விக்கிரமன்
|
|
|
|
|
இராம. பெரியகருப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட முனைவர் தமிழண்ணல் (88) மதுரையில் காலமானார். இவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், ஆகஸ்ட் 12, 1928 அன்று பிறந்தார். பள்ளத்தூர் ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் பயின்ற பின், மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரியில் மேல்படிப்பை முடித்தார். காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி துவக்கினார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் ஆனார். அக்காலத்திலேயே ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது அறிவுத்திறனை வியந்த டாக்டர் மு.வ.வின் அழைப்பின் பெயரில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் பணியில் சேர்ந்தார். தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். பல மாணவர்களது ஆய்வு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.
இலக்கிய ஆய்வாளர். புதுமை நோக்கில் இலக்கியங்களை ஆய்வு செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர். இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல் என 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் "சங்க மரபு","தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்", "உலகத் தமிழிலக்கிய வரலாறு", "புதியநோக்கில் தமிழிலக்கிய வரலாறு", "தொல்காப்பியம் - உரை நூல்", "நன்னூல் உரை நூல்", "அகப்பொருள் விளக்கம் உரை நூல்", "புறப்பொருள் வெண்பாமாலை உரைநூல்" போன்றவை அதில் குறிப்பிடத்தகுந்தவை. இவரது தொல்காப்பியம் பற்றிய உரைநூல் தொல்காப்பியத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும். |
|
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, கலைமாமணி விருது, திரு.வி.க. விருது, மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழ்ச்செம்மல் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். பல பல்கலைக்கழகங்களுக்கு பாடத் திட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய இவர், சிங்கப்பூர் அரசுக்காக தமிழ்க்கல்விப் பாடநூல்களையும் எழுதியிருக்கிறார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழண்ணலுக்கு தெய்வானை என்ற மனைவியும், மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். நற்றமிழ் அறிஞருக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
More
விக்கிரமன்
|
|
|
|
|
|
|