Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
லக்ஷ்மி ரமணன்
- அரவிந்த்|மார்ச் 2026|
Share:
யதார்த்தமான கதைகளைக் கச்சிதமான மொழியில் எழுதக் கூடியவர் லக்ஷ்மி ரமணன். காதல், மர்மம், வரலாறு, சமூகம், குடும்பம், நகைச்சுவை எனப் பல வகைமைகளில் எழுதி வருபவர். ஏப்ரல் 16, 1940 அன்று, பாலக்காட்டில் உள்ள சித்தூரில், ராமஸ்வாமி ஐயர் - கல்யாணி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், டெல்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honors) பட்டம் பெற்றார். ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். முறையாக இசை கற்றவர். கணவர் டி.வி. ரமணன், இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியாகப் பணியாற்றினார். ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும் பணிபுரிந்தார்.



லக்ஷ்மி ரமணன், ஆனந்த விகடன் இதழ் மூலம், எழுத்தாளராக அறிமுகமானார். 'இதுவும் தியாகம்தான்' என்னும் தலைப்பிலான அவரது முதல் சிறுகதை 1959-ல் வெளியானது. தொடர்ந்து கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் பேசுகிறது போன்ற பல இதழ்களில் லக்ஷ்மி ரமணின் சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் வெளியாகின. 'ரஷ்மி' என்ற புனைபெயரிலும் எழுதினார். முதல் நாவல் 1987-ல் வெளியானது. மாலைமதி உள்ளிட்ட பல மாத வெளியீடுகளில் இவரது படைப்புகள் வெளியாகின.



லக்ஷ்மி ரமணன் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்துக்கும் மேற்பட்ட நாவல்கள், 45 குறுநாவல்களை எழுதியுள்ளார். லக்ஷ்மி ரமணன், கும்ப ராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டன. அவை, மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட் தீப்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன. இவர் நாடகங்கள் சிலவற்றை எழுதினார். சென்னை தொலைக்காட்சியில் அவை ஒளிபரப்பாகின. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காகச் சில தமிழ் நாடகங்களை எழுதினார். லக்ஷ்மி ரமணின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

லக்ஷ்மி ரமணன் நூல்கள்
பிரும்மோபதேசம், உறவுகள் மென்மையானவை, தூங்காதே வர்ஷா, தென்றல் தப்ப முடியாது, உயில் வேட்டை, கொலை செய்யக் கிளம்பு, மீரா பள்ளிக்கூடம் போகிறாள், உறவைத் தேடி, ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது, காவேரி, மாயமான், வானத்திலே பூத்த வண்ண நிலா, மாமல்லன் 88 மர்மம், மறைந்திருக்கும் மர்மம், மெல்லத்திறந்தது வழி, கங்கா நதி தீரத்திலே, மீண்டும் சம்யுக்தை, மறக்குமா நெஞ்சம், நினைக்கத் தெரிந்த மனமே, சமர்ப்பணம், கரையை தேடும் அலைகள், அனுஷா அப்படித்தான், நெஞ்சுக்குள் என்றென்றும் நீதானே, தெரிந்து கொள்ளலாமே, அணையா விளக்கு, வாழ்வியல் கட்டுரைகள், கானல்நீர், இன்னொரு யுத்தம், மேற்கே வீசிய தென்றல், அம்மா, சகுந்தலா, கொஞ்சம் சிரிக்கலாமே, எழாமல் வந்த வரம், சிட்டுக்குருவி, லக்ஷ்மி ரமணின் சிறுகதைகள்.


லக்ஷ்மி ரமணன் பத்திரிக்கைகள் நடத்திய பல சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். 1976-ல், கல்கி இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில், 'ராஜேஷ் பெண் பார்க்கிறான்' என்னும் சிறுகதைக்காக இரண்டாம் பரிசு ரூ. 500 பெற்றார். 1987-ல், கலைமகள் இதழ் நடத்திய அமரர் ராமரத்னம் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றார். 1988-ல், அமுதசுரபி இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் ரூ. 1000 பரிசு பெற்றார். இதயம் பேசுகிறது இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியிலும், 'விபுலா' தெலுங்கு இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியிலும் பரிசுகள் பெற்றுள்ளார். 2024-ல், கலைமகள் இதழ் அளித்த சிறந்த எழுத்தாளருக்கான விருதைப் பெற்றார்.

தமிழின் முன்னோடிப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவர் லக்ஷ்மி ரமணன்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline