Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2024 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | வாசகர் கடிதம் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
'சிறுவாணி வாசகர் மையம்' ஜி.ஆர். பிரகாஷ்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜனவரி 2024|
Share:
கேள்வி: சிறுவாணி வாசகர் மையம் தொடங்கலாம் என்று எப்படித் தோன்றியது?
பதில்: 1960களில் தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லஷ்மி கிருஷ்ணமூர்த்தி 'வாசகர் வட்டம்' என்னும் அமைப்பை நடத்தினார். வருடத்திற்கு 6 நூல்கள் என மொத்தம் 44 நூல்களை வெளியிட்டார். வருடச் சந்தா ரூ.25. தற்போது கிளாசிக் நூல்களாகக் கருதப்படும் அபிதா, புத்ர, சாயாவனம், நடந்தாய் வாழி காவேரி, வேள்வித்தீ, அம்மா வந்தாள் போன்றவை அவற்றில் அடங்கும். முக்கிய எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் வாசகர் வட்டத்தில் வெளியாகின.

எழுத்தாளர் நாஞ்சில்நாடனும், ஆடிட்டர் கிருஷ்ணகுமாரும் நானும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது நாஞ்சில்நாடன் வாசகர்வட்டம் பற்றிச் சொல்லி "நாம் ஏன் வாசகர்வட்டம் போல ஒன்றை ஆரம்பிக்கக்கூடாது?" என்று இதற்கான விதையை விதைத்தார். எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன் அவர்களின் மேலான ஆலோசனையோடு 2017 ஜனவரி 1ஆம் நாள் சிறுவாணி வாசகர் மையத்தைத் தொடங்கி, 'மாதம் ஒரு நூல்' திட்டத்தை அறிவித்தோம்.



கே: சிறுவாணி வாசகர் மையத்தின் அமைப்பாளர்கள் யார் யார்?
ப: சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவராக எங்களை ஊக்கப்படுத்தி வருபவர், எழுத்தாளரும், காந்தியவாதி T.D. திருமலை அவர்களின் மகளுமான திருமதி சுபாஷிணி திருமலை. நாஞ்சில்நாடன் சிறுவாணி வாசகர் மையத்தைத் தொடங்கி வைத்ததோடு, எங்களைத் தொடர்ந்து வழிநடத்தியும் வருகிறார். கோவையில் RAAC அமைப்பின் செயலர் திரு. ஆர். ரவீந்திரன், சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான திரு. வ. ஸ்ரீநிவாசன் ஆகியோர் சிறப்பு ஆலோசகர்கள்.

தமது 'திரைச்சீலை' நூலுக்காக தேசிய விருது பெற்ற ஓவியர் ஜீவா சிறுவாணி வாசகர் மைய நூல்களுக்கான அட்டைப் படங்களை வடிவமைத்துத் தருகிறார்.



கே: சிறுவாணி வாசகர் மையத்தின் நோக்கம் என்ன?
ப: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களின் படைப்புகளை இளைய தலைமுறையினருக்குக் குறைந்த வருடக் கட்டணத்தில் கிடைக்கச் செய்தல்; மறுபதிப்பு இல்லாத நூல்களை மீண்டும் பதிப்பித்தல்; வணிக நோக்கில்லாமல் சிறந்த படைப்புகளை வாசிப்பவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்தல்; வாசிப்பின் ருசியை பரவலாக்குதல் ஆகியவை எமது நோக்கங்கள்.

மூன்று விதமான அடிப்படை நோக்கங்களோடு சிறுவாணியின் நூல்களைத் தேர்வுசெய்கிறோம்.
1) தேச விரோதமான எழுத்துகளை வெளியிடக்கூடாது.
2) சாதி, மத, இனம் முதலிய வேற்றுமைகளை உருவாக்கும் படைப்புகளைத் தரக்கூடாது.
3) பெண்களை இழிவுபடுத்தும் எழுத்துகள் இடம்பெறக் கூடாது.



கே: சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட முதல் நூல் எது?
ப: 2017 ஏப்ரல் 23 உலகப் புத்தக தினத்தன்று, சிறுவாணி வாசகர் மைய வெளியீட்டின் முதல் புத்தகம் 'நவம்' வெளியானது. நாஞ்சில்நாடனின் ஒருமை, இருமை, மும்மை என தசம் வரையிலான எண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு அது. முதல் வருடத்தில், அடுத்தடுத்து லா.ச.ரா., அசோகமித்திரன், இளசை மணியன், கீரனூர் ஜாகிர்ராஜா ஆகியோரின் நூல்களைப் பதிப்பித்தோம். வாசகர்களின் ஆதரவு நம்பிக்கை தரும் வகையில் இருந்ததால் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.

கே: மையம் வெளியிடும் நூல்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
ப: ஐவர் குழு நூல்களைப் பரிசீலனை செய்து பரிந்துரைப்பர். அவற்றைத் திரு. நாஞ்சில்நாடன் பரிசீலித்து, வருடத்திற்கான, மாதந்தோறும் வெளியிட வேண்டிய நூல்களை இறுதிக்கட்டமாகத் தேர்வு செய்து தருவார். ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதிக்குள், நாஞ்சில்நாடன் அவர்களின் வீட்டில் கூடி, ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான அடுத்த ஆண்டுக்கான நூல்களைத் தேர்வு செய்வோம்.



கே: சிறுவாணி வாசகர் மையம் வழங்கிவரும் நாஞ்சில்நாடன் விருது, அதன் தேர்வுமுறை, இதுவரை விருதுபெற்றவர்கள் குறித்துச் சொல்லுங்கள்…
ப: கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் சிறுவாணி வாசகர் மையம் விருது வழங்குகிறது. இதில் பரிசுத் தொகை ரூபாய் 50,000, கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கும். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பல்வேறு இலக்கியச் சேவைகளைச் செய்துவரும் புரவலர் ஒருவர் உதவியுடன் இவ்விருது வழங்கப்படுகிறது.

ஓவியர் ஜீவா (2018), முனைவர் ப. சரவணன் (2019), பத்திரிகையாளர், எழுத்தாளர் கா.சு. வேலாயுதன் (2020), மணல்வீடு ஹரிகிருஷ்ணன் (2021), சமூக செயற்பாட்டாளர் 'கௌசிகா' செல்வராஜ் (2022), மொழிபெயர்ப்பாளர் அருட்செல்வப் பேரரசன் (2023) ஆகியோர் இதுவரை விருது பெற்றுள்ளனர். கடந்த விழாவின் போது வாசிப்பைத் தன் குரல் வழியே கொண்டுசேர்க்கும் ரம்யா வாசுதேவனுக்கு 'ஆயிரம் கதை சொன்ன ஆச்சரியக் கதைசொல்லி' என்பதாகப் பாராட்டுத் தெரிவித்தோம்.



கே: சிறுவாணி வாசகர் மையத்தின் உறுப்பினர்கள் குறித்துச் சொல்லுங்கள்..
ப: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 17 வயது முதல் 94 வயதுள்ள மூத்த வாசகர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர். வாசக நண்பர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் ஆதரவோடு செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையத்துக்கு இது எட்டாவது ஆண்டு. உறுப்பினர்களின் அன்பும், தொடர்ந்த ஆதரவும்தான் சிறுவாணிக்குப் பக்கபலம். தொடர்ந்து சிறந்த நூல்களைத் தர வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் பேரர் சிவசுப்ரமணியம், மூத்த எழுத்தாளர் சி.என். மாதவன், அவரது மகள் சுஜாதா சஞ்சீவி, வே. முத்துக்குமார், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சீரிய ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கி வருகின்றனர்.



கே: சிறுவாணி வாசகர் மையத்தின் ஒருங்கிணைப்பாளராக உங்களது பணிகள் என்னென்ன?
ப: நான் கடந்த 30 ஆண்டுகளாகக் கோவையில், இருசக்கர உதிரி பாகங்கள் செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவாணி வாசகர் மையம் தொடங்கியது முதல் கடந்த 8 ஆண்டுகளாக உறுப்பினர் சேர்த்தல், எழுத்தாளர்களுடன் தொடர்பு கொள்ளுதல், தேர்வுசெய்த படைப்புகளைத் தட்டச்சு செய்தல், லே-அவுட் வேலை, மெய்ப்புப் பார்த்தல், புத்தக வடிவமைப்பு, அச்சுக்கு அனுப்புதல், உறுப்பினர்களுக்குப் புத்தகங்களை அனுப்புதல் போன்ற பணிகளைச் செய்துவருகிறேன்.

புத்தகம் தயாராகி வந்ததும் 500+ உறுப்பினர்களுக்கு அனுப்ப, அவற்றை பேக் செய்தல், முகவரி சரிபார்த்தல், உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் எனப் பிரித்தனுப்புதல் போன்ற வேலைகளை எனது தாயார், மனைவி, மகள் ஆகியோர் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கடைகளில் நூல்களை விற்பனைக்குக் கொடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. ஆகவே கோவை புத்தகக் கண்காட்சியின் போது மட்டும் எனது பணிநேரத்தை இரவுக்கு மாற்றிக்கொண்டு நூல்களைப் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புத்தகத் திருவிழாவிற்கு வரும் மாணவர்களுக்குப் பல்வேறு புத்தகங்களை இலவசமாகவே வழங்குகிறோம்.



கே: புத்தக வெளியீட்டாளராக, பதிப்பாளராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?
ப: சிறுவாணி வாசகர் மைய நூல்களை பவித்ரா பதிப்பகம் மூலம் பதிப்பித்து வெளியிடுகிறோம். பல்வேறு காரணங்களால் மின்னூல் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், அனுபவத்திற்காகவேனும் அச்சு நூல் வாசிக்கும் பழக்கம் தொடரவேண்டும் என்பது எங்களது எண்ணம்.

உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் புத்தகங்கள் என்பதால் தேவையானதைவிடச் சில பிரதிகள் மட்டுமே கூடுதலாக அச்சிடுவோம். நூல் வடிவமைப்பு, அச்சிடுதல், அவற்றை அனுப்பும் செலவு போன்றவை அதிகமாக இருந்தாலும் நாங்கள் வாசகர்களிடம் பெறும் வருடக் கட்டணத்திற்கு அதிகமாகவே புத்தகங்களை அனுப்பிவைக்கிறோம்.

வணிகநோக்கின்றி வாசிப்பைப் பரவலாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டாலும், அதிகப்படியான செலவுகளை நெருங்கிய நண்பர்கள் மற்றும் புரவலர்கள் மூலம் ஈடுசெய்ய முயல்கிறோம்.



கே: மையத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்துவது; மிகச்சிறந்த படைப்புகளைத் தருவது; வருங்காலத்தில் அவற்றைப் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்குக் கொண்டு செல்வது போன்ற திட்டங்கள் உள்ளன.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிறைவு விழாவின் போது உறுப்பினர்கள் அனைவரது இல்லத்திலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 'சித்திர பாரதி' என்னும் நூலை காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்டோம். அதேபோல இன்னோர் ஆசையும் இருக்கிறது. தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் 'என் சரித்திரம்' தமிழர் அனைவரும் வாசிக்க வேண்டிய தன்வரலாற்று நூல். அந்நூலை உறுப்பினர்கள் அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் எண்ணமும் உள்ளது.

2020 ஜனவரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் விருது விழாவில் ரா.கி. ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை 'சிறுவாணி சிறுகதைகள்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டோம். எதிர்காலத்தில் உரிய நிதியுதவியும், இணைந்து பணிபுரியத் தன்னார்வலர்களின் உதவியும் கிடைத்தால் இதுபோன்று இன்னொரு சிறுகதை, நாவல் போட்டியை நடத்தலாம். தெரிவாகும் படைப்புகளை நூல்களாக வெளியிடலாம்.



கே: சிறுவாணி வாசகர் மையத்தின் பிற பணிகள் யாவை?
ப: நாஞ்சில்நாடன் எழுதிய கட்டுரைகளின் மாணவர் பதிப்பான 'அஃகம் சுருக்கேல்' 10000 பிரதிகளுக்கு மேல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி உறுப்பினர்கள் அனைவருக்கும் கடந்த ஏழாண்டுகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள், நண்பர்களின் உதவியால் அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளன. பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவையொட்டி ஓவியர் ஜீவா வரைந்த பாரதி படம் சுமார் 13000 பேருக்கு மேல் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. சிறுவாணி வெளியீடுகள் பல்வேறு நிகழ்வுகளில் பேசுபொருளாகி உள்ளன. பாராட்டப்பட்டுள்ளன. சிறுவாணி வாசகர் மையத்தின் வாசிப்புச் செயல்பாடுகளுக்காக கோயம்புத்தூர் சிடிஸன்-2019 விருது கோவை விழாவின் போது ரேடியோ சிட்டியால் எனக்கு வழங்கப்பட்டது. எனக்கான ஒரு அடையாளத்தைத் தந்துள்ளது சிறுவாணி வாசகர் மையம்.



"எழுதுகோல் தெய்வமிந்த எழுத்து தெய்வம்" என்றான் பாரதி. எழுத்துகளை வாசிப்போரும் அவர்களுக்கு எழுத்துகளைக் கொண்டு செல்வோரும் தெய்வங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்தச் சீரிய பணியைச் செய்து வரும் சிறுவாணி வாசகர் மையத்தை நடத்திவரும் ஜி.ஆர். பிரகாஷ் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகள்
தமிழ்க்கடல் ராய.சொ., ரசிகமணி டி.கே.சி. முதல் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வரை அனைவரது படைப்புகளும் வாசகர்களைச் சென்றடையும்படியான நூல்களை வெளியிட்டு வருகிறோம். இந்நூல்கள் சிறுவாணி உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. கடைகளில் விற்பனைக்குத் தருவதில்லை. பல்லாண்டுகளாகப் பதிப்பிலில்லாத க. சுப்ரமணியன் எழுதிய 'வேரும் விழுதும்', பரணீதரன் எழுதிய 'கஸ்தூரி திலகம்', க. ரத்னம் எழுதிய 'கல்லும் மண்ணும்', டி.கே. ஜெயராமன் எழுதிய 'குஜராத்திச் சிறுகதைகள்' முதலிய பல அரிய நூல்களைக் கொண்டுவந்துள்ளோம். கி.ரா, கு. அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோர் நூற்றாண்டை அனுசரிக்கும் விதமாக நூல்களைப் பதிப்பித்துள்ளோம். பூர்ணம் விசுவநாதன், சுப்ரமண்ய ராஜு, ரா.கி.ரங்கராஜன், விட்டல்ராவ், யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் நூல்களும் வெளிவந்துள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளில் சிறுவாணி வாசகர் மையம் 80 நூல்களை வெளியிட்டுள்ளது.
- ஜி.ஆர். பிரகாஷ், சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர்


வெளியீடுகள் பெற்ற விருதுகள்
வே. முத்துக்குமார் எழுதிய தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை நூல்:
நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்பட்ட 'தினமலர் ராமசுப்பையர் விருது (2019); கம்பம் பாரதி இலக்கியப் பேரவை சார்பில் வழங்கப்பட்ட சிறந்த நூலுக்கான முதல் பரிசு (2019); சிகரம் காலாண்டிதழ் நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த நூலுக்கான முதல் பரிசு (2021).

ஜி.ஏ. பிரபா எழுதிய 'பாதை காட்டும் பாரதம்' நூல்:
திருப்பூர் சக்தி விருது

ஜெ. பாஸ்கரன் எழுதிய 'கிணற்றுக்குள் காவிரி' நூல்:
சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான முதற் பரிசு (உரத்த சிந்தனை - என் ஆர் கே விருது 2020); சிறந்த நூலுக்கான 'கவிதை உறவு' இலக்கியப் பரிசு (2020); திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது (2021).

ஓவியர் ஜீவா எழுதிய 'ஒரு பீடியுண்டோ சகாவே' நூல்:
சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான வாசகசாலை விருது (2022)
- ஜி.ஆர். பிரகாஷ்


புத்தக வாசிப்பு: இன்று
இக்காலத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது போல ஒரு கருத்து உள்ளது. அது சரியில்லை என்று நினைக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள், சர்ச்சைக்குரிய புத்தகங்கள், நடிக, நடிகையர் பரிந்துரைகள் என ஆவலாக இளைய தலைமுறை பெரும்பாலும் வாசிக்கிறார்கள். அவர்களுக்கு நமது கிளாசிக் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்ய நமது கல்வித்திட்டத்தில் இடமில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கோ விருப்பமும் நேரமுமில்லை.
அந்த இளைய தலைமுறைக்கு நமது சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மறுஅறிமுகம் செய்வதே மையத்தின் முக்கியப்பணி. ஒரு புத்தகத்தை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதன் மூலம், அந்த எழுத்தாளரின் மற்ற படைப்புகளை அவர்கள் தேடி வாசிக்க வேண்டுமென்பது எங்கள் ஆசை. வணிகநோக்கமில்லாத இந்த வாசிப்பு இயக்கம், தொடர் இயக்கமாய் மாற வேண்டும். தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு, புத்தக வாசிப்பால் மனித மனங்களைப் பண்படுத்தும் எங்களது முயற்சிகளுக்கு, வாசகர்களின் ஆதரவு வேண்டும்.
- ஜி.ஆர். பிரகாஷ், சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர்


தொடர்புகொள்ள:
ஜி.ஆர்.பிரகாஷ்
+91 9940985920
+91 8778924880
Share: