மே 14, 2017 அன்று இடைமேற்கு மாநிலத் தமிழ்சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் மூன்றும் இணந்து, மே 17, 2009 அன்று இலங்கைப் போராட்டத்தில் உயிர்நீத்த 40,000 மேற்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தும் வகையில் அரோராவில் (சிகாகோ புறநகர்) உள்ள Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506;) இல்லத்தில் வறியோர்க்கு உணவு வழங்கின. அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களும் (ஏரகன், சாமா, சுபாசு, சாசுலின்), சிகாகோ புறநகர்ப் பகுதிகளில் வாழும் தொண்டர்கள் (திருவாட்டியர். கிருத்திகா, வனிதா, செல்வி. கவிதா, கன்யா, திருவாளர்கள். பால்சன், சாக்கரடீசு, முகுந்தன், சிரீகந்தக்குமார், பாபு) பங்கேற்று உணவு தயாரித்து, நூறுக்கு மேற்பட்டோருக்கு வழங்கினர்.
பின்னர் இல்ல வாசிகளுக்குத் தமிழர் பற்றிய விவரக்குறிப்பு, தமிழீழப் போராட்டக் குறிப்பு, குறளதிகாரக் குறிப்பு, பிற நாட்டுப் பேரறிஞர் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாறு ஆகியவற்றைக் கொண்ட சிற்றிதழ் ஒன்றையும், மறுநாள் காலை உணவிற்கெனச் சிற்றுண்டியையும் வழங்கினர். பணிக்கு நேரம் ஒதுக்கிய தொண்டர்களுக்கும், தமிழ்ப்பள்ளி மாணாக்கர்களுக்கும், 'Hesed House' பொறுப்பாளர் திருமதி. சிண்டி அவர்களுக்கும் திரு. பாபு நன்றி தெரிவித்தார். |