Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | முன்னோடி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சுவாமி சகஜானந்தர் (பகுதி-2)
- பா.சு. ரமணன்|மார்ச் 2025|
Share:
சுவாமி சகஜானந்தரால் பல்வேறு சமூக நற்பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்பிய குருநாதர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், சகஜானந்தரை ஆடல்வல்லான் ஆலயம் உள்ள சிதம்பரம் தலத்துக்கு அனுப்பி வைத்தார்.

சிதம்பரத்தில் தவ வாழ்க்கை
குருவின் அருளுடன் 1910-ல் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார் சகஜானந்தர். தனது சமய, இலக்கிய, ஆன்மிகப் பணிகளைச் சிதம்பரத்தை மையமாக வைத்துத் தொடங்கினார். கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, 'கல்வியும் அதன் பயனும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிப் பலரைக் கவர்ந்தார். 'சாது மகாசங்கம்', 'ஆனந்த ஆசிரமம்' போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். 1916 முதல் மலேசியா, பர்மா, சிங்கப்பூர், ரங்கூன் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆற்றினார்.

கற்கை நன்றே!
சுவாமி சகஜானந்தர், நாள்தோறும் எதையேனும் கற்றவாறு இருந்தார். ஸ்ரீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரிடம் வடமொழியை நன்கு கற்றறிந்தார். பல்வேறு குருநாதர்களைச் சந்தித்து தனது ஐயங்களைப் போக்கிக் கொண்டார். வ.உ. சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்துத் திருக்குறள் பாடம் கேட்டார். அதன் நுணுக்கங்களை அறிந்தார். அவரிடம் மாணவராக இருந்து சைவ சித்தாந்த சாத்திரங்களைக் கற்றார். வ.உ.சி.யின் 'அகமேபுறம்', 'மெய்யறம்' போன்ற நூல்களுக்குப் பாயிரம் எழுதினார். பல அறிஞர்களை நாடிச்சென்று தமிழ் மற்றும் வடமொழி இலக்கண, இலக்கிய, தத்துவ, வேதாந்த நூல்களைக் கற்றார்.

பாராட்டு
சுவாமி சகஜானந்தரின் புலமையை உ.வே. சாமிநாதய்யர் தொடங்கி பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், வி. எஸ். சீனிவாச சாஸ்திரி, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கா.சுப்பிரமணியப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் வியந்து பாராட்டினர்.



நந்தனார் கல்விக்கழகம்
சுவாமி சகஜானந்தர், பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். ஏழை மக்கள் வாழ்வில் உயர உழைத்தார். ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்வில் உயர அவர்கள் கல்வி அறிவு பெற வேண்டியது அவசியம் என உணர்ந்த சகஜானந்தர், சிதம்பரம் ஓமக்குளக்கரையில் 'நந்தனார் மடம்' என்பதைத் தொடங்கினார். 1911ல், நந்தனார் பள்ளியை நிறுவினார். இதுவே 1916ல், 'நந்தனார் கல்விக் கழகம்' ஆக உயர்ந்தது.

1919ல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, சிதம்பரம் வந்தபோது நந்தனார் கல்விக் கழகத்திற்காக 51 ஏக்கர் நிலத்தை அளித்தார். 1934ல் சிதம்பரம் வந்த காந்தி சகஜானந்தரின் நந்தனார் மடத்தில் தங்கினார். அங்கு ஸ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ நந்தனார் ஆலயத்திற்கு காந்தி அடிக்கல் நாட்டினார். காந்தி, இந்தியாவில், ஆலயத் திருப்பணிக்காக என்று அடிக்கல் நாட்டிய ஒரே ஆலயம் இதுதான்.

நந்தனார் மடத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளி, பின்னர் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. தொடர்ந்து நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்தனார் தொழிற்கல்வி நிலையம் எனப் பலவாறாகத் தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தது நந்தனார் கல்விக் கழகம். 1939ல் நந்தனார் கல்விக் கழகத்தை அரசிடம் ஒப்படைத்தார் சகஜானந்தர்.

அரசியல்
சுவாமி சகஜானந்தர், 1928 தொடங்கி சில ஆண்டுகள் சென்னை மாகாண லெஜிஸ்லேடிவ் கவுன்சில் மெம்பராகவும், (எம்.எல்.சி.) பின்னர் எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார். 1930ல் டாக்டர் அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும் வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றபோது ஆதரவு வழங்கினார். பூனா ஒப்பந்தப்படி தனித்தொகுதி முறையை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.

ஆலய நுழைவுப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுடன் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். 1932ல் சிதம்பரம் தனித்தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1936 முதல் 1959 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் பட்டியலின மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடினார்

கல்விப் பணிகள்
சுவாமி சகஜானந்தர், 1929ல் அண்ணாமலை செட்டியார் அண்ணாமலை பல்கலைக் கழகம் (மீனாட்சி கல்லூரி) தொடங்க உதவினார். 1940-41ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழறிஞர்களில் ஒருவரானார். தமிழ்ச் சொற்பொழிவாளராகவும் விரிவுரையாளராகவும் செயற்பட்டார். ஆட்சிக் குழு உறுப்பினருள் ஒருவராக இயங்கினார்.



இதழ்கள்
சுவாமி சகஜானந்தருக்கு சிதம்பரத்தில் 'பரஞ்சோதி அடிகளார்' என்பவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அவரைப் போற்றும் வகையில், 'பரஞ்சோதி' என்னும் செய்தித் தாளைச் சிலகாலம் நடத்தினார். பரஞ்சோதி அச்சகம் என்பதை ஏற்படுத்தினார். அதன் மூலம் 'ஜோதி' என்ற தமிழ், ஆங்கில இருமொழி வார இதழை 1932-ல் தொடங்கி, 1939 வரை நடத்தினார்.

நூல்கள்
சகஜானந்தர் பல்வேறு நூல்களை எழுதினார். அவற்றுள் கீழ்க்காணும் நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

'தாழ்த்தப்பட்டோர்', 'ஹரிஜனங்கள் தோற்றம்', 'தீண்டாமை', 'நமது தொன்மை', 'பண்ணையாள் பாதுகாப்புச் சட்டமும் சர்க்காரின் கடமையும்', 'வச்சிர சூசிகை உபநிடதம்', 'ஆலயம் என்பது ஹரிஜனங்களுக்கே', 'தீண்டாமை சாஸ்திரியமன்று', சிதம்பர ரகசியமும் நடராசர் தாண்டவமும்'.

மறைவு
எந்தப் பிரதிபலனையும் பாராமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்த சுவாமி சகஜானந்தர், மே 01, 1969ல் காலமானார்.

நினைவு
1969ல் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தரின் முழுஉருவச் சிலையை அப்போதைய இந்தியத் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். 1990ல் சகஜானந்தாவின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு நடத்தியது.

சுவாமி சகஜானந்தரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த சிதம்பரத்தில் உள்ள நந்தனார் ஆண்கள் பள்ளி வாயிலில், தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதில் சுவாமிஜியின் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. சுவாமி சகஜானந்தரின் பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்


என்ற குறளுக்கு விளக்கமாக அமைந்தது சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கை.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline