பிரணவ் கல்யாண்
|
|
|
|
விரிகுடாப் பகுதியின் ஃப்ரீமான்டைச் சேர்ந்த பவித்ரா நாகராஜன் (17) அமெரிக்க அதிபரின் கலைகளுக்கான நல்லறிஞர் (U.S. Presidential Scholars in the Arts (PSA)) விருதினைப் பெற்றுள்ளார். இதனைப் பெற்ற ஆசியர், இந்தியர், தமிழ்ப்பெண் என்கிற வகைகளில் அவர் இன்னும் அதிகச் சிறப்படைகிறார். நாடெங்கிலுமிருந்து அமெரிக்கக் கல்வித்துறைக்கு வந்த 12,000 விண்ணப்பதாரர்களில் 60 இளம் கலைஞர்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு $3,000 நிதி நல்கப்பட்டது. அவர்களிலிருந்து இறுதிச்சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இளம் கலை நல்லறிஞர்களில் பவித்ராவும் ஒருவர்.
ஜூன் 19-21 நாட்களில் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளைமாளிகை நடத்தவிருக்கும் விழாவுக்கு அரசு விருந்தினராக பவித்ரா சென்று அங்கே அதிபர் பதக்கத்தைப் பெறுவார். விருதுபெற்ற அனைவரும் அங்கே கௌரவிக்கப்படுவர். அங்கே பிற பன்னாட்டு அறிஞர்கள், அரசு உயரதிகாரிகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரையும் சந்திக்க வாய்ப்புத் தரப்படும். வாஷிங்டன் டி.சி. பகுதியிலுள்ள அருங்காட்சியகங்கள், நினைவகங்கள் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவர். தமக்கு ஆர்வமுள்ள துறை வல்லுனர்களைச் சந்தித்து, கருத்துப் பரிமாறி, அவர்களோடு நட்பை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்பதைப் பவித்ரா மிக அரியதாகக் கருதுகிறார்.
குரு தீபா மஹாதேவன் அவர்களிடம் அல ஆண்டுகளாக நடனம் பயின்றுவரும் பவித்ரா, 2010ம் ஆண்டு அரங்கேற்றம் கண்டார். யுவபாரதி, க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை, கலா ஆராதனா நடனப்போட்டி, விரிகுடாப் பகுதித் தெலுங்கு சங்கத்தின் தனிநபர் நடனப்போட்டி, விரிகுடாப் பகுதி திறன் காட்சி என்று பல போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்துள்ளார். பல நிதிதிரட்டும் நிகழ்வுகள், தனிநபர் மற்றும் குழு நடனங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தான் பயின்ற நடனப்பள்ளியில் உதவியாளராக நடனம் கற்பிக்கிறார். "நடனத்தைக் கற்றல், கற்பித்தல், ஆடுதல் என்ற இம்மூன்றிலும் எனது தணியாத ஆர்வத்தைத் தொடருவேன்" என்கிறார் பவித்ரா. |
|
ஆனால், இலக்கியம், ஜர்னலிசம், ரொபோடிக்ஸ், உடல்நலம் என்று இவருடைய ஆர்வங்கள் பரந்துபட்டவையாக உள்ளன. "பவித்ரா சிறு குழந்தையாக இருந்தபோது நான் சின்மயா மிஷன் நடன வகுப்புக்கு அழைத்துச் சென்றேன். அங்கே தட்டு மிட்டு கற்க மாணவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், பவித்ரா அதைச் சட்டென்று பிடித்துக்கொண்டு விட்டாள். ஆசிரியை அவளைப் பாராட்டினார்" என்கிறார் பவித்ராவின் அம்மா திருமதி. ராஜலக்ஷ்மி நாகராஜன். தமது குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக மென்பொருள்துறைப் பணியை உதறியவர் ராஜலக்ஷ்மி. அவரது உழைப்பு வீணாகவில்லை என்பதையே பவித்ரா பெற்றிருக்கும் இந்த தேசிய கௌரவம் தெரிவிக்கிறது. தந்தை நாகராஜன் பிரபல மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளில் இயக்குனர். பவித்ராவின் சகோதரர் பிரணவ் செஸ் மற்றும் சாரணர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.
தமிழிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட பவித்ரா தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் (tamilvu.org) அடிப்படை, நடுநிலை மற்றும் உயர்நிலைச் சான்றிதழ்க் கல்விவரை சிறப்புறத் தேர்வுபெற்றுள்ளார். "என்னுடைய பாட்டியிடம் நான் அடிக்கடி பேசுவேன். அவருடைய பேச்சு எனக்கு உற்சாக டானிக்" என்கிறார் பவித்ரா.
ஃப்ரீமான்டிலுள்ள அமெரிக்கன் ஹைஸ்கூலில் சீனியரான பவித்ரா, வரும் கல்வியாண்டில் சான்ட க்ளாரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலும் பொறியியலும் மேஜர்களாகக் கொண்டு படிக்கவிருக்கிறார். பெரிய சாதனைகளின் தொடக்கமாக அதிபர் வழங்கும் இந்த கௌரவம் அமையட்டும் என்று வாசகர்களின் சார்பாகத் தென்றல் பவித்ராவை வாழ்த்துகிறது.
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
பிரணவ் கல்யாண்
|
|
|
|
|
|
|