|
|
 |
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், இசைப் பாடலாசிரியர் எனப் பல விதங்களில் இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருபவர், சுப்ர. பாலன். மே 11, 1939 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்தார். இயற்பெயர் டி.எஸ். பாலசுப்ரமணியன். பள்ளிக்கல்வி கற்ற இவர், தந்தை சுப்ரமணிய ஐயரின் வழிகாட்டலில் சம்ஸ்கிருத்தில் புலமை பெற்றார். தட்டச்சு, குறுக்கெழுத்தில் தேர்ச்சி பெற்ற சுப்ர. பாலன், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்லூரிக் கல்வித் துறையில் மூத்த நிதி அதிகாரியாகப் பணியாற்றினார். மனைவி: பா. நாகலெட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள்; இரண்டு மகள்கள்.
சுப்ர. பாலன் சிறுவயது முதலே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கினார். வீட்டிற்கு வந்த இதழ்களை வாசித்தும், புதுக்கோட்டை டவுன்ஹால் நூலகம் உள்ளிட்ட நூலகங்களுக்குச் சென்று வாசித்தும் இலக்கிய ஆர்வம் பெற்றார். கல்கி, மு.வ., கண்ணதாசன் போன்றோரது எழுத்தால் ஈர்க்கப்பட்டார். தொடக்க காலத்தில் கவிதைகள் எழுதினார். முதல் கவிதை கண்ணதாசன் நடத்திய 'தென்றல்' வார இதழில் வெளியானது.

அக்காலத்தில் புதுக்கோட்டை சிறார் இலக்கிய உலகின் கோட்டையாக விளங்கியது. பல்வேறு சிறார் இதழ்கள் புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்தன. அழ. வள்ளியப்பாவின் ஊக்கத்தால் சில சிறார் இதழ்களில் எழுதினார். சுப்ர. பாலனின் முதல் சிறுகதை 1973ல், கல்கி இதழில் வெளியானது. தொடர்ந்து அமுதசுரபி, தீபம், கோபுர தரிசனம், மங்கையர் மலர், லேடீஸ் ஸ்பெஷல், தினமணி, கலைமகள், இலக்கியப்பீடம், புதுகைத் தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்களை எழுதினார். நா. பார்த்தசாரதியின் மறைவுக்குப் பின், 'நா. பா.' என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றைச் சிலகாலம் நடத்தினார். கலசைக்கிழார், யெஸ்பால், ஆத்மேஸ்வரன் போன்ற புனைபெயர்களில் எழுதினார். அறிவியல் சிறுகதைகளை எழுதினார். தாவரங்கள் மீதும் இயற்கை மீதும் ஈடுபாடு கொண்டு சில சிறுகதைகளை எழுதினார். சுப்ர. பாலனின் சிறுகதைகளில் சில இந்தி, வங்காளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சுப்ர. பாலன். கல்கி இதழில் பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை எழுதினார். கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களைத் தேடித் தொகுத்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களாக அவை வெளிவரக் காரணமானார். ஓவியர் மணியம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாற்றைக் கல்கியில் தொடராக எழுதினார். கல்கியின் வரலாறான 'பொன்னியின் புதல்வர்' நூல் வடிவம் பெற்றபோது அதற்குக் 'குறிப்பு அகராதி' தயாரித்தளித்தார். தினமலர் குழுமத்தின் வெளியீடான 'காலைக்கதிர்' நாளிதழின் 'வாரக்கதிர்' இணைப்பான கதைமலரில் சுப்ர.பாலன் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு 'சின்னச்சின்னக் கதைகள் 100' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

சுப்ர. பாலன் மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். சுதாமூர்த்தி எழுதிய நூல்களை 'உண்மையின் வலிமை', 'துணிச்சல்கார தீரேந்திரன்', 'வாழை மர இளவரசி' போன்ற தலைப்புகளில் மொழிபெயர்த்துள்ளார். வானதி பதிப்பகம் அந்நூல்களை வெளியிட்டது. மேனகா காந்தி எழுதிய நூலை 'மரங்களின் கதைகள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். மணிவாசகர் பதிப்பகம் அந்நூலை வெளியிட்டது. கவி காளிதாசரின் மீது கொண்ட ஈடுபாட்டினால் அவரது நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
சுப்ர. பாலன், 'சிலம்புச்சாலை' போன்ற இலக்கிய ஆய்வு நூல்களை எழுதினார். கவிதை, சிறுகதை, பயணம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல், வாழ்க்கை வரலாறு என பல்துறை சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது 'மத்தாப்பூ' என்ற சிறார் பாடல் நூல், 1985-ல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றது. 'சூரியகுளத்து முதலைகள்' சிறுகதை, 2009-ன் சிறந்த இலக்கியச் சிந்தனை சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டது
85 வயதைக் கடந்தும் இன்றும் இதழியல் மற்றும் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்துவரும் சுப்ர. பாலன், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
அரவிந்த் |
|
சுப்ர. பாலன் நூல்கள் கவிதைத் தொகுப்பு: காலடியில் ஓர் உலகம், நானும் என் சூரியனும் (உரைநடைக் கவிதை) சிறார் நூல்கள்: மத்தாப்பூ (சிறார் பாடல் நூல்), விண்வெளிக் கதைகள், அறிவியலின் மறுபக்கம், விண்ணில் சுழலும் விந்தைகள் சிறுகதைத் தொகுப்பு: உலகம் என்பது, கனவுகளுக்குக் காத்திருத்தல், புல்வெளிப் பயணங்கள், யசோதைகள், ஊமை மனங்கள், மேலிடங்கள், வெள்ளம் வடிந்தபிறகு, சின்னச்சின்னக் கதைகள் 100 ஆன்மிக நூல்கள்: கண்ணன் நடந்த புண்ணிய பூமி, தலங்களின் தரிசனம், திருக்கோகர்ணம் தலப்பெருமை, அருள் தரும் ஆலயங்கள், யாதுமாகி நின்றாள், மகான்களின் அருளுரைகள் கட்டுரை நூல்கள்: எங்கள் தந்தையர், நலமுடன் வாழலாம், சாதனையால் உயர்ந்தவர்கள், தமிழ் நாட்டுக் கலைகள் – கைவேலைகள், அறிவியலாரின் மறுபக்கம், பூப்பூவாய்ச் சில நினைவுகள் இலக்கிய ஆய்வுகள்: சிலம்புச்சாலை, காவியத் துளி, மகாகவி காளிதாஸ் ரஸானுபவம், தூது செல்லாயோ (மூலம்: காளிதாசனின் மேகசந்தேசம்) தொகுப்பு நூல்கள்: எழுத்துலகில் அமரதாரா (கல்கி பற்றியும் அவரது படைப்புகள் பற்றியுமான பல்வேறு எழுத்தாளர்களின் மதிப்பீடு), கல்கி கடிதங்கள், வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம் (கல்கியின் தலையங்கங்கள்), அமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள், அமரர் கல்கியின் பெண் பாத்திரங்கள், மணியம் – 100 மொழிபெயர்ப்புகள்: உண்மையின் வலிமை (ஆங்கில மூலம்: சுதா மூர்த்தி), துணிச்சல்கார தீரேந்திரன் (ஆங்கில மூலம்: சுதா மூர்த்தி), வாழை மர இளவரசி (ஆங்கில மூலம்: சுதா மூர்த்தி), மந்திரக்காற்று (ஆங்கில மூலம்: சுதாமூர்த்தி), மரங்களின் கதைகள் (ஆங்கில மூலம்: மேனகா காந்தி), அன்புள்ள அம்மாவுக்கு (ஆங்கில மூலம்: டாக்டர் எம். பாலசுப்பிரமணியன்) தகவல் உதவி: கல்கி குழுமம் மற்றும் தமிழ் விக்கி தளம் |
|
|
|
|
|
|
|
|