Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
புற்றுநோய்க் கழக அறக்கட்டளைக்காக (CIF) 'விவேகானந்தர்'
- நித்யவதி சுந்தரேஷ்|ஏப்ரல் 2025|
Share:
நரேந்திரன் என்ற துடிப்புள்ள இளைஞன், வீரத்துறவி விவேகானந்தராக அமெரிக்க மண்ணில் வந்து பேசிய முதல் பேச்சிலேயே கருத்துச் செறிவாலும் தத்துவ ஆழத்தாலும் ஞானப் பெருக்காலும் அமெரிக்கர்களைக் கவர்ந்தார். அவரை 'இந்தியப் புயல்', 'சூறாவளித் துறவி' என்றெல்லாம் வர்ணித்து மகிழ்ந்தன அமெரிக்க நாளிதழ்கள். அதையும் இன்னும் பலவற்றையும் புல்லரிக்கும் விதமாகச் சொல்கிறது கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷனுக்கு நிதி திரட்டும் முகமாக பாகீரதி சேஷப்பன் மேடைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'விவேகானந்தர்' நாடகம்.



1893ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமயப் பேரவையில் இந்து சமயம் குறித்துப் பேசச்சென்ற சுவாமி விவேகானந்தர் "சகோதரிகளே, சகோதரர்களே" என்று தொடங்கிய மாத்திரத்திலேயே வந்திருந்தோர் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர். தமது மறக்கவொண்ணாத உரையால், வேதாந்த நெறிகளை உலகறியச் செய்தார். பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் அவர் பேச அழைக்கப்பட்டார். 1930கள் வரை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிறுவப்பட்ட பெரும்பாலான வேதாந்த சங்கங்கள் விவேகானந்தராலோ அல்லது 1893 முதல் 1900வரை அவரது உரைகளைக் கேட்ட அன்பர்களாலோ தொடங்கப்பட்டவையே.

சமூக ஊடகங்கள், ஏன், இணையம்கூட இல்லாத காலகட்டத்தில் கடல்கடந்து சென்று தன் குரு ராமகிருஷ்ண பரமஹம்சருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, பல்வேறு இடையூறுகளையும் வென்று நின்ற ஓர் இமயம் சுவாமி விவேகானந்தர்.



விவேகானந்தரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், சந்தித்த மனிதர்கள் ஆகியவற்றைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது கலிபோர்னியா விரிகுடாப்பகுதியில் அரங்கேறிய "விவேகானந்தர்" நாடகம். கேஸ்ட்ரோ வேல்லியின் (Castro valley center for the arts) அரங்கத்தில் 29 மார்ச் 2025 அன்று மேடை ஏறிய இந்த அருமையான நாடகம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததில் வியப்பில்லை..

சென்ற ஆண்டு ரமண மகரிஷி நாடகத்தை வெற்றிகரமாக நடத்திய பாகீரதி சேஷப்பன்தான் இந்த நாடகத்தையும் எழுதி, இயக்கினார். விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த பலரை நாடகத்தில் இணைத்து, உடன் இயக்கியதுடன் மேடையை நிர்வகித்த பெருமை வேணு சுப்ரமணியம் அவர்களைச் சாரும். கதையின் நீளம், முக்கியச் சம்பவங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு மூவரை விவேகானந்தராக நடிக்க வைத்தும் ஒருவரே வந்தாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது அருமை. இளவயது நரேனாகச் சிறுவன் ப்ரித்வி காஷ்யப்பின் அசத்தலான நடிப்பில் ஆரம்பமானது நாடகம்.



வேதாந்த மரபை உலகெங்கும் பரப்ப விவேகானந்தரே சிறந்தவர் என்று தேர்ந்தெடுத்த சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், அமெரிக்கா செல்ல அவரைப் பணித்தார். பொருளாதாரப் பின்புலம் இல்லாத துறவியான விவேகானந்தருக்கு உதவிய ராஜஸ்தானத்துக் கேத்ரி மன்னர் அஜித் சிங்; ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி; திக்கற்று அமெரிக்காவில் தனியாக நின்ற நிலையில் அவருக்கு உதவும் ஹேல் என்கிற பெண்மணி, அவரது இல்லத்தில் அறிமுகமாகும் ஜான் டி. ராக்கபெல்லர், அவர அறக்கட்டளையை நிறுவிய வரலாறு, ஜாம்ஷெட்ஜி டாட்டா உடனான சந்திப்பு எனப் பல முக்கிய நிகழ்வுகளைச் சுவைபடச் சித்திரித்தது நாடகம்.

இதில் விவேகானந்தராக நடித்த சூர்யா பல பக்க வசனங்களை தங்கு தடையின்றிப் பேசி நடித்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் காந்தியாக நடித்த பலராமன் ராஜன் இவ்விருவரையும் நம் கண்முன் வாழ்ந்து காட்டினார். பஞ்சாபைச் சேர்ந்த குர்தேஜ் தமிழை ஆங்கிலம், பஞ்சாபி மொழிகளில் எழுதிவைத்துப் பேசி நடித்தது பாராட்டுக்கு உரியது. இங்கு வளர்ந்த மாணவி ஐஸ்வர்யா காளியாக வந்து தமிழில் பேசி நடித்ததும், மஹதி மற்றும் ஸ்ரீயங்காவின் நடனமும் சிறப்பு.



இந்நாடகத்தில் விவேகானந்தர் வசித்த வீடு, சென்ற கப்பல், அக்காலத்து அமெரிக்க சாலை, தென் மற்றும் வட இந்திய மன்னர்கள் அரண்மனைகள் ஆகியவற்றைப் பின்னணியில் டிஜிட்டல் காட்சிகளாக உருவாக்கி அசத்தினார் சிவா சேஷப்பன். உதவி: ரவி குருமூர்த்தி, இசை ஸ்ரீதரன் மைனர், ஒளி அமைப்பு ஆண்டி நல்லப்பன், ஒலி அமைப்பு முத்து எழிலன், அரங்க அமைப்பு, நித்யவதி சுந்தரேஷ், கவிதா ரமேஷ், ரத்னா முத்து, உஷா அரவிந்தன், சுபா ராஜேஷ், ஆடை வடிவம்: ராகவேந்திரா, மக்கள் மேலாண்மை ஸ்ரீராமன் சபேசன், மைக்: மீரா ஹரி, ஹேமா முரளி, ரேவதி சீதாராமன், ஆனந்தி சுரேஷ், புகைப்படம்: ஷங்கர் குல்கர்னி, ஒப்பனை லட்சுமி வெங்கட், லதா சுந்தர், செல்வி மோகன்ராஜ், துர்கா ஸ்வாமிநாதன், கார்த்திகா பத்மநாபன் ஆகியோர் தத்தம் பணிகளைச் செம்மையாகச் செய்திருந்தனர்.



இவர்களுடன் வெவ்வேறு வேடங்கள் தாங்கி நடித்த பத்ரி ஸ்ரீநாத், பியரி கோபால், சுந்தர் நடராஜன், தயா, ஸ்ரீஹரி முத்து, மனோ, காஷ்யப், முரளி ரத்னம், விசாலாக்ஷி வடுகநாதன், மணிகண்டன், ஸ்ரீஸ்ரீனிவாசா, பாலாஜி ராமானுஜம், பாலாஜி வரதராஜன்,வசந்தி, ரமேஷ் சத்தியம், அர்ஜுன் ராமநாதன், T.S. ராம் மற்றும் தீபா சங்கரன் ஆகியோர் பாராட்டிற்கு உரியவர்கள்.

அமெரிக்காவின் புற்றுநோய்க் கழக அறக்கட்டளை (Cancer Institute Foundation) அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் செயல்பாடுகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பேராதரவு தந்து வருகிறது. அதற்கு நிதி திரட்டும் வகையில் ஆண்டுதோறும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் இவ்வாண்டு பாரதி தமிழ் சங்கம் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.



அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று இலங்கை வானொலியில் தனது கம்பீரக் குரலால் மக்களை ஈர்த்த B.H. அப்துல் ஹமீத் அவர்கள் நேரடியாக வந்து இந்நாடகக் காட்சிகளுக்குத் தொடர்புரை வழங்கினார். முன்னதாக, விவேகானந்தரால் தொடங்கப்பட்ட சான் ஃபிரான்சிஸ்கோ வேதாந்தா சொசைட்டியைச் சார்ந்த சுவாமி தத்வமயானந்தா தொடக்க உரை நிகழ்த்தினார். இடைவேளைக்குச் சற்றுமுன் தென்றல் ஆசிரியர் மதுரபாரதி விவேகானந்தரின் அமெரிக்கப் பயணங்களில் நடந்த சில நகைச்சுவைச் சம்பவங்களைக் கூறி அவையினரைக் கலகலப்பில் ஆழ்த்தினார்.



பெரும்பாலும் பொழுதுபோக்கு நாடகங்களாகவே நடக்கும் இந்தக் காலத்தில் இத்தகைய பொருள் செறிந்த நாடகங்களை வடித்து மேடையேற்றத் துணிந்த பாகீரதி மற்றும் நாடகக் குழுவினரை அனைவரும் இறுதிவரை அமர்ந்து ரசித்துப் பாராட்டினர். தொடக்கத்தில் அறக்கட்டளையின் கண்ணன் வரவேற்றதுடன், இறுதியில் நன்றி கூறினார்.
நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட்
Share: 




© Copyright 2020 Tamilonline