Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
கவிஞர் தங்கம் மூர்த்தி
- அரவிந்த்|அக்டோபர் 2025|
Share:
கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளைப் படைப்பவர்' எனப் போற்றப்படுபவர். கவியரங்குகளில் 'சுழலும் கவியரங்கம்' என்ற புதுமையைத் தந்தவர். புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர். கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், சமூக சேவகர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் சாதனைகளை நிகழ்த்தி வருபவர். ஹைக்கூ, கவிதை, கட்டுரை எனத் தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு கவியரங்குகளில் கவிதைகள் வழங்கி வருபவர். ஓய்வறியாத உழைப்பாளியாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரது வாழ்க்கைத் துளிகள் இங்கே.

பிறப்பு, கல்வி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர் அறந்தாங்கி. அங்குள்ள சுப்பிரமணியபுரம் என்ற சிற்றூரில், டாக்டர். திரு கே.கே. தங்கம், திருமதி ஜெயலெட்சுமி தம்பதியருக்கு, ஆகஸ்ட் 19, 1964 நாளன்று மகனாகப் பிறந்தார் மூர்த்தி என்பது இயற்பெயர். தங்கம் மூர்த்திக்கு நான்கு சகோதரர்கள். ஒரு சகோதரி. குமார், நாகராஜன், செல்வராஜன், ராமு மற்றும் மகாலெட்சுமி. மூர்த்தி, இளவயது முதலே கவிதை ஆர்வமும் இலக்கிய ஆர்வமும் கொண்டிருந்தார். அறந்தாங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்புவரை படித்தார். மேல்நிலை வகுப்பு பயிலும்போதே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். 'மழை நேரத்து மரங்கள்' என்னும் தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் வாசித்த கவிதை பாராட்டைப் பெற்றது. பள்ளிக் கல்விக்குப்பின் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அங்கு பேராசிரியராகப் பணியாற்றிய இரா. பாலச்சந்திரன் என்னும் பாலா, தங்கம் மூர்த்தியின் திறமையை அறிந்து ஊக்கப்படுத்தினார். அவரால் உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரையிலான அறிமுகம் ஏற்பட்டது. இளங்கலை பட்டத்தைத் தொடர்ந்து, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட். பட்டங்கள் பெற்றார்.



முதல் கவியரங்கம்
கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அறந்தாங்கியில் 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற பொன்னீலன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் தங்கம் மூர்த்தி கவிதை வாசித்தார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல கவியரங்குகளில் பங்கேற்றார். கவிக்கோ அப்துல் ரகுமான், மு. மேத்தா, பேராசிரியர் அப்துல் காதர் போன்றோரின் தலைமையில் பாடிய தங்கம் மூர்த்தி, நாளடைவில் தாமும் பல கவியரங்கங்களுக்குத் தலைமையேற்றார். தாயகத்தைத் தாண்டிப் பல்வேறு நாடுகளில் கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றார், இலக்கிய விழாக்களில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

புகழ் வெளிச்சம் பாய தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு, பல கவியரங்குகளில் கலந்துகொண்டார். டெல்லி, பெங்களூரு, கல்கத்தா, ஹரித்துவார், எர்ணாகுளம், அஸ்ஸாம் போன்ற பல இடங்களுக்கும் சென்று இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.

முதல் நூல்
தங்கம் மூர்த்தியின் முதல் நூல் ஒரு ஹைக்கூக் கவிதைத் தொகுப்பு. பெயர், 'முதலில் பூத்த ரோஜா'. 1994ம் ஆண்டில் மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதில் வெளிவந்த பல கவிதைகள் சக கவிஞர்களாலும், வாசகர்களாலும் பாராட்டப்பட்டன. தொடர்ந்து நான்கு பதிப்புகள் வெளியாகி அந்நூல் நல்ல வரவேற்பைப் பெற்றது.



இலக்கியச் செயல்பாடுகள்
தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையைத் தொடங்கி, அதன் மாவட்டச் செயலராகப் பணியாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். த.மு.எ.க.ச-வின் நகரத் தலைவராகப் பணியாற்றினார். பல இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவித்தார். மாவட்டக் குழு உள்ளிட்ட பொறுப்புகளில் அங்கம் வகித்தார். கலை இரவு மேடைகளிலும், கம்பன் விழாக்களிலும் கவியரங்கத் தலைமையேற்று உரையாற்றினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கச் சார்பில் 200 கவிஞர்களைக் கொண்டு ஒரே இடத்தில் ஒரே நாளில் புதுக்கோட்டையில் கவிதை பாட வைத்தார்.

சாகித்ய அகாடெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை பணியாற்றினார். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறக்கப்பட்ட பலரை பல நிகழ்வுகள் மூலம் நினைவுக்குக் கொண்டுவந்தார். கவியரங்கம், கருத்தரங்கங்களைப் பள்ளி, கல்லூரிகளின் உதவியோடு பல நகரங்களில் நடத்தினார்.



நூல்கள்
தங்கம் மூர்த்தி பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. 'கவிதை நெடுஞ்சாலை' என்னும் இவரது தொடர் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவரது ஹைக்கூ நூலிலிருந்து சில கவிதைகள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 'நவீன இலக்கியங்கள்' என்ற வகைப்பாட்டில் பாடநூலாக வைக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பாடத்திட்டம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய 'கல்வி கரையினிலே' என்ற கட்டுரை நூல் இவரின் கல்விச் சிந்தனைக்குக் கிடைத்த அங்கீகாரமாக ஐம்பதாயிரம் பிரதிக்கு மேல் விற்பனையானது.

இவரது கவிதைகளைக் குறித்துப் பல மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். பேராசிரியர் முனைவர் செ. ரவிசங்கர், தங்கம் மூர்த்தியின் 2 படைப்புகளை முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்ததோடு, தனி நூலாகவும் வெளியிட்டார். புதுக்கோட்டை ஸ்ரீசுபபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியை முனைவர் க. உஷாநந்தினி தங்கம் மூர்த்தியின் கவிதைகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தங்கம் மூர்த்தியின் ஹைக்கூ கவிதைகளான 'மழையின் கையெழுத்து, 'Sign of Rain' என்ற ஆங்கில மொழியாக்க நூலாகவும் வெளியாகியுள்ளது. இயக்குநர் முரளி அப்பாஸின் இயக்கத்தில் வெளியான 'சொல்லச்சொல்ல இனிக்கும்' திரைப்படத்தில் பாடலொன்றையும் எழுதியுள்ளார்.



பொறுப்பு
பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவைச் செயலாளர், பேலஸ் சிட்டி சுழற்சங்கத் தலைவர், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், கலை இலக்கிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். புதுக்கோட்டை புத்தகக் காட்சிப் பணிகளில் முன் நின்றார். புதுக்கோட்டை நூலக வாசகர் வட்டத் தலைவராகப் பணியாற்றினார்.

குடும்ப வாழ்க்கை
தங்கம் மூர்த்தியின் மனைவி திருமதி அஞ்சலி தேவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரு மகள்கள்.

தங்கம் மூர்த்தி எழுதிய நூல்கள்
* முதலில் பூத்த ரோஜா, ஹைக்கூ கவிதைகள்
* தங்கம் மூர்த்தி கவிதைகள்
* பொய்யெனப் பெய்யும் மழை
* என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து
* கல்வி கரையில, கல்வி பற்றிய கவிதைகள்
* கவிதை வெளியினிலே
* மழையின் கையெழுத்து
* கவிதையில் நனைந்த காற்று
* ஹைக்கூ 100, மேன்மை வெளியிடு
* தேவதைகளால் தேடப்படுபவன்
* அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்
* கூடு திரும்புதல் எளிதன்று


பள்ளி
தங்கம் மூர்த்தி புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்ற கல்விக் கூடமொன்றை நிறுவினார். இவரது பள்ளியின் சிறப்பு, குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றல் என்பது. பலவிதமான கற்றல் கற்பித்தல் களங்களையும், கற்றல் சூழல்களையும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் உருவாக்கித் தந்து வருகிறார். பல்வேறு விழாக்களை நடத்தியும், போட்டிகளை வைத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார். அமைதியான சூழலில் மாணவர்கள் கற்கும் வகையில் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளார். குறிப்பாகப் பள்ளி இறுதி மற்றும் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவர்கள் மன அழுத்தமின்றிப் பயிலும் வகையில் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

இலக்கியம் மற்றும் கல்வியியலில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி, மென்மேலும் பல சாதனைகளை நிகழ்த்துமளவிற்குத் தம் மாணவர்களை உருவாக்கி வருகிறார்.
தங்கம் மூர்த்தி பெற்ற விருதுகள்:
* கவிக்கோ விருது
* செல்வன் காக்கி விருது
* கவிஞர் சிற்பி விருது
* 'கவிதை உறவு' வழங்கிய விக்கிரமன் விருது
* காரைக்குடி தமிழ்த்தாய் அறக்கட்டளை விருது
* 'பெஸ்ட் மேன் ஆப் பொயட்ரி அப்ரோச்சஸ் அவார்டு'
* சாதனையாளர் விருது
* சிறந்த சமூக சேவகர் விருது
* புதுக்கோட்டை இலக்கியப்பேரவை வழங்கிய பட்டம் "மக்கள் நல கவிஞர்"
* புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் பல்கலை வித்தகர் விருது
* மலேசியத் தமிழ் மணிமன்றம் தந்த 'இலக்கியத் தங்கம்' விருது
* தேசிய நல்லாசிரியர் விருது
* மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
* தமிழக முதலமைச்சர் அவர்களால் "தமிழ்ச் செம்மல்" விருது
* தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது - "தேவதைகளால் தேடப்படுபவன்"
* கவிமுகில் அறக்கட்டளையின் விருது – "தேவதைகளால் தேடப்படுபவன்" நூலுக்காக.
* புது டில்லி எஜிகேஷன்ஸ் ப்ளஸ் பத்திரிக்கையும் ஹைப்எட்ஜ் நிறுவனமும் இணைந்து வழங்கிய 'நேஷனல் எஜுகேஷன் பிரில்லியன்ஸ் விருது"



தங்கம் மூர்த்தி கவிதைகள்

ஹைக்கூ
மகளிர் கல்லூரி
மரத்தடியிலும் பூக்கள்
வாசலில் வண்டுகள்
*
துடைக்கத் துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய்
*
விழிகளில் ஊதி தூசி எடுத்தாய்
தூசி வெளியேற
உள்ளே நீ


★★★★★


என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து
ஒவ்வொரு
பண்டிகையிலும்
அப்பா
குதூகலமாய் இருப்பார்.

தனித்தனி
கூடுகளிருப்பவர்கள்
தாய்க் கூட்டிற்கு
வருவதை எதிர்பார்த்து
வாஞ்சையோடு
வாசலில் நிற்பார்.

ஒன்றாய் அமர்ந்து
உண்ணும் போது
உற்சாகமாயிருப்பார்

பிள்ளைகள்
புத்தாடை அணிந்து
பவனி வருவதை
பெருமையோடு பார்ப்பார்

குடும்ப மாநாட்டுத்
தலைமையேற்று
குழந்தையைப் போல்
துள்ளுவார்

சாதாரண நகைச்சுவைக்கும்
சத்தம் போட்டு சிரிப்பார்

பெரிய குறும்புகளைக் கூட
பொறுமையோடு ரசிப்பார்

கார் வாங்கிய
சேதி சொன்னால்
கர்வத்தோடு
அம்மாவை பார்ப்பார்

பாசத்தில் நனைத்த
வார்த்தைகளால்
பக்குவமாய் அறிவுரைப்பார்

இந்த நாள்
நீளாதா என்று ஏங்குவார்

அடுத்த பண்டிகை வரை
அந்த நாளைப் பற்றியே
அம்மாவிடம் பேசுவார்

அப்பாவை நினைத்தபடி
வாசல்படியில்
அமர்ந்திருந்தேன் -

என்
பிள்ளைகள் வருகைக்காக.


★★★★★


அந்த மரணம் அறிவிக்கப்படவில்லை
"துக்கச் செய்தி
மரண அறிவிப்பு"

அதிகாலையில்
ஆட்டோவில் கேட்கும்
அவனது குரல்.

அந்தக் குரல் வழியேதான்
அறிய முடியும்
எல்லா மரணத்தையும்.

எந்த மரணமும்
உறவினர்களுக்கு முன்பே
அவனுக்குத்தான் சொல்லப்படும்.

மெலிந்த உடலும் அழுக்கு ஆடையும்
தாடியுமாய்
ஆட்டோவில் ஒரு மூலையில்
ஒடுங்கி உட்கார்ந்திருப்பான்
மைக்கைப் பிடித்தபடி.

காற்றில் பரவும்
அவனது குரலில்
ஒரு கம்பீரம் இருக்கும்.

நின்று நிறுத்தி
நிதானமாய் அறிவிக்கும்
அவனை
அலட்சியப்படுத்தி யாரும்
கடந்துவிட முடியாது.

இறந்தவரின் குடும்பம்
பரம்பரை
இத்யாதி
இறுதி ஊர்வலம்
நல்லடக்கம்
அனைத்தையும்
கச்சிதமாய்ச் சொல்லி
கவனத்தை ஈர்ப்பான்.

என்னைக் கண்டால்
டீ வாங்கிக் கேட்பான்.

எப்படிப் போகிறது
வாழ்க்கை
எனக் கேட்பேன்.

யாரோ செத்து
நான் பிழைக்கிறேன்
என்று சிரிப்பான்.

வேறொரு நாளில்
மற்றொரு மரண அறிவிப்பில்
புதுக்குரல் கேட்டு
ஆட்டோவை எட்டிப் பார்த்தால்
அவனிருக்கவில்லை.

வீடு கண்டுபிடித்து
விசாரித்தேன்.

அழுதுகொண்டே அறிவித்தாள்
அந்த வயதான தாய்.

"ஈரல் கெட்டுப்போச்சு
தொண்டையில புண்ணு
படுத்த படுக்கை
போய்ச் சேர்ந்துட்டான்.

எல்லார் சாவையும் சொல்ல
இவன் ஒரு ஆளா இருந்தான்.

இவன் சாவைச் சொல்ல
ஒரு ஆளும் இல்லையே..!"

திரும்பி வரும் வழியெங்கும்
அவனது குரல்
ஒலித்துக்கொண்டேயிருந்தது

அவனது மரணத்தை
அவனே அறிவிப்பதைப் போல.


★★★★★


நிலவுகள்
மெல்ல இருட்டும்
இவ்வேளையில்
உன் நினைவுகள்
ஒரு
நிலவைப்போல்
மேலெழுந்து
குளிர்ந்து ஒளிர்கின்றன

நிலவின் ஒளி
மெல்லடி வைத்துப்
படர்கையில்

இருள்
நழுவி விலகி
நிலவுக்குப்
பாதையமைக்கிறது

குளிர்ந்த ஒளி
மழையெனப் பொழிந்து
என்னை
முழுவதும்
நனைத்திருந்தது

அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்
*
நடைபாதையில் கிடந்த
சிறு மலரொன்றை
மிதிபடக் கூடாதென
கையிலெடுத்துப் போன
குழந்தையிடத்தில்
தன் வாசனை முழுவதையும்
பரவவிட்டது
மலர்


அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline