Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |டிசம்பர் 2017|
Share:
வலை நடுநிலை (Net neutrality) என்பதன் அஸ்திவாரமே ஜாதி, மத, இன, நிற, பால் வேறுபாடுகளும், அரசாங்கக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் எல்லோருக்கும் இணையவழித் தகவல் மற்றும் சேவைகள் மட்டின்றிக் கிடைப்பதுதான். சுவர்களில்லாத பல்கலைக்கழகமாக, தகவல் களஞ்சியமாக, அறிவுச் சாளரமாக, தொடர்புத் துணைக்கரமாக இணையம் இதுநாள்வரை இருந்து வந்துள்ளது. இரும்புத்திரை நாடுகள் தவிர மற்றநாட்டு மக்கள் அத்தகைய சுதந்திர இணையம் தரும் வாய்ப்புகளை அளவின்றி அனுபவித்து வருகிறார்கள். ட்ரம்ப் நிர்வாகத்தில் Federal Communications Commission (FCC) அறிவித்த புதிய நெறிமுறைகள் இந்தத் திறந்தநிலைக்கு உலை வைப்பதாக அமைந்துள்ளது. முதல் அபாயம், வலைச்சேவையை சுயநிர்ணயம் கொண்ட தகவல் சேவை என்ற பிரிவிலிருந்து அதிகக் கட்டுப்பாடுகள் கொண்ட தகவல் தொடர்புப் பிரிவுக்கு மாற்றியதாகும். அடுத்து, வலையில் தகவல் மற்றும் சேவைகளை வழங்குவோர் தாம் வழங்குபவற்றை வகைப்படுத்தி, அவற்றின் நிலைக்கேற்ப விலை வைக்கக் கூறியுள்ளது.

எல்லோருக்கும் எல்லாமும் வலையில் கிடைக்கும் என்கிற நிலைமாறி, இன்ன விலை கொடுத்தால் இது கிடைக்கும் என்கிற பேச்சு எழுந்தவுடனேயே, அங்கே வணிகநோக்கம் தலை தூக்கிவிடுகிறது. இப்போது கிடைப்பதெல்லாம் இலவசம்தானா, விலையை மறைமுகமாகத் தருகிறோமா என்ற விவாதம் எழலாம். ஆனால், விலைக்குத்தான் தகவல்/சேவை என்கிற கட்டாயம் வந்ததும் சராசரி மனிதனுக்கு இணையத்தில் பலவும் எட்டாக்கனி ஆகிவிடுகிற அபாயம் உண்டாகிவிடும் என்பதை மறுக்கமுடியாது. ஏனென்றால் பணமுதலைகள் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்துகொள்வார்கள். இதை நாம் ஒபாமாகேரை ஏற்க மறுத்த மாநிலங்களைக் காரணம் காட்டி, மற்றவர்களுக்கும் ப்ரீமியம் தொகையை மிகையாக உயர்த்திய காலத்திலேயே பார்த்திருக்கிறோம்.

ஐக்கிய தொலைத்தொடர்பு கமிஷனின் இந்தக் காய்நகர்த்தல் சமத்துவ மனம் கொண்ட எவருக்கும் ஏற்புடையதல்ல. அறிவார்ந்தோரால் நிரம்பிய சமுதாயமாக உலகத்தை மாற்றுகிற அளவற்ற சக்தி இணையத்துக்கு இருக்கிறது. காலத்தின் அந்தக் கட்டாயத்தை வணிக அணை போட்டுத் தடுப்பதை நிறுத்தியாக வேண்டும். இதில் நாட்டுமக்கள் அனைவரின் கரங்களும் இணையவேண்டும். இல்லையென்றால் இணையம் கட்டற்ற அறிவுலகமாக இயங்குவது நின்றுபோகும்.

*****
இணையம் மட்டும்தான் என்றில்லை, நெடுநோக்கம் கொண்ட தனிநபர்களும் இந்தியா போன்ற நாடுகளில் கல்வியில் தேக்கமுற்றவர்களுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிட்டு, ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கப் பல்வேறு தன்னார்வப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ராஜஸ்ரீ நடராஜனின் 'கதை ரதம்' (Katha on Ratha) அப்படி ஒரு சிறப்பான முயற்சிதான். கதைகளைச் சொல்லி, அறிவுப்பசியைத் தூண்டுவது நமது பாரம்பரிய வழக்கம்தான். கதை ரதம் அதைத் திட்டமிட்டு, அறிவியல் ரீதியாகச் செயல்படுத்துகிறது. ராஜஸ்ரீயுடனான நேர்காணல் எப்படி ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் தம்மைச் சுற்றியுள்ள பிற்பட்ட ஜனங்களுக்கு உதவலாம் என்பதற்கு நல்ல உதாரணம். கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை மற்றும் வழக்கமான அம்சங்களோடு தென்றல் 18ம் ஆண்டில் முதலடி எடுத்து வைக்கிறது. விளம்பரதார்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பிறருக்கு நன்றிக்கரம் கூப்பியபடி மேலே நடக்கிறது தென்றல். வாருங்கள், சேருங்கள், கொண்டாடுங்கள்.

வாசகர்களுக்கு மிலாடி நபி, கிறிஸ்துமஸ், திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

டிசம்பர் 2017
Share: 




© Copyright 2020 Tamilonline