Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-18)
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2026|
Share:
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இக்கதையில் இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்டம் ஒளிக்கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தங்கள் தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் ஒருவரின் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப்பட்டன என்கிறாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்து வரும் சூர்யா, குவான்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம், வாருங்கள்!

★★★★★


குவான்டம் கலையலால் (decoherence) உயர்வு போய் சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று, தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைப்பு என்றும், கணினிக்குள்ளே வயலட் நிற லேஸர் கதிரை மிகக் குறைந்த சக்தியில், மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினாள். கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்தபோது முந்தைய தினந்தான் திடீரென திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.

சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்து வருகிறார். அடுத்து குவான்டம் சாதன (system) குழுத்தலைவி ஜென்னிஃபர் பீஸ்லி-தாம்ப்ஸன் (சுருக்கமாக ஜென்னி) அலுவலறைக்குச் சென்றனர்.

திறந்தே இருந்த அலுவலறைக் கதவை மேரி மெல்லத் தட்டி சுழல்நாற்காலியில் பின்புறம் திரும்பிக் குனிந்து அமர்ந்திருந்த ஜென்னியின் கவனத்தை ஈர்த்தாள். சில நொடிகளுக்குப் பின் நெடுமூச்சுடன் நிமிர்ந்த ஜென்னி, மிகச் சோர்வுடன் சோகமாகத் தென்பட்டாள். சுதாரித்துக் கொண்டு, வாசலில் நின்று கொண்டிருந்தக் குழுவை "ப்ளீஸ் கம் இன்" என பலவீனமான குரலில் வரவேற்றாள்.

மேரி மற்ற மூவரையும் அறிமுகப் படுத்தியபோது எங்கோ கவனமாக அரைகுறையாகக் கேட்டுக்கொண்டு கை குலுக்கிவிட்டு மீண்டும் நாற்காலிக்குச் சென்று தொப்பென்று அமர்ந்து கொண்டு மேரியிடம், "சரி, இவர்களுக்கு என்னிடம் என்ன உதவி தேவை?" என்று கேட்டாள்.

மேரி விளக்கினாள். "நம் மேலாண்மைக் குழுவினரையெல்லாம் நேர்கண்டு திருட்டைப் பற்றி விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள்தான் கடைசி".

ஜென்னி அவநம்பிக்கையுடன், "ஹூம்! இவர்கள் விசாரணையில் என்ன கண்டுபிடிக்க முடியும்! சரி ஆகட்டும் பரவாயில்லை" என்றாள்.

அவள் அவநம்பிக்கையைத் தகர்க்க சூர்யா வழக்கம் போல் ஓர் அதிர்வேட்டை வீசினார்! "உங்கள் சகோதரர் நிதி அபகரித்துக் காணாமல் போனது மற்றும அதனால் உங்கள்: கணவரின் நிறுவன நிதிக்கஷ்டம் இரண்டும் கூடிய சீக்கிரமே நிவர்த்திக்கப் படுவதற்கு என மனமார்ந்த ஆசிகள்!"

அதிர்ந்தே போன ஜென்னி ஒரு சில நொடிகள் பொங்கி வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு மேரியிடம் வருத்தத்துடன், "ஓ! என்ன மேரி எங்கள் சொந்த விவகரத்தையும் விசாரிக்க ஏவி விட்டீர்களா? இது மிகக் கேவலமாக இருக்கே!" என்றாள்.

மேரி அவசரமாக மறுத்தாள். "இல்லவே இல்லை, ஜென்னி. இந்த அறையில் நுழையும்வரை சூர்யாவுக்கு உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர் யூக நிபுணர். இங்கு எதையோ கிரகித்துக் கொண்டு, யூகித்திருக்க வேண்டும். என்ன சூர்யா?"

சூர்யா பதிலளிக்கும் முன், மேரி இடைமறித்தாள், "அது எப்படி முடியும்? இங்க வந்தே சில நொடிகள்தான் ஆகியிருக்கும்., அதற்குள் என்ன கிரகித்திருக்க முடியும். என்னால நம்பமுடியவில்லை! எதோ குடாய்ந்திருக்கிறார்கள்!"

சூர்யா விளக்கினார். "மேரி சொன்னதுதான் சரி ஜென்னி. இங்கு கவனித்ததை வைத்து வெறும் ஒரு அதிர்ஷ்டகரமான யூகந்தான்!"

நம்பாத ஜென்னி "சரி, அப்படி என்ன கவனித்தீர்கள் என்ன யூகம்?" என்று வினவினாள்

சூர்யா தொடர்ந்தார். "அப்படி ஒண்ணும் பிரமாதமில்லை. அதோ பாருங்கள், உங்கள் மேஜை மேல ஒரு செய்தித்தாள் கிடக்கிறது. அதில் கொட்டை எழுத்துக்களில் போட்டிருக்கே, ‘நிறுவன அதிகாரி ஜான் பீஸ்லி தலைமறைவு, நிறுவனத் தலைவர் தாம்ப்ஸன் நிதிப் பற்றாக்குறைப் பற்றி பதற்றம்’ என்றெல்லாம் இருக்கு. அதைத்தான் கவனிச்சேன்!"

ஜென்னி வியந்தாள். "வாவ்! சில நொடிகளுக்குள்ள அதைக் கவனிச்சிருக்கீங்க! சரி ஆனா எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?"

சூர்யா முறுவலுடன் விளக்கினார். "அதுதான் யூகப்பகுதி! வெளியில் உங்க பேர்ப் பலகையில் ஜென்னிஃபர் பீஸ்லி-தாம்ப்ஸன் அப்படின்னு பார்த்தேன். இங்க செய்தித்தாள் அந்தச் செய்தி இருக்கும் பக்கம் திறந்து வைக்கப் பட்டிருக்கு. நீங்களும் மிகக் கவலையாகவும் சோகமாகவும் இருக்கீங்க. அதையெல்லாம் வச்சு ஒரு கணிப்பு அவ்வளவுதான்."

ஜென்னி கோபம் தணிந்து சோகமாகப் புன்னகைத்தாள்! "சரியான கணிப்புத்தான். ஜான் பீஸ்லி என் சகோதரர். ரோஜர் தாம்ப்ஸன் என கணவர். ரெண்டு பேரும் சேர்ந்து நடத்திய நிறுவனத்தைப் பற்றித்தான் செய்தி. அதனால்தான் என் கவலையும் சோகமும். உங்கள் ஆசிக்கு நன்றி. உங்கள் திறமையை நான் உணர்கிறேன். உங்களுக்கு என்னால எப்படி உதவ முடியும்? சொல்லுங்கள்."

சூர்யா வினவினார். "குவான்டம் நுட்பங்களை எல்லாம் சார்ந்த மொத்தக் கணினி சாதனத்தை உருவாக்கும் குழுவுக்கு நீங்கள் தலைவர் என்று மேரி குறிப்பிட்டாங்க. அப்படி உருவாக்குவது சாதாரணமான விஷயமா? இல்லை, அதுல சிறப்பம்சம் எதாவது இருக்கா?"

ஜென்னியின் முகம் பெருமிதத்தில் பளிச்சிட்டது. "ஆஹா, சிறப்பம்சம் இல்லாமல் போகுமா என்ன? பல அம்சங்கள் இருக்கு. பொதுவா கணினி சாதனமானது சில சர்க்யூட் பலகைகளை (circuit boards) செருகி இணைத்து மின்சக்தி அளித்தால் முடிந்துவிடும்."

கிரண் துள்ளிக் குதித்து இடை மறித்தான். "ஓ! அது என்னாலகூட செய்ய முடியுமே! ஒரு மதர்போர்டு, கொஞ்சம் மெமரி, ஒரு சேமிப்பு, மின்சக்தி, அது போதும் நானே மின் விளையாட்டுகளுக்காக கிராஃபிக் பலகையும் சேர்த்து சக்தி வாய்ந்த கணினி கட்டியிருக்கேனே!"

ஜென்னி முறுவலுடன். "குவான்டம் கணினி மின்விளையாட்டுக் கணினிகளை விட பற்பல மடங்கு சக்தி வாய்ந்தது. அதைச் சாதாரணமாகக் கட்டுவதே கடினம். எங்க சாதன நுட்பம் அதைவிடச் சிக்கலானது, சிறந்தது!"

தங்களின் குவான்டம் கணினி சாதனக் கட்டு நுட்பத்தைப் பற்ற ஜென்னி விவரித்தது என்ன என்றும் சூர்யா குவான்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிகிறார் என்பதையும் வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline