Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
'கல்வி' கோபாலகிருஷ்ணன்
- அரவிந்த்|பிப்ரவரி 2026|
Share:
'கல்வி' கோபாலகிருஷ்ணன் என்னும் கோபாலகிருஷ்ணன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், ஓவியர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர். சென்னையில் அக்டோபர் 10, 1912 அன்று பிறந்தார். பட்டப் படிப்பை முடித்த இவர் சுதந்திர எழுத்தாளராகவும், இதழாளராகவும் செயல்பட்டார். பின் சுதேசமித்திரன் இதழில் சிறுவர் பகுதி ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் ஆசிரியராக இருந்த சாண்டில்யனின் ஊக்குவிப்பில் சிறார்க்கான பல தொடர்களை எழுதினார். 'மந்திரவாதியின் மகன்', 'பறக்கும் பாப்பா', 'பண்டை உலகில் பறக்கும் பாப்பா', 'கானகக் கன்னி' போன்ற தொடர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 'பறக்கும் பாப்பா' தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி வாசகர்களால் வரவேற்கப்பட்டது. இந்நூல் பல பதிப்புகள் கண்டது.

'பறக்கும் பாப்பா' பாத்திரத்தைக் கொண்டு குழந்தைகளுக்கான பல அறிவியல், பொது அறிவு நூல்களை 'கல்வி' கோபாலகிருஷ்ணன் எழுதினார். பாடப் புத்தகங்களுக்கு ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டிருந்த கோபாலகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் 'கல்வி' என்ற இதழைத் தொடங்கி எட்டு ஆண்டுகள் நடத்தினார். அதனால் 'கல்வி' கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து 'சிந்தனை கல்வி' என்ற இதழையும் நடத்தினார். 1966-ல் குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணிபுரிந்தார்.



'கல்வி' கோபாலகிருஷ்ணன், தமிழ்நாட்டின் அறிவொளி இயக்க வளர்ச்சிக்காக அறிவியல், உடல்நலம், மருத்துவம், பொது அறிவு சார்ந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். டில்லி, மைசூர், சிம்லா ஆகிய இடங்களில் நடந்த குழந்தை இலக்கியக் கருத்தரங்களில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 250-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தனது படைப்புகள் பற்றிக் கூறும்போது, "மறைந்த ஸ்ரீ சாண்டில்யன் என்னை குழந்தைகளுக்கான எழுத்தாளராக உருவாக்கி, குழந்தைகளுக்காகத் தொடர்ந்து எழுத ஊக்குவிப்பதில் உந்து சக்தியாக இருந்தார். எனது வெற்றிக்கான பெருமை அவரையே சாரும்" என்று குறிப்பிட்டார்.

கல்வி கோபாலகிருஷ்ணன் நூல்களில் சில
மந்திரவாதியின் மகன் (பூச்சிகளின் வாழ்க்கையைக் கூறுவது), மந்திரக்கோல் (தாவரங்களின் ஒளிச்சேர்க்கை), பறக்கும் பாப்பா, பண்டை உலகில் பறக்கும் பாப்பா (பரிணாமத்தின் கதை), பாதாள உலகில் பறக்கும் பாப்பா (கடலியல்), மிட்டாய்ப் பாப்பா (எறும்பு, தேனீக்கள் பற்றியது), கானகக் கன்னி (தாவரங்களைப் பற்றியது), பாலர் கதைக் களஞ்சியம், காற்றின் கதை, வியப்புக் கதைகள், வனவிலங்குக் கதைகள், விவேகக் கதைகள், வேடிக்கைக் கதைகள், சான்றோர் வாழ்க்கை நீதிக் கதைகள், மணி என்ன?, தீ...! தீ... !! தீ...!!!, சூரப்புலி, மாருதியின் புலிவேட்டை, மாருதியின் மோட்டார், குறள் நெறியில் காந்தி அடிகள், காந்தியின் வாழ்விலே, நேருவின் வாழ்விலே, மாய மின்சாரம், சுப்ரமணிய பாரதி, நான் ஒரு இந்தியன், சுண்டுவிரல் சீமா, மாயாவிகள், நீலநெருப்பு மற்றும் பல.


'கல்வி' கோபாலகிருஷ்ணன் தனது எழுத்து, இதழியல் மற்றும் கல்விப் பணிகள் சார்ந்து பல்வேறு விருதுகள் பெற்றார். இவரது பூச்சிகளின் வாழ்க்கையைக் கூறும் 'மந்திரவாதியின் மகன்' மத்திய அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. தாவரங்களைப் பற்றிய 'கானகக் கன்னி' மத்திய அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. 'பறக்கும் பாப்பா' மத்திய அரசின் பரிசு பெற்றது. உயிர் தோன்றியது முதல் மனிதன் தோன்றியது வரையுள்ள பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் செய்திகளைச் சித்திரிக்கும் 'பண்டை உலகில் பறக்கும் பாப்பா' மத்திய அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. எறும்புகள், தேனீக்களைப் பற்றிய 'மிட்டாய்ப் பாப்பா' யுனெஸ்கோ பரிசு பெற்றது. 'மணி என்ன?' நூலுக்கு தென்மொழி புத்தக ட்ரஸ்ட் பரிசு கிடைத்தது. இவரது பணிகளைப் பாராட்டி 'குழந்தை எழுத்தாளர் சங்கம்' விருதளித்துச் சிறப்பித்தது.

'கல்வி' கோபாலகிருஷ்ணன், 2007-ல் காலமானார்.

சிறார்களுக்காகப் பொது அறிவு சார்ந்து பல நூல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர் 'கல்வி' கோபாலகிருஷ்ணன்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline