ஒரு FBI டைரிக்குறிப்பு! விருதுகள் பழுதடைகின்றன
|
|
|
|
ரம்ஜான் சிறப்புச் சிறுகதை
"இங்க ஆறாம் தேதி பெருநாள் இருக்கும், அங்க?"
"தெரியலையே, ஏழு இல்லைன்னா எட்டு தேதில இருக்கலாம். நீங்க எப்ப வறீங்க?"
"செவ்வாய்க்கிழமைதான் லீவு ஆரம்பிக்குது, திங்கட்கிழமை நைட், வயா கொலொம்போ ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். லாஸ்ட் மினிட்ல போறதால ஃபேர் அதிகம்."
"டைரக்ட் எதுவும் கெடைக்கலையா?" "டைரக்டா...ஹ...எவ்ளோ நாள் சவூதில இருந்த? அதுக்கு மூணு நாலு மாசம் முன்னயே புக் பண்ணியிருக்கணும். இப்படி நெனச்சதும் கூப்டியானா ஊரைச்சுத்தி ட்ரான்ஸிட்ல கொலொம்போ, பஹ்ரைன், அபுதாபி, துபாய்னு எங்கயாவது ரெண்டு மூணு மணி நேரத்தக் கழிச்சுட்டுதான் வரணும்."
"பாத்துக்கங்க."
"அவரு வீட்டை முடிச்சிருவாருல்ல. வாட்சப்ல அனுப்புன ஃபோட்டோவுக்கு அப்புறம் என்ன ப்ராக்ரஸ்?"
"ம்ம்ம்...வாங்களேன் பாத்துக்கலாம்."
"நோ. என்ன ப்ராக்ரஸ் சொல்லு. நான் பேசி முடிச்சதும் யாராவது ஆளை அனுப்பி என்ன ப்ராக்ரஸ்னு ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்லு."
"எவ்ளோ தூரங்க? இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற. ஜும்மா முடிஞ்சப்புறந்தான் யார்ட்டயாவது கேட்டுப் பாக்கணும். இல்லேன்னா டிரைவருக்கு சொல்லணும். ஸ்ரீபெரும்புதூர் வரைக்கும் சட்டுன்னு ஆளை அனுப்பணும்னா நடக்கற காரியமா?" "நோ. ஆளை அனுப்பு." அப்துல்லாவின் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். ராணுவ ஒழுங்கை எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பது. வைத்தது வைத்த இடத்தில் இருக்கவேண்டும் என்பதில் துவங்கி சொல்லும் வார்த்தை சரியாக இருக்கவேண்டும், நேரத்திற்கு அனைத்தும் நடக்கவேண்டும், இத்தனை மணிக்கு படுக்கைக்குச் செல்லவேண்டும், இத்தனை மணிக்கு எழுந்திருக்கவேண்டும், புகைக்கக்கூடாது, உடற்பயிற்சி செய்யவேண்டும், இவ்வளவுதான் சாப்பிடவேண்டும் என எங்கும் எதிலும் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் எதிர்பார்த்து மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்பான்.
ஒருமுறை வளைகுடா தமிழ்ச் சங்கத்தில் மேடைநிகழ்ச்சிக்கு இவனைப் பொறுப்பாளராகப் போட, புரவலர் கொஞ்சம் நீட்டி முழக்கிப் பேசி நேரம் எடுத்துக்கொண்டபோது, நேராகச் சென்று சீட்டுக் கொடுத்து பேச்சை முடிக்கச் சொன்னான். விழாக்குழுவினர் பதறிவிட்டார்கள். "இவ்ளோ டைம் எடுத்துக்கலாம்னு முதல்லயே சொல்லித்தான கூப்பிட்டோம்? குழந்தைங்க மேக்கப்போட இன்னும் ஒருமணி நேரம் நிக்கணுமா?" என்று சத்தம் போட்டுவிட்டு வந்தவன்தான், அதன் பின்னர் நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளனாக மட்டும் சென்றுவருகிறான். இந்த ஒழுங்கும் கண்டிப்பும் அவனிடம் எப்படி வந்ததென்பது அவனுடைய பள்ளித்தோழர்களுக்கும் இன்னும் விளங்காத புதிர். ராணுவத்துக்கும் அப்துல்லாவிற்கும் "இந்தியா என் தாய்நாடு. இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோராவர்" என்பதற்கு மேல் எந்த உறவும் இல்லை. அவனுடைய தாத்தா, கொள்ளுத்தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என மூத்தகுடிமக்களில் யாரும் ராணுவத்திற்கு என்றில்லை, பல்லாவரம் - பறங்கிமலை ராணுவப் பயிற்சி முகாமுக்கு அருகில்கூடப் போனதில்லை, இருந்தும் இவனிடம் மட்டும் எப்படியோ இப்படி ஓர் ஒழுங்கு ஒட்டிக்கொண்டது. அரசுப்பணியில் சேர்ந்த நேரத்தில் சவூதியிலும் வேறு வேலை கிடைத்தது.
அன்று இளைஞனாகச் சென்னையை விட்டு ரியாதுக்கு விமானம் ஏறியவனுக்கு இப்போது தலை நரைக்கத் தொடங்கிவிட்டது. இன்று வரையிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை. அவனுடைய ஒழுங்கும் நேரந்தவறாமையும் செய்கின்ற தொழிலில் முன்னேற்றத்தைக் கொடுத்திருந்தாலும், நட்புவட்டத்தில் இடைவெளியை வைத்துவிட்டது.
மேலே சொன்ன 'ஆளை அனுப்பு' விவகாரம் சென்னை வாழ்க்கைமுறைக்கு அத்தனை பெரிய விவகாரம் இல்லை. முதலில் வசிப்பதற்கு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கி, பின்னர் அது சிறிதாகத் தோன்ற அடுத்தது வாங்கி, அதுவும் சிறிதாகத் தோன்ற, நகருக்கு வெளியே நிலம்வாங்கி வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது கட்டி முடிப்பதற்குத் தாமதமாகின்றது, அவ்வளவுதான். |
|
இந்த ரம்ஜான் மாதத்திற்குள் முடிப்பதாக கட்டுமானக்காரருடன் ஒப்பந்தம். கல், மணல், சிமெண்ட், பீகாரி சித்தாள், ராஜஸ்தானி டைல் ஃபிட்டர், செய்யாறு மேஸ்திரி என கலவையான காரணங்களால் இந்தப் பெருநாளுக்கும் வீடு கட்டி முடிக்கப்படாது என்னும் நிலை. சென்னையில் இறங்கியதும் ஸ்ரீபெரும்புதூர் சென்று வீட்டைப் பார்க்கவேண்டும் என்றுதான் சொன்னான். பெருநாள் முடியட்டும், மகளின் தேர்வு வெற்றி, அடுத்தக் கட்ட முயற்சி, என்று அவனுடைய கவனத்தை மாற்றி ஸ்ரீபெரும்புதூர் பயணத்தைத் தள்ளிப் போடுவதற்குள் குடும்பத்தாருக்குப் பெரும்பாடாகிப்போனது.
*****
"சவூதிலல்லாம் பெனால்ட்டி க்ளாஸ் இருக்கு. உங்களுக்கெல்லாம் அப்படி ஒரு க்ளாஸ காண்ட்ராக்ட்ல போட்டிருக்கணும் பாய். ‘ஃபிடிக்’னா என்னன்னு தெரியுமா பாய்?' கட்டுமான ஒப்பந்தக்காரரைச் சந்தித்ததும் வெடித்தான்.
"நானேகூட ஃப்ளாட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்ஷன்லாம் ஓனர்ஸுக்கு ரெண்ட் குடுத்துதான் பொசஷன் எடுத்து கட்றேன் தம்பி. எனக்கும் ப்ராஜெக்ட் டிலேன்னா என்னன்னு தெரியும். ரெண்டு மாடிஃபிகேஷன் நீங்க சொன்னீங்க, கன்ஸ்ட்ரக்ஷன நிறுத்த வேண்டியாய்டுச்சு." தன்னுடைய அரசியல் பின்புலம், செல்வாக்கு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒப்பந்தக்காரர் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்துல்லாவின் மூலமாக சவூதி வாடிக்கையாளர்களைப் பெறும் விருப்பம் அவருக்கு இருந்தது.
"இல்லையே. மாடிஃபிகேஷன் நான் சொல்லல. நீங்கதான் ப்ளான்லஇல்லாத விண்டோவை வ்யூ நல்லாருக்கும்னு வச்சீங்க, அதைத்தான் எடுக்கச் சொன்னேன்."
சூட்டைத் தணிக்க, பேச்சு வார்த்தைக்குள் அப்துல்லாவின் அப்பா வரவேண்டியதானது. "சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்பொ எப்பொ வரைக்கும் முடிச்சுத் தருவீங்கபா?"
"ஹஜ்ஜுமாசத்துல முடிச்சுர்ரேன் மௌல்வி சாப்."
"ஹஜ்ஜுப் பெருநாளுக்கு இந்த வீட்டுக்கு வந்துரணும். பூச்சும், தச்சு வேலையுந்தான நிக்கிது. முடிக்கப் பாருங்க."
ரம்ஜான் முடிந்து ஷவ்வால் - துல் காயிதா (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பருக்குள்) முடித்துத் தரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.
வருகின்ற வழியில் ஓட்டுனரை ஒரு வழி செய்துவிட்டான். ஏன் +2விற்குப் பிறகு படிக்கவில்லை; திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள் எதற்கு இருக்கின்றன; எதிரில் வருகின்ற வண்டி தெரியாத வரையில் முந்திச்செல்லவேண்டாம்; போக்குவரத்துக் காவலரைக் கண்டால் மெதுவாகச் செல்லுங்கள்; சும்மாவேனும் ஒலியெழுப்பிக்கொண்டே ஓட்டாதீர்கள்’ சைகை செய்யாமல் சட்டென்று திரும்பாதீர்கள்; ஏன் இப்படி முன்னால் செல்லும் வண்டியுடன் ஒட்டிக்கொண்டு செல்கிறீர்கள் - இப்படியாக.
ஒரு கட்டத்தில் ஓட்டுனர் சலித்துப்போய், "மேடம், சார்ட்ட சொல்லி எனக்கு அங்க ஒரு வேலை வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க மேடம். அங்க போயி சார் சொல்றாப்ல வண்டி ஓட்றேன். இது சென்னை சார். இங்க இப்டித்தான் ஓட்ணும்" என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.
*****
"நான் மிண்ட் வரைக்கும் போய்ட்டு வந்துர்ரேன் என்ன? அந்த டிரைவர் வேணாம், வேற ஆளு வேணும்னு கேளு."
"கால் ட்ரைவர்தான். யார் ஃப்ரீயா இருக்காங்ளோ அவங்களத்தான் அனுப்புவாங்க. நாம அந்த டிரைவர் வேணாம்னு சொன்னோமுன்னா அந்த டிரைவருக்கு திட்டுவிழும், கஸ்டமர்ட்ட ஏண்டா பேசுனேன்னும் கத்துவாங்க. நாம பண்ண டார்ச்சர் தெரியாது" புன்னகைத்துக்கொண்டே துணைவியார் சொன்னார்.
தங்கசாலை மணிக்கூண்டை ஒரு சுற்றுசுற்றிவிட்டு வியாசர்பாடி வரையில் செல்வான். எப்படியும் மதிய உணவிற்கு வரமாட்டான். இரவுதான் திரும்புவான் என்பது எல்லாருக்கும் தெரியும்.
*****
"மா, +1 மார்க்ஸ் ஓகேன்னு வாப்பா சொல்லிட்டாங்ளா"
"எட்டாம் வகுப்பு வரை ரியாதில் படித்துவிட்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்து சென்னையில் படிக்கும் பெண்பிள்ளைக்கு தனது தந்தையின்மேல் ஒரு பிரமிப்பு எப்பொழுதும் இருந்தது. பிறந்தது வளர்ந்தது வளைகுடாவில் என்பதாலும் பிறகு படிப்பு தொடர்ந்தது சென்னையில் என்பதாலும் இரண்டு நகரங்களின் வாழ்க்கை முறையும் பழக்கப்பட்டிருந்தது. சென்னையென்றால் இப்படி, ரியாதென்றால் இப்படி என்னும் புரிதல் இருந்தது. நகரவாழ்க்கை தொடர்பான புரிதலில் பக்குவப்பட்டவளுக்கு தந்தையை விட்டுப் பிரிந்திருக்கும் அளவிற்கு மனம் இன்னும் பக்குவப்படவில்லை.
விடுமுறையில் ரியாத் செல்லும்பொழுதெல்லாம் விமான நிலையத்திலிருந்து சாலையில் வழுக்கிக்கொண்டு செல்லும் ஃபார்ச்சூனர் வண்டி அவளுக்கு மிகவும் பிடிக்கும். "சான்ஸெ இல்ல'பா" என்று சொல்லிக்கொண்டே வருவாள். கிங்டம் சென்டரின் விண்பாலத்திற்கு சென்று மன்னர் ஃபஹத் சாலையின் போக்குவரத்து நெரிசலைப் பார்த்துப் பிரமிப்பாள். பாலையைக் கோடுபோட்டுப் பிளந்தாற்போலச் செல்லும் நீண்ட மதீனா சாலையில் ஒவ்வொரு முறை செல்லும்போதும் பின்னிருக்கையிலிருந்து எட்டி சாலையைப் பார்த்துக்கொண்டே கைபேசியில் படங்களாக எடுத்து வருவாள்.
தனது மதிப்பெண்களால் தந்தை மகிழ்வாக இருக்கிறாரா என்று அவள்தான் இப்பொழுது கேட்கிறாள். "அதான் கொண்டாடிட்டாங்களே. அல்அரப்ல டின்னரு, ஜீ-ஷாக் வாட்சு. எனக்கெல்லாம் காலேஜ் முடிக்ற வரைக்கும் வாட்சுன்னா என்னன்னே தெரியாது, உனக்கு +1க்கே ஜீ-ஷாக். ஏன் எண்ட்ட திரும்பவும் கேக்ற?"
"இல்ல, அடுத்த வருஷம் +2 முடிச்சுட்டா காலேஜுக்கு மேனேஜ்மெண்ட் கோட்டால சேர்க்கமாட்டேன்றாங்களே. இவங்க வேலை செய்ற கம்பெனி பார்ட்னர்ஸ்தான அந்த காலேஜ் ட்ரஸ்டீஸ், ஒருவேளை கட் ஆஃப்ல கெடைக்கலைன்னா, ரெக்கமண்டேஷனுக்கு..."
"கொன்னே போட்ருவாங்க ஒன்ன. உங்க வாப்பவாவது மேனேஜ்மெண்ட்ல சீட் கேக்றதாவது. வர்ர கட் ஆஃபுக்கு எங்க கெடைக்குதோ அங்க படின்னு சொல்லுவாங்க. மேனேஜ்மெண்ட்ல சீட் கேக்க மாட்டாங்க."
"சரி, ஆர்ட்ஸ் ஸைடு போரேன்னா?"
"வெளுத்துருவாங்க."
"இப்ப எங்க போயிருக்காங்க?"
"நார்த் மெட்ராஸ். ஏன் கேக்ற?"
"இல்ல மா இப்ப என்னை இங்க சென்னைக்கு அனுப்பி படிக்கவச்சது எதுக்கு. எனக்கு சென்னை பழகணும், கல்ஃபுலயே இருந்துரக்கூடாது, சொகுசு பழகிரக்கூடாதுன்னுதான?"
"அதுக்கும்தான். அவங்களுக்கு உன்னோட படிப்புலதான் கவனம். வேற எதுவும் இல்லை. நீ சென்னைல இருக்ற ஸ்டூடன்ஸோடதான் போட்டி போடணும்னு நெனைச்சாங்க, அதான் நம்மள இங்க இருக்கச் சொன்னாங்க."
"அதுக்குத்தானா, இல்ல என்.ஆர்.ஐ. கோட்டாவுல சேர்க்க வேணாம்னா?"
"மேனேஜ்மெண்ட் கோட்டாவுலயே சேர்க்கமாட்டேன்றவர்ட்ட என்.ஆர்.ஐ. கோட்டாவைப் பேசமுடியுமா?"
"இப்ப ஸ்ரீபெரும்புதூர் வீடு எவ்ளோல கட்றாங்க?"
"ஒனக்குத் தெரியாதா என்ன? பரக்கத்து அல்லாஹ் குடுத்திருக்கான். நல்லா செலவு செய்றாங்க." "ரியாத் போறதுக்கு முன்ன வாப்பா எங்க இருந்தாங்க?"
"என்ன இன்னிக்கு புதுசா கேக்குற எல்லாத்தையும்?" "சொல்லேன்."
"ஈ.பி. பேசின் பிரிட்ஜ் பவர் ஹவுஸ்லதான் போஸ்டிங்."
"வீடு?"
"வியாசர்பாடி."
"இப்பொ பாரேன், நம்மளை படிப்புக்குன்னும் சென்னை பழகணும்னும் இங்க அனுப்பிட்டாங்க, அதுல தப்பு சொல்லலை, ஆனா, அவங்க நினைச்சது நடக்குதா?
"பாரு, ஸ்கூல் வாசல்வரைக்கும் வண்டில கொண்டுதான் நீ விடற. சாயந்திரமும் அப்படியே ஸ்கூல் விட்டா வீடு, வீடுவிட்டா ஸ்கூல். மார்க்கு மார்க்கு மார்க்கு. ஸ்பெஷல் க்ளாஸ். இதைத்தான அங்க இருந்திருந்தாலும் செஞ்சிருப்பேன்.
"ரியாதுக்கும் சென்னைக்கும் வீட்ல வித்தியாசம் தெரியக்கூடாதுன்னு எல்லாத்தையும் வாங்கிப்போட்டாங்க. அப்ப, இது நான் ரியாதுல இருக்றாப்லதான. "என்ன, வாப்பா நம்மகூட இல்லை. அது ஒண்ணுதான வித்தியாசம்.
ஏன் இப்படி?
"சரி வாப்பாவையும் எடுத்துக்க. அந்த மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் சென்னைலதான தேவைப்படறாங்க? இருந்திருந்தா என்ன... இப்பவும் சென்னைல சீனியர் பொசிஷன்லதான இருந்திருப்பாங்க? எதுக்கு அங்க பாதி, இங்க பாதியா இருக்கணும். இங்க கோடில செலவுபண்ணி வீட்டைக்கட்டி வச்சிட்டு நம்மளோடவா இருக்கப் போறாங்க? வருஷத்துல ரெண்டுமாசம் இங்க வீடு பூட்டிக் கெடக்கும். நாம அங்க இருப்போம். அவங்க இங்க வந்தாலும் பதினஞ்சு நாள் இருவது நாள், அவ்வளவுதான்.
வாப்பா ஒரு நல்ல சார்'மா. ப்ரொக்ரஷன்லாம் வாப்பா சொல்றா மாதிரி படிச்சா எல்லாரும் சென்ட்டம்தான். ஆனா, என்னாலயே அவங்கள்ட்ட படிக்கமுடியலையே. அவங்க பிசி. கல்ஃப் லைஃப். கொஞ்சம் அங்க இங்க காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டாங்கன்னா, வாப்பாவை மாதிரி ஒரு பர்சனாலிட்டியைப் பாக்றது கஷ்டம். ஆனா, காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டாங்க. நம்ளால ஒண்ணும் செய்யமுடியாது." பெண் குழந்தை பேசிக்கொண்டே சென்றது.
தலைநரைத்த முன்னாள் ஆணழகப் போட்டியாளர்களுடன் வியாசர்பாடியில் அன்றைய நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் அப்துல்லாவுக்கு எதுவும் தெரியாது. அவனைப் பொருத்தவரையில் ஒழுக்கம், கட்டுப்பாடு, வேலை, முன்னேற்றம் என்றுதான் வாழ்க்கை சுற்றிச்சுற்றி வரவேண்டும். எலிப் பந்தயத்தில் வெல்வதற்காகக்கூடத் தன் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்கமாட்டான். அப்படி விட்டுக்கொடுக்காததாலும் உயரத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறான். எட்டியிருக்கும் உயரத்திலும் திருப்தியடையவில்லை. கண்டிப்பாக இன்னமும் மேலே செல்வான், மற்றவர்களை விட்டு விலகி...
அபுல்கலாம் ஆசாத், சவூதி அரேபியா
(பொறியியலாளரான அபுல்கலாம் ஆசாத் சவூதி அரேபியாவில் மேலாளராகப் பணிசெய்கிறார். இவரது ஆர்வங்கள்: வாசிப்பு, மரபுப்பா, கஜல், கானா, நுட்பமான திரைப்படச் சண்டைக் காட்சிகள், சிலம்பம், தொண்டுசெய்தல், ஜப்பானிய மொழி (மாணவனாக), பழைய திரைப்பாடல்கள், சொல்வேந்தர் மன்றத்தில் அங்கத்தினர், அலுவலர் (Toastmasters Club), தமிழ் இணையக் குழுமங்களில் ஆர்வமுடன் பங்கேற்றல். இவர் எழுதி வெளிவந்துள்ள நூல்கள்: வெளி வந்துள்ள புத்தகங்கள்: கானா (சென்னை நகர கானாப் பாடல்களின் சிறிய தொகுப்பு), கஜல் (கஜல்களின் மொழிமாற்றம்), ஹஜ் (புனிதப்பயணம் குறித்த நூல்). முகநூலில் பல சுவையான பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.) |
|
|
More
ஒரு FBI டைரிக்குறிப்பு! விருதுகள் பழுதடைகின்றன
|
|
|
|
|
|
|
|