Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | வாசகர் கடிதம் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | பொது
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சுவாமி சகஜானந்தர்
- பா.சு. ரமணன்|பிப்ரவரி 2025|
Share:
ஆன்மிகம் என்பது சாதி, மதம், இனம் கடந்தது. ஒருவர் சமயவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும் முகிழ்க்க அவருக்குள் இருக்கும் தேடலும், உண்மையான ஆர்வமும் வழிகாட்டியாக அமைகின்றன. ஆதிதிராவிட சமுதாயத்தில் பிறந்து, உள்ளத்தில் சுடர்விட்ட ஆன்மத் தேடலால் ஆன்மிகவாதியாகவும், சமூக சீர்த்திருத்தவாதியாகவும் மலர்ந்தவர் சுவாமி சகஜானந்தர்.

பிறப்பு
சுவாமி சகஜானந்தரின் இயற்பெயர் முனுசாமி. இவர், ஜனவரி 27, 1890-ல், ஆரணி அருகிலுள்ள மேல்புதுப்பாக்கம் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை – அலமேலு தம்பதியருக்குப் பிறந்தார். மாசிலாமணி என்ற மூத்த சகோதரரும், எட்டியம்மாள். பாக்கியம் அம்மாள், கமலம் அம்மாள் என மூன்று சகோதரிகளும் இவருக்கு உடன்பிறந்தோர்.

முனுசாமி இளம்வயதிலேயே இந்துசமயப் பற்றுமிக்கவராய் இருந்தார். சிறுவயதிலேயே எளிய, தூய்மையான வாழ்க்கையை மேற்கொண்டார். இயல்பாகவே சைவ உணவுப் பழக்கத்தைக் கைகொண்டார்.

கல்வி
புதுப்பாக்கத்தில் உள்ள பிராட்டஸ்டண்டு கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த அமெரிக்கன் பள்ளியில் முனுசாமி சேர்க்கப்பட்டார். வகுப்பில் முதல் மாணவனாக விளங்கினார். ஆசிரியர்களின் அன்பைப் பெற்றார். ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும், ஆசிரியர்களின் பரிந்துரையின் பேரில், மேலே படிக்க திண்டிவனம் நகரில் உள்ள அமெரிக்கன் ஆர்க்காடு சமயப்பரப்பு ஊழியர்கள் நடத்திய உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கும் பள்ளியில் முதல் மாணவனாக இருந்தார். ஆசிரியர்கள் இவர்மீது தனிக் கவனம் செலுத்தினர். பள்ளியில் இவரது பெயர் 'சிகாமணி' என்று மாற்றப்பட்டது.

சிகாமணியின் அறிவுத்திறனை வியந்த பள்ளி நிர்வாகிகள் அவரைக் கிறித்தவ சமயத்திற்கு மாற அழைத்தனர். சமய மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டால் எதிர்காலத்தில் அவர் விரும்பும் மேல்படிப்பைப் படிக்க உதவுவதாகவும் வாக்களித்தனர். ஆனால், மதமாற்றத்தைச் சிகாமணி உறுதியாக மறுத்தார். எட்டாம் வகுப்போடு சிகாமணியின் கல்வி முற்றுப்பெற்றது.

சமய ஆர்வம்
சிகாமணி தன் பெற்றோர்கள் வேலைபார்த்த கோலார் தங்கவயலுக்குச் சென்றார். ஆனால், அங்கும் மேலே கற்க வழியில்லாமல் இருந்தது. அந்நாட்களில் கோலாரில் முதலியார் ஒருவர் தினந்தோறும் புராணச் சொற்பொழிவு செய்து வந்தார். சிகாமணி நாள் தவறாமல் சொற்பொழிவில் கலந்துகொண்டார். இந்து சமயத்தின் பெருமை, புகழ், தொன்மை, அதன் தத்துவங்கள் எனப் பலவற்றை விரிவாக அறிந்துகொண்டார். மேலும் இந்துமதம் குறித்துக் கற்க ஆர்வம் கொண்டார்.

தனக்குக் கிடைத்த பணத்தில் இந்து சமய, ஆன்மிக, தத்துவ நூல்கள் பலவற்றை வாங்கினார். அவற்றின் மூலம் மேலும் சமயப் புரிதல் பெற்றார்.

மீண்டும் தன் ஊரில்…
1905ல், சிகாமணியின் பெற்றோர் கோலாரைவிட்டுத் தங்கள் ஊரான மேல்புதுப்பாக்கம் திரும்பினர். நிலக்கிழார் ஒருவரது பண்ணையில் அவர்களுக்கு வேலை கிடைத்தது. சிகாமணிக்கு அப்பண்ணையில் தண்ணீர் இறைக்கும் கவலை ஓட்டுகிற வேலை கிடைத்தது. அப்பணியில் அவர் மனம் செல்லவில்லை. ஊர் ஊராகச் சென்று தலங்களைத் தரிசிப்பதிலும், மேலும் சமயம், குறித்துக் கற்பதிலுமே ஆர்வம் சென்றது. ஆனால், அக்காலச் சூழலில் ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் அவரது சமயப் பற்று அதனால் குறைந்துவிடவில்லை. மென்மேலும் தீவிரமாகச் சமய நூல்களைச் சுயமாகக் கற்கத் தொடங்கினார்.



உண்மையைத் தேடி…
சிகாமணியுடைய ஊரான மேல்புதுப்பாக்கத்துக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முனுகப்பட்டு என்ற ஊரில் நீலமேக சுவாமிகள் என்ற ஆன்மிகப் பெரியவர் வாழ்ந்து வந்தார். அவர் அங்குள்ள ஒரு சிறிய மடத்தின் தலைவராக இருந்தார்.

சிகாமணி ஒருநாள் நீலமேக சுவாமிகளைச் சந்தித்தார். சிகாமணியின் அறிவாற்றல் கண்டு வியந்த சுவாமிகள், அவரைத் தனது மடத்திற்கு அழைத்துச் சென்றார். தன்னுடன் சில நாட்கள் தங்க வைத்தார். அங்கு சிகாமணிக்கு எதற்குப் பிறக்கிறோம், இந்தப் பிறப்பின் மூலம் நாம் செய்ய வேண்டியது என்ன, அடைய வேண்டியது என்ன, சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்னும் சமயப் பேருண்மைகளைப் போதித்தார்.

துறவற நாட்டம்
சிகாமணிக்கு சமய ஆர்வம் மேலும் தீவிரமானது. துறவற நாட்டம் அதிகமானது. அது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அம்முடிவைக் கடுமையாக எதிர்த்தனர். அண்ணன் மாசிலாமணியும், அண்ணி அமிர்தம்மாளும் துறவியாக வேண்டாம் என்று வலியுறுத்தினர். ஆனால், நாளடைவில் சிகாமணி அதில் உறுதியாக இருப்பதை உணர்ந்து தங்கள் வலியுறுத்தலைக் கைவிட்டனர். சிகாமணி விருப்பப்படி வாழ அவருக்கு உதவினர்.

ஆன்மிகப் பயணங்கள்
சிகாமணி ஆன்மத் தேடலால் தன் பெற்றோரின் அனுமதி பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றார். சுயம் கைலாச சுவாமிகள் உள்ளிட்ட பல ஆன்மிகவாதிகளைச் சந்தித்தார். பல சமய உண்மைகளை அவர்களிடமிருந்து கற்றறிந்தார். நரசிங்கபுரம் தட்சிணாசாமி சுவாமியிடம் தீட்சை பெற்றார். பின் சென்னைக்குப் பயணப்பட்டார்.

சென்னையில்…
சென்னைக்கு வந்த சிகாமணி, சமய, இலக்கிய அறிஞராகத் திகழ்ந்த கோ. வடிவேல் செட்டியாரைச் சந்தித்தார். அவரிடம் சமயமும் இலக்கியமும் கற்றார். ஆனால், தீவிர சமயத் தாக்கத்தில் இருந்த சிகாமணிக்குத் தன்னால் ஈடுகொடுக்க இயலாது என்பதை உணர்ந்த வடிவேல் செட்டியார், வியாசார்பாடி செங்கல்வராய நாயகர் தோட்டத்தில் தங்கியிருந்த கரபாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் சிகாமணியை அனுப்பி வைத்தார்.

கரபாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகள்
கரபாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகள் அக்காலத்தின் இந்து சமயப் பேரறிஞர்களுள் ஒருவர். மெய்ஞ்ஞானி. காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள், வீரசுப்பையா சுவாமிகள், ராஜகோபால் முதலியார், ஆரணி குப்புசாமி முதலியார், அமெரிக்கரான சார்ட்டால் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கரபாத்திர சுவாமிகளின் சீடர்களாக இருந்தனர்.

கரபாத்திர சுவாமிகள் பேசாநோன்பு மேற்கொண்டிருந்த நாளில் சிகாமணி அவரைச் சென்று சந்தித்தார். குருவைத் தரிசித்த மகிழ்ச்சியில் தம் எட்டு உறுப்புக்களும் தரையில் படும்படி வீழ்ந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் பெருக்கி நின்றார். தன்னைச் சரணடைந்த சிகாமணியை ஆசிரமத்திலேயே இருக்கச் செய்து, அவரைத் தனது சீடர்களுள் ஒருவராக்கிக் கொண்டார் சிவப்பிரகாச சுவாமிகள்.

குரு ஆணைப்படி சிகாமணி மடத்திலிருந்த புலவர் முருகேச முதலியாரிடம் இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். திருவிசைநல்லூர் சின்னைய நாயகர் என்பவரிடமும் இலக்கண, இலக்கிய நுட்பங்களைக் கற்றார்.

துறவு தீட்சை
கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் நல்லதொரு நாளில் தம் சீடர் சிகாமணிக்கு தீட்சை அளித்து 'எப்பொழுதும் ஆனந்தத்தில் திளைத்திருப்பாயாக' என்று வாழ்த்தி, 'சகஜானந்தர்' என்று பெயர் சூட்டினார். குரு சூட்டிய அப்பெயரே நிலைத்து 'சுவாமி சகஜானந்தர்' என்றும், 'சகஜானந்த சுவாமிகள்' என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

(தொடரும்)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline