Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
எஸ்.கே.எம். மயிலானந்தன்
- அரவிந்த்|ஏப்ரல் 2026|
Share:
எஸ்.கே.எம். மயிலானந்தன், ஈரோடு நகரைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் தொழிலதிபர், சமூக சேவகர். SKM குழும நிறுவனங்களின் தலைவர். பல்வேறு சேவை அமைப்புகளை நடத்தி வருபவர். 2013ல் பத்மஸ்ரீ விருதுபெற்ற இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. 'களைப்பே அறியாத உழைப்பாளி' என்று போற்றப்படும் இவர் மிக வறிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து கடும் உழைப்பால், அயராத முயற்சியால் உயர்ந்தவர். அவரது வாழ்க்கைப் பக்கங்களைச் சற்றே புரட்டிப் பார்ப்போமா?

பிறப்பு
எஸ்.கே.எம். மயிலானந்தன், ஜூன் 18, 1945 அன்று, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் உள்ள சாமிநாதபுரத்தில் பிறந்தார். வறுமையான பின்னணி கொண்ட எளிய விவசாயக் குடும்பம். கடும் உழைப்புக்குப் பெயர்போன அந்தக் குடும்பத்தில் பிறந்த மயிலானந்தம், பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே கற்க முடிந்தது.

தொழில் முயற்சிகள்
தொழில் தொடங்க ஆர்வம் கொண்டார். 1965ல், ஈரோடு மொடக்குறிச்சியில் ஒரு சிறிய பொது அங்காடியைத் திறந்தார். தற்போதைய வர்த்தகர்கள் பின்பற்றும் நவீன கிராமப்புற சந்தைப் பண்டமாற்று முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். பின்னர் கோழிப்பண்ணை தொடங்கினார். 1983ம் ஆண்டில் கோழிப்பண்ணை விவசாயிகள் நலச் சங்கத்தைத் தொடங்கி அதன் நிறுவனர் தலைவரானார்.



கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயல்பட்ட மயிலானந்தன், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி நடத்தினார். கிராமப்புறங்களில் படித்த மற்றும் படிக்காத மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார். ஆண்டு முழுவதும் வேலை செய்யும்படியான வாய்ப்புகளை உருவாக்கி அளித்தார். சந்தை மற்றும் விலை நிர்ணயத்தில் உள்ள பிரச்சனைகளைப் பகுப்பாய்வு செய்யவும், கோழிகளுக்கு ஏற்படும் புதிய நோய்களைத் தடுக்கவும், கோழிப்பண்ணை விவசாயிகளுக்குக் கல்வி புகட்டவும் பல கருத்தரங்குகளையும், விவசாயிகள் சந்திப்புகளையும் ஒருங்கிணைத்தார். அவரது முன்னெடுப்பால் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றனர். பலர் தொழில் முனைவோராக உருவாகினர். கிராம மக்களும் தொழில் செய்வோரும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பலவிதங்களில் முன்னேறலாம் என்பதை அறிவுறுத்தி அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்க, தமிழ்நாடு அரசின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்து அதற்கான செயல்முறையில் முக்கியப் பங்காற்றினார்.

1965ல் மயிலானந்தன் தொடங்கிய பொது அங்காடித் திட்டம் படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு உர விநியோகம், கோழி வளர்ப்பு, கால்நடைத் தீவனம், சந்தைப்படுத்தல், சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. எஸ்.கே.எம். எக் ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட், எஸ்.கே.எம். அனிமல் ஃபீட்ஸ் அண்ட் ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், எஸ்.கே.எம். சித்தா அண்ட் ஆயுர்வேதா மெடிசின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், எஸ்.கே.எம். உடல்நலம் மற்றும் மனநல அறக்கட்டளை. சமையல் எண்ணெய் ஆகியவை இவற்றில் அடங்கும். சித்தா, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் கோழிப்பண்ணைத் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கும் எஸ்.கே.எம். குழுமம், தரம் மற்றும் தொழில் நெறிமுறைகளுக்குப் பெயர் பெற்றதாக அமைந்துள்ளது.



யோகா மையம்
மயிலானந்தன், 1982ல் வேதாத்திரி மகரிஷி அவர்களின் 'மனவளக் கலை' அமைப்பில் குண்டலினி யோகப் பயிற்சி பெற்றார். அவரது கருத்துக்களால் கவரப்பட்டுச் சீடரானார். யோகப் பயிற்சியைப் பல இடங்களிலும் பரப்ப எண்ணம் கொண்ட மயிலானந்தன், சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு நிறுவப்பட்ட மதச்சார்பற்ற, லாப நோக்கற்ற அமைப்பான உலக சமுதாய சேவா சங்கத்தின் (WCSC - World Community Service Centre) உறுப்பினரானார். தனிமனித அமைதி, குடும்ப அமைதி, இறுதியில் உலக அமைதியை அடைவதே இவ்வமைப்பின் நோக்கம். அமைப்பின் மூலம் பல்வேறு இடங்களில் யோகப் பயிற்சி நிகழ மயிலானந்தன் உறுதுணையாக இருந்தார். ஐந்தாண்டுகளுக்குப் பின், 1987ல், சுவாமி வேதாத்திரி மகரிஷி, மயிலானந்தனை அவ்வமைப்பின் துணைத் தலைவராக நியமித்தார். 1997ல், தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இன்றுவரை அப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அதன் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மயிலானந்தன்.

மயிலானந்தன், சென்னை இந்திய யோகா சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளையின் தலைவராகப் பணியாற்றினார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் வேதாத்திரி மகரிஷியின் தத்துவத்தை அறிமுகப்படுத்தப் பல முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் இணைப்புடன், சென்னை WCSC தலைமை அலுவலக வளாகத்தில் 'வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி'யை நிறுவினார். இது 'மனித மேன்மைக்கான யோகா' (YHE) என்ற பெயரில், சான்றிதழ், பட்டயம், இளங்கலை, முதுகலை, M.Phil., Ph.D. பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. இதற்காக, WCSCயின் கல்விப் பிரிவான Vision for Wisdom என்பதை மயிலானந்தன் அமைத்தார். இது 34 பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ், பட்டயம், பட்டங்களைப் பெற்றுள்ளனர். 'இளைஞர் மேம்பாட்டிற்கான யோகா' (Yoga for Youth Empowerment) என்ற திட்டத்தை உருவாக்கி, அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.



கிராமங்களைத் தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான மற்றும் அமைதியான கிராமங்களாக மாற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, கிராம சேவைத் திட்டம் (WCSC-VSP) என்ற பெயரில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கினார். இந்தக் கிராமங்களில் மக்களுக்கு யோகம், தியானம், அறநெறி வாழ்க்கை முறை ஆகியன இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.

மயிலானந்தன், கல்வி, ஆராய்ச்சி, பெண்கள் மேம்பாடு, இளைஞர் மேம்பாடு, கிராம மாற்றம், தனிநபர் மேம்பாடு ஆகிய துறைகளில் உலக சமுதாய சேவா சங்கம் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

சமூகப் பணிகள்
மயிலானந்தன், 1980 முதல் ஈரோடு அரிமா சங்க அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகச் செயல்பட்டார். இது மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான மறுவாழ்வு மையமாகும். ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவராகப் பணியாற்றினார். ஈரோடு மாவட்டக் கைப்பந்து சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டார். கைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற விளையாட்டுக்களை ஊக்குவித்தார்.

மயிலானந்தன், ஈரோட்டில் 1992ல் 'பெரியார் நகர் பூங்கா பராமரிப்பு அறக்கட்டளை' என்ற அமைப்பை நிறுவினார். தூய்மை மற்றும் பசுமைத் திட்டத்திற்கு முன்னோடியாகச் செயல்பட்டார். பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் தேசிய உணர்வு, விழிப்புணர்வு, நாட்டுப்பற்று ஆகியவற்றை வளர்க்கவும், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கருத்தை ஊக்குவிக்கவும் 1999ல் 'தேசிய நல விழிப்புணர்வு இயக்கம்' என்ற அமைப்பை (NWAM) நிறுவினார். அதன் தலைவராக இருந்து பல நற்பணிகளை முன்னெடுத்தார். அவ்வமைப்பின் மூலம் கார்கில் நிவாரண நிதி, குஜராத் நிலநடுக்க நிவாரண நிதி, தமிழ்நாடு சுனாமி நிவாரண நிதி, மகாராஷ்டிரா லாட்டூர் நிலநடுக்க நிவாரண நிதி எனப் பல நிதி உதவிகளைச் செய்தார். கோவிட்-19 பெருந்தொற்றின் போது தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் இரண்டு கோடி நிதி அளித்தார்.

விருதுகள்
மயிலானந்தன், 1978ல், இந்திய ஜேசீஸ் அமைப்பு வழங்கிய தேசிய அளவிலான முதல் பத்து சிறந்த இளம்நபர் விருது பெற்றார். சமூக சேவையில் சிறந்த செயல்பாட்டிற்காக, ஈரோடு ரோட்டரி இன்டர்நேஷனல் வழங்கிய 'கௌரவ விருது' 1985ல் இவருக்கு வழங்கப்பட்டது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகளை எட்டு முறை பெற்றார். தேசியப் பாதுகாப்பு விருதுகளை இரண்டு முறை பெற்றார். வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு விருது இவருக்கு ஐந்து முறை வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை பாதுகாப்பில் சிறந்த செயல்பாட்டிற்கான மாநிலத் தொழில்துறை பாதுகாப்பு விருதினைப் பதினான்கு முறை பெற்றுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான தேசிய விருதை 1995ல் பெற்றார். 'ரவுண்ட் டேபிள் இன்டர்நேஷனல், இந்தியா' வழங்கிய 'கல்வியின் மூலம் சுதந்திரம்' விருது, மயிலானந்தனுக்கு 2000ல் வழங்கப்பட்டது.

2004ல், ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கிக் கௌரவித்தது. 'லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல்' 'சேவைச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்தது. 2009ல், தமிழக அரசால் சுற்றுச்சூழல் காவலர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. திருமுறைக் கழகத்தின் ஆன்மீகத் தவச்சுடர் விருது, 2010ல் அளிக்கப்பட்டது. இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 2010ல் 'தேசிய குழந்தைகள் நல விருது' வழங்கிப் பாராட்டியது. நாட்டின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மஸ்ரீ விருது மயிலானந்தனுக்கு 2013ல் வழங்கப்பட்டது. இந்திய கோழிப்பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத்தால் 2018ல் கோழிப்பண்ணை ஜாம்பவான் விருது வழங்கப்பட்டது.

2025ல், டெல்லி என்.சி.ஆர்., சோனிபத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. இந்திய அரசு, தனது உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருதை, 2026ம் ஆண்டுக்காக வழங்கிப் பாராட்டியது.


மயிலானந்தன், 1999ம் ஆண்டில், தனது எஸ்.கே.எம். உடல்நலம் மற்றும் மனநல அறக்கட்டளை மூலம், சாமிநாதபுரத்தில் உள்ள ராஜீவ் நகர் மற்றும் காந்தி நகர் என்ற இரண்டு ஹரிஜன கிராமங்களைத் தத்தெடுத்து, அவ்விரு கிராமங்களிலும் உள்ள முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுடன் மருத்துவ வசதியையும் வழங்கினார். ஹரிஜனக் குடியிருப்பு மக்களுக்குத் திருமணம், பிரசவம் மற்றும் இறுதிச் சடங்குகள்வரை பல உதவிகளைச் செய்தார். இவ்விரு கிராமங்களிலும் வசிக்கும் குழந்தைகளுக்குப் பட்டப்படிப்புவரை இலவசக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். 'சங்கமம் அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் பல நலத்திட்டப் பணிகளைச் செய்தார்.



ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் (CPC) தலைவராகச் செயல்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து 299 கிராமப் பஞ்சாயத்துகளிலும் CPC-யின் இணை மையங்களும், பள்ளி கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்களும் உள்ளன. கிராமப்புறங்களில் நாட்டுப்புற நடனம் மற்றும் நாடகங்களையும், கல்வி நிறுவனங்களில் நுகர்வோர் மன்றங்களையும், பல மாநில அளவிலான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி முகாம்களையும் இம்மையம் மூலம் ஒருங்கிணைத்து நடத்தினார். மக்களிடையே நுகர்வு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். நுகர்வோருக்காக 17 புத்தகங்கள் இவ்வமைப்பு மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இம்மையம் ஆற்றிய சேவைப் பணிகளைப் பாராட்டி மத்திய அரசு, 1993ல் ரூ.50,000 பரிசுத் தொகையுடன் 'தேசிய சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு மன்ற விருது' வழங்கிச் சிறப்பித்தது.

இதழியல்
மயிலானந்தன், 'கோழி நண்பன்' என்ற கோழி வளர்ப்பு மாத இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் செயல்பட்டார். 'நுகர்வோர் காவலன்' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 'மனவளக்கலைஞன்' மற்றும் 'அன்பொலி' ஆகிய மாதாந்திர ஆன்மிக இதழ்களின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் செயல்பட்டார்.

பிற பணிகள்
2006ல், சுவாமி வேதாத்திரி மகரிஷி காலமானார். அவரது மறைவுக்குப் பின், தனது தொழிலைத் தனது இரண்டு மகன்களிடமும் ஒப்படைத்த மயிலானந்தன், முழுநேரத்தையும் தற்போது சமூக சேவைக்கு அர்ப்பணித்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். மதச்சார்பற்ற ஆன்மீகத்தை ஊக்குவித்தலைத் தனது முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline