இ. சுந்தரமூர்த்தி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய தமிழறிஞர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தவர். பிப்ரவரி 05, 1942ல், கோயம்புத்தூரிலுள்ள வெள்ளலூரில் த. இளையபெருமாள் - பழனியம்மாள் தம்பதியருக்கு இளைய மகனாகப் பிறந்தார். வெள்ளலூரில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். கோவை ராமநாதபுரம் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். 1957ல் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சென்னை பல்கலைக் கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.
1959ல் சிங்காநல்லூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். பணியாற்றிக் கொண்டே மானிடவியல், கல்வெட்டுத் துறை ஆகியவற்றில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றார். திருக்குறள் பரிமேலழகர் உரை குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். வசந்தா அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு எழில் நம்பி, இளைய நம்பி என இரு மகன்கள். மகள், மலர்மகள்.

சுந்தரமூர்த்தி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறையில் தலைவர், பதிப்புத்துறைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று 32 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றினார். 2001ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் புதிய பல பாடத்திட்டங்களையும், முதுகலைப் படிப்புகளையும் கொண்டு வந்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக 2008 முதல் 2014 வரை பணியாற்றினார். செப்டம்பர் 2021ல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். இவரது வழிகாட்டுதலில் 50க்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டமும், 50க்கும் மேற்பட்டோர் எம்.ஃபில் பட்டமும் பெற்றனர்.
சுந்தரமூர்த்தி, தமிழாய்வுப் பணிகளுக்காக ஜெர்மனி, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினார். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி தமிழ் மாநாடு, சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தார். ரஷ்யா, அமெரிக்கா, போலந்து, பின்லாந்து மாணவர்களுக்கு தமிழ் கற்பித்த சிறப்புக்குரியவர்.

பல்கலைக் கழகக் கல்விசார் குழு, கல்கத்தா தேசிய நூலகம், பிர்லா அறக்கட்டளையின் பாஷா சமிதி, சாகித்ய அகாதமி, தமிழ் இணையப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் உறுப்பினராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல் குழு, கல்விக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகச் செயல்பட்டார்.
தமிழ் இலக்கியம் சார்ந்து 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். தமிழ் இலக்கணம், இலக்கியம், ஆய்வு, சுவடியியல், பாரதியியல், பதிப்பியல், நடையியல் எனப் பல துறைகளில் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், பதிப்பித்தும் உள்ளார். 'வள்ளுவம்' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இ. சுந்தரமூர்த்தி எழுதிய நூல்கள் திருக்குறள் அணிநலம், பதிப்பியல் சிந்தனைகள், வாருங்கள் வாழ்வோம், இலக்கியச் சுடர், நடையியல் அறிமுகம், இலக்கியமும் பண்பாடும், வான்மறை வள்ளுவம், திருக்குறள் நடையியல், பாரதி நடையியல், உவமான சங்கிரகம், அணியிலக்கண ஆராய்ச்சி மற்றும் பல.
பதிப்பித்த நூல்கள்: திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை, ஐந்திலக்கணம், அறிவானந்த அடிகள் இயற்றிய சிறுத்தொண்டர் நாடகம், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த சிற்றிலக்கியத் திரட்டு, உடுமலைப்பேட்டை அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், தமிழியல் ஆய்வு மேம்பாடு, உயராய்வு:15, இருபுராண விருத்தம், தவத்திரு தண்டபாணி சுவாமிகள் இயற்றிய வண்ணத்தியல்பு, திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், மகளிர் இதழ்கள், இலக்கிய இதழ்கள், திவாகரம், மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நிகண்டு, பண்ணிசை மன்னர் தி.சா. சுந்தர ஓதுவா மூர்த்திகள் நினைவு மலர், கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள், முன்னோடிகள் மூவர், கார்மேகக் கவிஞர் வாலசுந்தரக் கவிராயர் கம்பநாத சாமி இயற்றிய கொங்கு மண்டல சதகங்கள், குறளமுதம் (தொகுப்பாசிரியர்) மற்றும் பல.
தமிழக அரசின் திருக்குறள்நெறித் தோன்றல் விருது, திருவள்ளுவர் விருது, குன்றக்குடி ஆதினம் வழங்கிய புலவரேறு விருது, கம்பன் கழக விருது, சேக்கிழார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். செந்தமிழ்ச் செல்வர், குறள் ஞாயிறு, தமிழ் மாமணி போன்ற பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
பல மாணவர்களைப் பேராசிரியர்களாக உருவாக்கிய இ. சுந்தரமூர்த்தி, 84ம் வயதில் மே 13, 2026 அன்று சென்னையில் காலமானார். |