Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
அருள்மிகு சித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம்
- சீதா துரைராஜ்|ஏப்ரல் 2024|
Share:
தலச்சிறப்பு
இத்தலம் மத்ரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை என்ற ஊரில் உள்ளது. இங்கே குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். மூலவர்: சித்திர ரத வல்லபப் பெருமாள்; தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி.

இத்தலத்தில் பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாகக் காட்சி தருவது விசேஷம். இங்கு நவக்கிரகத்தில் வியாழக் கிரகம் யோக குருவாகக் கருதப்படுகிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் பிறர் குணம் அறிந்து செயல்பட்டுத் தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். வியாழன் (குரு) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கித் தவம் செய்ததால் இந்த இடம் குருவித்துறை ஆனது. குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்குக் காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லபப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு வந்து வழிபடுவர்.

வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு (வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சார்த்தி வழிபடுகின்றனர்.

உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கித் தவம் செய்த ஒரே இடம் இதுதான். வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் இங்கு வீற்றிருக்கிறார். 12 ஆழ்வார்களின் சிலைகள் ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார்



தல வரலாறு
முன்னொரு காலத்தில் நடந்த போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை அசுர குரு சுக்ராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தைக் கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் (குரு) மகன் கசனை அழைத்து, “அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா” என்று கேட்டுக் கொண்டனர். கசனும் தந்தை வியாழ பகவானின் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அவனை அசுர குரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒருதலையாகக் காதலித்தாள். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரத்தைக் கற்றுக் கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுர குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.

அசுர குரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் அந்தச் சாம்பலைக் கலக்கிக் கொடுத்தனர். கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம் கசனின் இருப்பிடத்தைக் கண்டறியும்படி வேண்டிக் கொண்டாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர்பெறச் செய்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான் கசன். சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயானியை மணம் முடித்துச் செல்ல வேண்டும் என்று கூற, அதற்குக் கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்ததால் தேவயானி எனக்குச் சகோதரி முறை ஆகவேண்டும் எனப் பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான்.

கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்துப் பெருமாளை வேண்டித் தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பிக் கசனை மீட்டார். பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி அங்கேயே எழுந்தருளினார்.

திருமால், குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு, சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று, ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளிக் காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: