Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
செல்லாவாடன்
- ம. காமுத்துரை|ஜூன் 2016|
Share:
எந்த ஒரு விசயத்தையும் உவகை பொங்க சந்தோசித்துப் பேசுகிறவன் நமது செல்லாவாடன் என்கிற செல்லச்சாமி. பூமியில் வந்துதித்து நாற்பது வருடங்களாகியும் இன்னமும் தனக்கொரு இணை தேடி குடும்பமாகாமல் இளங்காளையாய் (?) துள்ளித்திரியும் இயல்புமிக்க புருஷன். புருஷனெனச் சொல்வது இந்த இடத்தில் இலக்கணப் பிழையாக இருக்குமேயானால் பொருத்தமான வார்த்தையினை இட்டு நிரப்பிக்கொள்ளவும்.

.... உத்தியோகம் புருசலட்சணமாமே... அந்த வகையில் செல்லாவாடனுக்கு மற்ற புருஷர்களைக்காட்டிலும் லட்சண விசயத்தில் கொஞ்சம் கூடுதலாகவே மார்க் போடலாம். சாதாரணமாக எல்லா மனிதர்களும் தனக்கேற்றாற்போன்ற ஒரு வேலையினை, உத்யோகத்தைத்தான் தேர்வு செய்து அதன்படி நின்றொழுகுவார்கள். நமது செல்லா.. அவர்களையும் தாண்டி உலகத்தில் என்னென்ன தொழில் முறைகள் உண்டோ அத்தனையும் செய்துபார்க்கிற, செய்துகொண்டிருக்கிற வடிவானவன். அவனிடம் 'என்னா வேலை தெரியும்?' என்று யாரும் கேள்வி போட்டுவிட முடியாது. 'என்ன வேலையிருக்கு?' என்றுதான் செல்லா கேட்பான்.

சைக்கிள் ரிப்பேர், டெய்லரிங், கிரில் ஒர்க் வேலைகள், வெல்டிங், எலக்ட்ரீசியன், பிளம்பர், கொத்தனார், நிமிந்தாள், சித்தாள், கம்பி வெட்டுதல், கூடை முடைதல், பாய் பின்னுதல், சாக்கு தைத்தல்... ஏவாரம் - ஏவாரமென்றால் பலசரக்கு, பெட்டிக்கடை மட்டுமில்லை, பழைய பொருள்கள் விற்க வாங்க, கஞ்சா, சாராயம் என்று மற்றவர்கள் தொடத் தயங்குகிற விசயங்களைக்கூட எந்தத் தயக்கமுமின்றி பிசிறில்லாமல் செய்துமுடிப்பான். இப்படி அவனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்தான். இத்தனை பெரிய பீடிகை எதற்கு என்கிறீர்கள்... இதெல்லாம் சாத்தியமா எனவும் கேட்பீர்கள்... அதன்பொருட்டே இந்தக்கதை....

ஒருநாள் இதே ஊரில் கிழக்குத் தெருவில் பூச்சனின் பசுவுக்கு உடம்பு சவுகரியம் இல்லாமல் போனது. அதற்கு ஊசி போடவேண்டும். மாட்டாஸ்பத்திரி ஊருக்கு வெளியே இருந்தது. அங்கே போய் அங்கிருந்த மருத்துவரிடம் இப்படிக்கிப்படி என்று தனது பசுவைப்பற்றியும் தன்னைப் பற்றியும் ஒப்பித்துக்கொண்டிருந்தான் பூச்சன். அந்த மருத்துவரோ பசுவை மருத்துவமனைக்குக் கொண்டுவரச் சொன்னார். பூச்சனோ "தல ஈத்து பசுவு சார்.." எனக் குழைந்தான். "செனப் பசுவவே ஓட்டிட்டு வாறாக..." என மருத்துவர் உட்கார்ந்திருந்த சேரை அசைத்தபடி பதிலுரைத்தார். அவரும் கிட்டத்தட்ட பொதுபொதுவென பசுவினையொத்த உடல்வாகு கொண்டிருந்தார்.

அந்தநேரம் காம்பவுண்டு சுவர் எனச் சொல்லப்படுகிற மருத்துவமனையின் சுற்றுச் சுவரோரமாய் வளர்ந்து நிற்கிற கொடிக்காப்புளி மரத்தில் தொரட்டிக் கம்புவைத்து கொடிக்காக்காய்களை உலுக்கிக் கொண்டிருந்த நமது செல்லாவாடன் எதேச்சையாய் அவர்களுக்கு நடுவில் நுழைய வேண்டிவந்தது.

கம்பவுண்டர் என அழைக்கப்படுகிற உதவியாளர் இல்லாமல் மருத்துவர் வெளியில் எங்கும் நகரமாட்டார். பை தூக்கிவர வேண்டும், பைக்குள்ளிருந்து கிளவ்ஸ் எடுத்துத் தரவேண்டும், உபயோகித்த கிளவ்ஸை தூர எறியவேண்டும். ஊசி போட நீடில் எடுக்க, சிரிஞ்சில் மருந்து ஏற்றிக்கொடுக்க, முக்கியமாய் மாட்டின் குணம் அறிந்து உளவுசொல்ல... இப்படி மருத்துவருக்கு உதவியாளரால் ஏகப்பட்ட அனுகூலங்கள். அவர் இல்லாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதென்பது சாத்தியமே இல்லை.

தலையீத்து, கலப்பின பசு. தரைதொட்டுப்போகும் பெருத்தமடி. வீதியில் அழைத்து வந்தால் ஊர்க் கண்படும். திருஷ்டிபட்டால் பசுவுக்கும் சிரமம். குடும்பத்துக்கும் சிக்கல். குடும்பமே பாழகிப்போகும். இது பூச்சனின் முறையீடு. கெஞ்சல்.

பிடுங்கிய கொடிக்காய்க்காயில் பழமாகப் பொறுக்கி ஆளுக்கு இரண்டாய் கொடுத்தான். பூச்சன் ஆவலாய் வாங்கி தோலுரித்து கொட்டை நீக்கி வாயில் அதக்கிக்கொண்டான். மருத்துவர் அசூயையாய் பார்த்து டேபிளின் கோடியில் வைக்கச் சொன்னார்.

"நம்ம ஆஸ்பத்திரிக்காய் சார் தொவக்கவே தொவக்காது, சூப்பரா இனிக்கும் சார்!" என்றவன், "வாங்க சார்.. நாங் கூட வாரே மாட்டுக்கு ஊசியப் போட்டு வந்திருவம். பையக் குடுங்க சார் நான் தூக்கிட்டு வர்ரேன். பூச்சா சார ஏத்தீட்டுப் போக ஒரு ஆட்டாவக் கூப்புட்டுவாப்பா" என கைகளைத் தட்டித் துடைத்தபடி சொன்னான்.

மருத்துவர் அசையவில்லை. செல்லாவாடனால் தனக்கு உதவியாளனாகச் செயல்பட முடியாது என்று பலவிதங்களில் சொல்லிப் பார்த்தார்.

"சார்.... நானெல்லா காட்ல பெரிய ஆனைக்கே பேறுகாலம் பாத்தவெ! கொசுவுக்கு கடிவாயில ஊசி போட முடியுமா நான் போடுவேன் சார். என்னா பூச்சா, சாருக்கு நம்மளப் பத்திச் சொல்லலியா. ரெம்ப இன்சல்ட் பண்றாரே" சலா வரிசை ஆடினான் செல்லா.

பூச்சன், செல்லாவின் மகாத்மியங்களை தன்னால் இயன்றமட்டும் எடுத்துச் சொன்னான்.

ஆட்டோவில் தூக்கி உட்காரவைக்காத குறையாகத்தான் மருத்துவரை ஏற்றினார்கள். மருத்துவருக்கும் ஊரைப் பகைத்துக்கொள்ள முடியாத குண விசேசத்தால் நடப்பது நாணல் புதர் சாஸ்தாவின் சங்கல்பமே என்று மனசை தேற்றிக்கொண்டார். நல்லவேளை. ஆட்டோவில் தனக்குச் சமானமாய் செல்லாவுடன் பக்கத்தில் உட்காரவில்லை என்பதில் அவருக்கு பெருத்த ஆறுதல். டிரைவர் இருக்கையில் அவன் பங்குபோட்டு உட்கார்ந்திருந்தான். பூச்சன் தனது பிள்ளையின் இலவச சைக்கிளில் ஆட்டோவுக்கு முன்னால் 'விய்யிங் விய்யிங்' என சைக்கிள் செய்ன் கதறக் கதற ஓட்டிச் சென்றான்.

இந்தக் கதையின்மூலமாக நமது செல்லாவாடனைப் பற்றிய சேதிகளை மட்டுமல்ல பின்னும் பலவிதமான பேர்களின் கூறுகளையும் நாம் காண வேண்டிவரும். எல்லாம் அந்த நாணல் புதர் சாஸ்தாவின் சங்கல்பமே.

பூச்சனின் வீட்டுமுன்னால் ஆட்டோ நின்றது. பூச்சன் ஓட்டிவந்த சைக்கிளை எங்கே நிறுத்தினான் என்பது தெரியாது. ஆட்டோவுக்குப் பின்புறமிருந்து ஓடிவந்தான். அமைச்சர்களின் வாகனத்தோடு தொடர்ந்து ஓட்டம் பிடித்து வருகிற பூனைப்படை காவலரை ஒத்து இருந்தது அவனது அந்தச் செய்கை. கையில் துப்பாக்கியோ வேறு எந்த ஆயுதங்களையோ சத்தியமாய் பூச்சன் வைத்திருக்கவில்லை. சம்பந்தகாரரை வரவேற்பதுபோல இருகரங்களையும் கூப்பி வரவேற்றான்

"உள்ள வாங்க சார்."

அதற்குள் நமது செல்லாவாடன், மருத்துவர் ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொள்ள வசதியாக அவர் பக்கமாய் உட்கார்ந்திருந்த மருத்துவப் பெட்டியைத் தூக்கிகொண்டான். கொசுறாக பாம்பாய்ச் சுருண்டுகிடந்த ஸ்டெத்தாஸ்கோப் பையும் அள்ளிக்கொண்டான். மருத்துவர் ஆட்டோவிலிருந்து மெதுவாய் இறங்கி ஆட்டோவுக்குள் கிடந்த கால் ரப்பர் பூட்ஸை எடுத்து மாட்டிக்கொண்டார். அந்த ரப்பர் கவசம் அவருக்கு முழங்கால்வரை நீண்டிருந்தது. சகதி, சேறு, சாணி இவைகளிலிருந்து மருத்துவரைக் காக்கக்கூடியது.
மருத்துவர் எதிர்பார்த்ததையும்விட பூச்சனின் கட்டுத்தரை ரெம்பவும் சுத்தமாய் இருந்தது. தரையில் கல் பதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஈர கசகசப்பு இல்லை. காடி அவ்வப்போது கூளம் அள்ளப்பட்டு சுத்தமாய் வைக்கப்பட்டிருந்தது. பசு, பூச்சன் சொன்னதைப்போல பெருத்த சீவாத்தியாகத்தான் இருந்ததது. மடி தாராளமாய் தொங்கிகொண்டிருந்தது. எப்படியும் வேளைக்கு பதினைந்து லிட்டருக்குக் குறைவிருக்காது.

"என்ன செய்யிது...?"

மருத்துவர் வாய்திறந்து கேட்டதுதான் தாமதம், பதிவுசெய்யப்பட்ட ரெக்கார்டரைப்போல மடமடவென ஒப்பிக்கலானான். "கிடறிப் பருவத்துக்கு வருவதற்கு முன்பே அதை சிறுகன்றாய் வாங்கியதிலிருந்து, அதற்குச் சிறுபுல் கொடுத்துக் கடிக்கவிட்டதில் ஆரம்பித்து, அதை சினைக்குப் போட்டதுவரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்து முந்தாநாள் பெண்கன்று ஈன்றது, அதன் பிறகு இப்போதைக்கு அது செய்கிற சண்டித்தனம் இரை எடுக்காமல் பயமுறுத்துகிற அதன் ஒத்துழையாமை....

செல்லாவாடன், மருத்துவரின் கைப்பெட்டியைப் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக துள்ளிக்கொண்டிருந்த கன்றுக்குட்டியைத் தடவிக் கொடுத்தபடி நின்றிருந்தான். மருத்துவரோ பசுவை எட்டநின்று நோட்டம் விட்டார். இடதுகையால் பசுவின் வாலைப் பிடித்து மெல்லத் தூக்கினார். 'பார்வையிட வேண்டும்'. பசு அவருக்கு ஒத்துழைக்க மறுத்தது. வாலை இறுக்கிக்கொண்டது. அதன் காரணமாய் மருத்துவர் குனிந்து பார்க்கவேண்டியிருந்தது. அப்படிக் குனியவிடாமல் அவரது பெருத்த வயிறு அவரைத் தடுத்தது. மருத்துவரின் அந்த அவஸ்தையினைக் கண்ட செல்லா எழுந்து வந்தான். பசுவின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டேவந்து வாலை படாரெனத் தூக்கினான். "பாருங்க சார்.." ஆசன வாய் முத்தம் கொடுப்பதைப் போல உதடு குவித்து விரித்து விரித்துக் காட்டியது. செல்லா சட்டென பசுவின் அரையினுள் கட்டை விரலும் ஆள்காட்டி விரலையும் விட்டு விரித்துக் காட்டினான். அதில் லேசாய் சீழ் வடிந்தவண்ணம் இருந்தது. அரையினைத்தொட்டதும் பசு கூச்சத்தில் வசம் திரும்பியது. மூஸ்மூஸென எதிர்ப்புக் காட்டி காலாட்டியது. மருத்துவர் பதறிப் போனார்.

"அதயெல்லா எதுக்குத்தொடுற?"

"அந்த பாக்ஸக் கொண்டா. அதுலருந்து டார்ச்ச எடு" கையை நீட்டினார்.

பெட்டிக்குள் கைவிட்டு கறுப்பு நிறத்திலிருந்த டார்ச்சை எடுத்துத் தந்தான் செல்லா. பசுவின் கண்ணில் ஒளி பாய்ச்சினார் மருத்துவர். பசு கண்களை நன்றாக முழித்துக் காட்டியது. ஒருகண்ணில் நீர் கோர்த்து நின்றது. வாயினில் ரப்பர்ப் பாலாய் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.

"இஞ்சக்சன் போடணும்!"

எந்த இடத்தில் போடுவது என பசுவின் உடம்பில் கண்களை ஓட்டி அதன் மேனியை அளந்தார். அப்பவும் மருத்துவர் பசுவைத் தொட்டுப் பார்க்கவில்லை. பசுவின் தாக்கும் குணம் – திறன் அறியாமல் களத்தில் இறங்கமுடியாது.

"எந்த எடத்தில சார் ஊசி போடணும்?" பயமறியாமல் மருத்துவரருகில் வந்து நின்றான் செல்லா.

"சப்பைலதான்!"

"பின்னத்தங்கால் சப்பையா முன்பக்கச் சப்பையா சார்" ஏதோ தானே வைத்தியம் செய்யப்போவது போல பெருத்த ஆர்வத்துடன் கேட்டான்.

"ஃபிளக்ஸ்சபிலா இருக்கற எடத்திலதான்..போடமுடியும்..." சொன்னபடியே பசுவின் பின்பக்கத்துச் சப்பையினை தொட்டு அமுக்கிப் பார்த்தார்.

"அப்படின்னா முன்னத்திச் சப்பதான் சார் கொழைவா இருக்கும். ஊசி அங்கனதான் சரக்குன்னு எறங்கும். முன்னத்தங்கால்லயே ஊசியப் போட்ட்ருவம்" என்றவன், மருத்துவர் வாய் திறக்குமுன், "பூச்சா.. பசுவ நல்லா இழுத்து ஒட்டக் கட்டிப்போடு. கழுத்துக் கயற சுருக்கு! கழுத்த திருப்பீறக்கூடாது" என்று பூச்சானுக்கு ஆணை பிறப்பித்தான் செல்லா.

ஆனாலும் மருத்துவர் பசுவுக்குப் பக்கமாய் வரவில்லை. கல்தளம், உடல் பெருத்த பசு, முதல்பிரசவம். கூச்சத்தில் தடாபுடாவென மிரண்டு உழல வாய்ப்பு உண்டு. வழுக்கியோ அல்லது உடனிருப்பவர்களைத் தள்ளியோ விடலாம். மருத்துவமனை எனில், கம்பிக்கூண்டுபோட்டு பூட்டி நிறுத்துகிறபோது எத்தனை பெரிய முரட்டுக் காளையானாலும் பிசுங்க முடியாது. கைகூசாமல் மனச்சலனம் இல்லாமல் மூக்கணங்கயிறைக்கூட உருவிப் பார்க்கலாம். இதன்பொருட்டே 'ஹவுஸ் விசிட்' செல்ல பெருமளவு ஒத்துக்கொள்வதில்லை.

பூச்சன், செல்லாவாடனின் ஆணைக்கிணங்க பசுவின் கழுத்துக் கயிறைக் காடியில் இழுத்துக் கட்டினான். பசுவின் பார்வைக்கு மருத்துவர் சிக்காதபடிக்கு பார்த்துக்கொண்டான். பூச்சன் மட்டுமல்ல அவன் வீட்டாளுகள் எல்லாருமே வைத்தியத்திற்கு டாக்டரிடம் ஊசிபோடப் போகிறபோது இதைப்போலதான் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். கண்களை இறுக மூடிக்கொள்வார்கள். ஆனால் பசுங்கன்று எல்லாவற்றையும் முழிமுழியென முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

"பாக்ஸக் கொண்டா!" பெட்டிக்குள்ளிருந்து பலவிதமான சாமான்களை எடுத்துக் கடைபரப்பினார் மருத்துவர்.

"சுடுதண்ணி கொதிக்கவச்சு கொண்டுவா பூச்சா!" செல்லாவாடன் மருத்துவரின் சார்பாகக் குரல் கொடுத்தான்.

பசுவின் முகத்தோடு முகம்வைத்துக் கொண்டிருந்த பூச்சன் பதில் சொல்வதற்குள் மருத்துவர் "அதெல்லாம் தேவையில்ல!" என்றார். மேலும், "ஸ்டெரிலைஸ் பண்ணுன நீடில்தான். யூஸ் அன் த்ரோ சிஸ்டம்" என செல்லாவாடனை மட்டுப்படுத்தினர். அத்துடன், "கொஞ்சம் ஒதுங்கி நின்னுக்க. நீடில் அப்ளை பண்ணப்போறேன். ஊசி எறிஞ்சி அது குத்தின சமயம் வலியில மாடு மிரளும்" என மேலும் செல்லாவை ஓரங்கட்ட நினைத்தார். செல்லா மருத்துவருக்குப் பக்கமாய் வந்து நின்று கொண்டான். உதவியாளன் அல்லவா!

கவரை உடைத்து நீடிலை வெளியில் எடுத்த மருத்துவர், தலையைச் சாய்த்துக் கொண்டு பசுவின் முன்னாத்தங்கால் சப்பையைக் குறிவைத்து எறிந்தார். இரண்டு முறையும் நீடில் கால் சதையில் குத்தி நிற்காமல் பசுவின் கால் குளம்பினடியில் உருண்டு விழுந்தது. செல்லா ஓடி ஓடிப் போய் எடுத்து வந்தான். அவனது வருகை பசுவினை மிரளச் செய்தது. தலையைக் குலுக்கி பூச்சனின் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தது. கையால் மூடியிருந்த கண்ணை விடுவித்து கொட்டத்தைப் பூராவும் சுற்றிப் பார்த்தது. மருத்துவர், செல்லாவாடன், கன்று என கண்களால் ஆலவட்டம் சுற்றி வந்தது. அதனைக் கண்டுகொண்ட கன்று கழுத்தை நீட்டிக் கத்த ஆரம்பித்தது.

மருத்துவர் அந்த நேரம் மிரண்டுபோனார். தனது அடுத்த ஆயுதத்தை எடுக்கலானார். அதில் நீடிலைப் பொருத்தினார்.

"என்னா சார் துப்பாக்கிய எடுக்கறீக...!" செல்லா அந்த 'கன்'னை அதிசயமாய்ப் பார்த்துக் கேட்க, பூச்சன் பயந்துபோனான்.

"அடங்காத அனிமல்ஸ்....", என்று எதோ சொல்லவந்த மருத்துவர், "இந்தமாதிரி மாடுகளுக்குன்னு ஸ்பெசலா தயாரிச்சது" என்றார்.

"இல்ல சார்.. முந்தி இருந்த தொப்பி போட்ட டாக்டர் வந்தா இப்பிடி இப்பிடி தொடையில் தட்டுவார் சார்... தட்டிக்கிட்டே அப்பிடியே 'ச்சக்குன்'னு ஊசிய இப்பிடி எறக்கீருவார் சார்...!" - சொல்லிக்கொண்டே நமது செல்லாவாடன் பசுவின் முன்னத்தாங்கால் சப்பையில் அவன் கைவசம் வைத்திருந்த நீடிலை இறக்கிவிட்டான்..

பசு, உடம்பில் ஊசி இறங்கிய வலியில் உடம்பை உதறியது. பூச்சனின் கைப்பிடி நழுவியது. வாலால் தன் முதுகில் அடித்தபடி இடமும் வலமுமாய் கல் தளத்தை அதகளப்படுத்தியது. நல்ல வேளையாய் மருத்துவர் ஒதுங்கிக் கொண்டார். செல்லா பசுவை ஓங்கிச் சத்தமிட்டு அதட்டி அடக்கினான்.

அன்றிலிருந்து செல்லாவாடனின் துணையில்லாமல் அந்த மருத்துவர் அந்த ஊரில் இருக்கிறவரை 'ஹவுஸ்விசிட்' செல்வதில்லை. என்பது ஊரறிந்த ரகசியமாயிற்று.

ம. காமுத்துரை
Share: 




© Copyright 2020 Tamilonline