|
| பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா: இரு கால் எடுத்து நடக்கும் அன்பு! |
   |
- மதுரபாரதி | நவம்பர் 2025 |![]() |
|
|
|
|
 |
அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஃப்ரான்க் பாரனோவ்ஸ்கி (Dr. Frank Baranowski) பேச எழுந்தார். "நான் 6000 மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றைக்கு முதல்முறையாக என் கால்கள் நடுங்குகின்றன. ஏன் என்றால், பாபா தன்னை என்னவெனச் சொல்லிக் கொள்கிறாரோ, அதுவாகவே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பார்த்தார். இது நடந்த வருடம் 1979, இடம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம்.
பாபா, "என் பெயர் சத்யம், என் உருவம் பிரேமை" என்று சொல்வார். அதைத்தான் பார்னோவ்ஸ்கி குறிப்பிட்டார். "பாபாவை நான் இப்படி வர்ணிப்பேன்: 'இரண்டு கால்களில் நடக்கும் அன்பு' என்று".
பாரனோவ்ஸ்கிக்கு ஒரு விசேடத் திறமை இருந்தது. பொதுவாக தெய்வங்கள், மகான்களின் படங்களில் அவர்களது தலையைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் (aura) இருக்கும். உண்மையிலேயே ஒவ்வொரு மனிதரைச் சுற்றியும் இந்த ஒளிவட்டம் இருக்கிறதென அறிவியல் கூறுகிறது. பாரனோவ்ஸ்கியின் விசேடத் திறன் என்னவென்றால் அவரால் வெறும் கண்களாலேயே அதைப் பார்க்க முடிந்தது. அதைப் புகைப்படம் எடுக்க அவர் கிர்லியன் படக்கருவி (Kirlian photography) ஒன்றையும் அவர் படைத்திருந்தார்.
அடிவானம் தொட்ட அன்பின் ஒளி அவர், "நான் நூற்றுக் கணக்கான மகான்களையும் தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்களைச் சுற்றி 25 செ.மீ. அல்லது அதிகபட்சம் 50 செ.மீ. வரை ஒளிவீச்சு இருக்கும். நான் பாபாவின் பக்தனல்ல. இரண்டு வாரங்களாக அவரை கவனித்து வருகிறேன். ஞாயிறன்று பால்கனியிலிருந்து அவர் கீழே இருந்த பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தபோது, ஒரு சராசரி மனிதனுக்கு இருப்பதைப் போல இரண்டு மடங்கு வெண்ணிற ஒளி வீசியது. நீலநிறமோ கணக்கற்றுப் பரவியிருந்தது. அதில் தங்கநிற வெள்ளிநிறச் சரிகைகள் இந்தக் கட்டடத்தைத் தாண்டி, அடிவானம்வரை வீசிப் பரவியதைக் கண்டேன். இதற்கு எந்தவித அறிவியல் விளக்கமும் கிடையாது" என்றார். அதுதான் அவரது கால்கள் நடுங்கக் காரணம். பாபா பக்தர்களிடம் நின்று பேசியபோது அன்பின் அடையாளமான ரோஜாநிறக் கதிர் வீசி, அவர்களை முழுகடித்ததை பாரனோவ்ஸ்கி கண்டு சொல்லியிருக்கிறார்.
இரண்டு காலெடுத்து நடக்கும் அன்பு என்று அவர் வர்ணித்தது மிகச் சரி. புட்டபர்த்தியிலும் பெங்களூரிலும் (ஒய்ட்ஃபீல்டு) அவர் நிர்மாணித்த சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகள் (Sri Sathya Sai Institute for Higher Medical Sciences) இன்றும் வேறுபாடின்றி எல்லோருக்கும் அதிநவீன மருத்துவ சிகிச்சையை (நோய் கண்டறிதல் தொடங்கி, அறுவைசிகிச்சை வரை) இலவசமாக வழங்கி வருகின்றன. புட்டபர்த்தியில் மருத்துவ மனையைப் பார்த்துவிட்டு, திரு ரத்தன் டாட்டா, "இதற்கு இணையாக அமெரிக்காவின் மேயோ கிளினிக்கைச் சொல்லலாம். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு, இங்கே பணம் வாங்குமிடம் (cash counter) கிடையாது!" என்று வியந்து பேசினார்.
