|
எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம் |
|
- ராஜேஷ், Anh Tran|பிப்ரவரி 2017| |
|
|
|
|
அத்தியாயம் – 4
பள்ளிக்கூடம் விட்டதும் அருண் வேகவேகமாக வகுப்பை விட்டு வெளியே வந்தான். அவனுக்குள் ஒரு தனி உற்சாகம் இருந்தது. "நான் என்ன அவ்வளவு பெரிய ஆள் ஆய்ட்டேனா?" என்று பெருமைப் பட்டுக்கொண்டான். "அடடா, ஒரு வெளியிடத்து பையன்கூட என் பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறானே" என்று சந்தோஷப்பட்டான்.
வகுப்பை விட்டுச் சற்றுத் தள்ளி ஓரிடத்தில் ஃப்ராங்க் அருணுக்காக காத்துக் கொண்டிருந்தான். "என்ன ஃப்ராங்க், எனக்காகவா காத்துகிட்டு இருக்க?" என்று கேட்டான்.
"அப்புறம்? வேற யாரு என்கூட பேசப்போறாங்க சொல்லு, உன்னையும் செராவையும் விட்டா?" என்றான் ஃப்ராங்க். அவன் சொன்ன வார்த்தைகளால் ஆடிப்போனான் அருண். என்னதான் ஃப்ராங்க் ஒரு ஜோக் போலச் சொன்னாலும் அருணுக்கு அதன் அர்த்தம் புரிந்தது. செராவையும் தன்னையும் தவிர யாருமே ஃப்ராங்கிடம் பேசக்கூடத் தயங்குவதை நினைத்து வருத்தப்பட்டான்.
"என்ன யோசிக்கிறாய் மானிடனே?" என்று ஃப்ராங்க் செல்லமாக அருணை உலுக்கினான். "உனக்குத் தெரியுமா? என்னை இந்த பூமியிலே கொண்டுவிட்ட விண்கலம் இன்னும் திரும்பி வரவே இல்லை" என்று சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தான். அருணுக்கு ஃப்ராங்கைப்பற்றி ஒன்று புரிந்தது; அவனது நகைச்சுவை உணர்வு. எல்லோரும் எவ்வளவு கேலி செய்தாலும், அவனுடன் பேசக்கூடத் தயங்கினாலும், ஃப்ராங்கின் எளிமையான தன்மை அருணை ரொம்பவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"மானிடனே, நான் யார் தெரியுமா?" ஃப்ராங்க் மீண்டும் சிரித்தபடி கேட்டான். "Not only I am an alien, but an alienated one, too." ‘Alien' தெரியும். ‘Alienated’ என்றால்? அருணுக்குப் புரியவில்லை.
"என்னோட ஆயா வர நேரமாச்சு, ஃப்ராங்க். உன்னை கூட்டிட்டுப் போக யார் வருவாங்க?" என்று கேட்டான் அருண்.
"தெரியாது" என்று பட்டென்று பதில் கொடுத்தான் ஃப்ராங்க். அந்தப் பதில் மிகவும் விசித்திரமாக இருந்தது அருணுக்கு. என்னடா இது, தன்னை யார் கூட்டிப்போக வருவாங்கன்னு கூட தெரியாதா? "என்ன சொல்ற? உண்மையாகவா?"
"ஆமாம்."
ஃப்ராங்கின் பதில்மட்டும் அல்லாமல், அவன் சொன்ன விதமும் அருணை வியப்பில் ஆழ்த்தியது. "அருண், உனக்குத் தெரியும் நான் ஹோம் ஸ்கூல் பண்ணினேன்னு. எங்கம்மா நாள்பூரா விவசாயப் பண்ணையில வேலை செய்யறதுனால அத்தை, மாமான்னு யாரவது வருவாங்க. இந்த நாள் வரைக்கும் அந்த உதவிகூட இல்லாததுனாலதான் என்னை வீட்டிலேயே படிக்க வச்சாங்க."
அருணுக்கு ப்ராங்கைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் கூடிக்கொண்டே போனது. இந்தச் சிறியவயதில் இவ்வளவு பெரிய உடம்பா என்று ஒருபுறம் அருண் வருத்தப்பட்டான். வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் இவனைப்பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்தான்.
"ஃப்ராங்க், என் பெயர் ரிட்ஜ் மேம் சொல்லாமலேயே உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான் அருண். ஃப்ராங்கிடம் இருந்து அதற்கும் ஜோக்காக பதில் வரும் என்று நினைத்தான் அருண். ஆனால், ஃப்ராங்க் மௌனமாக நின்றான். "ஃப்ராங்க், நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?" |
|
"இல்லை அருண், அப்படி ஏதும் இல்லை."
"பின்னே ஏன் ஒண்ணும் பேசாம இருக்க?"
"அருண், நீ உன் செல்ல நாய்க்குட்டிக்காகச் சண்டை போட்டது எனக்குத் தெரியும். எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா எனக்கு?"
"ஓ அதுவா? நான் என் செல்ல நாய்க்காகப் போராடினேன். அவ்வளவுதான். அது ஒண்ணும் பெரிசில்லையே, நீயும் அதேமாதிரி பண்ணியிருக்க மாட்டியா என்ன?"
"ஹோர்ஷியானா நிறுவனத்தை ஒரு வழி பண்ணிட்டேயே, அருண். அப்பப்பா!"
"கடைசிவரைக்கும் அந்த முதலாளி ஒரு மன்னிப்புகூட கேக்கலியே, ஃப்ராங்க்."
"அதை விடு, அருண். நான் எங்க அம்மாகிட்ட என்னை ஹோம் ஸ்கூலில் இருந்து எடுக்கச் சொன்னதுக்குக் காரணமே நான் உன்னோடு நட்பு கொள்வதற்குத்தான்."
"அப்படியா!" ஆச்சிரியப்பட்டான் அருண். "ஜஸ்ட் என்னை ஃப்ரெண்ட் பிடிக்கவா இங்க வந்தே?"
"ஆமாம். ஹே, என்னுடைய என் அத்தை வந்திட்டாங்க இன்னைக்கு," என்று ஃப்ராங்க் உற்சாகத்துடன் சொன்னான். அதற்குள் அருணின் ஆயாவும் வந்து சேர்ந்தார். இருவரும் தம் வேன்களில் இருந்து ஹார்ன் அடித்தார்கள்.
"வா, ரேஸ் ஓடலாம்," என்றான் ஃப்ராங்க். "நான் பார்க்கத்தான் யானைமாதிரி இருக்கேன். ஆனா, குதிரை மாதிரி ஓடுவேன்" என்று சொல்லி, வேகமாக ஓட ஆரம்பித்தான் ஃப்ராங்க். அருணுக்கு ஃப்ராங்கின் வேகம் புத்துணர்ச்சி ஊட்டியது. அவனும் வேகமாக ஓடினான். இருவரும் ஒன்றாகத் தங்களது வேன்கள் பக்கம் சென்றடைந்தனர்.
ஃப்ராங்க் அத்தைக்கு வணக்கம் சொல்லிவிட்டு, வேனின் பின்னால் சென்று உட்கார்ந்தான். அருண், வேனுக்குள் ஏறுவதற்கு முன்னால் ஃப்ராங்க் வண்டியின் பக்கம் திரும்பி "பை" என்றான். ஃப்ராங்க் வேகவேகமாக வண்டியின் ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கினான்.
"அருண்! அருண்! ஒரு நிமிஷம் இங்க வரியா?" கூப்பிட்டான் ஃப்ராங்க். அருண் ஃப்ராங்க் வேன் அருகே சென்று, பின்பக்க ஜன்னலருகில் நின்றான்.
"என்ன ஃப்ராங்க்?"
"இந்த வாரம், ஒரு play-date வைச்சுக்கலாமா? நீ எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கற பூங்காவுக்கு வாயேன், ப்ளீஸ். உங்க அம்மா அப்பாகிட்ட அனுமதி கேட்கறியா?"
"ஏன் ஃப்ராங்க், நாம இங்கேயே விளையாடலாமே?" "இல்லை அருண், நீ எங்க வீட்டுப்பக்கம் வந்தேன்னா, நான் ஏன் உன்கூட ஃப்ரெண்ட் ஆக ஆசைப்பட்டேன்னு உனக்குப் புரியும். ப்ளீஸ், மாட்டேன்னு சொல்லிடாதே" என்றான். அருண் வியப்போடு நிற்க, ப்ராங்கின் வேன் நகர்ந்தது.
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |
|
|
|
|
|
|
|