நகரத்தில் பிறந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்களின் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும், மாறாத் தன்னம்பிக்கையும் இருந்தால் குக்கிராமத்தில் பிறந்தவர்களும் சாதிக்கலாம், உலகளாவிய சாதனைகளை நிகழ்த்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு, ஏ. வேலுமணியின் வாழ்க்கை. 'வேலுமணி' என்று சொன்னால் பலருக்கும் தெரியாதுதான். ஆனால், 'தைரோகேர் வேலுமணி' என்று சொன்னால் உடன், 'ஓ. அவரா? தெரியுமே!' என்பார்கள். குக்கிராமத்தில் பிறந்து, மிகமிக வறுமையான சூழலில் வளர்ந்து, இந்தியாவில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர் வேலுமணி என்னும் ஆரோக்கியசாமி வேலுமணி. அவர் சாதனை வாழ்க்கை நம் அனைவருக்குமே ஒரு பாடம். அந்தப் பாடத்தின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போமா?
பிறப்பு ஆரோக்கியசாமி வேலுமணி என்னும் டாக்டர் ஏ. வேலுமணி, ஏப்ரல் 12, 1959 அன்று, கோயம்புத்தூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதூரில் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். சகோதரர்கள், சகோதரிகள் எனப் பெரிய குடும்பம். தந்தை நிலமற்ற விவசாயி. தாய் இல்லத்தரசி. எருமைகளை வளர்த்து, பால் விற்று வரும் வருமானத்தில் குடும்பம் நடந்தது.
கல்வி வேலுமணி, அப்பநாயக்கன்பட்டி புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். நன்கு படிக்கும் மாணவராகத் திகழ்ந்தார். தொடர்ந்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார். அரசினர் நல விடுதியில் தங்கிப் படித்தார். வேதியியல் பயின்று இளநிலைப் பட்டம் பெற்றார். கல்வியினூடே தனது குடும்ப வருவாய்க்காகப் பால், செய்தித்தாள் விற்பனை மற்றும் இளம் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் உட்படப் பல பகுதிநேர வேலைகளைச் செய்தார்.
பணிகள் வேலுமணிக்கு, கோயம்புத்தூரில் உள்ள 'ஜெமினி கேப்ஸ்யூல்ஸ்' என்ற மருந்து நிறுவனத்தில் வேதியியலாளராகப் பணி கிடைத்தது. அது நிலைக்கவில்லை. மூன்றே ஆண்டுகளில் அந்நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ந்து பணிக்காகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார் வேலுமணி.

மும்பையில்…. கடும் முயற்சிக்குப் பின் வேலுமணிக்கு மகாராஷ்டிரத்தின் மும்பையில் அமைந்துள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி கிடைத்தது. ஆய்வக உதவியாளராகப் பணி சேர்ந்தார். 14 ஆண்டுகள் பணியாற்றினார். விஞ்ஞானியாக உயர்ந்தார்.
அந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் அனுமதியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் தைராய்டு குறித்த கல்வியில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1995-ல் அதே மும்பை பல்கலைக்கழகத்தில், தைராய்டு உயிர்வேதியியலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அந்தப் பட்டமும் அது தொடர்பாக வேலுமணி நிகழ்த்திய ஆய்வுகளுமே பிற்காலத்தில் அவர் 'தைரோகேர்' நிறுவனத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்தன. டாக்டர் கே.பி. தேசாய், டாக்டர் ஏ.எம். சாமுவேல் ஆகியோர் வேலுமணியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
14 ஆண்டுகள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய வேலுமணி, மும்பை, பரேலில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில், கதிர்வீச்சு மருத்துவ மையத்தில் பணியமர்த்தப்பட்டார்.
திருமணம் வேலுமணி இக்காலகட்டத்தில், கொச்சியில் பிறந்து வளர்ந்த சுமதியைத் திருமணம் செய்துகொண்டார். சுமதி, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரு பிள்ளைகள். இத்தம்பதிகள் மிக எளிய வாழ்க்கை நடத்தினர். சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில்கூட எந்த விதமான ஆடமபரப் பொருள்களும் இல்லை. பிள்ளைகளுக்கும் எளிமையாக வாழக் கற்பித்தனர்.
ஆய்வுகள் வேலுமணி, தனது பணிகளின் ஊடே தைராய்டு தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் இந்தியா தைராய்டு பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வந்தது. அதை உள்நாட்டில் தயாரிப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வது அவரது நோக்கமாக இருந்தது. அந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் தைராய்டு பரிசோதனைகளைச் செய்ய முடியும் என்பதை கண்டுகொண்டார். அதற்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்க எண்ணினார்.
