|
|
|
 |
மாலதாசர் என்ற இடையர் ஒருவர் இருந்தார், அவர் கிராமத்துக் கோயிலில் ஒரு பண்டிதர் விளக்கியபடி, புனித நூல்களில் விவரிக்கப்பட்ட வழியில், இறைவனைக் காணத் தீர்மானித்தார். எனவே அவர் தனது மாடுகள் வயலில் மேய்ந்து கொண்டிருந்த போதெல்லாம் “வெள்ளைப் பறவை ஏறி வரும் கருத்த கடவுளிடம்” பிரார்த்தனை செய்தார். பதினோரு நாட்கள் கடந்தன, ஆனால் கருப்பான கடவுள் வெள்ளைப் பறவைமீது வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அந்த நாட்களில் அவர் உணவும் நீரும்கூட உட்கொள்ள மறந்து பலவீனமாகிவிட்டார். நடக்கவோ பேசவோ முடியாத அளவுக்கு நலிந்துவிட்டார்.
இறுதியாக, பகவான் அவரது பிரார்த்தனைக்கு இரங்கி, மனமுருகி ஒரு முதிய பிராமணராக அவர்முன் தோன்றினார். ஆனால் இந்த பிராமணர் வெள்ளைப் பறவைமீது வரவில்லை. பண்டிதர் விவரித்ததுபோல் அழகிய கருப்பராக இல்லை. எனவே, அவர் பிராமணரை மறுநாள் காலை ஏழு மணிக்கு வரச் சொன்னார். பண்டிதரை அழைத்து வந்து அவர் கூறிய கடவுள் இவர்தானா என்பதைச் சரிபார்க்க வேண்டுமே.
பண்டிதர் முழு விவரத்தையும் கேட்டுவிட்டுச் சிரித்தார். வர மறுத்துவிட்டார்; ஆனால், மாலதாசர் மிகவும் பிடிவாதமாக இருக்கவே கடைசியில் ஒப்புக்கொண்டார். மொத்த கிராமமும் மறுநாள் ஏழு மணிக்கு முன்பே ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தது. வாக்களித்தபடியே அந்தணர் அங்கு இருந்தார். மாலதாசர் அவரை அனைவருக்கும் காட்டினார். ஆனால் அவர்களால் பார்க்க முடியவில்லை.
மாலதாசரின் விஷமத்தைப் பார்த்து சிரித்த அவர்கள், அவரது பொழுது போக்குக்காகத் தங்களை அழைத்து வந்ததற்காக அவரைக் கடுமையாக அடிப்பேன் என்று மிரட்டினார்கள். மாலதாசரால் அந்தணரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது, ஆனால் வேறு யாராலும் பார்க்க முடியவில்லை. கடைசியில் மாலதாசர் மிகவும் கோபமடைந்து, பிராமண முதியவரிடம் சென்று, அவர் கன்னத்தில் அறைந்து, "நீ ஏன் உன்னை எல்லோருக்கும் காட்டக்கூடாது?" என்றார்.
அந்த அடி அந்தக் காட்சியை அப்படியே மாற்றியது. அந்தணர் மறைந்தார். கிருஷ்ணன் பிரகாசமான ஆடையில், சிரித்த முகத்துடன், வெள்ளைப் பறவையின் மீது, வசீகரமான வடிவத்தில் தோன்றினான். திகைத்துப் போன கிராம மக்கள் திகைப்பில் இருந்து மீள்வதற்குள், ஒரு தெய்வீக விமானம் வானில் பறந்து வந்தது. கிருஷ்ணன், மாலதாசரை அதில் அமரச் சொன்னான். பிறகு பகவான் அருகிலிருக்க, மாலதாசர் வெகு விரைவில் விண்ணேறி மறைந்தார்.
நன்றி: சனாதன சாரதி, செப்டம்பர் 2025 |
|
|
| பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|
|
|
|