பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த வயலூருக்கு வந்தார். அவருடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை ஓதி, முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் சாத்தி வழிபட்டார் வாரியார். பின் மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்பினார். அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி அருள்புரிந்தார்.
ஆலயத் திருப்பணிகள் ஒரு சமயம் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் ஆலயத்துக்கு வாரியார் விரிவுரையாற்ற வந்திருந்தார். அப்போது அங்கு அவரைத் தனது நண்பர்களுடன் வந்து சந்தித்தார் வயலூர் முருகன் திருக்கோயில் அறங்காவலர் திருச்சி ராதாகிருஷ்ணன் செட்டியார். வாரியாரிடம் அவர், "வயலூர் ராஜகோபுரத் திருப்பணி பலமுறை முயன்றும் முடியாமல் நின்றுவிட்டது. நீங்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வைக்கவேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். வாரியாரும் ஒப்புக்கொண்டார்.
1935-ல் வயலூர் ராஜகோபுரத் திருப்பணியைத் தொடங்கினார். பலரைச் சந்தித்து, பல இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, நிதி திரட்டி அப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார். அதுவே தனியாக அவர் செய்த முதல் ஆலயத் திருப்பணி. அதற்குமுன் தந்தையுடன் இணைந்து தன் ஊரான காங்கேயநல்லூர் ஆலயப் பணியைச் செய்திருந்தார். அந்த அனுபவம் அவருக்கு உதவியது.
வயலூர் ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து பலரும் வாரியாரைச் சந்தித்து பல்வேறு திருப்பணிகளை முடித்துத் தருமாறு வேண்டினர். அதன் படி வடலூர் சத்திய ஞான சபைப் பணியைத் தொடங்கி பல்வேறு இன்னல்களுக்கிடையே நடத்தி முடித்தார். அதேபோல் அங்கு ஸ்தூபி சிறப்பாக அமைய உதவினார். தொடர்ந்து மோகனூரில் அருணகிரிநாதர் அறச்சாலையையும், 1940-ல் சென்னை குயப்பேட்டை கந்தசாமி கோயில் ராஜகோபுரத் திருப்பணியையும் மேற்கொண்டார். தொடர்ந்து வள்ளிமலை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, சமயபுரம், சிதம்பரம், கோயம்புத்தூர், திருவானைக்காவல், மதுரை, திருமோகூர், சென்னை தேனாம்பேட்டை, ஸ்ரீரங்கம், நெல்லிக்குப்பம், கும்பகோணம், சைதாப்பேட்டை, திருப்பராய்த்துறை ஆகிய ஊர்களில் உள்ள ஆலயத் திருப்பணிகளைச் செய்தார். கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து, பணிகள் சிறப்புடன் நிறைவேற உழைத்தார். கும்பாபிஷேக விழாக்களின் போது அந்தந்த ஆலய இறைவர் மீது பல பதிகங்களைப் பாடினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 'பைந்தமிழ்ப் பாமாலை' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
பலி வழிபாடு தவிர்த்தல் அக்காலத்தில் பல ஆலயங்களில் விலங்குகளைப் பலியிடுவது வழக்கமாக இருந்தது. இதனை வாரியார் கடுமையாக எதிர்த்தார். "உயிர்க்கொலை புரிதல் பாவம்; தீது" என்றும், "ஆண்டவன் இவற்றை ஒருபோதும் விரும்புவதில்லை" என்றும் எடுத்துரைத்தார். தனது சொற்பொழிவுகளில் இது குறித்துப் பேசினார். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் ஆயிரத்தம்மனுக்குப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை லட்சக்கணக்கானோர் முன் ஓர் எருமைக் கடாவை நிறுத்தி ஒரே வெட்டில் வெட்டி அறுத்துப் பலியிடுவது வழக்கமாக இருந்தது. வாரியார் அங்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியுடன் அப்பலியைத் தடுத்து நிறுத்தினார்.
சொற்பொழிவும் உதவிகளும் இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வாரியார் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். தனது சொற்பொழிவின் மூலம் கிடைத்த நிதியை ஆலயங்கள் எழுப்பவும், திருப்பணிகள் செய்யவும் பயன்படுத்தினார். ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கும், தன் குரு திருப்புகழ்ச்சாமியின் குடும்பத்தினருக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் வழங்கி உதவினார்.
வாரியாரின் கொடை உள்ளத்தையும், சொல்லாற்றலையும் கண்ணதாசன் கீழ்க்காணும் பாடலைப் பாடி வாழ்த்தினார்.
வேறியார் உரைத்த போதும் விரிப்பன சுருங்கும் மேலும் மாறியும் திரிந்தும் சொல்லில் மற்றொன்று விரிந்தும் நிற்கும்
கூறுமோர் பொருளை யெல்லாம் குறையிலாதுரைக்கும் வள்ளல் வாரியார் ஒருவரே தான் வையமே சாட்சி சொல்லும்
மீனாட்சி என்ற சொல்லை விரிவுரை செய்வார் அங்கே தானாட்சி செய்யும் எங்கள் தமிழாட்சி என்னென்பேன் யான்
ஊனாட்சி செய்யும் மாந்தர் உயிராட்சி கொள்ளும் இன்பத் தேனாட்சி வாரியார்க் கே சிறப்பான ஆட்சி யன்றோ
என்று தொடங்கி
மாரியோ சில நாள் பெய்யும் மலர்களோ சில நாள் பூக்கும் ஏரியோ சில நாள் தண்ணீர் இல்லாமல் இருக்கக் கூடும்
வாரியார் என்னும் எங்கள் வள்ளலின் மனமோ நித்தம் வாரியும் வளரும் என்றால் மற்றொரு வார்த்தையே னோ!''
என்று வாழ்த்திப் பாடினார்.
அருணகிரிநாதர் அறக்கட்டளை ஒரு சமயம் வாரியாருக்குக் கனவு ஒன்று வந்தது. அதில் வாரியாரின் குருநாதரான அருணகிரிநாதர் உணவு கேட்பது போன்ற காட்சி வந்தது. அதன் உட்பொருளை உணர்ந்த வாரியார், அருணகிரிநாதருக்கு நிரந்தர நிவேதனமும், பூஜையும், வழிபாடும், சிறப்புற நடப்பதற்காக அருணகிரிநாதர் அறக்கட்டளை என்பதை ஏற்படுத்தினார்.
பெற்றோருக்குச் சமாதி வாரியாரின் தந்தை மல்லையதாசர், மார்ச் 17, 1950ல் சிவனடி சேர்ந்தார். தந்தையின் வேண்டுகோளின்படி வாரியார், லிங்காயத்து வழிபாட்டு முறைப்படி தந்தையாருக்குச் சமாதி நிகழ்வுகளைச் செய்வித்தார். நித்திய வழிபாட்டுக்கான அறக்கட்டளைகளை நிறுவினார், ஆண்டுதோறும் நினைவு நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வந்தார்.
அக்டோபர் 20, 1977-ல், வாரியாரின் தாயார் காலமானார். அவருக்கு, வாரியார் தமது தந்தையார் விருப்பப்படி சிவாலய நந்திபோல் தாயையும் வணங்குமாறு, தந்தையின் சமாதியில், தந்தை சமாதிக்கு எதிரே தாயும் அமர்ந்திருக்கும் முறையில் நினைவிடம் எழுப்பினார். தாயாருக்கு நித்திய வழிபாட்டு நியமக் கட்டளை நிறுவி, ஆண்டுதோறும் நினைவு நாள் விழாவை நடத்தி வந்தார்.
தல யாத்திரை வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்பட்டும் அயோத்தி, மதுரா, ஹரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களான சோம்நாத், மல்லிகார்ஜுனர், மகாகாலேஸ்வர், ஓம்காரேஷ்வர், பைத்யநாத், பீமாசங்கர், ராமேஷ்வர், நாகேஷ்வர், காசி விஸ்வநாதர், த்ரயம்பகேஷ்வர், கேதார்நாத், கிரிஷ்னேஸ்வர் ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார்.
(தொடரும்) |