Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15b)
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2017|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

*****


கேள்வி: ஒரு நிறுவனம் ஆரம்பிக்க என்னிடம் ஒரு பிரமாதமான யோசனை உள்ளது; என்னுடன் சேர ஒரு குழுவும் உள்ளது. ஆனால், "அவசரப்பட்டு மூலதனம் திரட்டாதே; உடனே திரட்டினால் நிறுவனத்தில் பெரும்பங்கு மூலதனத்தாருக்கு அளித்துவிட வேண்டியிருக்கும்; கூடுமானவரை நிறுவனத்தை வளர்த்து, அதன் மதிப்பீட்டைப் பெருக்கிவிட்டு அப்புறம் திரட்டு" என்று தொழில்முனைவோர் சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். வேறு சிலரோ, மூலதனம் திரட்டினால்தான் சரியாக வளர்க்கமுடியும், இல்லாவிட்டால் மிகத் தாமதமாகி, வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்கிறார்கள்! நான் மிகக் குழம்பியுள்ளேன். எது சரி? மூலதனம் திரட்ட எது சரியான தருணம்? (தொடர்கிறது)

கதிரவனின் பதில்: சென்ற பகுதியில், எப்போது மூலதனம் திரட்டுவது என்று தீர்மானிப்பதில் பல அம்சங்கள் உள்ளன; உங்கள் நிறுவன வகை, குழு பலம், வணிகத்துறை, தற்போதைய வளர்ச்சிநிலை (current progress), போன்ற பல அம்சங்களையும் எடையிட்டு எது சரியான தருணம் என்று கணிக்கவேண்டும் எனக் கூறியிருந்தேன்.

இப்போது நிறுவனம் ஸ்தாபித்த உடனேயே மூலதனம் திரட்டுவது எம்மாதிரி சூழ்நிலையில் சரி, நிலைமை எப்படியானால் நிதி திரட்டலைத் தாமதிப்பது நல்லது, இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வழிமுறைகள் என்ன என்பவற்றை அலசுவோம் வாருங்கள்.

முதலில் கூடிய விரைவிலேயே நிதி திரட்டுவதைப் பற்றிக் காண்போம். நிறுவனம் ஆரம்பித்தவுடனேயே, அல்லது ஆரம்பித்துக் குறுகிய காலத்துக்குள் நிதி திரட்டினால், நிறுவனத்தின் மதிப்பீடு குறைவாக இருக்கும். அதனால் மூலதனத்தின் ஒவ்வொரு டாலருக்கும் (அல்லது ரூபாய்க்கும்!) சதவிகிதப்படி, நிறுவனத்தின் அதிக அளவுப் பங்குகளை அளிக்க வேண்டியிருக்கும். அதனால் மூலதனம் நாடுதலைத் தாமதிக்கலாம் என்று தோன்றுவது நியாயமே.

ஆனால், சில அம்சங்களைப் பொறுத்து, கூடிய சீக்கிரமே மூலதனம் திரட்டுவதுதான் சரியான அணுகுமுறையாகும். முக்கியமாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டியது என்னவென்றால், பூஜ்யத்தில் நூறு சதவிகிதம், பூஜ்யந்தான்! (100% of zero is still zero!)

உடனே நிதி திரட்ட உந்தும் மிக முக்கியமான அம்சம் வணிக வாய்ப்புக் காலகட்டம். அதாவது, உங்கள் நிறுவனத்தின் வணிக வாய்ப்பு எவ்வளவு காலம் இன்னும் திறந்திருக்கும் என்பது. ஒரு வணிகத்துறையின் உபதுறை, அது எதுவாயிருப்பினும், முதலில் மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கும். பிறகு பல காரணங்களால் (அவற்றைப் பற்றி இன்னொரு யுக்தியில் விவரிப்போம்), அந்த உபதுறையின் வணிக அளவு வளரும் வேகமே அதிகரிக்க ஆரம்பிக்கும். உங்கள் நிறுவனம் அத்தகைய தருணத்தில் தக்க விற்பொருளுடன் சந்தையில் நுழைந்தால் வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் மூலதனம் திரட்டாத காரணத்தால் ஒரு சிறு குழுவுடன் அல்லது ஓரிரு நபர்கள் மட்டுமே விற்பொருளைத் தயாரிக்க முற்பட்டுக் காலதாமதமானால், விற்பொருள் தயாரான தருணத்தில் வணிக உபதுறை வெகுவாக வளர்ந்து, முதிர்ச்சியடைந்து, வாங்குபவர்களின் விற்பொருள் அம்சங்களைப் பற்றிய எதிர்பார்ப்புக்களும், நிச்சயத் தேவைப்பாடுகளும் (mandatory requirements) வானளாவ உயர்ந்துவிடக் கூடும். இந்த நிலையை, பள்ளத்தாக்கைக் கடந்த நிலை (crossed the chasm) என்பார்கள். அப்போது உங்கள் விற்பொருள் தேவையான அம்சங்கள் இல்லாமலோ, அல்லது "நானும்தான்" (me too) விற்பொருள் ஆகிவிடக் கூடும். குறைபட்ட அல்லது நானும்தான் விற்பொருளுடன் வணிகச் சந்தைக்குத் தாமதமாக நுழைந்து தோல்வியடைந்த நிறுவனங்கள் பலப்பல. அவற்றின் நிறுவனர்கள் பூஜ்யத்தின் நூறு விகிதத்தைத்தான் அடைந்தனர்!
விரைவாக நிதி திரட்டுவதற்கு, மேற்கண்ட காரணத்துக்கு நெருங்கிய ஆனால் வித்தியாசமான ஒரு காரணமும் உள்ளது. மேற்கண்ட சூழ்நிலையில், வணிகச்சந்தை பெரிது, ஆனால் ஒரு சில நல்ல நிறுவனங்கள் அதைக் கூறுபோட்டு தம் விற்பொருட்களை நிலை நாட்டியதால் சந்தை நுழைவு கடினம். இப்போது கூறப்போகும் காரணம் நேரெதிர் என்றுதான் கூறவேண்டும்.

அதாவது, உங்கள் உபதுறையின் சந்தை சிறிதுகாலம் முன்னரே ஆரம்பித்திருக்கும். அத்தகைய இளம் பிராயத்திலேயே பலப்பல நிறுவனங்கள் அச்சந்தையில் நுழைந்து கிடைக்கக்கூடிய சிறு தொகையைப் போட்டி போட்டுப் பெற முயல்வதால், யாருக்கும் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்காது. பல நிறுவனங்கள் மூச்சுத் திணறி மடிந்தபின்பே மீதியிருக்கும் நிறுவனங்கள் சந்தையளவுக்கு ஏற்ப வளர இயலும்.

இம்மாதிரி சிறு சந்தையில் அடிதடி நடப்பதற்கான மூலகாரணம் நீங்கள் முனைந்த உபதுறையில் நுழைவது மிக எளிதாக இருப்பதுதான். தேவையான விற்பொருள் அம்சங்கள் குறைவாக இருப்பதாலும், தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பம் எளிதாக இருப்பதாலும், அந்தத் துறையின் வெற்றி வாய்ப்பைப் பற்றிய மிதமிஞ்சிய பரபரப்பாலும் (excitement and even hype) பல நிறுவனங்கள் விரைவாகக் களமிறங்கக் கூடும். அப்படியானால் மூலதனம்? விற்பொருள் தயாரிப்பு எளிது, விரைவு என்பதால் தேவதை அல்லது விதை நிலை (angel or seed stage) மூலதனத்தாரிடமிருந்து ஓரளவே மூலதனம் பெற்று வேகமாக செயல்படுவார்கள்.

அப்படிச் சிறு சந்தையில் பலர் போட்டியிட்டால், சந்தைக் குழப்பத்தால் விற்பனைக் காலம் கூடி வருமானம் பெறத் தாமதமாகலாம். அல்லது பல நிறுவனங்கள் குறைந்த வாடிக்கையாளர்களையே பெற்று, சந்தைச் சிதறலலால் (market fragmentation) வளர முடியாமல் தத்தளிக்கக் கூடும்.

இத்தகைய தறுவாயில் வெற்றி பெறுவது செயல்பாட்டுத் திறன் விளையாட்டாகிவிடும் (execution game). அப்படியாகக் கூடும் என்று உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் உடனே நிதி திரட்டி, தலைதெறி வேகத்தில் உச்சத் திறனுடன் பெரிய குழுவுடன் செயல்பட்டு, சந்தையில் குறைந்தபட்ச சாத்திய விற்பொருளுடன் நுழையும் முதல் சில நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாக வேண்டும். அப்படியானால் இத்தகைய செயல்திறன் விளையாட்டு நிறுவனத்துக்கு, நிதி திரட்டுவது தாமதமாகக் கூடாதல்லவா? நிறுவனத்தில் சற்று அதிகப் பங்களிக்க நேர்ந்தாலும், பூஜ்யத்தில் நூறு பங்கு என்றாகிவிடாமல், இத்தகைய நிறுவனம் வெற்றி பெறச் சற்றேனும் வாய்ப்பு வேண்டுமானால் உடனே நிதி திரட்டியே தீர வேண்டும். உங்கள் நிறுவனம் இது போன்றா, வேறு மாதிரியா என்பதை நீங்களே முடிவுசெய்து அதற்கேற்றவாறு செயல்படுங்கள்.

அடுத்த பகுதியில், விரைவில் மூலதனம் திரட்டுவதற்கான இன்னும் சில காரணங்களையும், ஏன் தாமதிக்க வேண்டும் மற்றும் இடைப்பட்ட வழிமுறைகள் என்ன என்பனவற்றை அலசுவோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline