பதவி உயர்வு
|
|
|
|
ஆற்றங்கரையில் உள்ள தென்னந்தோப்பு மைதானத்தில் பெரிய கச்சேரியாம். பிரபல சினிமா பாடகர், நம்பர் ஒன்னாக முன்னணியில் இருப்பவரின் கச்சேரி. பெயர் பதஞ்சலி. பெரிய பண்ணையாரின் வீட்டில் தங்கியிருக்கிறாராம். ஊரில் சொல்ல முடியாத அளவு திருவிழாக் கூட்டம் மாதிரி ஜனக்கூட்டம் ஆற்றங்கரை மைதானத்தில் அலை மோதியது. கச்சேரி கேட்க மட்டுமல்ல, அவரைப் பார்க்கவும்தான். அவர் அவ்வளவு அழகு. இரண்டு, மூன்று படங்களிலும் தலைகாட்டிப் பிரபலமாகி விட்டவர். பணத்தில் எக்கச்சக்கமாகப் புரள்கிறவர்.
நாகு சாஸ்திரிகள் வாசற்திண்ணையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துப் புழுங்கிய வண்ணம் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். வெளியில் போய்ப் பார்க்க மனம் இல்லை. கோயிலுக்குப் போகவும் தோன்றவில்லை. உள்ளே திரும்பிக் கட்டிலில் படுத்து முனகியபடி இருக்கும் மனைவி சங்கரியைப் பார்த்தார். கை, கால்கள் துவண்டு, உடம்பு சுருங்கி, கண்கள் பஞ்சடைந்து பார்க்க மிகப் பரிதாபமாக இருந்தாள்.
மூன்று வருடங்களுக்கு முன்புவரை சங்கரி எப்படியோ இருந்தவள். கைநிறைய வளையல், இடையில் பளிச்சென்று சரிகைப் புடவை, நெற்றியில் காலணா அளவு குங்குமப் பொட்டு, கழுத்திலும் குறைவில்லாமல் சங்கிலி லட்சுமிகரமாய். இப்போது! பார்க்கவே சகிக்கவில்லை. உடல் சோர்ந்து கூப்பிட்டாலும் முனகிக்கொண்டே பேச்சுக் குழறியது, பாவம். நாகு சாஸ்திரிகள் எழுந்து அவள் கட்டிலருகில் சென்று மேல்துண்டால் வாயை மூடியபடி குலுங்கிக் குலுங்கி அழுதார். எப்படி ராணி மாதிரி வளைய வந்தவள் இன்று...
| அவன் என்ன தப்பு பண்ணிட்டான்? மனசுக்குப் பிடிச்சவளைக் கல்யாணம் பண்ணிண்டான். அது ஒரு பெரிய குற்றமா? | |
நாகு சாஸ்திரிகளுக்கும் சங்கரிக்கும் பத்மநாபன் ஒரே பிள்ளை. மிகவும் ஆசாரமான குடும்பம். பையன் அபூர்வ அழகும், அறிவும், பார்ப்பவர் மெச்சும்படித் திறமைசாலியாகவும் விளங்கினான். குரல்வளமோ அபாரம். சங்கீதத்தில் தேர்ச்சி பெற்று நிறையக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தான். வீடு கலகலவென்று இருந்தது. போட்டி போட்டுக் கொண்டு தங்கமும், வைரமுமாய் இழைத்துத் தங்கள் பெண்ணைக் கொடுக்க பெண்ணைப் பெற்றவர்கள் வரிசையில் நின்றார்கள்.
ஆனால் நடந்ததோ வேறு. பெற்றோர்கள் பெரிய இடத்து மருமகள் வருவார் என கனவு காண, அவனோ சென்னை, டில்லி என்றெல்லாம் புகழ் பரவி, வெளிநாடுகளிலும் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தான். நல்ல வாய்ப்பு வந்ததால் அமெரிக்காவுக்கும் போனான். சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தான். ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் மயங்கி, அவளையே கல்யாணமும் செய்து கொண்டவன், தன் பெயரையும் பதஞ்சலி என்று மாற்றிக்கொண்டு விட்டான்.
விஷயம் தெரிந்து சங்கரியும், நாகுவும் உள்ளம் உடைந்து நொறுங்கிப் போயினர்.
"சினிமாவிலும் சேர்ந்து வெள்ளைக்காரியையும் கல்யாணம் செய்து கொண்டு விட்டானே! ஐயோ நான் என்ன பாவம் செய்தேன்?" என்று உள்ளம் உருகித் தவித்தார் நாகு சாஸ்திரிகள். எல்லோரும் விசாரிக்க விசாரிக்க உற்சாகம் இழந்து நடைப்பிணமாய் ஆனார். சங்கரி, வீட்டிற்கு ஒரே பிள்ளை இப்படித் தலைகுனியச் செய்துவிட்டதை எண்ணி எண்ணி மனம் நொந்து, உருகி உருகிப் படுத்த படுக்கை ஆகிவிட்டாள். பெரிய பெரிய டாக்டர்கள் வந்து பார்த்தும் ஒன்றும் பலனில்லை. குடும்பம் சீர் குலைந்து நொடித்துப் போய்விட்டது. சங்கரிக்கு ஹார்ட்டில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும், ஒன்றரை லட்சம் ஆகும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். நாகு சாஸ்திரிகள், பணத்திற்கு எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.
பிள்ளை பெற்றோருக்கு இரண்டொரு கடிதமும் போட்டுப் பணமும் அனுப்பினான். நாகு சாஸ்திரிகள் கடிதத்தைப் பிரித்துப் பார்க்கக் கூட இல்லை. கிழித்துப் போட்டு விட்டார். பணத்தையும் திருப்பி அனுப்பி விட்டார். அப்பாவின் கோபம் தெரியுமாகையால் பத்மநாபன் நேரில் வரவேயில்லை. சங்கரிதான் பிள்ளையை நினைத்து அழுது புலம்பினாள். அவன் நினைவிலேயே படுத்த படுக்கையானாள். அந்தப் பிள்ளை பதஞ்சலிதான் இப்போது கச்சேரி செய்ய வந்திருக்கிறான். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
அப்பொழுது "மாமா, மாமா" என்று கூப்பிட்டபடி வந்தார் கோபாலன். "என்னடா உன்னைக் காணவேயில்லை இரண்டு நாளாய்" என்றார் சாஸ்திரிகள். கொஞ்சம் தயங்கிய கோபாலன், "ஒன்றுமில்லை. பதஞ்சலியைப் பார்க்கப் பக்கத்து ஊருக்குப் போயிருந்தேன். அங்க கோயில்ல கச்சேரி..." என்றார்.
"அந்த அயோக்யன் பேரை என்கிட்ட சொல்லாதேயும்" என்றார் கோபத்தில் முகம் சிவந்து பற்களைக் கடித்தவாறே சாஸ்திரிகள்
"அப்படி எல்லாம் சொல்லாதீங்கோ, அவன் என்ன தப்பு பண்ணிட்டான்? மனசுக்குப் பிடிச்சவளைக் கல்யாணம் பண்ணிண்டான். அது ஒரு பெரிய குற்றமா? சாரீரத்தால் குழைச்சு குழைச்சு மனசு உருக உருகப் பாடி கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறான். நம்ம ஊர் அபிராமி கோயிலுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்கப் போறான் தெரியுமோல்லியோ?" |
|
| என்னுடைய முரட்டுப் பிடிவாதத்தில் சங்கரியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, அந்தப் பாவத்துக்கு நான் ஆளாகி விடுவேனோ? | |
"போதும் நிறுத்து கோபாலா. பெத்தவாளுக்கு விரோதமா நடந்திண்டவன் ஒரு பிள்ளையா? மனுஷனா? துரோகி அவன்."
மெள்ள வார்த்தைகளை மென்று விழுங்கியபடி, "மாமா, இப்ப அவனோட நேர்ல பேசிட்டுத்தான் வரேன். அம்மா ரொம்ப முடியாமக் கிடக்கா. ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்சம் ஆகிறதாம்னு..."
கோபத்தின் உச்சிக்கே சென்ற நாகு சாஸ்திரிகள், "அந்த உதவாக்கரை கிட்ட ஏன் சங்கரியைப் பத்திப் பேசணும். அவளுக்காக பிச்சை கேட்கப் போனியா? தேவையே இல்லை. என்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம ஏன் போன..." என்று இரைய ஆரம்பித்தார்.
"அவன் சொல்றான், நான் இப்போ கோடிக்கணக்கா சம்பாதிச்சு தானம், தர்மம்னு அள்ளிக் கொடுக்கறேனே! கோயில் கோயிலா தர்மம் பண்றேன். ஆனா என்னைப் பெத்த அம்மா நான் குடியிருந்த கோயிலாச்சே, என் தாய்க்குச் செய்ய மாட்டேனா? ஆனா, அப்போதான் இவ்வளவு கோவத்தில இருக்காரே. எத்தனை லட்சம் ஆனாலும் நான் செய்யக் கடமைப்பட்டவன் ஆச்சேன்னு கண்ணால் ஜலம் விடறான்."
அதைக் கேட்டதும் நாகு அடிபட்ட வேங்கை போலச் சீறினார். "பாவி, துரோகி! எப்போ ஊர்பேர் தெரியாத எவளோ ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிண்டானோ அப்பவே அவனைத் தலை முழுகிட்டேன். அவன் காசுல வைத்தியமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். அப்படியே சங்கரி செத்தாலும் சாகட்டும். அவனோட சங்காத்தமே வேண்டியதில்லை." ஆத்திரம் கொப்புளிக்க வேகத்துடன் எழுந்தார்.
"நாகு மாமா, நா ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டேளே" கோபாலன் கேட்கவும், "உம்" என்றார் உறுமியவாறே நாகு சாஸ்திரிகள்.
"நாய் வித்த காசு குரைக்காது. பிணம் தூக்கின காசு நாறாது அப்படின்னு பெரியவா சொல்லுவா. இப்போ மாமிக்கு ஆபரேஷன்னு சொன்னா நாலு பாட்டில் ரத்தம் ஏத்துவா இல்லையா? அது யார், யார் எந்த ஜாதிக்காரரோடதுன்னு பார்த்தா ஏத்தறா, இல்ல உங்களுக்குத்தான் தெரியுமா? ஜாதில என்ன மாமா இருக்கு. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். உங்களோட வேஷ்டியை சிங்காரம் தானே வெளுக்கறான். ஏகாலி ரங்கன்தானே உங்களைத் தொட்டு க்ஷவரம் பண்றான். அவன் தொட்ட உடம்புதானே உங்களோடது. சும்மா ஸ்நானம் பண்ணினா தீட்டுப் போயிடுமா? இதெல்லாம் நீங்களா செஞ்சுக்குறது தானே! ஏன் இவ்வளவு படிச்சவர், விஷய ஞானம் உள்ளவர் ஜாதி வித்யாசம் பாராட்டறேள். உலகத்துல மனுஷ ஜாதின்னு ஒண்ணுதான் இருக்குன்னு நினைச்சுண்டு பேசாம மாமிக்கு பிள்ளை கிட்டப் போய்ப் பார்த்து வைத்தியம் செய்யுற வழியைப் பாருங்க."
எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நாகு சாஸ்திரிகளின் பதிலை எதிர்பார்க்காமலேயே கோபாலன் வேகமாக வெளியேறினார்.
"ஏன் இப்படி வறட்டு கௌரவத்தை கெட்டியாப் பிடிச்சுண்டு திண்டாடறேள். கோபாலன் சொல்றதில என்ன தப்பு. ஏதோ நடந்தது நடந்து போச்சு. அன்றாடம் நம்ப பாடே கஷ்டமாயிருக்கு. பேசாம பிள்ளையப் போய் பாருங்கோ. ஏதாவது வழி பொறக்கும் என் கஷ்டமும் தீரும்" குழறிக் குழறிப் பேசிய களைப்பில் சங்கரி உடல் படபடக்க ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.
நாற்காலியில் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்த சாஸ்திரிகளின் மனதில் பெரும் போராட்டம். "அவன் சொன்னது போல ஏன் பிடிவாதமாக, கல்நெஞ்சமாக வைராக்கியமாய் இருக்கிறேனோ? என்னுடைய முரட்டுப் பிடிவாதத்தில் சங்கரியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, அந்தப் பாவத்துக்கு நான் ஆளாகி விடுவேனோ? உலகத்தில எதுலதான் கலப்படம் இல்லை? அதுபோல பையனும் கலப்புத் திருமணம் செய்து கொண்டான். இதில் என்ன தவறு? கோபாலன் சொன்னது போல நாய் விற்ற காசு குரைக்குமா? பிணம் தூக்கின காசு நாறுமா? அடடா எத்தனை பொன்னான மொழிகள். ஏன், இப்போ நான் சாப்பிடுற அரிசியும், உடுத்துற துணியும் முதலியார் வீட்டு விசேஷத்தில வச்சுக்கொடுத்தது தானே! இதில என்ன ஜாதியா ஒட்டிக் கொண்டிருக்கு!"
சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தார் சாஸ்திரிகள். கால்களில் செருப்பை நுழைத்துக் கொண்டவர், "நான் வரேன் சங்கரி" என்று கூறிவிட்டு, தெளிந்த மனதுடன், பிள்ளையை கையோடு அழைத்து வருவதற்காக, அவன் தங்கியிருந்த பெரிய பண்ணையாரின் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினார்.
கதை: தங்கம் ராமசாமி, ஸ்ட்ரீம்வுட், இல்லினாய்ஸ் படம்: மணியம் செல்வன் |
|
|
More
பதவி உயர்வு
|
|
|
|
|
|
|