பாஸ்டன்: பாரதி வித்யாஸ்ரமம் ஆண்டுவிழா TNF ஜார்ஜியா: கணிதப் பயிற்சி முகாம் சஹா நாதன் நூல் வெளியீடு ஆஸ்டின்: ஹார்வர்டு தமிழிருக்கை டாலஸ்: தமிழர் இசைவிழா அரங்கேற்றம்: மேகனா சான் அன்டோனியோ: கோடை குதூகலம்! அரங்கேற்றம்: மீரா சுரேஷ் நிகில் நாராயணன் குழலிசை
|
|
FeTNA தமிழ் விழா 2017 |
|
- |ஆகஸ்டு 2017| |
|
|
|
|
பழமைபேசி, மக்கள் தொடர்புக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசு நகரில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண்ணும் இசைக்க விழா தொடங்கியது. பறை, தவில் இசையை மின்னசோட்டா தமிழ்ச் சங்க நுண்ணிசைக் கருவி மாணவர்கள், ஆசான்கள் சிலம்பரசன் கசேந்திரன், ராமச்சந்திரன் வெங்கடசாமி ஆகியோருடன் அரங்கேற்றினர். நிமிர்வு பறையிசைக் குழுவின் கலைஞர் சக்தி பறையிசையை ஒலிக்க, சிலம்பம், கரகாட்டக் கலைகள் விழா மேடையேறின.
திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் பெருமுரசை அடித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். பேரவைத் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் வரவேற்புரையில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள கட்டமைப்பு தொல்தமிழர் கட்டடக்கலை மரபின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்றும், இவ்வாண்டு பேரவை விழா 'தமிழர் கலையைப் போற்றுவோம்! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!' என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினரான கயானா நாட்டின் பிரதமர் திரு. மோசஸ் வீரசாமி நாகமுத்து தமது உரையில், 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டானியர்களால் தமிழ்நாட்டில் இருந்து கயானாவிற்கு கொண்டு செல்லப்பட்டு கூலிகளாக வாழ்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு முன்னேறியதை நினைவுகூர்ந்தார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, பயன்பாட்டில் முன்னேற்றம் கண்டுவரும் கயானாவில் தமிழ் தொழில்முனைவோரை முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களின் "கனவும் அதை நோக்கிய கடும் உழைப்புமே நம்மைச் சாதனையாளராக்கும்" என்ற சொற்களை நினைவுகூர்ந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மு. இளங்கோவன் தயாரித்த விபுலாநந்தர் ஆவணப்படம் கயானா பிரதமர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. விழாமலரை எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி வெளியிட்டனர். சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர் சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் அரங்கேற்றினர். இந்த விழாமலர் மற்றும் கையேட்டுக்கான ஓவியங்களை திரு. டிராட்ஸ்கி மருது வரைந்து கொடுத்திருந்தார். பேரவை சிறுவர் மலரான 'தளிர்', சிறுமி ஆனந்தி வரைந்த 'ஏறுதழுவுதல்' ஒவியத்தை முகப்பில் தாங்கி வெளிவந்தது.
பலகுரல் திரைக்கலைஞர் சின்னிஜெயந்தின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி இடம்பெற்றது. 'தமிழ்மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா?' என்னும் தலைப்பில் திரைக்கலைஞர் ரோகிணியின் நெறியாள்கையில் கருத்துக்களம் இடம்பெற்றது. பின்னர். கடல்வழி ஆய்வாளர் ஒரிசா பாலுவின் உரை இடம்பெற்றது. சுகிர்தராணி தலைமையில், 'தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?' என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. 'சாரங்கதாரன்' நாடகம் சிகாகோ தமிழ்ச் சங்கத்தினரால் அரங்கேற்றப்பட்டது.
பின்னர் வந்த மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தின் ஐந்திணை பரதம், சதிராட்டம் ஆகியவை அருமையாக இருந்தன. அடுத்து இயக்குநர் மிஷ்கின் உரை நிகழ்த்தினார். இவ்வாண்டின் அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகள் இல்லினாய் மாநிலத்தின் அமெரிக்கக் கீழவை உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் திரு. கிளாரன்ஸ் ஜெய், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் திரு. பழநி குமணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. பண்ணிசை ஆய்வாளர் முனை. கோ.ப. நல்லசிவம் தமிழிசைப் பாடல்களை இனிமையாகப் பாடினார். மக்களிசைக் கலைஞர் திரு. ஜெயமூர்த்தி அவர்கள் பாட, மினசோட்டா, கேன்சஸ், சார்லட், வாசிங்டன் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மயிலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் ஆகியவற்றை வழங்கினர். |
|
இறுதியாக, நாடக அறிஞர் பேரா. ராஜுவின் நெறியாள்கையில் 'மருதநாயகம்' நாடகம் இடம்பெற்றது. இணையமர்வுகளாக தமிழ்த்தேனீ, குறள்தேனீ, குறும்படப் போட்டி, இசைப்பயிற்சிப் பட்டறை உள்ளிட்டவை இடம்பெற்றன. இதில் முழுநாள் அமர்வாக நடைபெற்ற 'தமிழ் தொழில்முனைவோர் மன்ற'த்தின் 3ம் ஆண்டு நிகழ்வில் இந்தியா, சிங்கப்பூர் என உலகின் பல பகுதிகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திரு. லேனா கண்ணப்பன் இம்மன்றத்தின் சார்பாக 'அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் கழகம்' தொடங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு அதன் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர் முன்னெடுக்கும் மருத்துவ தொடர்கல்விக் கருத்தரங்கும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் மருத்துவர் அருளமுதன் சித்தமருத்துவம் குறித்துப் பேசினார். இலக்கிய விநாடி வினா, பல்லூடக நிகழ்ச்சியாக நடந்தேறியது. அப்துல்கலாம் அவர்களின் உதவியாளராக இருந்த திரு. வெ. பொன்ராஜ் தம் அனுபவங்கள், தமிழரின் வளர்ச்சி குறித்துப் பேசினார். குறும்படப் போட்டி முடிவுகளைத் தேர்வுக் குழுவினர் அறிவித்தனர். முதற்பரிசு 'திரள்' பட இயக்குநர் குரு சுப்ரமணியத்துக்கும், இரண்டாம் பரிசு 'பகல் நட்சத்திரம்' படத்திற்காக பிரவீன் ராசனுக்கும், மூன்றாம் பரிசு 'சத்தமாக ஒரு நிசப்தம்', 'பொழுது புலர்ந்தது' ஆகிய படங்களுக்காக முறையே ஜெய் சீனிவாசன், அரிகரன் சுவாமிநாதன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. சிறப்புப் பரிசுகளை 'கறை கேட்டது', 'திமில்', 'சாத்திரம் ஏதுக்கடி' ஆகியவற்றின் இயக்குநர்கள் சூர்ய நாராயணன், பிரவீன் குமார், சேஷங் கல்வலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். குறும்படப் போட்டி நடுவர்களாக திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின் , சிம்பு தேவன், பேராசிரியர் சுவர்ணவேல் ஈசுவரன் ஆகியோர் செயல்பட்டிருந்தனர்.
கவிஞர் சுகுமாரன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோரின் சிறப்புரையைத் தொடர்ந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்த்தேனீயின் இறுதிக்கட்டப் போட்டிகள் முதன்மை அரங்க மேடையில் நடைபெற்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கவிஞர் சுகுமாரன், மு. இளங்கோவன் முதலானோர் பரிசளித்தனர். 'உணவும் உழவரும்' என்ற தலைப்பில் கான்சஸ் நகரத் தமிழ்ச்சங்கத்தினர் நாடகம் ஒன்றை வழங்கினர். பேரவையும் மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் இணைந்து உருவாக்கிய மாதங்காட்டி விழா மேடையில் வெளியிடப்பட்டது. இதற்கான ஒவியங்களை திரு. இரவி பல்லேட் வரைந்திருந்தார்.
அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகப் பொறுப்பாளர்களின் உரை, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை குறித்த அறிவிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் ஒரிசா பாலு, ரோகிணி, கார்த்திகேய சிவசேனாபதி, தொழில்முனைவர், நடிகர் கிட்டி, பேராசிரியர் ஓபர்ஸ்ட் முதலானோர் பேசினர்.
தமிழ் மரபு இசைக்கருவிகளுக்கான பயிற்சிப் பட்டறையை நாகசுரக் கலைஞர் திரு. மாம்பலம் இராமச்சந்திரன், தவில் கலைஞர் திரு. அடையாறு சிலம்பரசன், பறையிசைக் கலைஞர் திரு. "நிமிர்வு" சக்தி ஆகியோர் மின்னசோட்டாவில் நடத்தினர். இதில் பயின்ற 30 மாணவர்களும் ஆசான்களும் இணைந்து விழாவில் தங்கள் கலைத்திறனை அரங்கேற்றினர். பேரவை 'சங்கங்களின் சங்கமம்' நிகழ்ச்சி கண்ணுக்கு விருந்து. கனடாவின் 'அக்னி' குழுவினருடன் ஜெயமூர்த்தி, முனைவர் சரவணராசா, பாடகர்கள் சுரதா, நிரஞ்சனா, ராஜகணபதி, நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் முதலானோர் பங்குபெற்ற மெல்லிசை இடம்பெற்றது.
நான்காம் நாள் இலக்கியக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் மு இளங்கோவன், கோ.ப. நல்லசிவம், ஒரிசா பாலு, ராஜு, சுகுமாரன், கார்த்திகேய சிவசேனாபதி, ரோகிணி, சுகிர்தராணி, ஜெயமூர்த்தி, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழா ஒருங்கிணைப்பாளர் திரு. சிவானந்தம் மாரியப்பன் நன்றி கூறினார். 2018ம் ஆண்டு தமிழ் விழாவை ஒருங்கிணைக்கவுள்ள டாலஸ் மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச்சங்க நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மெட்ரோபிளக்ஸ் சங்க நிர்வாகிகள் திரு. கால்டுவேல் வேல்நம்பி, திருமதி. கோமதி பெரியதிருவடி ஆகியோர் விழா அழைப்புக் காணொலியை ஒளிபரப்பி அழைத்தனர். |
|
|
More
பாஸ்டன்: பாரதி வித்யாஸ்ரமம் ஆண்டுவிழா TNF ஜார்ஜியா: கணிதப் பயிற்சி முகாம் சஹா நாதன் நூல் வெளியீடு ஆஸ்டின்: ஹார்வர்டு தமிழிருக்கை டாலஸ்: தமிழர் இசைவிழா அரங்கேற்றம்: மேகனா சான் அன்டோனியோ: கோடை குதூகலம்! அரங்கேற்றம்: மீரா சுரேஷ் நிகில் நாராயணன் குழலிசை
|
|
|
|
|
|
|
|