Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
வானம்பாடிகள்
போன்சாய்
- ராம்பிரசாத்|ஜூலை 2017|
Share:
"இதுபோல் ஒரு முழு மரத்தையே சின்னச் சின்னதாய் வளர்ப்பதற்கு பெயர் என்ன வைத்திருக்கிறீர்கள்?" என்றான் சியாமளன், காவ்யாவின் அரையடிக்கு அரையடி சதுரத் தொட்டியில் பச்சை நிறத்தில் சின்னச் செடிபோல் வளர்ந்திருந்ததைக் காட்டி.

"இது ஜப்பானிய கான்செப்ட் சியாம். போன்சாய் என்று பெயர்" என்றாள் காவ்யா, அதன்மீது ஒரு சிறிய தேக்கரண்டியில் நீர் விட்டவாறு.

"இது பாவம் அல்லவா?" என்றான் சியாம் மனம் தாங்காமல்.

"இது பாவம் இல்லை. சொன்னேனே, போன்சாய் மரம்" என்றாள் காவ்யா கண்ணைச் சிமிட்டியபடி.

"அய்யோ. நகைச்சுவைக்கான நேரமா காவ்யா இது? நன்கு வளரக்கூடிய ஒரு மரத்திற்கு கணக்குப் போட்டு ஒளியையும் நீரையும் காட்டி ஊசியில் உணவூட்டி ஒரு சின்ன சதுரக் கூம்புக்குள் அடைப்பது மகா பாவம்" என்றான் சியாம் மீண்டும்.

"அதை நீ ஏன் அப்படிப் பார்க்கிறாய்? இப்படி யோசித்துப் பார்? பெருகிவரும் நகர வாழ்க்கையில் இத்தனை பெரிய மரம் வைக்க ஏது இடம்? ஆனால் அதற்காக மரம் வளர்க்காமல் விட்டுவிட முடியுமா? இடமும் இல்லை, ஆனால் மரமும் வேண்டும். விடை என்ன? பார் போன்சாய். இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லை. இது நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடை சுத்திகரிக்கிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மங்கோலிய, சீன அழகிபோலக் குட்டியாக இருக்கிறது. கைக்கு அடக்கமாக இருக்கிறது. வெளியில் செல்வதென்றால் கூட உடனே தூக்கிச்செல்ல முடிகிறது. எத்தனை வசதிகள் பாரேன். கிட்டத்தட்ட எனக்கு ஒரு பெண்குழந்தை போல" என்றாள் காவ்யா.

"இதற்கு என்ன பெயர்? நவீனத்துவமா?" என்றான் சியாம்.

"என்ன இத்துவமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. எனக்கு பிடித்திருக்கிறது " என்றாள் காவ்யா.

இதற்குமேல் பேசுவது வீண் என்கிற முடிவுக்கு வந்தவனாக, தனது தேனீர்க் கோப்பையைக் கையிலெடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தான் சியாம். தேனீர் அருந்தியபடியே அந்த போன்சாய் மரத்தை பார்க்கப் பார்க்க பரிதாபம் மேலோங்கியது.

சற்றைக்கெல்லாம் போன்சாய் மரத்தை மேஜைமீது கண்ணாடிக் கூரை இட்டு மறைத்துவிட்டு தானும் பால்கனி வந்து நின்றாள் காவ்யா. சியாம் காவ்யாவை நேருக்குநேர் எதிர்கொள்ளத் தயங்கி, திரும்பி நின்றுகொண்டான். அவன் கண்முன்னே செங்கல் காடு முழுவதற்கும் ஒரு மஞ்சள் சூரியன் சந்தன வர்ணம் பூசிக்கொண்டிருந்தது.

"என்ன, கோபமா?" என்றாள் காவ்யா.

"எனக்கென்ன கோபம்? எனது கோபமெல்லாம் எதற்காகும்?" என்றான் சியாம் விரக்தி தோய்ந்த குரலில்.

"ஒரு மரத்துக்கு இத்தனை உணர்வு எழத் தேவையில்லை என் மன்மதா?" என்றாள் காவ்யா.

"இப்படி யோசித்து யோசித்துதான் இன்று நாற்பது ஒளிவருடம் தள்ளி இருக்கும் கிரகத்துக்குப் போய்விட பயணச்சீட்டு வாங்கி வைத்திருக்கிறோம் காவ்யா" என்ற சியாமின் குரலில் லேசான கோபம் கலந்த விரக்தி இருந்தது.

"அதைத்தான் நானும் சொல்கிறேன் சியாம். நீயும் நானும் திருந்தி என்னாகிவிடப்போகிறது? லட்சம் ஆண்டுகளாக ஜீவித்திருந்த பூமியை வெறும் இருநூறு ஆண்டுகளில் வாழ்வதற்கு லாயக்கற்றது ஆக்கிவிட்டன நம் கம்ப்யூட்டர் மூளைகள். இனி நாம் நினைத்தாலும் மலட்டு நிலத்தில் ஒரு புல்கூட முளைப்பதற்கில்லை. இந்த போன்சாய் மரத்தை வளர்க்க நான் எத்தனை மாதங்கள் கடையில் வாங்கிய மணலை பதப்படுத்தினேன் என்பது எனக்குத்தான் தெரியும் சியாம். புரிந்துகொள். போக இருக்கிற கிரகத்தில் மருத்துவ வசதி கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை. நல்ல பிராணவாயு கிடைத்தால் எனக்கிருக்கும் நுரையீரல் பிரச்சனைக்கு நான் யாரையும் அண்டியிருக்க வேண்டி இல்லை. அதற்குத்தான் இந்த போன்சாய் வளர்க்கிறேன்” என்றாள் காவ்யா.
"அது பொய் காவ்யா. இந்த போன்சாய் வந்ததன் உண்மையான காரணம் நான் சொல்லவா? உனது நுரையீரல் பிரச்சனைக்குத் தீர்வு இங்கேயே கிடைக்கும். ஆனால் இங்கே நோயுற்ற உடலைச் சரிசெய்து கொண்டால்கூட வாழமுடியாது. அதனால், அதற்காகும் பணத்தில் அடுத்த பூமிக்குச் செல்ல பயணச்சீட்டு வாங்கியாகிவிட்டது. ஆக மருத்துவ செலவுக்குப் பணமில்லை. போன்சாய் மிகமிக எளிமையான வழி. அதுதான் காரணம்" என்றான் சியாம் கோபமாக.

"ஒப்புக்கொள்கிறேன்.சியாம். என்ன செய்யச்சொல்கிறாய் நீ இப்போது?"

"உனது இளமைக்காலத்தைக் கட்டுப்பாட்டுடன் கரைத்திருக்கலாம் காவ்யா. புகையிலைப் பழக்கம் உனக்கு. அதனால் நுரையீரல் கெட்டது. மாற்று உறுப்புகளில் போலிகள் வந்துவிட்டன. சுற்றுச்சூழல் மாசடைந்து கெட்டுவிட்டதால் தரமான மூலப்பொருட்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. உயிர் போவது நிச்சயம். ஆதலால் இப்போது குறைந்த செலவில் மருத்துவத்துக்குத்தான் போன்சாய். வயதில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை இல்லை"

"நடக்கிற காரியமாக பேசேன் சியாம். நடந்து முடிந்து போனதைப்பற்றிப் பேசி என்னாகப்போகிறது?"

"இப்படி எல்லோரும் இருந்ததால்தான் இந்த அழகான பூமியை விட்டு வெளியேறுகிறோம் காவ்யா. கொஞ்சம் கட்டுப்பாட்டோடு எல்லோரும் இருந்திருந்தால் நாம் வாழ இன்னொரு கிரகம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டோம்."

"நிஜம்தான் சியாம். என்ன செய்ய? வயதில் இது குறித்தெல்லாம் எங்கே யோசனை வருகிறது?"

"சரி விடு.அது எதற்கு இப்போது. ஆமாம். பிரயாணம் நாற்பது ஆண்டுகள் ஆயிற்றே. நம்மை உறங்க வைத்தே அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்."

"ஆமாம். கிரகத்தை நெருங்குகையில்தான் விழிப்போம். அப்போது நம் உடலுக்குத் தேவையான சத்துப்பொருட்களை அவர்கள் தருவார்களா? நாம் எடுத்துச்செல்ல வேண்டுமா?".

"தெரியாது. பயணச்சீட்டின் விலையைப் பார்த்தால் தெரிந்துவிடும். எங்கே பயணச்சீட்டு?"

"அது ராபர்ட்டிடம் இருக்கிறது. அவர்தானே நம்மை அழைத்துச் செல்கிறார்?"

"ஓ. அவர் நம்மை நிச்சயம் அழைத்துச்செல்வாரா?"

"அழைத்துச் சென்றுதான் ஆகவேண்டும். நமக்கு அவர்தானே அப்பா."

"இருக்கட்டும் சியாம். நம்மோடு இந்த போன்சாயை எடுத்து செல்ல அனுமதி இருக்குமா தெரியவில்லை. நான் இதை என் கைப்பையில் கொண்டு வரலாமென்று இருக்கிறேன்"

"என்ன சொல்கிறாய் நீ?. யாராவது பார்த்துவிட்டால்? நாம் நாற்பது வருடங்களுக்கு உறங்கப்போகிறோம். இந்த போன்சாய் நீரின்றி எப்படிப் பிழைக்கும்?"

"அதையெல்லாம் யோசித்தாகிவிட்டது. இந்த கூண்டுக்குள் நீரை ஸ்ப்ரே செய்ய ஒரு குட்டி உபகரணம் நீ செய்யவேண்டும். நீ மின்னணு வல்லுனர்தானே"

"அந்தப் படிப்பு படித்து என்ன? வருமானத்தைப் பெருக்கப் போராடியும், பஞ்சத்தில் சிக்கிய ராபர்ட் என்கிற கல்வியாளருக்கு பாடத்திட்டக் குறிப்புகள்தானே எடுத்து தருகிறேன் நான். படித்த படிப்புக்கு ஏது வேலை?"

"அப்படியானால் இந்த வேலையைச் செய். படித்த படிப்புக்கு வேலை" சொல்லிவிட்டுக் கண்ணடிப்பவளை என்ன செய்வதென்று புரியாமல் பார்த்து நின்றான் சியாம்.

*****


தூரக் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள இன்னும் ஆறுமணி நேரம் இருக்கையில் ராபர்ட் வந்தபோது சியாம் போன்சாய்க்காக ஒரு குட்டி நீர்ப்பாசனம் செய்து விட்டிருந்தான். அதைக் காவ்யா தனது கைப்பையில் வைத்தபோது அழகாகப் பொருந்தி கண் பார்வையிலிருந்து மறைந்தது.

"ராபர்ட். எப்போது பயணம் துவங்கும்?" என்றான் சியாம். காவ்யா போன்சாய் மறைந்திருக்கிறதா என்பதை ஒருமுறை ஊர்ஜிதம் செய்துகொண்டபோது,

"கிளம்ப வேண்டியதுதான். நீங்கள் இருவரும் தயாராகிவிட்டீர்களா?" என்றார் ராபர்ட். இருவரும் மேலும் கீழுமாக, ஆமோதிப்பாய்த் தலையாட்டினார்கள்.

"சியாம், காவ்யா.இருவருக்கும் ஒரு வேலை இருக்கிறது." என்று சொல்லிவிட்டு இருவரையும் ஏறிட்ட ராபர்ட் தொடர்ந்தார். "நாற்பது ஒளியாண்டுகள் தள்ளி இருக்கிறது அந்தக் கிரகம். ஆக, நாற்பது வருடங்கள் தூங்கியாகவேண்டும். அந்த கிரகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கிடையாது. நாம் அவைகளை அங்கே முதலில் துவங்கினால் சிறந்த முன்னோடிகளாக இருப்போம். அடுத்த ட்ரிப் மனிதர்கள் வர 80 ஆண்டுகள் ஆகும். அதுவரை நம்மை அசைக்க யாராலும் முடியாது" சொல்லிவிட்டுச் சிரித்த ராபர்ட்டை இருவரும் குழப்பமாகப் பார்த்தார்கள்.

"நாற்பது வருடங்கள் போதும், முறையான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்திவிட. உங்களை பயன்படுத்திக்கொள்ளச் சரியான தருணம் இது. நாற்பது வருடங்கள் நான் உறங்கச் சென்றுவிடுவேன். அந்தக் காலத்தை நீங்கள் இருவரும் பயன்படுத்தி முறையான கல்வித்திட்டத்தை உருவாக்குங்கள். அதுதான் உங்கள் வேலை" என்று சொல்லிக்கொண்டே அரையடிக்கு அரையடி அளவில் ஒரு சதுரமான கூண்டை அவர்கள்முன் வைத்தார். அதன் கதவு திறந்திருந்தது. உள்ளே இரண்டு சின்ன கம்ப்யூட்டர்கள். புழங்கக் கொஞ்சம் சாமான்கள். எல்லாமே சின்ன சின்னதாக.

சியாமும், கைப்பையுடன் காவ்யாவும் அந்த கூண்டுக்குள் நுழைந்தவுடன் கூண்டின் கதவு வெளியே தாழிடப்பட்டது. "இந்தக் கூண்டுக்குள் உங்களுக்கு தேவையான உணவு, நீர் யாவும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் தட்டச்சு செய்யச் செய்ய அது உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் வேலையை நீங்கள் செய்யவில்லை என்றால் அதுவும் நின்றுவிடும். ஆக, தொடர்ந்து உணவும் நீரும் கிடைக்க வேண்டுமானால், நீங்கள் தொடர்ந்து உழைக்கவேண்டும். நாற்பது வருடங்கள். மிக நீண்ட காலம். தரமான கல்வித்திட்டத்தை எதிர்பார்க்கிறேன் சியாம்" என்ற ராபர்ட்டின் குரல்மட்டும் அவர்களுக்கு கேட்டது.

ராம்ப்ரசாத்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

வானம்பாடிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline