|
வைஷ்ணவம் சமரச சன்மார்க்கம் |
   |
- அரவிந்த் | ஏப்ரல் 2025 |![]() |
|
|
|
 |
வைணவம் திருநீறிடுவது சைவம் திருமண்ணிடுவது வைணவம் என்று எண்ணிய காலமுமுண்டு. இராயப்பேட்டையிலே சில அரிபஜனைகளிருந்தன. ஒவ்வொருபோது ஒவ்வொன்றுக்குச் செல்வேன்; பாட்டுக்களைக் கேட்பேன்; பிரசாதம் பெற்றுத் திரும்புவேன். முத்து முதலி தெருவிலே சில காலம் வசன இராமாயணமும், சில காலம் வசன பாரதமும் படிக்கப்படும். அக்கதைகளும் என் காதில் மேயும்.
அங்கும் இங்கும் மதவாதக் காலங்களில் சைவர் கதிரைவேற் பிள்ளையின் கூட்டத்துக் கேகுவர்; வைணவர் ஏகாங்கி சுவாமிகளின் கூட்டத்துக் கேகுவர். யான் அங்கும் போவேன்; இங்கும் போவேன். கண்டனப் பேச்சுக்களிடையும் ஏகாங்கி சுவாமிகள் வைணவ சம்பிரதாய நுட்பங்களைக் கூறுவார்கள். அவைகள் எனக்கு இன்பூட்டும்.
பெருமாள் சேவை யான் நண்பருடன் கடலோரஞ்சென்று திரும்புங் காலை வழியிலே பார்த்தசாரதி பெருமாளைத் தொழுது வருவேன். சனிக்கிழமை தோறும் பார்த்தசாரதியை வழிபடுவது எனது நியதி ஆயிற்று. பெருமழை பெய்யும் போதும் என் நியதியினின்றும் யான் வழுக்கி வீழ்வதில்லை. ஒருபோது ஒரு சனிக்கிழமை திருவொற்றியூர்க்குச் சென்று திரும்பினேன். வண்ணாரப்பேட்டை நண்ணியதும் (அங்கே டிராம் இல்லாத காலம்) திருவல்லிக்கேணிப் பெருமாள் திருக்கதவு அடைக்கப்படுமோ என்ற ஐயம் எழுந்தது. நடந்தேன்; வேகமாக நடநதேன்; ஓடினேன்; விரைந்து ஓடினேன்; ஓடியோடிப் பெருமாளை வணங்கினேன். உள்ளங் குளிர்ந்தது. யான் பெறும் நலங்களெல்லாம் பார்த்தசாரதியின் அருளாலேயே கிடைக்கின்றன என்று எண்ணினேன்; ஒவ்வொரு வகுப்பிலும் யான் முதற் பரிசில் பெறுதற்கும் அப்பெருமாள் அருளே துணை செய்ததென்று நம்பினேன்; உறுதியாக நம்பினேன். இந்நம்பிக்கையை மாற்றச் சிலர் முயன்றனர். எவர் முயற்சியாலும் பயன் விளையவில்லை.
சோமசுந்தர நாயகர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முதலியோர் எழுதிய வைணவ கண்டன நூல்களைப் பயின்றேன்; கதிரைவேற் பிள்ளையின் கண்டனப் பேச்சுக்களை நேரே கேட்டேன். அக்கண்டனங்களும் எனது நிலையை மாற்றவில்லை. சில வீரசைவர் என்னை எள்ளி எள்ளி நகையாடுவர். அவ்வெள்ளலும் நகையும் என்னை ஒன்றுஞ் செய்யவில்லை. திருமால் வழிபாட்டை யானே வலிந்து செய்யப் புகுந்தேனில்லை. அஃது எப்படியோ என் வாழ்வில் கலந்தது; அஃது இயற்கையாயிற்று.
பாட்டு நீக்கம் யான் கதிரைவேற் பிள்ளை சரித்திரம் எழுதினேன். அதிலே கடவுள் வாழ்த்தில் திருமாலையும் போற்றினேன். அந்நூலை வெளியிட்ட சிந்தாதிரிப்பேட்டை வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார் திருமால் வாழ்த்தை நீக்கினர். அரங்கேற்ற மேடையிலேயே அஃது எனக்குத் தெரிய வந்தது. அந்நிலையில் ஒன்றுஞ் சொல்லுதலும் இயலவில்லை; செய்தலும் இயலவில்லை. அப்பாட்டை யான் விட்டுவிடவில்லை. அதைப் புராணப் பிரசங்கத்திலே கடவுள் வாழ்த்தில் சேர்த்துச் சொல்லியே வந்தேன். சில ஆண்டு கடந்து அந்த வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையிலேயே யான் வாதவூரடிகள் புராணம் சொல்லுதல் நேர்ந்தது. திருமால் வாழ்த்தையும் புகன்று யான் புராணந் துவங்கினேன். அதைச் சபைத் தலைவரும் மற்றவரும் விரும்பவில்லை. 'திருமால் வாழ்த்துச் செப்புதல் கூடாது' என்று அச்சபையார் கூறினர். அதற்கு யான் இணங்கவில்லை. பிரசங்கம் ஒருநாள் அளவில் நின்று போயிற்று.
ஈரத்தமிழ் முத்து முதலி தெருவிலே திருவேங்கடநாயகர் என்ற பாகவதர் ஒருவர் இருந்தனர். அவர் வைணவ நூல்களை ஆராய்ந்த வண்ணமிருப்பவர். அவ்வாராய்ச்சிலே யானுங் கலந்து கொள்வேன். சம்பிரதாயங்கள் அவரால் சொல்லப்படும். அவைகளைக் கேட்பதில் எனக்குச் சோர்வு. உண்டாவதில்லை. திருவேங்கட நாயகர் கூட்டுறவால் எனக்கு ஒருபெரும் நலன் விளைந்தது. அஃதென்னை? நாலாயிரப் பிரபந்தத்தில் எனக்கு வேட்கை எழுந்தமை. நாயகர் பழைய வியாக்கியானங்களிலுள்ள நுட்பங்களை எடுத்தெடுத்துக் காட்டுவர். ஆழ்வார் மொழியிலும் நாயன்மார் மொழியிலும் எனக்கு எவ்வித வேற்றுமையும் தோன்றுவதில்லை. ஆழ்வார் ஈரத்தமிழ் எனது உள்ளத்தை எவ்வெவ்வழியில் குளிர்வித்ததென்பதை யான் அறிவேன். திருவாய்மொழியில் யான் மூழ்கினேன். அதனால் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூல் என்னிடத்திருந்து பிறந்தது. கண்ணன் என் தலைவனானான். யான் தலைவியானேன். எனது காதல் 'திருமால் அருள் வேட்ட'லைப் பாடுவித்தது.
விஷ்ணு எனக்கு வைஷ்ணவம் எப்படி விளங்கியது? சுருங்கச் சொல்கிறேன். விஷ்ணு சம்பந்தம் வைஷ்ணவம். விஷ்ணு என்னுஞ் சொல் வியாபகம் என்னும் பொருளுடையது. சர்வவியாபகமுடைய ஒன்று விஷ்ணு. விஷ்ணுவுக்குத் தமிழ்ப் பெயர் இறை என்பது. எங்கும் இறுத்தலையுடையது இறை.
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பொருளை வடமொழியர் விஷ்ணு என்றனர்; தென்மொழியர் இறை என்றனர்; பிறமொழியர் பிறபிற கூறினர். பொருள் ஒன்றே.
கடவுளுக்கும் பல இயல்புகளுண்டு. அவைகளுள் ஒன்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்குந் தன்மை. இத்தன்மையுடையது விஷ்ணு. எங்குமுள்ள ஒன்று எப்படி ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியதாகும்? அஃது எங்குமுள்ள எல்லார்க்கும் உரியதன்றோ? ஆகவே, வைஷ்ணவம் சமரசமுடையதென்று தெளிந்தேன்.
ஈசன் எங்குமுள்ளவன் என்னுங் கொள்கையுடையவர் எவ்வுயிர்க்காதல் தீங்கு செய்ய ஒருப்படுவரோ? படார். இதனால் வைஷ்ணவம் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத கொள்கையுடையதென்று உணரலானேன்.
வைஷ்ணவம், ஸ்ரீ வைஷ்ணவம் என்னும் ஆட்சியையும் உடையது. பொருள் என்னை? உலகம் பலவாறு கூறும். எனக்கு ஸ்ரீ என்பது கருணையை உணர்த்துவதென்று தோன்றியது. எவ்வுயிர்க்குங் கருணை புரிவது ஸ்ரீ வைஷ்ணவம் என்று எனக்கு விளங்கியது. இதைச் சமரச மார்க்கம் என்றால் என்ன?
வைஷ்ணவம் சமரச சன்மார்க்கம் என்று யான் சொல்வது சில கூட்டத்தார்க்குப் பிடிப்பதில்லை. அவர் என்னைப் பிரசாரத்துக்கு அழைப்பதில்லை. மற்றவர் என்னை அழைப்பர்.
தொழிலாளரிடத்தில் வேற்றுமை உணர்ச்சி கிடையாது. அவரால் காணப்பெற்ற வைணவக் கழகங்கள் பல உள்ளன. அவைகளில் எனது வைஷ்ணவப் பிரசாரம் நடைபெறும். சென்னைச் சூளைப்பட்டாளத்திலுள்ள வேங்கடேச குணாமிர்த வர்ஷணி சபைக்கு யான் பன்முறை சென்று பேசியதும், தொழிலாளர் இயக்கம் சென்னையில் தோற்றமுறுதற்குக் காரணமாக அச்சபை நின்றதும் ஈண்டுக் குறிக்கற்பாலன.
(நன்றி: திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பகுதி - 2, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு) |
|
அரவிந்த் (திரு.வி.க. அவர்களின் வாழ்க்கையிலிருந்து) |
|
|
|
|
|
|
|