Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-21)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2026|
Share:
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்டம் ஒளிக்கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைந்தனர். மேரி குவான்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தமது தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்பதை விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப்பட்டன என்றாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்த சூர்யா, குவான்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்!

குவான்டம் கலையலால் (decoherence) உயர்வு போய் சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிகவும் தனித்துவமுள்ள அபூர்வமண் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைப்பு ஆவதாகவும் கணினிக்குள்ளேயே ஊதாநிற லேஸர் கதிரை மிகக் குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினாள். இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினம் திடீரென திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாக விளக்கினாள்.

சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்து விட்டு பிரச்சனைக்கு நிவாரணம் நெருங்கி விட்டதாகவும் அதற்காக மேலாண்மைக் குழுவைக் கூட்டச் சொன்னார். சூர்யா, கிரண், ஷாலினி மூவருடன், மேரி மற்றும் அவளது மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போர்டு அறையில் அமர்ந்திருந்தனர்.

குழுவில் பலரும் அல்லது அனைவருமே கூடச் சேர்ந்து திருட்டில் பங்கேற்றிக்கக் கூடும் என்று முதலில் கூறிவிட்டு, அது சாத்தியமில்லை என்றும் விளக்கி, ஒருவர்தான் அதற்குக் காரணம் என்றார்.

அதைக் கேட்டு பரபரப்போடு மேரி, "யார்? யார் அது? உடனே கூறுங்கள்" என்று கூவினாள்!

பதிலுக்கு சூர்யா ஓர் அதிர்வேட்டு வீசினார்! "மேலாண்மைக் குழுவில் குவான்டம் கணினி அடிப்படை நுட்பங்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர் யார்? பாதுகாப்புச் சாதனங்களைப் பற்றி நுணுக்கமாக உணர்ந்து குறிப்பேடுகளில் ஒன்றும் இல்லாதபடி செய்து அதையே காரணமாகக் காட்டி மற்றவர்கள் பேரில் சந்தேகம் எழும்படி செய்தவர் யார்? மற்றவர்களைக் கண்காணித்து அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கணித்தவர் யார்? அவை அனைத்துமே பொருந்தக்கூடியவர் லூயிஸ் ஹெர்ரேராதான். அவர்தான் குற்றவாளி!"

லூயிஸ் கொதித்தெழுந்தார். "என்ன சொல்றீங்க? நான் செய்தேனா? மேரி, ஒரு துளிக்கூட ஆதாரமில்லாம இப்படி ஒருவர் என்மேல பழி போடறத்துக்கு நீங்கதான் காரணம். நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்."

சூர்யா குரலை உயர்த்திக் கொண்டு தொடர்ந்தார். "அடிப்படை நிரூபணம் கிடைக்கும் லூயிஸ். வெளியிலிருந்து யாரோ வரக்கூடும் என்று கோடி காட்டும் அபாய மணியை ஒலிக்காமல் செய்ததற்கான குறிப்பு அந்தச் சாதனத்தின் பதிவேடுகளில் இருக்கும். நீங்கள் முதலில் கூறியபடி அதை எல்லோரும் செய்திருக்க முடியாது. அதற்குத் தனியாக முதலில் வேறு ஒரு ரகசிய எண்ணை அழுத்தி விட்டுத்தான் செய்யமுடியும். அது வேறு யாருக்கும் தெரியாது. பாதுகாப்புச் சாதனத்தை வாங்கிப் பொருத்திய நிபுணரான உங்களிடமும், விற்ற நிறுவனத்திடமும் மட்டுமே இருக்கும். மேலும், திருடப்பட்ட சாதனங்களை வெளியே கொண்டுபோக இன்னும் நேரம் போதாது. அதனால், நீங்கள் மட்டுமே பயன்படுத்தும் பாதுகாப்பு அறையிலேயே பதிக்கப் பட்டிருக்க வேண்டும். போலீஸைக் கொண்டு சோதித்தால் கிடைத்துவிடும். உங்க பேங்க் குறிப்பிலும் நீங்க பெரிய தொகை முன்பணம் வாங்கிய வரவைக் காட்டிடும்."

லூயிஸின் முகம் வெளிறியது. ஆனாலும் படபடத்தார். "சாதனங்களால் மட்டும் பயனில்லையே? மற்ற நிபுணர்களும் சேர்ந்தால்தானே பயன்படும்? அதுக்கு என்ன சொல்றீங்க?"

சூர்யா முறுவலித்தார். "நான் அதைப்பற்றி முன்னமே லேசாகக் குறிப்பிட்டேன். அவர்களின் பணத்தேவையை நீங்கள் கண்காணித்து உணர்ந்தீர்கள். போட்டி நிறுவனத்திடம் சென்று சாதனங்களைத் தருவதாகவும், மற்ற நிபுணர்களின் பணத்தேவையைப் பூர்த்தி செய்து அவர்களை கிரகிப்பது அவர்களின் பொறுப்பு என்றும் திட்டம் போட்டிருக்க வேண்டும். அவர்களை கிரகிக்க ஏற்கனவே இன்று ஆள் சேர்ப்பவர்களின் (recruiters) அழைப்பு வந்திருக்க வேண்டுமே?"

மற்ற மேலாண்மைக் குழுவினர் வியப்புடன் தலையாட்டி வலக்கை கட்டை விரலை உயர்த்திக் காட்டி ஆமோதித்தனர்.

சூர்யா தொடர்ந்து விளக்கினார். "மேரி, இந்தத் திருட்டின் முக்கிய நோக்கம், தொழில்நுட்பத்தை நேரடியாக அடைவது அல்ல. அது பேட்டண்ட்டுகளால் பாதுகாக்கப் பட்டுள்ளது. மாறாக, உங்கள் நிறுவனத்துக்கு மூலதனம் கிடைப்பதைத் தள்ளிப் போடுவது அல்லது நிறுத்தியே விடுவது. அதனால் ஏற்படுத்தும் நிலை தடுமாறலால் உங்கள் நிபுணர்களை ஈர்த்து அவர்களின் திறனைக் கொண்டு பேட்டண்டுகளைத் தவிர்க்கக்கூடிய, ஆனால் ஈடான நுட்பங்களை உருவாக்கும் திட்டம்! இந்த நிபுணர்கள் இல்லாவிட்டால் உங்கள் நிறுவனம் படுத்துவிடும், போட்டியிட இயலாது என்று கணித்திருக்க வேண்டும். அப்படித்தானே லூயிஸ்?"

லூயிஸின் முகம் போன போக்கு சூர்யாவின் கணிப்பு அத்தனையும் சரிதான் என்று காட்டிக் கொடுத்துவிட்டது!

மேரி புயல் போலச் சீறி லூயிஸைத் திட்டித் தீர்த்தாள்!

"சே, உன் பேரில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்?

அத்தனையையும் பொய்யாக்கிட்டயே? நியாயமாக உன்னைப் போலீஸிடம்தான் ஒப்படைக்கணும். ஆனா அப்படி செஞ்சா உன் திட்டப்படியே எங்க மூலதனத்துக்கு பங்கம் வந்தாலும் வரும்.

உடனே இங்கிருந்து ஓடிப்போயிடு. எங்க நிறுவனத்துல உனக்கு இருக்கற மேலாண்மைப் பங்குகளை எல்லாத்தையும் ரத்து செஞ்சுடுவோம். இங்க செஞ்ச வேலை காலத்துக்கு நல்ல பரிந்துரையும் கிடைக்காது. அடுத்த வேலை கிடைக்காமல் அவஸ்தைப் படுவே. அதுவே உனக்குச் சரியான தண்டனை. உடனே கண்காணாம போயிடு!"

லூயிஸ் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியேறினார்.

கிரண் ஷாலினியிடன் கிசுகிசுத்தான், "ஷாலு, நம்ம அம்மா சொல்லுவாளே, வேலியே பயிரை மேஞ்ச கதை மாதிரின்னு.

அப்படியே இருக்கு இது!" ஷாலினி அவன் கையை அழுத்தி அடக்கினாள்!

மேரி ஷாலினியின் கையைப் பிடித்துக்கொண்டு தழுதழுத்த குரலில் நன்றி கூறினாள். "நல்லவேளை ஷாலினி, நீ சூர்யாவைப் பற்றி சொன்னது எனக்கு சரியான சமயத்துக்கு ஞாபகம் வந்தது. சூர்யா, இந்த நிறுவனத்தையும் காப்பாத்திட்டீங்க. இனி மூலதனம் கிடைச்சு நாங்க குவான்டம் கணினி நுட்பத்தை வெகுவாக முன்னேற்றுவோம்னு நம்பறேன். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கிரண் உனக்குந்தான்."

பிறகு மேரியும் அவளது மேலாண்மைக் குழுவினரும் நம் துப்பறியும் மூவரை நன்றியுடன் வழியனுப்பினர்!

(முற்றியது)
மீண்டும் தொடர்கிறது
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
கதிரவன் எழில்மன்னன் எழுதிவரும் ஆரம்பநிலை தொழில்முனைவருக்கான நுணுக்கமான அம்சங்கள்.
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், தந்திரங்கள், யுக்திகள் இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை.
இந்தத் கட்டுரை வரிசையில் அவரது அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் எழுதிய கருத்துக்களையும், சேர்த்து அளிப்பார். அவ்வப்போது வேறு ஆதாரங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவார்.
அடுத்த தென்றல் இதழில் பாகம்-21 வெளியாகும்.


கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline