TNF: கோடைக்கால சேவைப் பயிற்சி வையக்கவி பாரதியின் வைரக்கவி
|
|
|
|
|
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விகடனில் வெளிவந்த சுஜாதாவின் மனிதமூளைச் செயல்பாடுகள் பற்றிய தொடரின் பெயர் என்ன? இந்தக் கேள்வியை நம்மை நாமே கேட்டு, "பாரிஸ் கார்னர்... இல்லையே! லைட் ஹவுஸ்... சரியாப் படலியே! ஆ! ஞாபகம் வந்துடுச்சி... செக்ரடேரியட்... ஹும்! அது இங்கிலீஷ் பேராச்சே! சுஜாதா அந்தமாதிரி வெக்கமாட்டாரே" என்பதுபோன்ற பதிலையும் கொடுத்து, வேறுவழியில்லாமல் "சரி விடு, எப்பயாவது ஞாபகம் வரும்" என்று கைகழுவினேன். நம்மில் பலர் ஞாபகமறதியின் சவால்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது.
சாவி எங்க வெச்சேன், கார எங்க விட்டேன், பில் கட்ட மறந்துட்டேனே, ஐயோ! அது இன்னைக்காப்பா - இதுபோன்ற மறதி (Forgetfulness) சமாச்சாரங்கள் எல்லா வயதிலும் நிகழ்ந்தாலும், அதிகப்படியாவது முப்பது, நாற்பதுகளுக்கு (அவரவரின் வாழ்க்கைத்தரத்தைப் பொருத்து) மேல்தான் என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. மறதி அதிகரிக்காமலும், ஞாபகசக்தியை மேம்படுத்தவும் சில உத்திகளைப் பல பிரபல அமெரிக்க ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. சிலவற்றை இங்கே அலசலாம் வாங்க.
காட்சிப்படுத்துதல் (visualization): அடிக்கடி கடந்தகால அனுபவங்களை, சம்பவங்களை மனதில் காட்சிப்படுத்தி நினைவுகூர்தல் மிகச்சிறந்த நினைவுப் பயிற்சி முறை. அடுத்தமுறை நீங்கள் போக்குவரத்து நெரிசலிலோ, டாக்டருக்குக் காத்திருக்கும் அந்த சிறு அறையிலோ - ஊக்கு உடைந்த பம்பரம், பழைய மேனேஜரின் அதட்டல்கள், உங்களைத் துரத்திய தெருநாய், பழைய காதலியின் மணிபர்ஸ், சைக்கிள் டைனமோ போன்ற விஷயங்களை 'பிளாஷ் பேக்' செய்து பாருங்கள். (நடக்காத சம்பவங்களை காட்சிப்படுத்துதலைத் தவிர்க்கவும்!)
புதுமுயற்சிகள்: புதிய இடங்களுக்கு விஜயம், புதிய மொழி கற்றல், புதிய உணவு வகைகளைச் சுவைத்தல் போன்ற புதுமுயற்சிகள் நம் நினைவு மண்டலத்துக்குச் சக்தியூட்டுமாம். அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகும் பாதையை GPS உபயோகிக்காமல் மாற்றுவழியில் செல்ல முயன்று பாருங்கள். இன்னொரு இந்திய மொழியைக் கற்க முயலுங்கள். எப்போதும் செல்லும் உணவகத்தின் மெனுவில், இதுவரை புரட்டாத பக்கத்தைப் புரட்டி, என்னவென்று தெரியாத உணவை முயற்சித்துப் பாருங்கள். (மறக்கமுடியாத ஐட்டம் ஒன்று உங்களுக்குக் கிடைக்கக்கூடும்!)
மூளைக்குப் பயிற்சி: புதிர்கள், விடுகதைகள் போல மூளையைப் பிழிந்து தீர்வுகாணும் பயிற்சிகள் மூளையின் செயலாக்கப் பகுதிகளைக் கூர்மையாக்குவது மட்டுமல்லாமல் நினைவகப் பாகங்கள் சுறுசுறுப்பாகத் தூண்டிவைக்க உதவுகின்றன. பத்திரிக்கைகளில் குறுக்கெழுத்து, 'சுடோக்கு' போன்ற புதிர்களைப் பார்த்தால் வெறியோடு தீர்க்கக் கிளம்புங்கள். (83ம் பக்கம் இருக்கும் விடையைப் பார்க்காதீர்கள்!)
பழகுங்க சார் பழகுங்க: நண்பர்கள், சங்கங்கள், குழுக்கள், பயணங்கள் உள்ளிட்ட சமூக வாழ்க்கை முறைகள் நினைவாற்றலை வளர்ப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்ச்சங்கம், அலுவலக சாஃப்ட்-பால் டீம், பள்ளி PTA, பார்க் டிஸ்ட்ரிக்ட் நடிப்பு வகுப்பு - எதையும் விடாதீர்கள்! (பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தால், நின்று பேசுங்கள்!)
இசை கேளீர்: தினமும் சிறிது நேரமாவது இசை கேட்பது அவசியம் என்கிறார்கள். அதிலும் கிளாசிகல் எனப்படும் பாரம்பரிய இசையின் பலன் அதிகமாம். நமக்குப் பிடித்த இசை நம் மூளைக்கு நல்லது என்பது அடியேன் கருத்து. இசைக்கென்று நேரம் ஒதுக்கிக் கேளுங்கள். (அய்யா சாமீ! கேட்டால் போதும், நீங்கள் பாட வேண்டிய அவசியமில்லை!) |
|
தூங்கு தம்பி சரியா தூங்கு: நாம் எல்லாருக்கும் சொல்வது, ஆனால் செய்யாதது - தூக்கம். ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கவேண்டும் என்பதுதான். அது ஞாபகசக்தியை அதிகரிக்குமோ இல்லையோ, மழுங்கடிக்காது. அதுவும் முப்பது வயதுக்குமேல் மிகவும் அவசியம். இதை சுயசோதனை செய்து உணரலாம். (மீட்டிங்கில் தூங்க முயற்சிக்காதீர்கள்!)
சில மறதி மேனேஜ்மென்ட் உத்திகள்: தள்ளிப்போடாதே - 75 சதவிகிதம் பணிகளை உடனுக்குடன் செய்யாமல், நாம் தள்ளிப்போடுவது உண்மை. செய்ய வேண்டியதை உடனே செய்து முடித்தால், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
வாய்விட்டுச் சொல்லுங்க. சிலர் சூப்பர் அங்காடிகளில் $100 நோட்டை கொடுத்தவுடன், 'one hundred dollars' என்று சொல்வதை கவனித்து இருப்பீர்கள். வாய்விட்டுச் சொன்னால், மண்டையில் சேரும். கண்டிப்பாக மறக்கவே கூடாது என்று நினைக்கும் முக்கிய விஷயங்களை, வாய்விட்டுச் சொல்லிச் செய்தால் நினைவில் இருக்கும். 'நான் சாவிய ரெண்டாவது மாடத்துல வெக்கறேன்', 'பால் வாங்கணும்'. (பக்கத்தில் இருப்பவர் சிரிக்கலாம். ஆனால் மறக்காது).
கால அட்டவணை & பணிப்பட்டியல் (Time table & Task List) போடுங்க. தின, வார, மாத பணிப் பட்டியலிட்டு பணிகளைச் செய்யுங்கள். கம்ப்யூட்டரில் மட்டுமல்லாது சிறிய ஒய்ட் போர்டுகள், பெரிய மாத அட்டவணை, தாள்கள் போன்றவைகளை வீட்டுச் சுவர்களில் ஒட்டி வைக்கலாம்.
அந்தந்த இடத்துல வையுங்க. பொருள்களுக்கு அதற்கென்று இடம் ஒதுக்கி, உபயோகித்து அங்கேயே வைத்தால் மறக்காது. டப்பாக்களுக்கு வெளியில் லேபில் போட்டு (அரிசி, சாக்லேட்) எழுதி ஒட்டிவைக்கலாம்.
தொழில்நுட்ப உதவி. கால்குலேட்டர், GPS, ஃபோன் அட்ரஸ் புக் போன்ற தொழில்நுட்பக் கருவிகளால்கூட மறதி அதிகரிக்கிறது என்று பலர் குற்றம் சாட்டுகிறோம். அதே தொழில்நுட்பம் நமக்கு பரிகாரமும் செய்கிறது. மறக்காமல் இருக்கக் கைபேசியில் இடங்களை, செயல்முறைகளை, ரசீதுகளை புகைப்படம் எடுத்து வைத்தால் மறக்காது. மறக்கக்கூடாத சமாசாரங்களைக் குரல்பதிவு செய்து பழகினால் தகவலை மீட்பது சுலபம்.
மறதி தவிர்க்கமுடியாதது, ஆனால் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், நிர்வகிக்கவும் பழகினால் அதனால் வரும் காயங்கள் குறையும். பலர் இயற்கையாக வரும் ஞாபகமறதியை 'நினைவாற்றல்' சம்மந்தப்பட்ட அல்ஷைமர்ஸ், பார்க்கின்சன்ஸ், டிமென்ஷியா போன்ற பெரிய வியாதிகளாக எண்ணிக் கவலை கொள்கிறார்கள். மறதி வேறு, நினைவாற்றலை இழப்பது வேறு. காபி குடிச்சனா, யாரு நீங்க, என் வீடு எங்க, இது என் கார் இல்ல - போன்ற தருணங்கள் சாதாரண மறதி அல்ல. இவை பெரும்பாலும் எழுபதுகளிலும், மூளை நோய்களாலும் வரும் நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டாய நிலைமைகள்.
ஆங்! இப்ப ஞாபகம் வந்துடிச்சிங்க! நம்ம சுஜாதா எழுதின தொடர் ‘தலைமைச் செயலகம்’!
யோகா பாலாஜி, நேப்பர்வில், இல்லினாய் |
|
|
More
TNF: கோடைக்கால சேவைப் பயிற்சி வையக்கவி பாரதியின் வைரக்கவி
|
|
|
|
|
|
|