மணியின் கதைவங்கி தீராத வாசனை
|
|
|
|
என் மனைவி பெயர் தேவி. அழகான குடும்பம். அரசு சொன்னதச் சரியா பின்பற்றி, நாம் இருவர் நமக்கு இருவர்னு குட்டியா ஒரு குடும்பம். ஒரு பையன் ஆறுமுகம் (என் அப்பா பெயர்) ஜெர்மனில பி.ம்.டபிள்யூ கம்பெனில வேலை. பொண்ணு பாரதி. தலைநகர் டெல்லில ஹிந்தி சேனல்ல ரிப்போர்ட்டரா இருக்கா. இப்ப வீட்டுல நாங்க இரண்டு பேரும்தான். என்னப்பத்தி சொல்லவே இல்லயே. நான் சந்திரன். போன வருசம்தான் இண்டியன் பேங்க்ல 20 வருஷம் சர்வீஸுக்கு அப்புறம் ரிடயர்டு லைஃப்ல அடியெடுத்து வச்சேன். சென்னைவாசி ஆகி பல வருஷம் ஆச்சு.
எப்படா விடியும்னு காத்துகிட்டே இருந்தேன். எத்தனை கொடிய இரவு அது! தேவியப் பார்க்க போகணும். அவ இருந்தா எழுந்திருச்சு காஃபி போட்டுருப்பா. என் வாழ்க்கைல ரெண்டு விஷயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒண்ணு என்னோட தேவி. இன்னொன்னு நீங்க நினைக்கிற மாதிரி... என் மீசைதான்.
மீசை சந்திரன்னு சிலபேர் பேசறத நான் காதால கேட்டுருக்கேன். மீசைதான் என் அடையாளம்னு நான் முடிவு பண்ணது ரொம்ப சின்ன வயசுல. ஒரு ஆறு ஏழு வயசுல இருந்து எனக்கு மீசை வச்சுக்கணும்னு ரொம்ப ஆசை. எப்படி மீசை வளருதுன்னு என் தாத்தாகிட்ட கேட்ட ஞாபகம். "சந்தனம் தேச்சா முடி நிறைய வளரும்டா" - அவர் சொன்னதுதான் மிச்சம். அன்றிலிருந்து எங்க அம்மா விளக்குக்கு வச்சுருந்த சந்தனக் கட்டைய ஒளிச்சு வச்சு, மீசை வளர தினமும் சந்தனத்த தேச்சுருக்கேன். போலிஸ்னா மீசை பெருசா வைக்க முடியும்னு போலிஸ் ஆகணும்னு ரொம்ப ஆசை. பாரதியார் ரொம்பப் பிடிக்கும். அவரோட மீசைதான் முதலில் அவரிடம் என்னை ஈர்த்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி படம் மட்டும் 35 தடவ பார்த்து இருக்கேன். ஒவ்வொரு டயலாக்கும் அத்துப்படி.
அரும்பு மீசை வயசுல எனக்கு மஞ்சக்காமல வந்து முடிஞ்ச உடனே எங்க அம்மா என்ன குலதெய்வக் கோவிலுக்கு கூட்டிட்டுப் போனாங்க.
"முடி எடுத்துறலாம்ங்களா?" கேட்டார் சவரம் செய்பவர்.
"எடுத்துருங்க. நேர்த்திக் கடன்."
தலைமுடிய 5 நிமிடத்தில் எடுத்து முடித்தார். மீசைய எடுக்க வந்தவரிடம் சட்டென கையப் புடிச்சேன். "மீசமேல கைய வச்சீரு, நடக்குறதே வேற..." சடார்ன்னு எந்திரிச்சி நின்னேன்.
"தலைமுடி மட்டும் எடுத்தா நல்லா இருக்காதுப்பா..."
"சாமி குத்தம்டா...எடுத்துக்கோ" அம்மா கெஞ்சினாள்.
"முடியாது..குத்தம்னா குத்தமாவே இருந்துட்டு போட்டும்" வேகமாக நடந்து போனேன்.
தில்லுமுல்லு பார்த்துட்டு மீசைவச்ச சந்திரன்னு என்ன கிண்டல் பண்ணுவா தேவி. தேவி ஒரு குழந்தைமாதிரி. அவள கல்யாணம் பண்ணது நான் எப்ப செஞ்ச புண்ணியம்னு எனக்குத் தெரியல...தேவிய முதன்முதலில் பார்த்தது கல்யாண மேடையில். அரேஞ்ட் மேரேஜ். அவள் அழகுக்கு நான் ரொம்ப ஓவர். ஏர் ஹோஸ்டஸ் மாதிரி இருந்தா. |
|
என்னைப் பார்த்து தேவி என்ன நினைச்சாளோ தெரியல. என் மூஞ்சியவிட மீசைதான் அவளுக்குத் தெரிஞ்சு இருக்கும்! ஒண்ணும் சொல்லாம என் பக்கத்துல உக்காந்து தாலியும் கட்டிகிட்டா. கல்யாணம் ஆகி ஒரு ரெண்டு மாசம் இருக்கும் ஒருநாள் என்கிட்ட "என்னங்க... ஒண்ணு சொல்லட்டா?" என்றாள்.
"சொல்லு..."
"உங்கள மீசை இல்லாம பாக்கணும்... ரொம்ப குத்துது!"
பகீர்னு தூக்கிவாரிப் போட்டது...எழுந்து நின்றேன், "சோலியப் பாரு" கோபித்துக் கொண்டேன். பாவம் அவளுக்கு அப்போது தெரியாது என் முதல் காதல் மீசை என்று. அன்றிலுருந்து என் மீசைபற்றி எதுவும் சொல்லமாட்டாள். தினமும் காலைல கண்ணாடி முன்னாடி நின்னு அந்த மீசைய ட்ரிம் பண்ணி, சீவி... யார் சொன்னது பெண்கள்தான் கிளம்ப நாழியாக்குவாங்கன்னு! இந்த ரொட்டீன்ல ஒருநாள்கூட என்மேல கோபிச்சது கிடையாது...
மீசை வச்சவன்தான் ஆம்பளன்னு நிறைய வாதம் பண்ணிருக்கேன். ஆணாதிக்கம்ன்னு நிறைய பேர் நினைப்பாங்க. மீசை ஒரு கோழயக்கூட தைரியாமானவன் மாதிரி காட்டுற ஏமாத்து வேலை. லைட்டா மீசைய முறுக்கி நின்னு பாரு. இல்ல மீசைமேல கைய வச்சுப் பாரு. எங்கிருந்து வரும் தைரியம்ன்னு தெரியாது. மீசைக்குப் பின்னாடி ஒரு அரசியலும் ஒரு அடக்குமுறையும் இருந்தது. ஆறுமுகம்கூட க்ளீன் ஷேவ்தான். ஆறுமுகம் இன்னைக்கு வர்றான் ஃப்ரான்க்ஃபோர்ட்ல இருந்து தேவியப் பாக்கறதுக்கு.
ஆப்பரேஷன் தியேட்டருக்கு இன்னைக்கு மதியம் 3:00 மணிக்கு கூட்டிட்டுப் போவாங்க. "மேஜர் சர்ஜரி இன் த கால் ப்லாடர்". உடம்பக் கவனிக்காம வீட்டுக்கே தன்ன அர்ப்பணிச்ச மனைவிமார் லிஸ்ட்ல டாப் டென்ல தேவிக்கு கண்டிப்பா ஒரு இடம் உண்டு. இப்படித்தான் பெரும்பாலுமான கணவர்கள் தங்கள் மனைவியைப் பற்றி எண்ணுவார்கள். நல்லபடியா சர்ஜரி முடிஞ்சு வந்துருவா. நம்பிக்கை இருக்கு. ஆனாலும் உள்மனசுல ஒரு பயம். ஒருவேளை அவளை பார்க்கப்போவது இதுவே கடைசி முறையாக இருந்தால்.
நினைத்துக்கூட பார்க்க முடியல, அவள் இல்லாத ஒரு வாழ்க்கைய!
தேவியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிச் சென்றேன். அவள் முன்னால் முதன்முறையாக மீசையில்லாமல்.
தமிழ்ப்பிரியன் |
|
|
More
மணியின் கதைவங்கி தீராத வாசனை
|
|
|
|
|
|
|