தைரோகேர் வேலுமணி, நல்ல வருவாய் வந்து கொண்டிருந்த, மத்திய அரசுப் பணியிலிருந்து விலகினர். தனது அனுபவத்தையும், கல்வியையும் கொண்டு, 1996ல் அவரது 37ம் வயதில் சொந்த தைராய்டு பரிசோதனை ஆய்வகமான 'தைரோகேர்' நிறுவனத்தைத் தொடங்கினார் வேலுமணி. வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து, தைராய்டு கோளாறுகளைக் கண்டறிவதற்காக மும்பையின் பைகுல்லாவில் அம்மையத்தை அமைத்தார். மனைவி சுமதி அதற்குத் துணை நின்றார். ஏழைகளுக்குத் தைராய்டு பரிசோதனையை மலிவு விலையில் வழங்குவதும், சந்தையில் புழங்கும் கட்டணத்தில் ஒரு பகுதியில் சேவைகளை வழங்குவதும் அவரது நோக்கமாக இருந்தது. எனவே மலிவு விலையில் பரிசோதனைச் சேவைகளை வழங்கினார். மக்களிடம் ரத்த மாதிரிகளை வெவ்வேறு நிலையங்களில் பெற்று, அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பரிசோதிக்கச் செய்வதே வேலுமணியின் திட்டம்.

தைரோகேர் நிறுவனம் தைராய்டு பிரச்சனைகளுக்கான பரிசோதனையிலிருந்து தடுப்பு மருத்துவப் பரிசோதனைகள் வரை பலவகை ரத்தப் பரிசோதனைகள் நடத்தும் ஆய்வகமாக விரிவடைந்தது. பகலில் ரத்த மாதிரிகளைச் சேகரிப்பது, இரவில் அவற்றைப் பரிசோதிப்பது, மறுநாள் காலையில் பரிசோதனை முடிவை விநியோகிப்பது. இந்தப் புதிய அணுகுமுறை தைரோகேர் நிறுவனத்தை தனித்துவப்படுத்தி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றது.
வளர்ச்சி வேலுமணியின் விடாமுயற்சியும் கடும் உழைப்பும் நாளடைவில் தைரோகேர் நிறுவனத்தை நாடறிந்த நிறுவனமாக உயர்த்தியது. தைரோகேர் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1000-க்கும் மேற்பட்ட கிளைகளோடு மிகப்பெரிய தைராய்டு பரிசோதனை மையமாக வளர்ந்தது. சிறந்த தரம் மற்றும் குறைந்த விலையில், நாடு தழுவிய கிளைகள் கொண்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக உயர்ந்தது.
நியூக்ளியர் ஹெல்த்கேர் வேலுமணி, மகாராஷ்டிரத்தின் நவி மும்பையில் தனது பிரதான கிளையைக் கொண்ட நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட் என்ற கதிரியக்க நோயறிதல் நிறுவனத்தை, 2011-ல் தொடங்கினார். இந்நிறுவனம், சேவை வழங்குநர்களின் கட்டணத்தில் பாதியளவு செலவில் புற்றுநோய் தொடர்பான இமேஜிங் சேவைகளை வழங்குகிறது.
மனைவியின் பிரிவு வேலுமணி பிப்ரவரி 2016-ல், கணையப் புற்றுநோய் பாதிப்பால் தனது மனைவியை இழந்தார். மனச்சோர்வுக்கு ஆளானாலும் அதிலிருந்து விரைவிலேயே மீண்டு, தொழிலில் கவனம் செலுத்தினார்,
பங்குச்சந்தையில்… வேலுமணி மே 2016-ல் தைரோகேர் நிறுவனத்தை தேசிய பங்குச் சந்தையில், சாதனை அளவாக 74 மடங்கு அதிகப் பங்குவிலையில் பட்டியலிட்டார். நிறுவனம் மேலும் உயர்ந்தது. இந்தியாவின் மிக முக்கிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. 1 பில்லியன் டாலர் நிறுவன அந்தஸ்தை அடைந்தது. 2020ல், தைரோகேர் ரூ.474 கோடி வருவாயையும் ரூ.119.7 கோடி லாபத்தையும் ஈட்டி, இந்தியாவில் சுகாதார நோயறிதல் துறையில் மிகவும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. சாதாரண குடும்பப் பின்புலத்திலிருந்து வந்த ஒருவர், ரூ. 2 லட்சம் முதலீட்டில் தொடங்கிய நிறுவனம், 25 ஆண்டுகளில் ₹5,000 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றியது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது.
மனைவி சுமதி மீது மாறா அன்பு கொண்டிருந்தார் வேலுமணி. தன் மனைவி குறித்து மிக உருக்கமாகப் பின்வருமாறு கூறியுள்ளார்.
"11 வயது முதல் 27 வயதுவரை, அதாவது எனக்குத் திருமணம் ஆகும் வரை, நான்தான் என் குடும்பத்தின் தலைவனாக இருந்தேன். பிறகு அவள் பொறுப்பேற்றுக்கொண்டு, குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் முன்னேறுவதை உறுதி செய்தாள். அவள் என்னைவிட முன் தூங்கியதும் இல்லை, என்னைவிடப் பின் எழுந்ததும் இல்லை. அவளிடம் கலந்து ஆலோசிக்காமலே, அரசு வேலையைத் துறந்து நான் தொழிலைத் தொடங்கியபோது, அவள் தன் அடையாளத்தைத் தியாகம் செய்து, என் வெற்றி மற்றும் மகிழ்ச்சியில் கவனம் செலுத்தினாள்.
அவள்தான், என்னை முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெறச் செய்தாள்.
என்னை ஒரு விஞ்ஞானியாகவும், தொழில்முனைவோராகவும், கதைசொல்லியாகவும் மாற்றினாள்.
எனக்கு இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளைக் கற்றுக்கொடுத்தாள்.
நான் நேரம் ஒதுக்காதபோதிலும், எங்கள் இரண்டு குழந்தைகளையும் சிக்கனமாகவும் திறமையாகவும் வளர்த்தாள்.
அவள்தான் என் தூதுவராகவும், எனக்கு மிகப்பெரிய ரசிகையாகவும் இருந்தாள்.
துரதிர்ஷ்டவசமாக, அவள் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பிப்ரவரி 2016-ல் திடீரென்று என்னை விட்டுப் பிரிந்து சென்றாள். நான் தொழிலில் நுழைவதற்கும், அதிலிருந்து வெளியேறுவதற்கும் அவள்தான் காரணம். நாங்கள் 30 ஆண்டுகள் மிகுந்த தீவிரத்துடன் வாழ்ந்தோம்."
விற்பனை அவருக்குப் பின் அவரது பிள்ளைகள் தைரோகேர் நிறுவனத்தில் பங்குதாரர்களாகத் தொடர விரும்பாததால், நிறுவனத்தை நடத்துவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லாததால், வேலுமணி தைரோகேர் நிறுவனத்தை விற்க முடிவு செய்தார்.
ஜூன் 2021ல், வேலுமணி இந்திய ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முன்னோடியான தைரோகேரில் தனது 66% பங்குகளை ஃபார்ம்ஈஸியின் (PharmEasy) தாய் நிறுவனமான ஏபிஐ ஹோல்டிங்ஸுக்கு ரூ.4,546 கோடிக்கு விற்பனை செய்தார். ஏபிஐ ஹோல்டிங்ஸில் 4.9% பங்குகளை வைத்துக் கொண்டார். இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் வாங்கிய முதல் நிகழ்வுகளில் ஒன்றாக இது அமைந்தது.
அதை விற்றதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, வேலுமணி புதிய முயற்சிகளில் ஈடுபட்டார். ஏஞ்சல் முதலீட்டாளராக முதலீடு செய்வதில் கவனம் செலுத்தினார். சில ஸ்டார்ட் அப் நிறுவங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்தார். என்றாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து தொழில்சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டார்.
தற்போதைய முயற்சிகள் ஏ. வேலுமணி ஏ.வி.எம். ஆய்வக நிறுவனத்தின் நிறுவனர். மேலாண்மை இயக்குநராகவும் வழிகாட்டியாகவும் (Mentor) செயல்பட்டு வருகிறார். டாக்டர் குணால் ஷெட் மற்றும் டாக்டர் ரித்தி ரதி ஷெட் ஆகியோரால் வழிநடத்தப்படும் ஓர் அடுத்த தலைமுறைப் பல் மருத்துவ நிறுவனமான ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.
சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நிதி திரட்டுவதற்காகக் கட்டண உரைகள் நிகழ்த்தி வருகிறார். வளரும் தொழில்முனைவோருக்கான வழிகாட்டியாக, ஆலோசகராக, வழி நடத்துநராகச் செயல்பட்டு வருகிறார். தொழில் முனைவோர்களுக்காகவும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காகவும், தொழில் ஆர்வமுள்ள இளையோருக்காகவும், முதலீட்டாளர்களுக்காகவும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் நேரலை உரைகள், பாட்காஸ்ட்கள் மற்றும் நேர்காணல்கள் வழங்கி வருகிறார். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.
டாக்டர் ஏ. வேலுமணியின் வலைத்தளம் | லிங்க்டின் பக்கம் |