Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-19)
- கதிரவன் எழில்மன்னன்|ஏப்ரல் 2026|
Share:
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவுகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இக்கதையில் இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தங்கள் தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப்பட்டன என்கிறாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்து வரும் சூர்யா, குவான்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்!

★★★★★


குவான்டம் கலையலால் (decoherence) மேன்மை நீங்கிச் சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைவு என்றும், கணினிக்குள்ளேயே ஊதாநிற லேஸர் கதிரால் மிகக் குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறிய மேரி, கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது, முந்தைய தினம் திடீரென திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.

சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்து வருகையில் அடுத்து குவான்டம் சாதனக் (system) குழுத் தலைவி ஜென்னிஃபர் பீஸ்லி-தாம்ப்ஸன் (சுருக்கமாக ஜென்னி) நேர்காணல் நடைபெறுகிறது. ஜென்னியின் சகோதரர் பீஸ்லி செய்த மோசடியால் அவள் கணவர் தாம்ப்ஸனின் நிறுவனம் திவால் ஆகும் நிலைமையில் இருப்பதாக சூர்யா யூகித்தார். குவான்டம் கணினி சாதன அமைப்பில் என்ன வித்தியாசமான உன்னத நுட்பம் என்று சூர்யா கேட்க, ஜென்னி அதற்கு பதிலளித்தாள்.

சாதாரணக் கணினியிலிருந்து சில மின்பலகைகளை இணைப்பித்து மின்சக்தி அளித்தால் போதும். ஆனால் குவான்டம் கணினி சாதனம் அவ்வளவு எளிதில்லை என ஜென்னி கூறி, மேற்கொண்டு விவரிக்கலானாள். "முதலாவதாக, கணினியின் க்யூபிட்களுக்குத் தகவல்களை நினைவக வில்லைகளிலிருநது மிக அதிக வேகத்தில் அனுப்ப வேண்டியுள்ளது."

சூர்யா சற்றுக் குழப்பத்தோடு, "ஹூம், இதை இப்போதுதானே பீட்டர் பார்க்கர் ஏற்கனவே கூறினார். அதேதானே?" என வினாவினார்.

அதற்கு ஜென்னி பதிலளிக்கும் முன் கிரண் துள்ளினான். "ஊ! ஊ! நான் சொல்றேன், நான் சொல்றேன்! இரண்டுமே தகவல் அனுப்புவதுதான். ஆனால் பீட்டர் சொன்னது சேமிப்பக சேவைச் சாதனத்திலிருந்து கணினிக்கு அனுப்பும் மின்வலை நுட்பம். ஆனா ஜென்னி சொல்வது கணினிக்குள்ளயே உள்ள நினைவக வில்லைகளிலிருநது க்யூபிட்களுக்குத் அனுப்புவது. இதுக்கு இன்னும் அதிக வேகம் தேவை. செயற்கை அறிவுக் கணினிகளில இதே மாதிரி பிரச்சனை உண்டுன்னு நான் படிச்சிருக்கேன். என் பங்குவர்த்தகத்தில் இந்த விஷயம் நிறைய அடிபடுது!"

"ஆஹா! பிரமாதமா சொல்லிட்டயே கிரண்! அதேதான்! அந்த வித்தியாசத்தை மேல நான் விளக்க அவசியமில்லை!" என்று பாராட்டினாள் ஜென்னி!

கிரண், சட்டை காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு ஷாலினியைப் பார்த்து எக்களித்தான். "பாத்தியா ஷாலு! அய்யா அறிவு எப்படின்னு!"

ஷாலினி உதாசீனித்தாள்! "ஹே, போதும் கிரண், ரொம்பத்தான் அலட்டிக்காதே, அம்பது தடவையில ஒரே ஒரு தடவை சரியாயிடுச்சு அவ்ளோதான்!"

அவர்கள் வாய்ச்சண்டையைப் பார்த்து ஜென்னி கலகலவெனச் சிரித்துவிட்டுத் தொடர்ந்தாள். "ஆனா எங்க சாதன நுட்பத்தில் இன்னும் சிறப்பம்சங்கள் உண்டு! சில குவான்டம் கணினிகளுக்கு மிகமிகக் குளிர்ச்சியான திரவ நைட்ரோஜன் குளிர்பதனம் தேவைப்படுது. எங்க கணினிக்கு அது அவசியமில்லை, ஆனாலும் மிக வேகமா செயல்படறதுனால சூட்டை வெளிப்படுத்தும். அதுனால வீடுகளில பயன்படுத்தும் குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப் படும் குளிர்மை நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். மேலும்..."

கிரண் இடைமறித்தான். "அம்மாடியோவ், இவ்வளவு விஷயத்துக்கும் மேல இன்னுமா? பிரமாதம்!"

ஜென்னி பெருமிதத்துடன் தொடர்ந்தாள். "ரொம்ப தேங்க்ஸ் கிரண்! இன்னும் விசேஷமான நுட்பம் என்னன்னா, இந்த க்யூபிட்கள், நினைவக வில்லைகள் எல்லாம் எங்க குழு, எங்க சாதனத்துக்குன்னே தனிச்சிறப்பா தயாரித்த மின்பலகைகளில் பதிக்கப்பட்டு சாதனத்தில் பொருத்தப்பட்டிருக்கு. அதுவும், மின்வில்லைகள் மிக நெருக்கமா முப்பரிமாணங்களில் பதிக்கப்பட்டுள்ளன. இது நாங்க உருவாக்கின சிறப்பு நுட்பம். வேறு நிறுவனங்களுக்கு அவங்களே செஞ்சா தவிர இந்த நுட்பம் கிடைக்காது!"

சூர்யா பாராட்டினார். "கிரண் சொன்னபடி பிரமாதமாத்தான் இருக்கு ஜென்னி. அதிவேகக் கணினி உருவாக்கிய சேமூர் க்ரே (Seymour Cray) கூட இந்த மாதிரி சிறப்பான சாதன நுட்பம் செஞ்சாருன்னு கேள்விப் பட்டிருக்கேன். அந்த மாதிரி இருக்கு"

ஜென்னி பெருகிய பெருமிதத்துடன், "ஆஹா! க்ரேயுடன் எங்களையும் சேர்த்துப் பாத்திட்டீங்களே! ரொம்ப தேங்க்ஸ். அவர் எங்கே, நாங்க எங்கே! ஆனா நீங்க சொன்னது ஒருவிதத்தில் சரிதான். அவர் மிக அதிகவேகக் கணினிகளுக்குச் செய்த சாதன நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நாங்க செஞ்சிருக்கோம்."

சூர்யா தூண்டினார். "குவான்டம் கணினித் துறையில் உங்களோடு போட்டியிடும் மற்ற நிறுவனங்களும் இந்த மாதிரி சாதன நுட்பம் செய்யறாங்களா?"

ஜென்னி மறுத்தாள். "ஹூஹூம்! செய்ய முயற்சிக்கறாங்க, ஆனா எங்க நுட்பம் அவங்க நிலையைவிடப் பல மடங்கு உன்னதமானது!"

சூர்யா ஒரு அதிர்வேட்டு வீசினார். "அப்படின்னா, இந்தத் திருட்டோட உங்க திறமையும் சேர்த்தா அவங்க திடீர்னு முன்னேறிடலாம் இல்லையா?1 அப்படி நடந்தா உங்க கணவரின் நிறுவனப் பிரச்சனையையும் நிவர்த்திச்சிடலாமே!"

ஜென்னி திடுக்கிட்டு திணறினாள்! சில நொடிகளுக்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து நின்று சீறினாள். "என்ன மேரி இது?

என்னைப்பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியுமே! இவரோட குற்றச்சாட்டை நீங்களும் ஆதரிக்கறீங்களா?"

மேரி அவளுக்குச் சாதகமாகப் பேசினாள், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஜென்னி. உங்கமேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு! சூர்யா பொதுவாத்தான் யூகிக்கிறார்னு நினைக்கிறேன். என்ன சூர்யா?"

சூர்யா தலையசைத்து மறுத்தார். "மன்னிக்கணும் மேரி. இந்தத் திருட்டு உள்நபர் உதவியோடதான் நடந்திருக்குன்னு ஏற்கனவே கணிப்பிருக்கு. அதனாலதான் நீங்க போலீஸ் புகார் கொடுக்காம எங்களை வரவழைச்சிருக்கீங்க! அப்படியிருக்கும்போது அதுல லாபம் கிடைக்கக் கூடிய எல்லாரையும் சந்தேகிச்சே ஆகணும். அடுத்த கட்டமா மேலாண்மைக் குழு அனைவரையும் கூட்டுங்க. பிரச்சனைக்கு நிவாரணம் கிட்டும் நேரம் வந்தாச்சு!"

சூர்யா குவான்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு நிவர்த்திக்கிறார் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்!

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline