மே 28, 2016 அன்று, அமெரிக்க இந்திய தேஷிஸ்ட மராத்தி மண்டலைச் சேர்ந்த இளைஞர்குழு சாய் பரிவார் அரங்கத்தில் ஒரு மாபெரும் நடன நிகழ்ச்சியை, கோயம்பத்தூரிலுள்ள ஸ்வர்கா ஃபவுண்டஷனுக்கு நிதி திரட்டுமுகமாக நடத்தியது. திருமதி. ஸ்வர்ணலதா, திரு. குருப்ரசாத் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அமைப்பு நரம்பு பாதிப்பினால் திசுவின் ஒருபகுதி இறுகிவிடும் (Multiple Sclerosis) நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்கரநாற்காலி, மருத்துவம், போக்குவரத்து உதவிகளையும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு, இசை, ஓவியம் மற்றும் கலைகளைப் பயில உதவிகளையும் செய்துவருகிறது.
விரிகுடாப்பகுதி இளைஞர்குழு நடத்திய இந்நடன நிகழ்ச்சியில் சான் ஃபிரான்சிஸ்கோ இந்தியத் தூதரகத் துணைக்கான்சல் திரு கே.ஜெ. ஸ்ரீநிவாஸா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
ரூபஸ்ரீயின் இந்திய, அமெரிக்க தேசிய கீதங்களுக்குப் பிறகு நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து வியாஸ், விஷ்ணு ஆகியோருடன் ரூபஸ்ரீ, சதீஷ் குடும்பத்தினர் புரந்தரதாஸர் கீர்த்தனைகளைப் பாடினர். நிகழ்ச்சியில் பரதம், குச்சிபுடி ஆகிய நடனங்கள் இடம்பெற்றன. விரிகுடாப்பகுதியின் பிரபல நாட்டியப் பள்ளிகளான ஜெயேந்திர கலேந்திரா, நிருத்யாலயா தர்ப்பண், ஈஷா டான்ஸ் கம்பெனி, திருச்சிற்றம்பலம், கலாநிகேதன், இந்திய இசை மற்றும் நாட்டியப் பள்ளி, நிருத்யாஞ்சலி நாட்டியப் பள்ளி, நடராஜ் டான்ஸ் கம்பெனி, புஷ்பாஞ்சலி டான்ஸ் கம்பெனி, நிருத்தியோல்லாஸா டான்ஸ் அகாடெமி, நிருத்யநிவேதன் நடனப்பள்ளி, மாதுரி கிஷோர் குச்சுபுடி நடனப்பள்ளி மற்றும் சாரதா தாளவாத்திய பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இளைஞரணியைச் சேர்ந்த சஞ்சனா பிரசாத், ஷ்ரத்தா பிரசாத், சஷாங்க் ராவ், கிரண் உமேஷ், ஆதித்யா உமேஷ், ஆயுஷ் செல்வங்கர், பிரசன்னா ராஜன், நேஹா ராவ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் திரட்டப்பட்ட $9,000 ஸ்வர்கா பவுண்டேஷனுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஜெயஸ்ரீ பிரசாத், மீனாக்ஷி உமேஷ், பிரமிளா ராஜன் மற்றும் அனுஷா ராவ் உறுதுணையாக இருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு: www.swargafoundation.org |