Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
என். சொக்கன்
தேவன் ஏகாம்பரம்
- நளினி முள்ளூர், கோம்ஸ் பாரதி கணபதி|டிசம்பர் 2015|
Share:
'ஓ மரியா! ஓ மரியா!' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழகமே 'யார் இந்தப் பாடகர்' என்று வியக்கிறது. அந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர் தேவன் ஏகாம்பரம். ஆஸ்கர்நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 1999ம் ஆண்டு 'காதலர் தினம்' படத்தின்மூலம் அறிமுகமான தேவன் ஏகாம்பரம் இன்றுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழரான தேவனுடன் பேச இங்கிருந்து நாங்கள் தொலைபேசியில் அழைத்தபோது இரவு மணி 9:00. அந்த உரையாடலிலிருந்து....

*****


"எப்படி நீங்கள் தமிழ்த் திரையிசைத் துறைக்கு வந்தீர்கள்?" என்று இயல்பாகத் தொடங்கினோம். "எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இசையார்வம் இருந்ததால் பள்ளியில் இசைக்குழுவில் பாடிவந்தேன். அதில் பாடுவது மட்டுமல்லாமல் பல இசை நுணுக்கங்களையும் அறிந்து கொண்டேன். கிடார் வாசித்தேன். பள்ளிப் படிப்பை முடிக்கும் சமயத்தில் நண்பர்களுடன் ஓர் இசைக்குழுவை உருவாக்கிச் சில நிகழ்ச்சிகளை நடத்தினேன். அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு வந்த ஜேசுதாஸ், S.P. பாலசுப்ரமணியம் ஆகியோரின் இசைநிகழ்ச்சியில் கிடார் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது."பின்னர் இல்லினாய் மாநிலம், அர்பானா, ஷாம்பேன் நகரின் பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபின்பும் இசையார்வம் விடவில்லை. அந்தக் கல்லூரி இசைத்துறையைப் பார்த்தே என் கால் என்னை அழைத்துப் போகும். 'இசைதான் என் எதிர்காலம்' என்ற எண்ணம் வலுப்படவே, இரண்டாம் ஆண்டிலேயே பொறியியல் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்" என்று நிறுத்தினார் தேவன். "அந்த முடிவை உங்கள் பெற்றோர்கள் எப்படி எடுத்துக்கொண்டனர்?" என்றதற்கு, "கொஞ்சம் வருத்தம்தான்; ஆனால் என்னைத் தடுக்கவில்லை" என்கிறார்.

பிறகு தன் பயணத்தை நினைவுகூர்ந்தார். ஒரு சின்ன இடைவேளைக்குப் பின், 1995ம் ஆண்டில் SPB சரணின் அறிமுகம் கிடைக்கவே, இந்தியாவுக்குப் போக முடிவெடுத்த அதே சமயத்தில் மும்பையில் உள்ள Magna Sound நிறுவனத்தின்மூலம் ஒரு இசைத்தகடு வெளியிடும் வாய்ப்புக் கிடைத்ததாம்.

1998ல் வெளியான அந்த இசைத்தகடு தேவனின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது!"ஒருநாள் ரஹ்மான் அலுவலகத்திலிருந்து தொலைபேசி! என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. யாரோ கலாய்க்கிறார்கள் என்று இரண்டு முறை தொலைபேசியைத் துண்டித்துவிட்டேன். மூன்றாம் முறை கூப்பிட்டு, 'தம்பி, தொலைபேசியை வச்சுராதீங்க. உண்மையிலேயே ரஹ்மான் சார் அலுவகத்திலிருந்து தான் பேசுறேன். சார் உங்களை உடனே வரச்சொன்னார்' என்று கூறியதும் போனேன்" என்கிறார் தேவன். 10 மணிநேரம் காத்திருந்த பின் ரஹ்மான் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்.

"ஒத்திகையே இல்லாமல் நேரடியாக "ஓ மரியா ஓ மரியா" பாடலை ஒலிப்பதிவு செய்தார்" என்று அந்தக் கனவுக்காலத்தை கண்முன் கொண்டுவந்தார் தேவன். பாடல் வெளியானதும் அடிக்கத் தொடங்கிய தொலைபேசி மணி இன்னும் நிற்கவில்லை. அதிர்ஷ்டதேவதை மேலும் உயரத்திற்கு அழைத்துச் சென்றாள். பல பிரபல இசையமைப்பாளர்கள் இவரது திறமையை வரவேற்று வாய்ப்பளித்தனர். "ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையில்தான் அதிகப் பாடல்களைப் பாடியிருக்கிறேன்" என்கிறார் தேவன்.
பின்னர் தேவன் 'லிட்டில் ஜான்' என்ற தமிழ்ப்படத்தில் டப்பிங் கலைஞராகப் புது அவதாரம் எடுத்தார். இவரது டப்பிங் குரலில் பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் கமல் ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு'. படத்தில் இவர் குரல் கொடுத்தது ஆண்டெர்சன் என்ற துப்பறிவாளர் பாத்திரத்திற்கு. தேவன் சில படங்களில் நடித்ததும் உண்டு. பார்த்திபன் கனவு, ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் சில காட்சிகளில் தோன்றியுள்ளார்.

"நீங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிவந்து இசைத்துறையில் ஏதாவது சாதிக்க விரும்புகிறீர்களா?" என்று நாம் கேட்டோம். 2014ம் ஆண்டு இவர் வெளியிட்ட 'Winds of Samsara' என்ற இசைத்தகடு, அமெரிக்க இசைக்கலைஞருக்கான Best New Age Album என்ற பிரிவில் Grammy Award வென்றது என்கிறார் பெருமையுடன். ஆனால், இந்தியாவிலேயே சாதித்துப் பெயரெடுக்கத்தான் விருப்பம் என்றும் சொல்லத் தயங்கவில்லை. தமிழ் உட்படப் பல தென்னிந்திய மொழிகளிலும் பாடியுள்ளார் தேவன். ரஹ்மானின் உதவியாளராக 2007ம் ஆண்டு வெளிவந்த 'Jodha Akbar' என்ற ஹிந்திப் படத்திற்குப் பணியாற்றியதையும் அதன்மூலம் பல நுணுக்கங்களைக் கற்றதையும் நினைவுகூரத் தவறவில்லை.

இதைத்தவிர இவரது இசையமைப்பில் 2005ல் 'முதல் மழையே' என்ற இசைத்தகடு வெளியானது. 2008ம் ஆண்டு 'பலே பாண்டியா' படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார்."உங்கள் தனிவாழ்க்கையைப் பற்றி கூறுங்கள்?" என்று நாம் கேட்க, "நான் உஷாவை முதன்முதலில் பெங்களூரில் சந்தித்தேன். அவரை மிகவும் பிடித்துப் போய்விட இருவீட்டார் சம்மதத்துடன் 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன்" என்கிறார். இன்றைக்கு இவரது மகன் தனிஷ்க்கின் வயது ஒன்றரை. தேவனின் பெற்றோர் ராம் மற்றும் கலைச்செல்வி ஏகாம்பரம் நியூ ஜெர்சியின் செர்ரி ஹில்ஸில் வசிக்கிறார்கள்.

"பலருக்கு இசை ஒரு பொழுதுபோக்கு, உங்களுக்கு?" என்றதும், "நண்பர்களுடன் ஊர்க்கதை பேசுவது" என்கிறார் பட்டென்று. அவருடைய சாதனைகளுக்குக் காரணம் என்ன? "நான் அறிமுகமானபோது இன்றிருப்பது போலப் பின்னணிப் பாடகர்கள் அதிகம் இல்லை. SPB, அவரது மகன் சரண் ஆகியோரின் நட்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம் இவைதான் காரணம்."

உரையாடல் முடியப் போகிறது. அப்போது திடீரெனக் குழந்தையின் சிணுங்கல் ஒலி கேட்டது; இரண்டு மணி நேரமாகப் போக்குவரத்து நெரிசலில் மனைவி மகனுடன் காரில் சென்றபடியே உரையாடியிருக்கிறார். மணி இரவு 11 ஆகிவிடவே குழந்தை அழுதிருக்கிறது.

இரண்டாம் தலைமுறை இந்தியரான இவர் இந்தியாவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து எங்களுக்குப் பெருமிதம்! மேலும் வெற்றிகள் குவியட்டும் என்று வாழ்த்தி விடைபெற்றோம்.

உரையாடல்: நளினி முள்ளூர்
உதவி: கோம்ஸ் பாரதி கணபதி
More

என். சொக்கன்
Share: 
© Copyright 2020 Tamilonline