ராகுதசை குசேலரும் நானும்
|
|
கண்ணகியும் வாசுகியும் |
|
- கணேசன்|செப்டம்பர் 2015| |
|
|
|
|
|
ரோட்டில் கண்ணகி சிலை
கையில் சிலம்புடன் காட்சியளிக்கும் கண்ணகியின் மறுகையில் சுட்டுவிரல் சிதைந்த நிலையில் நிற்கிறது - தினமணி 08/01/2007 செய்தி.
மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள், முக்கியமாக பிஞ்சு மலைவடுமாங்காய், பழங்கள், கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சிதம்பரங்கரை தண்ணீர்த் தொட்டி, கோவில்கள், வேதம் ஓதும் அந்தணர்... இவை யாவும் நினைக்க நினைக்க இன்பம்.
எஸ்.எஸ்.எல்.ஸியில் சுமாரான மார்க். திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரியில் சேர்ந்தேன். மதுரையிலிருந்து திருநெல்வேலி போக சிறந்த டிரெயின் மதுரை-திருநெல்வேலி பாசஞ்சர். மதுரையிலிருந்து காலை 3.30க்குக் கிளம்பி திருநெல்வேலிக்கு 8.00 மணிக்குப் போய்ச்சேரும். எல்லா ஸ்டேஷனிலும் நிற்கும். கூட்டம் கிடையாது. படுத்துக்கொண்டே போகலாம். இரவு ரீகல் டாக்கீஸில் இரண்டாம் ஷோ பார்த்துவிட்டு வண்டி ஏறச் சௌகரியம். எல்லா லீவுக்கும் பெரியகுளம் போய்விடுவேன்.
ஒருமுறை திருநெல்வேலி போனபோது நடந்தது இது. வழக்கம்போல் ரீகலில் சினிமா பார்த்துவிட்டு ஒருமணி சுமாருக்கு ரயிலில் ஏறிப் படுத்தேன். நன்றாகத் தூங்கிவிட்டேன். திடீரெனக் கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள். எழுந்து அரைத் தூக்கத்தில் கதவைத் திறந்தேன். கணவன், மனைவி போல இருந்தது. அவர்களுடன் மற்றொரு மனிதரும் தடதடவென உள்ளே ஏறினார். ரயில் கிளம்பிவிட்டது. அம்மாவுக்கு நல்ல ஜுரம் போல இருந்தது. நன்றாகப் போர்த்திக்கொண்டு இருந்தார். கணவன் அவரை அணைத்துக் கூட்டிவந்தார்.
"தம்பி... மன்னித்துக் கொள்ளுங்கள்... வண்டி விசில் ஊதிவிட்டார்கள். அதனால் உங்களைத் தொந்தரவு செய்துவிட்டோம்" என்றார், பெரியவர்.
"பரவாயில்லை" என்று கூறி அவர்கள் சாமான்களை எடுத்து வைத்து உதவினேன்.
பெரியவர் அந்த அம்மாவைப் பலகையில் படுக்க வைத்தார். பிறகு என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். புரிந்துகொண்ட நான், "நீங்கள் இங்கு படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி என் படுக்கையைச் சுற்றிக்கொண்டு அடுத்த பெஞ்சுக்குப் போனேன். மற்றவரும் என்னுடன் பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தார்.
"ரொம்ப நன்றி தம்பி. நல்ல மனசு உங்களுக்கு. எதுவரை போறீங்க" என்று பேச்சை ஆரம்பித்தார்.
"திருநெல்வேலி. நீங்கள்?"
"நாச்சியார்கோயில்."
"வேண்டுதலா?"
"இல்லை தம்பி. பக்கத்துல நாகர்சிலை நேர்த்திக்கடன்"
"அப்படி என்ன விசேஷம்?"
"அதுவா... அது ஒரு கதை கேக்கணுமா?"
"சொல்லுங்கள்"
என் தூக்கம் போய்விட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் சொல்லத் துவங்கினார்.
"பல வருஷங்களுக்கு முன் நடந்தது இது. நானும் என் நெருங்கிய நண்பனும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். சின்ன வயதிலேயே குடி, சிகரெட் பழக்கம். எனக்கு விருதுநகரில் வாத்தியார் வேலை கிடைத்தது. நண்பன் மதுரை மிராசுதார் வீட்டு மாப்பிள்ளை. அவன் வருஷா வருஷம் திருநெல்வேலிக்கு குடும்பத்தோட போவான். நான் அவனை விருதுநகர் ஸ்டேஷனில் பார்ப்பேன். மதுவிலக்குக் காலத்தில் அது வெறும் சிகரெட் சந்திப்புதான். திடீரென மதுவிலக்கை எடுத்துவிட்டார்கள். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நான் அயல்நாட்டுச் சரக்கை வாங்கிவைத்து அவனுக்குத் தெரிவித்தேன். அவன் வரவுக்கும் காத்திருந்தேன்.
"அந்த நேரமும் வந்தது. என் நண்பன், அவன் மனைவி, பிறந்த குழந்தையுடன் எல்லாரும் வழக்கம்போல திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். வண்டி விருதுநகரில் 15 நிமிடம் நிற்கும். அவனும் இறங்கினான். நாங்கள் பக்கத்து மரத்தடியில் இரண்டு கிளாஸ் குடித்தோம். ஃபாரின் சரக்கு ஃபாரின் சரக்குதான்.
"ரயில் விசில் ஊதிவிட்டது. ஓடினோம். ரயில் கிளம்பிவிட்டது. பிடிக்க முடியவில்லை. 'ஐயோ.. என் மனைவி.. குழந்தை?' என்று அழுதான் நண்பன்.
"வா.. ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லி வண்டியை நிறுத்தலாம். அவர் தெரிந்தவர்தான்' என்று அவனைத் தேற்றி அவரிடம் ஓடினேன். வண்டியை நிறுத்தமுடியாது என்று அவர் கைவிரித்து விட்டார். எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் மாணவன் நாச்சியார்கோயில் ஸ்டேஷன் மாஸ்டர். அவனுக்கு மெசேஜ் அனுப்பிக் குழந்தை, தாயை இறக்கி நண்பர் வரும்வரை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம் என்று. நண்பன் ஒத்துக்கொண்டான்.
"ஸ்டேஷன் மாஸ்டரிடம் இதைச் சொல்ல, அவர் உடனே நாச்சியார்கோயிலுக்கு மெசேஜ் அனுப்பினார்.
'ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு வாரம் லீவு. நான் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். கவலைப்பட வேண்டாம். நான் இங்குள்ள போர்ட்டர் மூலம் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடுகிறேன். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துக்கொண்டு வந்துவிடுவேன்' என்று பதில் வந்தது.
அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் நடந்தது வேறு.
வண்டி நாச்சியார்கோயில் ஸ்டேஷனில் வந்து நின்றதும் போர்ட்டர் தகவல் சொல்லி மனைவி, குழந்தையை ஃபர்ஸ்ட் கிளாஸ் வெயிட்டிங் ரூமில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு சாப்பிடச் சென்றுவிட்டான்.
சாப்பிடப் போனவனை, புதிதாகத் திறந்த கள்ளுக்கடைகள் 'வா வா'வென்று வரவேற்க, இரண்டு, மூன்று மொந்தை அடித்துவிட்டு, சிக்கன் பிரியாணியும் சாப்பிட்டுவிட்டு, தடுமாறிக் கொண்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் வெயிட்டிங் ரூம் கதவைத் திறந்தான். குழந்தைக்கு பால் ஊட்டிக் கொண்டிருந்த தாய் திடுக்கிட்டு எழுந்தாள். |
|
கள் வெறியில் இருந்த போர்ட்டர் குழந்தையைத் தொடும் சாக்கில் அவளைத் தொடப் போனான். அவள் அவனை எட்டி பலமாக உதைத்துத் தள்ளினாள். விழுந்தவன் ஆத்திரத்துடன் குழந்தையைப் பிடுங்க முயன்றான். ஒரு கையால் குழந்தையைப் பிடித்துக்கொண்டே அவள், அவனை கையாலும் உடலாலும் பலங்கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளினாள். அவன் கதவுக்கு வெளியே போய் விழுந்தான்.
கதவை மூட அவள் முயற்சித்தாள். முடியவில்லை. குறுக்குப்பட்டியைக் காக்கும் ஆணியைக் காணோம். அதற்குள் அவன் எழுந்து திரும்ப உள்ளே வரப் பார்த்தான். அவள் திரும்ப அவனைத் தள்ளினாள். அவன் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு வெளியில் போய் விழுந்தான்
அவள் வேறு வழியில்லாமல் கதவை மூடி, குறுக்குப்பட்டி போட்டு, சுட்டு விரலை குறுக்கே நுழைத்து காக்கும் ஆணியாக்கி, உடம்பால் கதவை அவன் திறக்க முடியாதபடி அடைத்துக் கொண்டாள்.
அவன் திரும்பத் திரும்ப கதவை முட்டிக் கொண்டிருந்தான். அவள் சுட்டு விரல் நசுங்கியது. ஆனாலும் அவள் கதவைத் திறக்கவில்லை.
'குழந்தையைக் கொன்று விடுவேன்' என்று பயமுறுத்தினான். அப்போதும் அவள் கதவைத் திறக்கவில்லை.
குழந்தை பலமாக அழுதது. அவள் கதவைத் திறக்காததால் ஆத்திரம் கொண்ட அவன், அருகே இருந்த பாறாங்கல்லை குழந்தையின் மேல் போட்டுக் கொல்ல நினைத்தான்.
குழந்தையைக் கீழே வைத்தான்.
வீறிட்டு அழுதது குழந்தை. தாய், கடவுளைத் துதித்தாள்.
அவன் ஆத்திரத்துடன் அருகே இருந்த கல்லைத் தூக்கினான். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கல்லின் அடியில் இருந்து சீற்றத்துடன் ஒரு நாகம் வெளிவந்து அவனைக் கொத்தியது. கல்லை அதன் மேலேயே போட்டு விட்டு அங்கேயே கீழே விழுந்து இறந்தான் அவன். நாகமும் இறந்தது.
தாயோ சுண்டுவிரல் துண்டிக்கப்பட்டு, ரத்தம் நிறைய வெளியேறி, வலி தாங்காமல் மயக்கமடைந்து விழுந்து விட்டாள். குழந்தையோ வெகுநேரம் அழுது கொண்டே இருந்து பின் தூங்கிப் போய்விட்டது.
காலைப் பொழுதாகி விட்டது. அடுத்த வண்டி வரும் நேரமானது.
உதவி ஸ்டேஷன் மாஸ்டர் அப்போது அங்கே வந்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு பக்கம் பாம்பு இறந்து கிடந்தது. மறுபக்கம் போர்ட்டர் கீழே இறந்து கிடந்தான். அவன் பக்கத்தில் குழந்தை. பதட்டத்துடன் அவர் ரூம் கதவைத் தள்ளித் திறந்தார். குழந்தையின் தாய் அங்கே மயங்கிக் கிடந்தாள். ஒரே ரத்தம். உடனே டாக்டருக்குப் போன் செய்ய, அவரும் வந்து முதலுதவி செய்து, செப்டிக் ஆகாமல் இருக்க இஞ்செக்ஷன் போட்டு, காயத்தில் மருந்து தடவி, பாண்டேஜ் போட்டு விட்டார். வலி தெரியாமல் இருக்க மாத்திரை கொடுத்து, 'சீக்கிரம் விரலை ஆம்ப்யூடேட் செய்யணும்' என்று எழுதிக் கொடுத்தார். குழந்தை தானாகவே விழித்துக் கொண்டது. போலீஸுக்குத் தகவல் போய் அவர்களும் உடனே புறப்பட்டு அங்கு வர, தாய் அவர்களிடம் நடந்த எல்லா விவரத்தையும் சொன்னாள். போர்ட்டர் பாம்பு கடித்து இறந்ததாகத் தகவல் பதியப்பட்டது.
அடுத்த வண்டியில் வந்த நானும் நண்பனும் ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்குப் போனோம். அதன் பின்புதான் எங்களுக்கு நடந்த எல்லா விவரங்களும் தெரியவந்தன.
பாம்பு செய்த உதவிக்கு என் நண்பன் பக்கத்திலே ஓர் இடம் வாங்கி, அங்கே அதற்கு ஒரு சிலையை வைத்தான். வருடா வருடம் இதே தேதி அங்கு போய் வணங்குவோம்" என்று அவர் சொல்லி முடித்தார்.
அந்த தமிழ்த்தாயின் வீரச்செயல் எனக்கு பிரமிப்பூட்டியது. தூக்கம் கண்களை அசத்தியது. அவரிடம் விடைபெற்று, படுக்கையை விரித்துப் படுத்தேன். பின் உறங்கிவிட்டேன்.
"தம்பி.. போய் வர்றோம். ஞாபகம் இருக்கட்டும்" என்ற குரலைக் கேட்டுக் கண்விழித்தேன். நாச்சியார்கோயில் ஸ்டேஷன்.
வண்டிக்குள் ஒரு வாலிபர் ஏறினார். "அவங்க எங்கே?" என்ற அவர் குரலைக் கேட்ட பெரியவர், "நாச்சியப்பா.. சாமான்களை இறக்கு" என்றார்.
மனைவியை மெதுவாக அழைத்துக் கொண்டு அந்தக் கணவர் போகும்போது தாயின் போர்வை ரயில் கம்பியில் மாட்டிச் சரிந்தது. அப்போது பார்த்தேன். அவருடைய சுட்டு விரலைக் காணவில்லை.
என் மனக்கண் முன் கண்ணகி, வாசுகியுடன், அந்தத் தாயும் காட்சி அளித்தாள்.
கணேசன், சாரடோகா, கலிஃபோர்னியா |
|
|
More
ராகுதசை குசேலரும் நானும்
|
|
|
|
|
|
|