|
ரா.ஸ்ரீ. தேசிகன் |
   |
- அரவிந்த் | பிப்ரவரி 2025 |![]() |
|
|
|
 |
பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகத் திறனுடன் இலக்கியம் வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவர் ரா.ஸ்ரீ. தேசிகன். திறனாய்வு என்பதைத் தமிழ் இலக்கியத்தில் முன்னெடுத்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் நேர்த்தியான விமர்சன முறைகளுக்கு வித்திட்டவர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லத்தில் ஆகஸ்ட் 02, 1901 நாளன்று பிறந்தார். பள்ளிக்கல்விக்குப் பின் ஆங்கிலத்திலும், தத்துவத்திலும் பட்டம் பெற்றார். மதுரை கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றி 1950ல் பணி ஓய்வு பெற்றார்.
வடமொழியில் தேர்ந்த அறிஞரான ரா.ஸ்ரீ. தேசிகன், பி.ஸ்ரீ. ஆச்சார்யா உள்ளிட்ட நண்பர்களின் உந்துதலால் தமிழ் இலக்கிய ஆர்வம் பெற்றார். இசை கற்றிருந்த இவர், நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் குறித்து ஆய்வுசெய்து பல இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். தமிழில் பல சிறுகதைகளை எழுதினார். இவரது கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள், சிறுகதைகள், உரைச்சித்திரம் போன்றவை கலைமகள், பாரதமணி, சக்தி, ஹனுமான், சில்பஸ்ரீ, எழுத்து, காவேரி போன்ற பல இதழ்களில் வெளியாகின.
புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைக்கு முன்னுரை எழுதி அவர் படைப்புகளை மதிப்பிட்டு ஊக்குவித்தவர் ரா.ஸ்ரீ. தேசிகன். அந்த முன்னுரையில் அவர், புதுமைப்பித்தனின் படைப்புகளை "சிறுகதை மர்மங்களை நன்கறிந்துள்ள புதுமைப்பித்தனின் கதைகளுக்கிடையே திரியும்பொழுது ஒரு கவியுலகிலே திரிகிற உணர்ச்சி எனக்கு வருகிறது. இவருடைய கதை ஒவ்வொன்றும் ஒரு தனி அநுபவ முத்திரை பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உண்மையின் நாதம் தொனிக்கிறது. இவருடைய சில கதைகளை ரஸம் ததும்புகிற பாடல்கள் என்றே சொல்லிவிடலாம்" என்று மதிப்பிட்டிருந்தார். இம்முன்னுரையின் சிறப்புக் குறித்து ஜெயகாந்தன், "தமிழில் குறிப்பிடத்தக்க முன்னுரைகள் என்று சிலவற்றை நான் குறிப்பிடுவேன். அவற்றில் ஒன்று மகாகவி பாரதியாரின் கவிதைகளுக்கு மகரிஷி வ.வே.சு. ஐயர் எழுதியது; மற்றொன்று புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலுக்கு ரா.ஸ்ரீ. தேசிகன் எழுதியது" என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த அளவுக்குச் சிறப்புப் பொருந்தியவராக ரா.ஸ்ரீ. தேசிகனின் முன்னுரையும் அவரது பிற படைப்புகளும் அமைந்திருந்தன. தேசிகன் மொழிபெயர்ப்பாளராகவும் சிறந்த பல பங்களிப்புகளைத் தந்துள்ளார். மேல்நாட்டு இலக்கியப் போக்குகளையும், இலக்கியவாதிகளையும் எழுத்து இதழ்க் கட்டுரைகள் மூலம் அறிமுகப்படுத்தினார். 'தாமஸ் மன்' உள்ளிட்ட பலரது படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கிய நூல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார்.
இல்லறத்தில் இருந்தாலும் துறவியைப் போல ரா.ஸ்ரீ. தேசிகன் வாழ்ந்தார். தம்மால் முடிந்த உதவிகளைப் பலருக்குச் செய்தார். ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் கட்ட உதவுதல், அவர்களுக்கான பொருளாதார உதவிகளைச் செய்தல், ஏழைக் குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற பல நற்பணிகளை மேற்கொண்டார்.
ரா.ஸ்ரீ. தேசிகன் நூல்கள் சிறுகதைத் தொகுப்பு: சிலைக்கு எதிரில் மொழிபெயர்ப்பு: மாறிய தலைகள், மாய சந்நியாசி (ஆண்டன் செகாவ், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு); திருக்குறள், சிலப்பதிகாரம் (தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு) நாடகம்: குழந்தை ராமு கட்டுரை நூல்கள்: மேனாட்டுத் தத்துவம் (தத்துவ விமர்சனம்); சிந்தனை மணிகள் (ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சாதனை பற்றிய விளக்கம்); ஞானச்சுடர் (ஸ்ரீ அரவிந்தர் கொள்கைகள்); அருட்சோலை (ஆன்மிக சிந்தனைகள்) கற்பனை உலகம் (கருத்தோவியம்); கற்பனைச் சிறகு (எழுத்தோவியம்); கவிதைக் கலை (ஆங்கிலக் கவிதைகள் பற்றிய திறனாய்வு), மற்றும் பல.
ரா.ஸ்ரீ. தேசிகன் குறித்து, அவரது நண்பரான பி.ஸ்ரீ. ஆச்சார்யா, "ஸ்ரீ தேசிகனை நான் நீண்டகாலமாக அறிந்திருக்கிறேன். இப்பேரறிஞரைப் பல்வேறு கருத்து வேற்றுமைகளுக்கிடையே தோழராக்கிக்கொண்டு வாழும் பேறும் எனக்கு வாய்த்திருந்தது. இவரது தமிழ்ப்பெருங் காதலும் வடமொழிப் பண்பாடும் ஆழ்ந்தகன்ற ஆங்கிலப் புலமையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எங்களுக்கிடையே கடுமையான வாதங்களும் கருத்துப் போராட்டங்களும் நடைபெற்றதுண்டு. எனினும் நாங்கள் கருத்தொருமித்துச் சீராடி ஈடுபடக் கூடிய இலக்கியப் பணிகளில் ஒருமுகமாய்க் கலந்து உழைக்கத்தக்க சில வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டோம். 'கள்ளம் போனால் உள்ளது காணும்' என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்திய இவர் மனத்தில் தோன்றியதை ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லிவிடுவார். எதிராளிக்கு அது கசப்பாக இருக்குமே என்ற எண்ணம் இவருக்கு வருவதில்லை. அக்கிரமத்துக்கும் அடாத செயல்களுக்கும் இடங்கொடுக்கமாட்டார். இதே மனவுறுதி இலக்கியக் கொள்கை விஷயத்திலும் மேற்கொள்ளப்பட்டதால் இவருக்கும் எனக்கும் சில சமயங்களில் கடுமையான அபிப்பிராயப் பூசல்கள் ஏற்பட்டதும் உண்டு. ஆனால் அக்கருத்துப் போராட்டங்கள் பெரும்பாலும் அன்புப் போராட்டங்களாகவே திகழ்ந்தன. இதற்கு இவருடைய உள்ளத் தூய்மை ஒரு முக்கியமான காரணமாகும்" என்று குறிப்பிட்டார்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் எனப் பன்மொழிப் புலமையாளராகவும், பங்களிப்பாளராகவும் விளங்கிய ரா.ஸ்ரீ. தேசிகன், 1967 பிப்ரவரி 20 அன்று காலமானார். எழுத்தாளராகவும், விமர்சகராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் தமிழின் முன்னோடி இலக்கியவாதிகளுள் ஒருவராக ரா.ஸ்ரீ. தேசிகன் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர். |
|
அரவிந்த் |
|
|
|
|
|
|
|