எம்.எஸ். விஸ்வநாதன் நந்தா விளக்கே, நாயகனே! அதிபர் ஒபாமா இரங்கற் செய்தி காலத்தை வென்ற கலாம் எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார் "உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்"
|
|
ரிஷிகேசத்தில் அப்துல் கலாம் |
|
- |ஆகஸ்டு 2015| |
|
|
|
|
|
வானூர்திப் பொறியியல் படிப்பை முடித்தபின் விமானப்படையில் சேர விரும்பினார் அப்துல் கலாம். அதற்கான நேரடித் தேர்வில் பங்கேற்க டேராடூன் புறப்பட்டுச் சென்றார். 25 பேர் போட்டியிட்ட அந்தத் தேர்வில் கலாம் ஒன்பதாவது இடத்தைத்தான் பிடிக்கமுடிந்தது. ஆசை நிராசையாகிப் போனது. மனங்குழம்பிய கலாம், ரிஷிகேசத்துக்குப் போனார். அங்கே என்ன நடந்தது என்பதை அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்.
குழப்பமான சிந்தனையுடன் ரிஷிகேசம் புறப்பட்டேன். கங்கையில் நீராடினேன். அதன் தூய்மையில் மனம் மகிழ்ந்தேன். அங்கிருந்து கொஞ்சம் உயரத்தில் இருந்த சிவானந்தர் ஆஸ்ரமம் நோக்கி நடந்தேன். உள்ளே நுழைந்ததும் அதிர்வலைகளின் வலுவான தாக்கத்தை உணர்ந்தேன். அங்கே ஏராளமான சாதுக்கள் மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார்கள். நம் மனதிற்குள் மறைந்துகிடக்கும் விஷயங்களை சாதுக்களால் தெரிந்துகொள்ள முடியும் என்று படித்திருக்கிறேன். எனக்கிருந்த விரக்தியான மனநிலையில், என்னை வாட்டிக்கொண்டிருக்கும் சந்தேகங்களுக்கு அவர்களிடம் விடை தேடினேன்.
வெள்ளைவெளேர் வேட்டியும் , மரப்பாதுகைகளும் அணிந்து, புத்தரைப்போலக் காட்சியளித்த சுவாமி சிவானந்தரை அங்கு சந்தித்தேன். பளபளக்கும் தேகம், ஊடுருவிப் பார்க்கும் விழிகள், கருணைபொங்கும் முகம், கள்ளம் கபடமற்ற குழந்தையின் புன்னகை... அவரைப் பார்த்ததும் அப்படியே சிலையாகிவிட்டேன். சுவாமியிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். என்னுடைய முஸ்லிம் பெயர் அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் வாயைத் திறப்பதற்கு முன்பே என் துயரத்தின் மூலகாரணம் பற்றி வினவினார். என் வேதனை அவருக்கு எப்படித் தெரிந்தது என்று சொல்லவில்லை, நானும் அதைக் கேட்கவில்லை. |
|
பறக்கவேண்டும் என்ற நீண்டநாளைய ஆசை நிராசையாகிவிட்டதையும், இந்திய விமானப்படையில் சேரமுடியாமல் போனதையும் அவரிடம் கூறினேன். அவர் புன்னகைத்தார். அந்தப் புன்னகை என் துயரங்களை எல்லாம் அடித்துச்சென்றது. மெல்லிய குரலில், ஆனால் அழுத்தமாக அவர் சொன்னார்: "இதயத்திலிருந்தும், துடிதுடிப்பு உணர்விலிருந்தும் துளிர்விட்டு, தூய்மையாகவும், வலுவாகவும் இருக்கும் ஆசைக்கு அபாரமான மின்காந்த சக்தி உண்டு. ஒவ்வொரு இரவும் மனம் உறக்கமனநிலையில் ஆழ்ந்துவிடும்போது இந்தச் சக்தி வானவெளியில் கலக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில் வலுவடைந்த அந்தச் சக்தி - Cosmics Currents - தினம்தினம் காலையில் உணர்வுநிலையில் சங்கமிக்கிறது. இப்படி மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக நிஜமாகும். யுகயுகமாகத் தொடர்ந்துவரும் இந்தக் கருத்தை சூரிய உதயமும் வசந்த காலமும் எப்போதும் மாறாமல் நிகழ்வதை நம்புவதுபோல நீ நம்பவேண்டும் இளைஞனே!" என்று அப்துல் கலாமுக்கு அறிவுறுத்திய சிவானந்தர் மேலும் கூறினார், "விமானப்படை விமானியாக வேண்டும் என்று உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்கு என்ன விதிக்கப்பட்டு இருக்கிறதோ அது இப்போது வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால், அது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தோல்வியை மறந்துவிடு. உனக்கு விதிக்கப்பட்டுள்ள இடத்திற்குப் போக இது வழிகாட்டும். உன்னுடைய இருப்புக்கான நிஜமான நோக்கம் என்ன என்ற தேடலில் இறங்கு. உன்னுடைய சுயத்தோடு நீ ஒன்றிவிடு, என் மகனே! கடவுளின் விருப்பத்திற்கு உன்னை ஒப்படைத்து விடு" என்று அறிவுறுத்துகிறார்.
சிவானந்தருடனான சந்திப்பு கலாம் வாழ்வில் திருப்புமுனையாகிறது. டில்லி திரும்பிய கலாம், DTD&P (Air) அலுவலகத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக வேலையில் சேர்கிறார். அதன்பின் நிகழ்ந்ததெல்லாம் சரித்திரம். "கனவு காணுங்கள்.." என்று ஏன் கலாம் சொன்னார் என்பது இப்போது புரிகிறதல்லவா?
(நன்றி: அப்துல்கலாமின் சுயசரிதையான "அக்னிச் சிறகுகள்", கண்ணதாசன் பதிப்பகம்) |
|
|
More
எம்.எஸ். விஸ்வநாதன் நந்தா விளக்கே, நாயகனே! அதிபர் ஒபாமா இரங்கற் செய்தி காலத்தை வென்ற கலாம் எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார் "உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்"
|
|
|
|
|
|
|