Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
- |பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlarge"சின்னச் சின்ன ஆசை பாட்டு கேட்டிருக்கேல்ல? அதில ப்ரிலூட்ல வருமே 'தம்தம் தம்தம்'னு அதுதான் பாஸ் கிடார்!" நண்பன் சொன்னான்.

முதன்முதலாய் தமிழ்த்திரையிசையில் பாஸ் கிடாரை நான் அவ்வளவு துல்லியமாகக் கேட்டது அப்போதுதான்! இளையராஜா பாஸ் கிடாரில் பல வித்தைகள் செய்திருக்கிறாராம். யாருக்கு வேணும்? லூப்பில் வரும் பாஸ் கிடாரானாலும் என் காதுகளில் விழுந்ததே அந்த சந்தோஷம் போதும்! இப்படித்தான் இசையைப் பற்றிய என் புரிதல் அக்காலங்களில் இருந்தது.

இன்று திரும்பிப் பார்த்தாலும், தமிழ்த் திரையிசையில் 'ரோஜா' திரைப்படத்தின் ஒலித்துல்லியம் ஒரு பெரிய புரட்சிதான். அதுவரை தமிழ்த் திரையிசையில் கேட்டிராத பல ஒலிவடிவங்கள் ரோஜா படப்பாடல்களில் கேட்டன. அந்த ஒலித்துல்லியத்தையும், அற்புதமான ஒலிப்பொறியியலையும் (sound engineering) தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இருபத்தி ஆறே வயதான ஏ.ஆர். ரஹ்மான் என்ற இளைஞர்.

கல்லூரியில் எனக்கு ஒரு பெரிய நண்பர் குழாம் கிடைத்தது. அதில் பெரும்பாலானோருக்குப் பள்ளிக் காலத்திலிருந்தே நல்ல இசைப்பயிற்சியும் இருந்தது. எப்போதும் ஏதாவது ஒரு இளையராஜாவின் பாடலைப் பற்றியே பேச்சு சுற்றிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு இரவும் மெஸ்ஸில் பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டு, இருளில் மைதானத்தைக் கடந்து அறைக்குச் செல்லும் நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிலிருக்கின்றன. அப்படி நடந்து செல்லும்போதும் இசையைப் பற்றித்தான் பேச்சு. நண்பர்கள் பேசிக்கொள்ளும் பெரும்பாலான விஷயங்கள் புரியாதென்றாலும், அவர்கள் எந்த இசைக்கருவியைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள், அந்தக் கருவியின் ஒலி எப்படி இருக்கும் என்று எனக்குப் புரிந்தே இருந்தது, ஒரே ஒரு கருவியைத் தவிர.

அது பாஸ் கிடார்.

பல இசைக்கருவிகளின் சேர்க்கையும், பல ஒலிவடிவங்களும், ஒலித் துல்லியமும் பிரதானப்படுத்தப்பட்டது ஏ.ஆர்.ரஹ்மானின் காலத்தில்.
வெறும் கிடார் தெரியும், எப்படிச் சத்தம் வருமென்றும் புரியும். இளையநிலா பாடலின் ஆரம்பத்திலும், ராஜராஜசோழன் பாடலின் ஆரம்பத்திலும் கேட்கும். ஊட்டி, கொடைக்கானல் என்று கல்லூரிச் சுற்றுலா போகும் கதாநாயகனுக்கு நிச்சயம் கிடார் வாசிக்கத் தெரியும். கதாநாயகன் கிடார் வாசிக்கும்போது கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கேட்பதற்காகவே கதாநாயகிக்கு இறைவன் கைகளைக் கொடுத்திருக்கிறான் என்பதெல்லாம் தெரிந்த எனக்கு, ஒரு பாஸ்கிடாரின் சத்தம் எப்படி இருக்கும் என்று புரிந்ததில்லை. என் நண்பர்கள் கேட்கும் பாடலைத்தான் நானும் கேட்கிறேன், என் காதில் மட்டும் ஏன் பாஸ் கிடாரின் சத்தம் கேட்பதில்லை என்று பரிதவிப்பேன்.

நண்பர்களிடம் பலமுறை கேட்டும் புரியாமல் விழித்த எனக்கு, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டபடி, ஒரு நண்பன் சொன்ன ஒரே ஒரு உதாரணத்தில் பாஸ்கிடாரின் ஒலியை நான் கண்டு கொண்டேன்.

தமிழ்த் திரையிசையில் எம்.எஸ்.வி.யில் தொடங்கி மூன்று விதமான பெரும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பு பாடல்களை அதன் வரிகளை மையப்படுத்தி சுற்றி எழுப்பப்படும் ஒத்திசையால் ஆனது. அற்புதமான பல ட்யூன்களுக்கும், கண்ணதாசனின் பாடல் வரிகளுக்காகவும் நினைக்கப்படுவது இக்காலம்.

இளையராஜாவின் காலம் orchestration என்றழைக்கப்படும் பல்வேறு இசைக் கருவிகளின் ஒத்திசைவின் பொற்காலம். மேற்கத்திய செவ்வியலில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்த இளையராஜா, மேற்கத்திய செவ்வியலின் கட்டமைப்பில் இந்திய மரபிசையையும், உலக இசை வடிவங்களையும் தமிழ்ப்பாடல்களில் வழங்கினார். பாடல் வரிகளுக்கு இசையமைப்பதே இசையமைப்பாளரின் பணி என்பது மாறி, திரையிசை என்பதை திரைப்பட உலகின் ஒரு தனித்துவம் கொண்ட துறையாக மாற்றினார். தமிழ்த் திரைப்படங்களில் பின்னணி இசை என்ற துறை மாபெரும் வளர்ச்சி பெற்றதே இளையராஜாவின் வருகைக்குப் பின்தான்.

பல இசைக்கருவிகளின் சேர்க்கையும் (arrangement), பல ஒலிவடிவங்களும், ஒலித் துல்லியமும் பிரதானப்படுத்தப்பட்டது ஏ.ஆர்.ரஹ்மானின் காலத்தில். இக்காலத்தில் ஒரு பாடலுக்கான composition என்பது கூட பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. ரஹ்மானுக்குத் தன் பலம் எதுவென்று நன்கு தெரிந்திருந்தது. ஒலிப்பொறியியலில் தன் கவனத்தை வெகுவாகச் செலுத்தி மேலும் மேலும் தன் திறனை வளர்த்துக் கொண்டார். ரஹ்மானின் ஆரம்பகால வெற்றிகளுக்கும், நிலைப்பாட்டுக்கும் முக்கிய காரணம் ஒலித்துல்லியமும், ஒலிப்பொறியியலும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ரஹ்மானுக்கு இசைக்கருவிகள் மேலும், ஒலித்துல்லியம் மேலும் இத்தனை ஆர்வம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை ஆர்.கே.சேகர். இசைக்கருவிகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் ஆர்.கே. சேகர். பல நவீன இசைக்கருவிகளையும், சிந்தசைஸர்களையும் இந்தியத் திரையிசையில் கொண்டு வந்தவர் சேகர் என்று குறிப்பிட்டார் ஒரு இசை நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்த ஒரு மூத்த இசைக் கலைஞர்.

தன் குழந்தைப்பருவம் பல நவீன இசைக் கருவிகளால் சூழப்பட்டிருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ரஹ்மான். மேலும், சேகருக்கு ரஹ்மானைப் போலவே நல்ல இசைக்கோர்ப்புத் திறனும், ஒலிப்பொறியியல் ஆர்வமும் இருந்தது. சலீல் செளத்ரி, எஸ்.டி.பர்மன் போன்றோரிடம் இசை நடத்துநராகப் பணியாற்றியிருக்கிறார் சேகர். ரஹ்மானும் ஒலிப்பொறியியல் ஆர்வம் கொண்டவராக இருப்பதிலும், பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைப்பதிலும் நிபுணராக இருப்பதிலும் ஆச்சரியமேதுமில்லை.

சமீபத்தில் ஒரு கார்ப் பயணத்தில் 'ரங்கீலா' படப் பாடல்களை உயர்தர ஸ்டீரியோ ப்ளேயரில் கேட்க நேர்ந்தது. அப்பாடல்களின் ஒலிநயம் என்னை பிரமிக்க வைத்தது. ஒலித்துல்லியம், ஒலிக்கோர்வை ஆகியவற்றை வெறும் தொழில்நுட்பமாகப் பயன்படுத்தாமல் அதை ஒரு சிறந்த கலை வடிவமாக்கியிருந்தார் ரஹ்மான். 'திருடா திருடா' திரைப்படத்தில் வரும் 'தீ.. தீ.. தித்திக்கும் தீ' என்ற பாடல் ரஹ்மானின் வெகுசிறந்த ஃப்யூஷன் முயற்சிகளில் ஒன்று. அப்பாடலின் பாஸ் கிடாரும், சிந்தசைஸரும், டிஜிட்டல் ரிதமும், பாஸ் கிடாராலும், குரல்சேர்க்கைகளாலும் ஆன இண்டர்லூட்களும் ரஹ்மானின் ஆரம்ப நாட்களிலேயே அவருடைய ஒலிச்சேர்க்கைத் திறனை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டன.
Click Here Enlarge'இருவர்' படத்தின் பாடல்கள் தமிழில் செய்யப்பட்ட மிக நல்ல ஜாஸ் முயற்சிகளில் ஒன்று. குறிப்பாக 1960-களின் திரைப் படச் சூழலை முற்றிலும் பழமையாகக் கொடுக்காமல், அதே சமயம் அச்சூழலை நினைவூட்டும் வகையிலும் இந்தப் பாடல்களில் வடித்திருந்தார் ரஹ்மான். இதைப் போன்று தொழில்நுட்பம் வெகுசிறப்பாகக் கைவரப் பெற்ற ரஹ்மான் அரபி இசையிலும் நல்ல அறிமுகமும், தேர்ச்சியும் பெற்றிருப்பது பம்பாய் முதல் சமீபத்தில் வந்த 'ஜோதா அக்பர்' வரை அரபி இசையைப் பின்புலமாகக் கொண்ட நல்ல பாடல்களிலிருந்து தெரியவருகிறது. இந்தப் பரிமாணமே ரஹ்மான் இந்திய அளவில் பெரும் வெற்றியைப் பெற்றதற்குக் காரணம். 'வாட்டர்', 'லகான்' திரைப்படங்களில் பல நல்ல பாடல்களை மரபிசையுடன் கூடிய ஒலிப்பொறியியல் சிறந்த பாடல்களாக அமைத்திருக்கிறார் ரஹ்மான்.

ஆனால் வெறும் ஒலித்துல்லியத்தை மட்டுமே நம்புகிறவராக இருந்திருந்தால் ரஹ்மான் என்றைக்கோ காணாமற் போயிருப்பார். மேற்கத்திய சந்தையின் விரிவாக்கத்தால் இப்போது விலையுயர்ந்த சிந்தசைஸர்கள் இந்தியாவில் வெகு எளிதாகக் கிடைக்கின்றன. இசை வடிவமைப்புக்கான மென்பொருளும் சந்தையில் இலவசமாகவே கிடைக்கிறது. 'ரோஜா', 'ஜென்டில்மேன்', 'மின்சாரக் கனவு' போன்ற திரைப்படங்களின் பாடல்களை ஒரேயொரு கீ-போர்ட், இலவச மென்பொருள் உதவியுடன் ஒரு கத்துக்குட்டி கீ-போர்டிஸ்ட் கூடத் தன் வீட்டிலேயே வடிவமைத்துவிட முடியும்.

ரஹ்மானுக்குப் பின் ஒரு டஜன் இசையமைப்பாளர்கள் அவரைப் போலவே ஒலித் துல்லியத்தில் கவனம் செலுத்துபவர்களாக வந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து ரஹ்மானை வேறுபடுத்திக்காட்டுவது அவருடைய கடும் உழைப்பு
ரஹ்மானுக்குப் பின் ஒரு டஜன் இசையமைப்பாளர்கள் அவரைப் போலவே ஒலித் துல்லியத்தில் கவனம் செலுத்துபவர்களாக வந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து ரஹ்மானை வேறுபடுத்திக்காட்டுவது அவருடைய கடும் உழைப்பு. வெகு குறைவான திரைப்படங்களை ஒப்புக்கொண்டு, பாடல்களைப் பலமுறை மேன்மேலும் மெருகேற்றுவது ரஹ்மானின் பாணி.

Composition-இலும் தொடர்ந்து முதிர்ச்சியடைந்து வருகிறார் ஆரம்ப காலத்தில் பின்னணி இசையில் ரஹ்மானிடம் ஒரு பெரிய போதாமை இருந்தது. ஆனால் 'லகான்', 'வாட்டர்', 'ஜானே தூயா ஜானே நா' போன்ற திரைப்படங்களின் பின்னணி இசையில் கடும் உழைப்பும், நல்ல முதிர்ச்சியும் தெரிகிறது.

ரஹ்மானின் இந்த வளர்ச்சியின் அங்கீகாரம்தான் 'Slumdog Millionaire' என்ற திரைப்படத்தின் பின்னணி இசைக்காக சமீபத்தில் Golden Globe விருது வாங்கியது. இந்தியத் திரையிசை என்றில்லை, பொதுவாக உலக இசையிலேயே இப்போது ஒலிக்கோர்வைக்குப் பெரிய அங்கீகாரம் இருக்கிறது. அது ஓர் இயக்கம் போல வளர்ந்து வருகிறது. டோனல்ட் ஃபேகன் (Donald Fagen), மைக்கேல் ப்ரூக் (Michael Brook) போன்ற ஒலிப்பொறியியலிலும், ஒலிக்கோர்வையிலும் சிறந்த கலைஞர்கள் பெரிதும் அங்கீகரிக்கப் படுகிறார்கள்.

சென்ற வருடம் Golden Globe விருது வாங்கிய டேரியோ மாரியனெல்லி (Dario Marianelli) கூட ஒலிப்பொறியியல் துல்லியத்துக்காக அறியப்படுபவர்தான். Golden Globe விருதை வாங்கியவர்கள் பட்டியலில் எனக்குத் தெரிய கடைசியாக ஒரு செவ்வியல் மரபிலும், composition-இலும் ஆளுமை கொண்டவர் பெற்ற விருது - 1998ல் - ஃபிலிப் க்ளாஸ் (Philip Glass) Truman Show படத்துக்காக வாங்கியது.

இந்த வருடம் ரஹ்மானுடன் இந்த விருதுக்காகப் போட்டியிட்டுத் தோற்றவர்களில் முக்கியமானவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood). சிறந்த பியானோ கலைஞரான இவர் மூன்றுமுறை இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுத் தோல்வியடைந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அறுபது வருடப் பாரம்பரியம் கொண்ட இந்தியத் திரையிசையில் ஓர் இந்திய இசையமைப்பாளர், ஒரு திரைப்படத்துக்காக உலகளவிலான ஒரு விருதைப் பெறுவது எனக்குத் தெரிந்து இதுவே முதல்முறை. இதற்கு முன் இந்தியத் திரையிசையில் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. 'India 24 Hours' என்ற விவரணத் திரைப்படத்துக்கும், 'ஹே ராம்' திரைப்படத்துக்கும் இளையராஜா அமைத்திருந்த பின்னணி இசை உலகத்தரம் வாய்ந்தது. உலகின் மிகச்சிறந்த கம்போஸர்களின் படைப்புகளுக்கு இணையானவை அவை. ரஹ்மான் அமைத்த 'லகான்' பின்னணி இசை 'Slumdog Millionaire' திரைப்படத்தின் இசையை விடப் பலமடங்கு உயர்ந்தது.

ஆனால் உலகளவில் கவனிக்கப் பட, அங்கீகாரம் கிடைக்க, சிறந்த படைப்புகள் மட்டும் போதாது. பின்னணியில் பலமான ஒரு தயாரிப்பு நிறுவனம் தேவைப்படுகிறது. 'Slumdog Millionaire' போன்று இந்தியாவைத் தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் ஒரு திரைப்படம் தேவைப்படுகிறது. முற்றிலும் மரபிசையாகவோ, இந்திய இசையாகவோ இல்லாமல் ஒரு உலகளாவிய உவப்பை உருவாக்கும் கலவையான இசை தேவைப்படுகிறது. இதற்கு முன் இசைக்காக கோல்டன் க்ளோப் விருதை வென்ற இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமான 'A passage to India' கூட முற்றிலும் இந்திய இசையைக் கொண்டதில்லை. இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மோரிஸ் ஜார் (Maurice Jarre) என்ற அமெரிக்கர்.

ரஹ்மான் தன் திறமைக்கேற்ற அங்கீகாரம் உலக அளவில் இருக்கும் காலத்தில் வாழ்ந்து வருகிறார். இது மிகவும் அரிதான ஒரு விஷயம். ரஹ்மானின் கடும் உழைப்பு ஒரு சிறந்த ஒலிச் சேர்க்கையாளர் என்ற நிலையிலிருந்து உயர்த்தி, அவரை ரே லிஞ்ச் (Ray Lynch), ஃபிலிப் க்ளாஸ் (Philip Glass), எல்மர் பெர்ஸ்டெய்ன் (Elmer Bernstein) போன்ற உலகின் மிகச்சிறந்த கம்போஸர்களில் ஒருவராகவும் ஆக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவில் பெரும்பாலும் உள்ளூரிலேயே அங்கீகாரமில்லாமல் வாழ்ந்து மடிந்த கலைஞர்கள்தான் ஏராளமாக இருக்கிறார்கள். ஏன், ரஹ்மானின் தந்தையான ஆர்.கே.சேகரே அங்கீகாரத்துக்காக இறுதிவரை போராடியவர்தான். ஆனந்த விகடனில் ஆர்.கே.சேகரைப் பற்றிய ஒரு உருக்கமான கட்டுரையைச் சில வருடங்களுக்கு முன் படித்தேன். “என் வாழ்க்கை பூராவும் நான் இரண்டாமிடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக நிச்சயம் ஒருநாள் நான் வெற்றி பெறுவேன்” என்று ஆர்.கே.சேகர் தன் நண்பரிடம் சொல்லியிருக்கிறார்.

அவருடைய வார்த்தைகள் தமிழ்நாடு, இந்தியாவையெல்லாம் தாண்டி உலகளவில் மெய்ப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் ரஹ்மான்!

சேதுபதி அருணாசலம்
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline