க்கிறே? தலைமுறை, தலைமுறையாய்ச் சிலை செய்த எங்க குடும்பம் இருக்கும்போது இங்கே ஏன்யா வந்தே? பெரியவர் மனசு நோக அடிச்ச பாவம் உன்னை விடுமா?" என்று கேட்டாள்.

"இதோ பாரு நான் இந்தத் தொழிலைக் கற்றுக்கிட்டேன். செய்யறேன். உங்கப்பாவின் மனதை நோகச் செய்யணும்கிற நோக்கம் எனக்கு இல்லை. அவர் ஓய்ந்த மனிதர். ஐம்பது வருஷமா தொழிலை நடத்திட்டாரு. இனிமேல் சின்னவங்க பிழைக்கணும்னு விட்டுக் கொடுக்கலாம் அல்லவா?" பாலசுந்தரம் அமைதியாகக் கேட்டான்.

வேலம்மா சீறினாள்: "என்ன எங்கப்பா தொழிலா நடத்தினாரு? கல்லையெல்லாம் கடவுளா ஆக்கினாரு. அவரா ஓய்ந்த மனிதர்? நீயும் சாமி செய்யறியே? எங்கப்பா செய்யறதுக்கு காலிலே கட்டி அடிக்கணும்!" ஆத்திரத்தில் வேலம்மா சொற்களைக் கொட்டிவிட்டாளே தவிர, பாலசுந்தரம் செய்த சிலைக்குத்தான் என்ன குறைச்சல்? அழகு சொட்டுகிறது! அவள் மனத்தில் இப்படி ஓர் எண்ணமும் தலை தூக்கியது.

மறுநாள் முன்னிரவு. காற்று வீசியது. உயர்ந்த தென்னை மரங்கள் ஆட்டமாய் ஆடின. பாலசுந்தரத்தின் மனம் அலை பாய்ந்தது. அன்று ஷண்முகநாதன் கண்கள் திறக்கப்பட்டன. ஆனால், முகம் பயங்கரமாகிவிட்டது. ஏற்றத் தாழ்வான விழிகள்! கருணை பொங்க வேண்டிய கண்களில் கனல் வீசியது. சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணைப் போல் இருந்தது.

பாலசுந்தரத்தின் மனதில் இனம் தெரியாத சங்கடம். கோயில்காரர்கள் வந்து பார்த்தால் இந்தச் சிலையை ஒத்துக்கொள்ள மாட்டார்களே! நேற்று வரையில் எழில் பொங்கி வழிந்த சிலையில், இன்று இப்படிப்பட்ட அவலட்சணமா? உளியை வீசி எறிந்தான். கையைத் தேய்த்துக் கொண்டான். தன்னை மறந்து தனக்குத்தானே பேசினான்.

"முருகன் சிலையா, பத்ரகாளி உருவமா?" என்ற குரலைக் கேட்டதும் திடுக்கிட்டான். வேலம்மாள் ஏளனச் சிரிப்புடன் அலட்சியமாக நின்றாள். பாலசுந்தரத்தின் உடல் அவமானத்தினால் குன்றியது.
"நேற்றுவரையில் அழகாய்த்தான் இருந்தது. நீ கொடுத்த சாபந்தான் இப்படி ஆகிவிட்டது."

அவன் பேச்சில் இருந்த வேதனையும் குறையும் கண்டு வேலம்மாளின் மனமே கரைந்தது. பாலசுந்தரத்தின் கவலையில் தனக்குப் பங்கு உண்டு என்ற உணர்வு முதன்முதலாக ஏற்பட்டது. ஒருவர் கஷ்டப்படும்போது குத்திக் காட்டலாகாது என்று நொண்டிச் சமாதானம் செய்துகொண்டாள். ஆனால் தன் மனம் மாறுகிறது என்பதை அவளால் ஏற்க முடியவில்லை. "கோயிலில் சிலையைக் கொண்டு வைக்க இன்னும் எவ்வளவு நாள் இருக்கு?"

"இன்னும் ஒரு பொறையில் வைக்கணும். ஏன், நீ செய்து கொடுத்து விடுவியோ?" என்று சற்று ஏளனமாகவே கேட்டான் பாலசுந்தரம்.

"ஆமாம். நீங்க நல்லா செய்வதற்கு உதவியாக இருப்பேன்."

"சாபம் கொடுக்கமாட்டேல்ல? அதுவே போதும்."

"நடக்கிற வேலையைப் பாருங்க. அதோ ஒரு கல்லு தெரியுதே, அதை இப்பவே இந்த நிலவிலேயே செதுக்க ஆரம்பியுங்க."

பாலசுந்தரம் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது போல் உளியை எடுத்துக்கொண்டு போய்க் கல்லின் மேல் உட்கார்ந்தான்.

பன்னிரண்டு நாட்கள் ஓடின. பாலசுந்தரம் இரவு தூக்கத்தைத் துறந்தான். சாப்பாட்டை மறந்தான். கல் செதுக்கும் சத்தம்தான்.

வேலம்மா இரண்டு வேளையும் வந்து பாலசுந்தரம் வேலை செய்வதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். பாலசுந்தரத்துக்கு வேலம்மா நின்று பார்ப்பதே யானை பலமாக இருக்கும்.

பதினான்காம் நாள் இரவு. சிலை முடிந்து விட்டது. இரவு இருள் கவிந்து கொண்டிருந்தது. அதனிடையே கருங்கல்லை வெண்கல்லாக ஆக்கி, அதிலே முருகனின் திரு உருவம் அழகெல்லாம் உருவெடுத்து வந்ததுபோல் இருந்தது. "வேலம்மா! நாளைக் காலையிலே கண் திறக்கப் போகிறேன். நீ வந்து பாரு."

"ஆமா, நாளைக்கு நிறைஞ்ச நாளு அமாவாசை. தேங்காய் உடைச்சு, கற்பூரம் ஏற்றிப் பூசை செய்து சாமியின் கண்களைத் திறங்க! 'உங்க அந்தக் கருணைக் கண்கள் உலகத்தையெல்லாம் காப்பாத்தணும்'னு வேண்டிக்குங்க."

"வேலம்மா! அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கல் கொத்தர்கள் முன் காலத்தில் கண் திறக்கணும்னு ரூபாயை வாங்கிச் சாப்பிடுவார்கள்! இந்த மூடப் பழக்கமெல்லாம் எனக்குப் பிடிக்காது."

"என்ன சொன்னீங்க அன்று பூசை செய்யாமல் கண் திறந்ததால்தான் சிலையே பாழாய்ப் போயிடுச்சு."

பாலசுந்தரத்துக்கு ஒரு நிமிஷம் அது உண்மையாகத் தோன்றியது. ஆனால், அதை மீறி ஆணவம் தலை எடுத்து மறுத்தது. "நான் அவசரப்பட்டுச் செய்துட்டேன். சின்ன உளி வைத்து இலேசாகத் தட்டியிருக்கணும். இந்தத் தடவை பாரு, பூசையும் வேண்டாம். இப்ப அது கல்தானே? கோயில்லே வைத்தால்தானே தெய்வம்?" என்றான்.

வேலம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பெரியசாமி சிலையைச் செதுக்கும்போதே எவ்வளவு பக்தியாகச் செய்வான்? அந்த சூழ்நிலையில் ஊறின அவளுக்குப் பாலசுந்தரத்தின் பேச்சு வேம்பாக இருந்தது. வேலம்மாவுக்கு இரவு முழுவதும் தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்தாள்.

மறுநாள் பகல் வேலம்மா ஆவலுடன் முருகன் சிலையைப் பார்க்கப் பாலசுந்தரத்தின் வீட்டுக்கு ஓடினாள்.

"வேலம்மா! எவ்வளவு அழகா இந்தச் சிலை அமைந்துவிட்டது?" என்று பெருமிதத்தோடு சொன்னான் பாலசுந்தரம்.

"ஆமாங்க, எல்லையற்ற அழகுதான். வேல் முருகன் வீரனல்லவா? கம்பீரமாக இருக்கிறான்."

"வேலம்மா, எனக்கு ஓர் ஆசை. உங்கப்பாவை இன்று பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும். எவ்வளவு பெரியவங்க!"

"இத்தனை நாட்களும் இல்லாத திருநாளாக இன்றைக்கு அவர் உங்களுக்குப் பெரியவங்களாகத் தோன்றக் காரணம் என்ன?"

"அது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்."

ஆணவம் ஒலிக்கப் பேசியவனுக்கு ஆண்டவன் நினைப்பா? வியந்தாள் வேலம்மா.

"வீட்டுக்கு வாங்க. அவரைப் பார்க்கலாம்" என்று அழைத்துச் சென்றாள்.

அப்பா, அவங்க வந்திருக்காங்க."

"யாரம்மா?"

"அவங்கதான்." - சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்தாள் வேலம்மா.

"வா, அப்பா! நீதான் பாலசுந்தரமா? முருகன் சிலை முடிந்துவிட்டதா?" - பெரியவர் குரலில் இருந்த கனிவு அவன் மனதை உருக்கியது.

"ஆமாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான். உங்க வீட்டிலே இருக்கிற உயிர்ச்சிலைதான் அந்தச் சிலையை வடிக்க உதவி செய்தது. சிலையின் கண் திறந்த நேரத்திலே என் கண்களும் திறந்து கொண்டன."

பெரியவர் சிரித்தார். வேலம்மா விழித்தாள்.

"கஷ்டப்பட்டுச் செய்த சிலை பாழாகிவிடப் போகிறதே என்று உங்கள் மகள் செய்த பூஜைதான்..."

"முருகன் கண்ணைத் திறந்ததாக்கும்!"

"ஆமாங்க, அவள் தவறாமல் என் வீட்டுக்கு வருவதைப் பின்னாலே தொடர்ந்து தொடர்ந்து வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்த நீங்க எல்லாவற்றையும் புரிஞ்சுக்கிட்டீங்க."

"அதனாலே என் கண் திறந்து கொண்டது! இதைத்தானே சொல்லப் போறே?"

"நீங்க எங்க இரண்டு பேருக்குமே தெரியாம உங்க ராசிக் கையால் உங்க ராசிக் கையாலே.." என்று சொன்னதையே சொல்லி வாக்கியத்தை முடிக்க முடியாமல் திண்டாடினான் பாலசுந்தரம்.

"போதும், தம்பி போதும்!" பேச்சை மடக்கி நிறுத்திய பெரியசாமியின் குரல் தழுதழுத்தது.

சில நாட்களுக்குப் பிறகு கலாகாமேசுவரி ஆலயத் திருப்பணி முடிந்து, மேளதாளத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டிய அடுத்த நல்ல வேளையிலே வேலம்மா – பாலசுந்தரத்தின் திருமணமும் விமரிசையோடு நடந்தது. அன்று சிற்பிகளுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க வேண்டிய நேரத்திலே மாமனாருக்கும் மருமகனுக்கும் போட்டி. "கண்ணைத் திறந்தவன் மருமகன். எனவே, அவனுக்குத்தான் பொன்னாடை போர்த்த வேண்டும்" என்றார் மாமனார். மருமகனோ, "கண்ணைத் திறந்தவர் மாமனார்தான். அவருக்குத்தான் பொன்னாடை போர்த்த வேண்டும்!" என்றான்.

இருவர் கண்களையும் திறந்த கடவுள் கனிவு மலர்ந்த கண்களுடன், "கலை முதுமை தட்டுவதில்லை, கலைச் சிற்பங்களைச் சமைப்பவனும் முதியவனாக முடியாது" என்பது போல் முறுவலித்துக் கொண்டிருந்தார்.

வசுமதி ராமசாமி
Share: 




© Copyright 2020 Tamilonline