|
|
|
அன்புள்ள சிநேகிதியே
போன இதழில் உங்கள் பகுதியில் நீங்கள் எழுதியிருந்தது எனக்கு 'திக்'கென்று இருந்தது. என் வாழ்க்கையைப்போலவே அமைந்திருந்தது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. படித்துமுடித்த பிறகுதான் வேறுபாடுகளும் பிரச்சனைகளும் வேறுமாதிரியானவை என்று புரிந்து, எனக்கு ஏற்பட்டிருக்கும் சங்கட நிலையைப்பற்றி எழுதுகிறேன்.
எனக்கு இரண்டு பையன்கள் - 8, 6 வயது. என் கணவர் (இப்போதைய) கன்சல்டண்டாக இருக்கிறார். நானும் வேலையில் இருக்கிறேன். குடும்பம் நன்றாகத்தான் இருக்கிறது, தற்சமயம். என் பிரச்சினையை எழுதுவதற்கு முன்னால், என்னுடைய பின்னணியைச் சொல்லிவிடுகிறேன்.
நல்ல வசதியுள்ள குடும்பத்தில்தான் பிறந்தேன். நன்றாகப் படித்தேன். ஒரு அண்ணா; ஒரு தங்கை. நல்ல ஒற்றுமையான குடும்பம். எனக்கு ஜாதகக் கோளாறினால், திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போனது. வெறுத்துப்போய், மேல்படிப்புக்கு இங்கே வந்து, பிறகு வேலையும் தேடிக்கொண்டேன். வேலையை ஏற்றுக்கொள்ளும் முன்பு, இந்தியாவுக்கு இரண்டு வாரம் போனேன். அப்போது, திடீரென்று என் கல்யாணம் நிச்சயம் ஆனது. என் கணவர் தன் தங்கையின் திருமணத்துக்கு வந்தபோது (அவரும் இங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்தார்) யாரோ சொல்லி, உடனே முடிவானது. அவர்கள் எங்கள் அளவுக்கு வசதி படைத்தவர்கள் அல்ல. இவர் சம்பாதித்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும். மாமனார் சாஸ்திரிகள். ஆசாரமான குடும்பம். என் அப்பாவுக்குக் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. "எந்த வகையிலும் அவன் உனக்குச் சரியானவன் இல்லையே அம்மா" என்று வருத்தப்பட்டார். நானும் கொஞ்சம் தயங்கினேன். நான் MS. அவர் BEதான். என்னுடைய உயரந்தான் இருப்பார். தனியாகச் சந்தித்தபோதும் அதிகம் பேசவில்லை. ஆனால், அவருடைய இரண்டு தங்கைகளும் என்னிடம் ஆசையாகப் பேசினார்கள். அந்த மாமி, மாமா எல்லோரும் கனிவாக இருந்தார்கள். நான் ஏதோ 'சரி'யென்று சொல்லிவிட்டதுபோல, ஆசையாக அவர்கள் வீட்டுக்குக் கூப்பிட்டார்கள். அந்த உபசரிப்பில் எனக்கு பொய்த்தனம் எதுவும் தெரியவில்லை. ஒரு பெருந்தன்மை இருந்தது. இரண்டு பேருமே சீக்கிரம் யூ.எஸ். திரும்ப வேண்டி இருந்ததால், அவசர அவசரமாக வீட்டிலேயே கல்யாணத்தை முடித்துவிட எண்ணினார்கள். நானும் ஒத்துக்கொண்டேன்.
என் கணவர் நல்லமாதிரிதான். ஆனால், அமைதியாக இருப்பார். ஏனென்று தெரியாது. ஐந்து வருடத்தில் இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பம் பெரிதாகி, நான் வேலையை விடவேண்டிய நிலையில், என் மாமனார் ஃபோன் செய்து, "அம்மா, இனிமேல் எங்களுக்குப் பணம் அனுப்பாதீர்கள். இப்போது நன்றாக இருக்கிறோம்" என்று சொன்னார். அதிர்ந்து போனேன் நான். என்ன பாக்கியம் செய்திருக்கிறேன், இதுபோன்ற மனிதர்கள் என் வாழ்க்கையில் அமைய! இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. என் கணவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் அட்மிட் ஆகி, multi-organ failure ஆகி, போய்விட்டார். அவருக்கு ஒரு கிட்னி இல்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. மறைத்துவைத்துக் கல்யாணம் செய்யும் அளவுக்குக் கெட்டவர்கள் யாரும் அந்தக் குடும்பத்தில் இல்லை.
பெரியபையன் இரண்டு வயது. இரண்டாவது இரண்டு மாசம். என் மாமனாரும், மாமியாரும் என்னையும், என் குழந்தைகளையும் அப்படி கவனித்துக்கொண்டார்கள். என் அம்மா எனக்கு எந்த உதவியும் செய்யும் நிலையில் இல்லை. எப்படியோ அந்த இழப்பிலிருந்து மீண்டு, மறுபடியும் வேலைபார்க்க ஆரம்பித்தேன். என் நாத்தனாரின் கணவருக்கும் இங்கேயே வேலைகிடைக்க, அவளும் அதிர்ஷ்டவசமாக என் பக்கத்திலேயே வந்து விட்டாள்.
இதற்கு நடுவே என்னுடன் வேலை பார்த்த ஒருவர் என்னுடைய இழப்புக்கு ஈடு செய்வதுபோல, அவ்வப்போது எல்லா வேலைகளையும் செய்துதருவார், என் மாமனார், மாமியாரை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து வருவதிலிருந்து grocery வாங்குவதுவரை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். என்னுடைய இரண்டாவது பையன் pre-matured. என்னால், அதிகம் வெளியில் போக, டிரைவ் பண்ண அப்போது முடியவில்லை. மொழி அவர்களுக்குள் பிரச்சினையாக இருந்தாலும், என் மாமனார் அவருக்கு சமஸ்கிருதம் சொல்லிக்கொடுக்க, இவர் இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்க, அவர்களுக்குள் நல்ல ஒட்டுதல். அவர் மராத்தி பேசுபவர். அவர் கதையைக் கேட்கவே சோகமாக இருந்தது. அப்பா, அம்மாவைச் சிறுவயதிலேயே இழந்து, அனாதை இல்லத்தில் வளர்ந்து, யார் யார் உதவியிலோ படித்து இங்கே வந்து வேலை தேடிக்கொண்டவர். சொந்தம், பந்தம் யாரும் கிடையாது.
நாங்கள் வேலைபார்த்த இடத்தில் நாங்கள் இரண்டு பேர்தான் இந்தியர்கள். அப்படித்தான் அறிமுகம் ஆனது. மிகவும் பண்புடன் பழகுவார். எல்லை மீறமாட்டார். என் மாமனார், மாமியார் இந்தியா திரும்பியபின் தன் வருகையைக் குறைத்துக் கொண்டார். ஃபோன்மூலம் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுச் செய்வார். உதவிமட்டும் கேட்டுக்கொண்டால் எப்படி என்று நான் அவரை அடிக்கடி வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடுவேன். முதலில் மிக மிகத் தயங்கினார். அப்புறம் குழந்தைகள் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தன. அவருடைய வருகை, அவர்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. குழந்தைகளுடன் அவரை அடிக்கடி பார்த்ததால், பள்ளியில், பக்கத்து வீடுகளில் அவரை என் குழந்தைகளின் அப்பா என்று நினைத்தனர். ஒருமுறை என் பையன், அவரிடமே, "நீங்கள் எங்களுக்கு டாடியா இல்லை அங்கிளா?" என்று கேட்டுவிட்டான்.
அது ஒரு சங்கடமான நிலைமையாகிப் போனது. எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசும் என் மாமனாரிடம் இந்த விஷயத்தையும் உளறிவிட்டேன். அதற்கு அவர் பதில் பேசாமல் பேச்சை மாற்றிவிட்டார். அதற்குப் பிறகு, ஒரு uneasy feeling இருந்தது. ஒருவாரம் கழித்து, அவரிடமிருந்து ஒரு ஈமெயில். என்னைக் கூப்பிடச் சொல்லிக் கேட்டிருந்தார். நான் தயக்கத்தோடுதான் கூப்பிட்டேன். முதல் அரைமணி நேரம் வேதம், கர்மா, பித்ருக்கள், தர்மம் என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே போரடித்தது. அதற்கப்புறம்தான் சீரியஸாகப் பேசினார். ஐந்து வருடம் ஆகிவிட்டது. ஆனால், அவர் பேசியது அப்படியே தெளிவாக இன்னமும் கேட்கிறது.
"உன்னையும், உன் குழந்தைகளையும் ஆளத்தெரியாமல், அனுபவிக்கத் தெரியாமல் அல்ப ஆயுசில் போய்விட்டான் என் பையன். அவனுக்கு இந்தக் குறை இருந்தது தெரிந்திருந்தால் பகவான் சாட்சியாக, அவனை இந்த பந்தத்தில் ஈடுபடுத்தியிருக்க மாட்டேன். நீங்களும் குழந்தைகளும் என்ன தவறு செய்தீர்கள்? உங்களுக்கு எத்தனையோ வருஷங்கள் இந்த லோகத்தில் இருக்கும் ப்ராப்தம் இருக்கிறது. இந்த நல்ல மனிதன், எந்த ஜாதி, எந்த மதமாக இருந்தால் என்ன? அவனுக்கு இஷ்டம் இருந்தால் நீயும் ஒத்துக்கொள். நானே வந்து இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்" என்றார். இப்போது நினைத்தாலும் எனக்கு மயிர்க்கூச்சிடுகிறது. மனம்நெகிழ்ந்து போகிறது. அப்புறம் அவர் கொடுத்த தைரியத்தில், நான் நம்பிக்கையுடன் இரண்டாவது முறையாக என்னுடைய நல்ல நண்பருடன் வாழ்க்கையை ஆரம்பித்தேன். எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
போனமாதம் எங்கள் வீட்டில் ஒரு ஃபேமிலி கெட்டுகெதர். என் அண்ணா தன் குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து வந்திருந்தான். என் அப்பா, அம்மா, அத்தை, மாமா, மகள்கள், மகன்கள் என்று பெரிய கூட்டம். என் கணவருக்கு தமிழ் தெரியாது என்பதை மறந்துவிட்டு, எல்லோரும் தமிழிலேயே பேசிச் சிரித்து, தமிழ் சினிமா, தமிழ் பாட்டு என்று தூள் கிளப்பினோம். என்னுடைய பல வருடங்களுக்குப் பிறகு இங்கே வந்து ஒன்றாகச் சேர்ந்ததில் நானும் எதையும் சரியாகக் கவனிக்கவில்லை.
அவர்கள் போனபிறகு வீடு நிம்மதியாகி எல்லா ஃபோட்டோக்களையும் பார்க்கிறேன். ஒன்றில்கூட இவர் இல்லை. பாதிநேரம் இவர் எடுத்திருக்கிறார். மீதிநேரம் குழந்தைகளுடன், நாயுடன் என்று தனியாகக் கழித்திருக்கிறார். எப்படி இப்படி சுயநலக்காரியாக நான் மாறினேன். என்னுடன் வாழ்க்கையைப் பங்குபோட்டுக் கொண்ட மனிதரை எப்படி அடையாளம் கண்டுகொள்ளத் தவறிவிட்டேன்! தனக்கென்று ஒரு குடும்பம் இல்லை என்று ஏங்கியிருப்பாரோ? இதை நினைக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வருகிறது. இதை நான் எழுதும்போது, அவர் தொழில் விஷயமாக இந்தியா சென்றிருக்கிறார். அதிகாலை ஃப்ளைட் என்று தானே cab புக் பண்ணிக்கொண்டு போய்விட்டார். என்னுடைய உற்றம், சுற்றம் திரும்பிப் போனபிறகு, அவர் இன்னமும் அமைதியாகப் போய்விட்டது போல எனக்குத் தோன்றுகிறது. மிகவும் காயப்படுத்தி விட்டேனோ என்னுடைய அறியாமையால் என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. அதைப் பகிர்ந்துகொள்கிறேன் உங்களுடன். போன இதழில் உங்கள் பகுதியில் நீங்கள் அறிமுகப்படுத்திய தந்தையில்லாத சின்னப்பையனின் உணர்வுகளை நான் இவருடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறேன். மனம் கஷ்டமாக இருக்கிறது.
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதியே
புரிகிறது. இந்தியாவிலிருந்து அவர் திரும்பி வந்தவுடன் உங்கள் பாசத்தால் ஈடுபடுத்தி விடுங்கள். உங்கள் மாமனார்/மாமியார் வருகையின்போது, அவர்களுடன் ஏற்கனவே பழகியதால், கொஞ்சம் ஈடுபாட்டுடன் இருப்பார் என்று தோன்றுகிறது. நீங்கள் எழுதியிருப்பது பிரச்சினை இல்லை, இருக்காது என்பதுதான் என்னுடைய கணிப்பு. நிறையப்பேருக்கு மொழி, கலாசார வேறுபாட்டால் ஏற்படும் அனுபவந்தான் இது. அவருக்கு மட்டும் புதிதல்ல. பண்பாளர்; எதற்கும் தயக்கப்படுவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். உள்ளத்தின் வலிமை உறவுகளில்தான் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் அந்த வலிமை, அவருடைய வலிக்கு மருந்தாகும். கவலைப்படாதீர்கள். அதுவும் உங்களுடைய மாமனார்போலப் பெருந்தன்மையான மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கும்வரை, உறவில்லாதவர் என்று யாருமே இருக்கமுடியாது. அவர் தன்னுடைய மாமனார் பதவியை ஐந்து வருடங்களுக்கு உங்களிடமிருந்து உதறி, உங்களுடைய இந்தக் கணவருக்குத் தானே கொடுத்து விட்டிருக்கிறார்.
வாழ்க வளர்க, மீண்டும் சந்திப்போம்
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|
|