 ரத்தன் டாட்டாவும் பாபாவும்
தவிர, புட்டபர்த்தியில் பள்ளிக் கல்வி தொடங்கி Ph.D. வரை கற்பதற்கான கல்வி நிலையங்கள் வரை சுவாமி ஏற்படுத்தியுள்ளார். இங்குள்ள ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிலையம் (Sri Sathya Sai Institute of Higher Learning) தேசிய அளவில் மிக உயர்ந்ததான A++ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. சுவாமி 1981ல் அனந்தபூரில் தொடங்கிய மகளிர் கல்லூரியும் SSSIHL-ன் கீழ் வருகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மருத்துவம், கல்வி ஆகியவற்றைப் பாகுபாடின்றி இலவசமாகத் தருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
உலகோரின் ஒருமித்த அன்பையும் மரியாதையும் பெற்றிருந்த அன்றைய இந்திய ஜனாதிபதி டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள் பகவானிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தார். பகவான் கல்லூரி பட்டமளிப்பு விழா போன்றவற்றுக்கு அவர் அழைக்கப்பட்டார். சுவாமியும் அவர்மீது மிகுந்த அன்பு காட்டினார்.
 பெருக்கெடுக்கும் சத்ய சாயி கங்கை
சுவாமியின் மிகப்பெரிய அற்புதம் அற்புதங்கள் சுவாமியின் இயல்பாகவே இருந்தன. அன்னை ஈஸ்வரம்மாவின் கருவில் இருந்த காலத்தில், நள்ளிரவில், வீட்டில் இருந்த தம்பூராவும் மத்தளமும் தாமாகவே இசைக்கத் தொடங்கின என்பதில் தொடங்கி, அமெரிக்கா உட்படத் தொலைதூர நாடுகளில் உள்ள பக்தர் வீட்டுப் படங்களில் விபூதி, குங்குமம், அமிர்தம் போன்றவை பொங்கிப் பெருகுவது உட்பட அவர் செய்த, செய்து வருகின்ற அற்புதங்களுக்கு முடிவே கிடையாது. ஆனாலும் "மனிதர்களை உயர்மாற்றம் செய்வதே நான் செய்யும் மிகப்பெரிய அற்புதம்" என்று சுவாமி கூறியிருப்பது முற்றிலும் உண்மை. நாத்திகர்கள், பக்தி இருந்தும் அவரை வெறுத்தவர்கள், பெரிய குற்றம் செய்தவர்கள் எனப் பல்வேறு வகையினரும் அவரது அன்புக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களைக் கண்டுள்ளனர்.
ஐ.நா. அளித்த அங்கீகாரம் உலகெங்கிலும் 160 நாடுகளுக்கு மேல் ஸ்ரீ சத்ய சாயி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவை இயங்கும் இடங்களில் எல்லாம் ஆன்மிகம், கல்வி, மருத்துவம், வறியோர்க்கு உதவுதல் போன்ற சமூக சேவைகளைத் தன்னலமின்றி நடத்தி வருகின்றன. இதனை அங்கீகரிக்கும் விதமாக 2020ல், United Nations Economic and Social Council (ECOSOC), ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளைக்குச் சிறப்பு ஆலோசனை நிறுவனம் என்கிற அந்தஸ்தை வழங்கியது. சாயி நிறுவனங்கள், பகவான் கடைப்பிடித்த அணுகுமுறைப்படி, என்றைக்கும் விளம்பரம், விருது, பாராட்டு போன்ற வலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து பணி செய்து வருவது குறிப்பிடத் தக்கது.
 ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிலைய நிர்வாகக் கட்டடம்
பக்தரல்லாத டாக்டர் பாரனோவ்ஸ்கி "இவர் இரு காலெடுத்து நடக்கும் அன்பு" என்று குறிப்பிட்டதில் ஆச்சரியமில்லை. அவரது அன்பைப் பல ஆண்டுகளாகச் சுவைக்கவும், அதைப் பல்வேறு வழிகளில் மக்களிடையே கொண்டு செல்லவுமான பெரும்பேற்றை இந்தக் கட்டுரை ஆசிரியர் பெற்றிருக்கிறார். வரும் நாட்களில் அவற்றைக் குறித்தும் இன்னும் எழுதுவோம்.
பகவானின் அவதார நூற்றாண்டை உலகம் கொண்டாடும் இந்தத் தருணத்தில் என் மனதை நிரப்புவது போல, இதைப் படிக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் நிரப்பட்டும் என்று கலியுக அவதாரமான பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
 அன்னை ஈஸ்வரம்மாவும் பாபாவும்
சத்ய சாயியின் அன்புக் கோட்பாடு அவரது அன்பு ஜாதி, மதம், நாடு, இனம் என்கிற வேறுபாடுகளைக் கடந்தது. இருப்பது ஒரே மதம் - அன்பெனும் மதம் இருப்பது ஒரே ஜாதி - மானுட ஜாதி இருப்பது ஒரே மொழி - இதயத்தின் மொழி இருப்பது ஒரே கடவுள் - அவர் எங்குமிருக்கிறார்
என்று உலகுக்கு அறிவித்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா.- மதுரபாரதி
சென்னைக்கு வந்த சத்ய சாயி கங்கை ஜூலை 2002ல் பாபா விரும்பியபடி, ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளை ஆந்திராவின் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதற்கான வேலைகளைத் தொடங்கியது. முதலில் கண்டலேறு நீர்த்தேக்கத்தின் அளவு நான்கு மடங்குக்கு மேல் பெரிதாக்கப்பட்டது. கால்வாயின் இரு பக்கச் சுவர்களை பலப்படுத்தினர். பூண்டிக்கும் கண்டலேறுவுக்கும் இடையே உள்ள தூரம் 154 கி.மீ. இதில் சிதிலமடைந்திருந்த 65 கி.மீ. தூரத்தை தண்ணீர் ஓடக்கூடியதாக, சரியான சரிவுள்ளதாகச் செய்து, அதன்பின் 100 மில்லிமீட்டர் கனமான கான்கிரீட் கால்வாயிலும் அதன் சுவர்களிலும் போடப்பட்டது. 24 மணி நேரமும் வேலை நடந்தது. 4000 பேர் வேலை செய்து பதினாறே மாதங்களில் பணி முடிக்கப்பட்டது. ஆந்திர அரசு நன்றி தெரிவிக்கும் முகமாக 'தெலுகு கங்கா' என்றிருந்த பெயரை 'சத்ய சாயி கங்கா' என்று மாற்றியது.
2004 நவம்பர் மாதம் 23-ம்தேதி கண்டலேறு திறக்கப்பட்டது. 8-10 நாள் கழித்தே வந்தடையும் நீர் இப்போது நான்கே நாட்களில் தமிழ்நாடு எல்லைக்கு வந்து சேர்ந்தது. டிசம்பர் 11ம் தேதி சென்னை பக்தர்கள் தங்கள் துயரத்திற்கு விமோசனம் அருளியவரிடம் நன்றியை நேராகக் கூற பர்த்தி சென்றிருந்தனர். "மதராசுக்கு தண்ணீர் வந்தாச்சா?" என்று கேட்டு "ஆமாம்" என்ற பதிலைப் பெற்றதும் ஆயிரம் அன்னையரின் மகிழ்ச்சி அவரது முகத்தில் ஒளிர்ந்தது. பகவான் 2007ல் சென்னைக்கு வந்திருந்த போது அங்கு மக்களும் உயர்பதவி வகிப்பவர்களும் பல மாநில முதல்வர்களும் சேர்ந்து ஜனவரி 21ம் தேதி 8000 பேர் அம்ர்ந்திருந்த நேரு ஸ்டேடியத்தில் ஒரு மகத்தான விழாவில் பகவானை கௌரவித்து நன்றி தெரிவித்தனர். இதில் தமிழக முதல்வர் டாக்டர் கருணாநிதி பகவானின் பல்வேறு சேவைகளைப் பாராட்டி சென்னையின் தண்ணீர்க் கஷ்டத்தைத் தீர்த்ததற்கு நன்றி தெரிவித்தார். - மதுரபாரதி |
|
|
| மதுரபாரதி |
|
|
|
|
|
|
|
|
|
|