கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடலாசிரியர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் அரசு மணிமேகலை. இயற்பெயர் மணிமேகலை. செப்டம்பர் 6, 1945 அன்று, காஞ்சிபுரத்தில், ரத்தினசாமி – ராஜாகண்ணம்மாள் இணையருக்குப் பிறந்தார். இளவயது முதலே மணிமேகலையை அரசு-கண்ணாம்பாள் தம்பதியர் வளர்த்ததால் தன் பெயருடன் அரசு என்பதை இணைத்துக் கொண்டு அரசு மணிமேகலை ஆனார். காஞ்சிபுரத்தில் உள்ள மிஷன் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் கற்றார். ராணி மேரி கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். 'பெரியார் ஈ.வே.ரா. சிந்தனையில் பெண்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து 'ஆய்வியல் நிறைஞர்' (எம்.ஃபில்) பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றார். தொடக்க காலத்தில் சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

அரசு மணிமேகலை கவிதைகள் எழுதினார். முதல் கவிதை 1980-ல் வெளிவந்தது. தொடர்ந்து அமுதசுரபி, தினமணி கதிர், தினமலர்-வாரமலர் எனப் பல இதழ்களில் கதைகள், தொடர்கள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதினார். சிறுவர்களுக்காகவும் எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். அவை ஆறு தொகுதிகளாக வெளிவந்தன. நாற்பது நாடகங்களைத் தயாரித்து இயக்கிய அனுபவம் மிக்கவர். பள்ளி விழா, கல்லூரி விழா, ஆசிரியர் சங்க விழா, மகளிர் சங்க ஆண்டு விழா போன்ற நிகழ்வுகளின் போது பல்வேறு நாடகங்களை நடத்தினார். குடும்பத் தலைவி, வேலைக்காரி, போக்கிரிப் பெண், பட்டிக்காட்டுப் பெண் எனப் பல வேடங்களில் நடித்தார். இவர் எழுதிய ஐந்து நாடகங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. வானொலியில் நான்கு நாடகங்கள் ஒலி பரப்பாகியுள்ளன.
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் கவியரங்குகள், பட்டிமன்ற நிகழ்வுகள், மகளிர் சார்பான நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்றார். திரைப்படங்களுக்குக் கதை, வசனம், பாடல்களை எழுதினார். அரசு விழாக்களில் நிகழ்ச்சி வர்ணனையாளராகச் செயல்பட்டார். பல்வேறு மாநாடுகளில், தமிழ்ச் சங்க நிகழ்வுகளில், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அரசு மணிமேகலையின் படைப்புகளில் சில பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றன. இவரது படைப்புகளை ஆய்வுசெய்து மாணவர்கள் ஆய்வியல் இளமுனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.
அரசு மணிமேகலை, திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், திரைப்பட விருது வழங்கும் வல்லுநர் குழு உறுப்பினர், தமிழ் வளர்ச்சித் துறை திட்டக் குழு உறுப்பினர், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்க் குழு உறுப்பினர், பாவேந்தர் நூற்றாண்டு விழா உயர்குழு உறுப்பினர், இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் எனப் பல்வேறு துறைகளில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.
அரசு மணிமேகலை படைப்புகள் கவிதைத் தொகுப்புகள்: ஒரு வானம்பாடி வாய் திறக்கிறது, வெளிச்ச மின்னல்கள், மழலைக் கவிதைகள், புரட்சிப் பூக்கள். சிறார் படைப்புகள்: முயன்றால் முன்னேறலாம், வானத்தை வளைப்போம், சிறுவனும் சிங்கக் குட்டியும், சிறுவர் பொன்மொழிக் கதைகள், நன்மொழிக் கதைகள், மனித உடலும், மருத்துவமும், மெழுகுவர்த்திகள், மாணவர்களுக்குச் சில யோசனைகள், சுட்டிப்பயல், கடல் வீரன் நெல்சன், நல்லவர்கள் கெடுவதில்லை, வானத்தை வளைப்போம். சிறுகதைத் தொகுப்புகள்: நிஜங்களும் நிழல்களும், நெஞ்சுக்குள் ஒரு நெருப்பு நதி, புல்லைத் தின்னும் புலிகள், கனவுச் சுகம், தினமுந்தான் தீபாவளி, தாண்டாத பயிர்கள், வழி வழியாய்..., வாழ்க்கை மாளிகை, முடிவல்ல ஆரம்பம், விளக்கை நாடும் விட்டில்கள், மூன்று கால் மனிதர்கள், வசந்தம் வந்தது, புதிய சொர்க்கம். நாவல்கள்: கனவு சுமக்கும் கண்கள், தீக்குளிக்காத சீதைகள், என்றும் தொடரும் பயணம், பொறுத்திரு பூ மலர..., கண்ணுக்குள் நூறு கவிதை, பூவே இளம் பூவே, மனிதரில் இவர் மகாத்மா, நாளை நான் ஜெயிப்பேன், பொழுது ஒரு நாள் புலரும், காத்திருங்கள் காலம் வரும். நாடகங்கள்: நகைச்சுவை நாடகங்கள், ஏழிசைவல்லி, சிரிப்பு நாடகங்கள், மெழுகுவத்திகள், ஆளுக்கோர் அகல்விளக்கு, அன்பென்று கொட்டு முரசே, பொய் முகங்கள், கனல் மணக்கும் கன்னி மலர், பாசவேலி, கொஞ்சம் நில்லுங்கள், விண்ணைத் தொடுவோம் பெண்ணே. கட்டுரை நூல்கள்: அழகும் ஆரோக்கியமும் பெற, மனித உடலும் மருத்துவமும், அறிவியல் அறிவு பெற, ஆழ்கடலில் சில அதிசயங்கள், சிந்திக்கச் சில நொடிகள், பயனுள்ள வீட்டுக் குறிப்புகள், பெரியார் சிந்தனையில் பெண்கள் (இரண்டு தொகுதிகள்), கவிதைக் கதிரவன் தாகூர், மாணவர்களுக்குச் சில யோசனைகள், தமிழகத்து மும்மணிகள், கட்டுரைக் களஞ்சியம், எழுத்தறிவு, நாடும் வீடும் நலம் பெற, மதவெறி அறியாத மழலைகள், முடிவல்ல ஆரம்பம், ஆளுக்கோர் அகல் விளக்கு, சேற்றில் முளைத்த செந்தாமரை.
அரசு மணிமேகலையின் பல்கலைத் திறமைக்காக அவரைப் பல்வேறு விருதுகள் தேடிவந்தன. குழந்தை எழுத்தாளர் சங்க விருது, பிரான்ஸ் தமிழ்ச் சங்க விருது, ஜெய்ப்பூர் தமிழ்ச் சங்க விருது, கல்கத்தா தமிழ்ச் சங்க விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது, கோவை லில்லி தேவசிகாமணி இலக்கிய அமைப்பு அளித்த விருது, மதுரை எழுத்தாளர் சங்க விருது, பாவேந்தர் விருது, அருந்தமிழ்த் தென்றல் பட்டம், தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜான்சிராணி விருது, வீரமங்கை வேலுநாச்சியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும், பாராட்டுதல்களையும் பெற்றார்.
அரசு மணிமேகலை, ஆகஸ்ட் 5, 2001 அன்று காலமானார். |