Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ராகுதசை
கண்ணகியும் வாசுகியும்
குசேலரும் நானும்
- லக்ஷ்மி சங்கர்|செப்டம்பர் 2015||(1 Comment)
Share:
நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சுரங்கம் இருந்தது. சுரங்கத்திலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது. நிலக்கரி வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கப்பட்டது. இந்த ஊரில் தடுக்கி விழுந்தால் எஞ்சினியர் மேல்தான் விழவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். நிறைய எஞ்சினியர்கள் சுரங்க நுணக்கங்கள் கற்றுவர ஆஸ்திரேலியாவுக்கும், ஜெர்மனிக்கும் அனுப்பப்பட்டனர்.

ஆனால் என் அப்பா எஞ்சினியர் அல்ல. சாதாரண எழுத்தர். அவரவர் வேலைக்கேற்ப வீடு. நாங்கள் ஒரு சிறிய, சௌகரியமான வீட்டில் குடியிருந்தோம். எஞ்சினியர் மகளும் சரி, எழுத்தர் மகளும் சரி - அந்தக் காலத்தில், அந்த ஊரில் இருந்த ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டியிருந்தது. நாங்கள் சில பேர் பள்ளிக்கு ஒன்றாக நடந்து போவோம்; வருவோம்.

ஒருநாள் திடீரென்று சுகுணா சொன்னாள் "என் அப்பா அடுத்த வாரம் ஜெர்மனிக்குப் போப்போறா. நாங்கள்ளாம் மெட்ராஸ் போய் அப்பாவெப் ப்ளேன் ஏத்தி விடப்போறோம்." நாங்களெல்லோரும் சுகுணாவை ஆச்சரியமாகப் பார்த்தோம். எங்கள் குழுவில் சுகுணாவின் மதிப்பு ஜிவ்வென்று உயர்ந்துவிட்டது.

நான் வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். "அப்பா எப்பவாவது ஜெர்மனி போவாரா?" என்றேன்.

"உங்கப்பா என்ன எஞ்சினியரா, ஜெர்மனிக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் போறதுக்கு? பம்பாய், கல்கத்தானு நமக்குச் சொந்தக்காராளும் இல்ல. சென்ட்ரல் ஸ்டேஷன்லயே காலடி எடுத்துவெச்சது இல்ல. சரி இங்க இருக்கறவாளாத்துக்குப் போலாம்னா, இல்லேனு போனா ஈச்சம்பாயக் கட்டிண்டு வர தினுசாயிருக்கு. போடீ போ" என்றாள் அம்மா. அண்ணாவின் அறைக்குச் சென்று அவனிடம் ஜெர்மனி எங்கேயிருக்கிறது என்று கேட்டேன். அவன் ஒரு கிழிந்த அட்லஸை எடுத்துக்கொண்டு வந்து இதுதான் ஜெர்மனி என்று சுட்டிக் காட்டினான். நான் மிகுந்த சந்தோஷம் அடைந்தேன்.

சுகுணா அப்பா ஜெர்மனி போய்ச்சேர்ந்தார். வாராவாரம் அவரிடமிருந்து லெட்டர் வருவதாகவும் அது வாசனையாயிருப்பதாகவும் சுகுணா சொன்னாள்.

"உங்கப்பா போடற லெட்டர் வாசனயாயிருக்கும்னு சொன்னியே, அது என்ன வாசன? மல்லிப்பூ வாசனயா? ரோஜாப்பூ வாசனயா?" சுகுணாவைக் கேட்டேன். "அது ஸ்ட்ராபெரி வாசனைனு அம்மா சொன்னா" என்றாள்.

எங்கள் வீட்டிற்கு முக்காலே மூணுவீசம் தபால் கார்டுதான் வரும். எப்பொழுதாவது இன்லன்ட் கவர் வரும். இன்லன்ட் கவர் வந்த நாட்களில் அம்மா கோபமாயிருப்பாள். அப்பாவிடம், "உங்க தங்கை தடிச்சி பணம் கேட்பது ஓயவே ஓயாதா?" என்று கத்துவாள்.

எனக்கு ஸ்ட்ராபெரி என்றால் என்னவென்றே தெரியாது. அந்த வாசனை எப்படியிருக்கும்? தாங்கமுடியாத ஆவல் ஏற்பட்டது. "எனக்கு ஒரு லெட்டரைக் கொண்டுவந்து காமிடி" என்றேன் சுகுணாவிடம்.

"ஊஹூம். நடக்கவே நடக்காது. அம்மா லெட்டரப் படிச்சிட்டு பீரோவுல வெச்சுப் பூட்டிடுவா".

அண்ணாவிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன். ஜெர்மனியிலிருந்து வரும் எல்லா லெட்டர்களுமே ஸ்ட்ராபெரி வாசனையடிக்குமா என்று. "போடி பைத்தியம். எல்லாம் வெறும் காகிதம்தான். சுகுணா அப்பா லெட்டர்மேல ஸ்ட்ராபெரி சென்ட் ஸ்ப்ரே பண்ணுவாராயிருக்கும்" என்றான். அப்பா வீட்டிலிருக்கும் நேரம் எல்லாம் லைப்ரரி புத்தகத்தில் ஆழ்ந்திருப்பார். நான் அண்ணாவிடம் பேசுவதைக் கவனித்துவிட்டார் போலிருக்கிறது. என்னை லைப்ரரிக்கு அழைத்துப்போய், என்சைக்ளொபீடியாவைத் தேடி எடுத்து ஸ்ட்ராபெரிப் பழப் படத்தைக் காண்பித்தார். ஜன்ம சாபல்யம் அடைந்தது போலிருந்தது. ஆனாலும் பழ வாசனை எப்படியிருக்கும்? யோசித்தேன்.

தீபாவளிக்கு முதல்வாரம் சுகுணாவின் அப்பா ஜெர்மனியிலிருந்து திரும்பிவிட்டார். எங்கள் பள்ளியில் தீபாவளிக்கு அடுத்தநாள் மட்டும் யூனிஃபார்ம் போட்டுக்கொள்ளத் தேவையில்லை. தீபாவளிக்கு வாங்கியதைப் போட்டுக்கொண்டு போகலாம். அன்று எல்லோரும் ஸ்கூலில் சந்தோஷமாயிருந்தோம். சாயந்திரம் வழக்கம்போல நாங்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். சுகுணாவின் வீடுதான் முதலில் வரும். சுகுணாவின் பாட்டி வாசலில் ஈசிசேரில் சாய்ந்திருந்தார். எங்களைப் பார்த்தவுடன் "இங்கே வாங்கோடி குட்டிகளா" என்றார். நாங்கள் அவர் அருகில் போனோம்.

என் அம்மா பார்வதிதான் என் பாவாடை சட்டையைத் தைத்திருந்தார்.

"பார்வதி என்னிக்குமே நன்னாத் தெப்ப. நன்னாத்தான் இருக்கு உன் டிரெஸ். ஒனக்கு ஒன்னு தெரியுமோ? சுகுணாவோட பாவாட சட்ட, நைலான் நூல்னால தெச்சது. அவப்பா, அதான் எம்புள்ள ஜெர்மனிலேர்ந்து நூல்கண்டு கொண்டுவந்தான். துணி கிழிஞ்சாகூட நூல் இத்தே போகாதாம்."

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"வரோம் மாமி" என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம்.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மா கேட்டாள் "யாராவது ஒன் டிரெஸப் பத்தி ஏதாவது சொன்னாளா?"

"சுகுணாவோட பாட்டிதான் சொன்னா ஒன் டிரெஸ் நன்னாருக்கு. பார்வதி என்னிக்குமே நன்னாத் தெப்பானு."

அம்மாவின் முகம் மந்தகாசமாயிருந்தது. நான் அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். "அந்தப் பாட்டி சொன்னா, சுகுணாவோட பாவாட சட்டேல்லாம் ஜெர்மனிலேர்ந்து வந்த நைலான் நூல்னால தெச்சதாம்; நூல் இத்தே போகாதாம்."

இல்லாக்கொடுவினையால் அம்மாவிடம் இயல்பாகவே ஒரு சிடுசிடுப்புத்தன்மையிருந்தது. "யார்கிட்ட என்ன பேசறுதுனு அந்தப் பாட்டிக்கு வெவஸ்த கெடயாது. புள்ள பெரும பாடினாளே, குழந்தேளுக்கு இக்குணிப் பட்சணம் கொடுக்க மனசு வல்லே போல்ருக்கு" பொரிந்து தள்ளினாள்.

நான் விட்டால் போதும் சாமியென்று உள்ளே நழுவினேன்.

தீபாவளி முடிந்து ஒரு மாதமிருக்கும். சுகுணாவும் நானும் வகுப்பில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வோம். தன் பென்சில் பாக்ஸைத் திறந்து ஒரு புது ரப்பரைக் காண்பித்தாள்.

"இத மோந்து பாரு; ஜம்முனு வாசன வர்ரது."

நான் முகர்ந்து பார்த்தேன். ஓர் இனிய நறுமணம் கமழ்ந்தது.

"இன்னிக்கு என் பொறந்தநாள்னு அப்பா கொடுத்தார். எதையாவது அழிச்சா அந்த எடம் கறுப்பாவே ஆறதில்ல. ஜெர்மனில வாங்கினாராம்." அழித்தும் காண்பித்தாள். நிசமாகவே பேப்பர், அழித்த இடத்தில் கறுப்பாக ஆகவில்லை. இதைப்போன்ற ஒரு ரப்பர் இருந்தால் எப்படி இருக்கும்? என் மனம் ஏங்கியது.
அப்பொழுது திடீரென்று ஹிந்தி பண்டிட் ராமச்சந்திரன் வகுப்பில் நுழைந்தார். "இப்பொழுது உங்களுக்குக் கணக்குப் பீரியட். ஆனால் கணக்கு வாத்தியார் மார்ட்டின் உடம்பு சரியில்லாததால் வீட்டிற்குப் போய்விட்டார். நான்தான் வகுப்பு எடுக்கப் போகிறேன்" என்றார். நாங்கள் எல்லோரும் அவரைப் பார்த்தோம். இவர் என்ன சொல்லித்தருவார் என்று யோசித்தேன்.

அவர் கடகடவென்று சிரித்துவிட்டு "எனக்கும் கணக்குக்கும் சம்பந்தமே கிடையாது. நான் உங்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லப்போகிறேன்" என்றார்.

எங்களுக்கெல்லாம் படு குஷியாகிவிட்டது. அவர் சொன்னது குசேலர் கதை. குசேலர் ஒரு பிடி அவலை எடுத்துக்கொண்டு தன் நண்பர் கிருஷ்ணனைப் போய்ப் பார்த்ததையும், கிருஷ்ணன் மனமகிழ்ந்து குசேலரின் வீட்டில் பரிசுகளைச் சொரிந்ததையும் சுவாரசியமாகச் சொன்னார்.

அன்று சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அம்மா வெளியில் கிளம்பத் தயாராயிருப்பதைப் பார்த்தேன். என்னையும் அண்ணாவையும் கூப்பிட்டாள்.

"டேய் வரது! அப்பா எப்போ ஆஃபீஸ்லேர்ந்து வருவானு தெரியாது. கோடியாத்துக் காந்திமதி மாமிக்கு ஒடம்பு சரியில்லியாம். ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு. நீ குழந்தய (அதாவது என்னை) ஜாக்ரதையாப் பாத்துக்கோ. நா மாமியப் பார்த்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

அண்ணா படிக்கிறேன் பேர்வழியென்று ரேடியோவில் கிரிக்கெட் கமென்டரி கேட்டுக் கொண்டிருந்தான்.

நான் ஒரு ஸ்டூலில் ஏறி அவல் டப்பாவைத் திறந்து ஒரு பிடி அவலையெடுத்து ஒரு காகிதத்தில் கட்டிக்கொண்டேன். சுவாமி அலமாரியருகில் போனேன். அதில் ஒரு தஞ்சாவூர் கிருஷ்ணன் படம் மாட்டப்பட்டிருந்தது. அவலைப் படத்தின்முன் வைத்தேன். கிருஷ்ணர் தொட்டிலைவிட்டு எழுந்து வந்து அவலைச் சாப்பிட்டுவிட்டு என் புத்தகப்பையில் சென்டட் நைலான் ரப்பர்களைச் சொரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஐந்து நிமிடம் கழித்துப் புத்தகப்பையைத் திறந்து பார்த்தேன். அதில் ஒரு சென்டட் ரப்பர்கூட இல்லை.

திடீரென்று ஒரு யோசனை வந்தது. பக்கத்ததுத் தெருவில் ஜானகிமாமி வீடு இருந்தது. மாமிக்குப் பாவம் குழந்தைகள் கிடையாது. மாமி வீட்டுவாசலில் உட்கார்ந்திருக்கும்போது அந்த வழியாக நடந்துபோனால் ஆசையாகக் கூப்பிட்டுப் பேசுவார். கல்கண்டு, திராட்சை, பேரி மிட்டாய் இப்படி ஏதாவது கொடுப்பார். அம்மாதான் வீட்டுக்கு வந்தவுடன் முனகுவாள் "மலடிக்கு ஆனாலும் கொள்ளிக்கண்; கொழந்தேள முழுங்கிடறாப்ல முழிச்சு முழிச்சுப் பார்க்கறா."

ஜானகிமாமி வீட்டில் ஒவ்வொரு வருடமும் கோகுலாஷ்டமி சமயத்தில் கிருஷ்ண பஜனை நடக்கும். நாங்கள் எல்லோரும் போவோம். மாமி சந்தான கோபாலன் விக்கிரகத்தை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு உருகிப் பாடுவார். இந்தமுறை மாமியின் அப்பா பஜனைக்கு நடுவில் எழுந்துநின்று ஏதோ சத்தம் போட்டார். எல்லோரும் அவருக்கு சாமி வந்திருக்கிறதென்று சொன்னார்கள். அவரெதிரே கற்பூர ஆரத்தி எடுத்தார்கள். விழுந்து நமஸ்காரம் பண்ணினார்கள். என் பிள்ளைக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? என் மகளுக்கு எப்பொழுது திருமணமாகும்? இந்த மாதிரிக் கேள்விகள் கேட்டார்கள். அவரும் ஏதேதோ பதில் சொன்னார்.

இந்த அவல் பிடியை அவரிடம் கொடுத்து நைலான் சென்டட் ரப்பர் கேட்கலாம் என்று நினைத்தேன். அண்ணா இருந்த இடத்துக்குப் போனேன்.

"நா கிரிக்கெட் கமென்டரி கேட்டுண்டுருந்தேன்னு அம்மாட்ட வத்தி வெக்காத."

"நாஞ் சொல்லல்ல. ஆனா என்ன இப்ப சுகுணாவாத்துக்குப் போகவிடணும். கணக்கு ஹோமொர்க் என்னன்னு எழுதிக்கல நா. அது என்னன்னு கேக்கணும்."

"சரி. போய்ட்டு சீக்ரமா வந்துடு".

அவல் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு ஜானகிமாமி வீட்டுக்கு விரைந்தேன். வாசல் கதவைத் தட்டினேன். மாமியின் அப்பாதான் கதவைத் திறந்தார்.

'யார்மா கொழந்தே? என்ன வேணும்? ஜானகி வெளில போய்ருக்காளே."

நான் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தேன். அவல் பொட்டலத்தை அவர் கையில் திணித்தேன். "நீங்கள் சுவாமிதானே? எனக்கு ஒரு ஜெர்மன் சென்டட் நைலான் ரப்பர் வேணும்."

அவருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. நான் திக்கித்திணறி விஷயத்தைச் சொல்லி முடித்தேன். முதலில் கடகடவென்று சிரித்த அவர், பின்னர் உணர்ச்சிவசப்பட்டார்.

'கொழந்தே! நா கிருஷ்ண பரமாத்மால்லாம் இல்லம்மா. எங்கிட்ட ஜெர்மன் ரப்பர் கெடயாது. ஆனா நா பஜனப்பாட்டு புதுசு புதுசா எழுதறச்ச அடிச்சுத்திருத்தி எழுத வேண்டிருக்குனு மெட்ராஸ்லேருந்து எம்பொண்ணு சென்டட் ரப்பர் ரெண்டுமூணு வாங்கிண்டு வந்தா. ஒண்ணு நீ வெச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு அலமாரியைத் திறந்து ஒரு ரப்பரையெடுத்து என் கையில் திணித்தார்.

"ஜகத் ப்ரபோ" என்று வாய்விட்டுச் சொன்னார்.

நான் மறுபடியும் அவரை நமஸ்காரம் பண்ணிவிட்டு வீட்டுக்கு ஓடிவந்தேன்.

ரப்பரை யாரிடமும் காண்பிக்கவில்லை. யாரிடமாவது எதையாவது வாங்கிக்கொண்டால் அம்மா அடிப்பாள். "நீ என்ன பிச்சக்காரியா" என்று வைவாள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் குசேலர். ஜானகி மாமியின் அப்பாதான் கிருஷ்ணர். சம்பவம் நடந்து 50 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த ரப்பர் இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது.

லக்ஷ்மி சங்கர்,
நார்க்ராஸ், ஜார்ஜியா
More

ராகுதசை
கண்ணகியும் வாசுகியும்
Share: 




© Copyright 2020 Tamilonline