Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
முன்னோடி
டி.என். சங்கரநாதன்
- பா.சு. ரமணன்|ஆகஸ்டு 2026|
Share:
நாடக நடிகர், கர்நாடக இசைக் கலைஞர் எனப் பயணித்து, பொம்மலாட்டக் கலையே தனது வாழ்க்கைக்கான கலை என்று தீர்மானித்து அதையே வாழ்க்கையாகக் கொண்டவர் டி.என். சங்கரன் என்னும் டி.என். சங்கரநாதன். மார்ச் 25, 1928ல் கும்பகோணத்தில் நன்னையன் - நாமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். கும்பகோணத்தில் புகழ்பெற்ற யானையடி பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றார். இசையில் நாட்டம் ஏற்பட்டதால் மேலே படிக்கவில்லை. பிரபல வயலின் வித்வான் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் சேர்ந்து இசை பயின்றார். தொடர்ந்து ஈ. கிருஷ்ணையரிடம், நாடகம் மற்றும் மேடைக் கலையைக் கற்றார். டி.எஸ். ராஜாராமனிடம் இசை நுணுக்கங்களைக் கற்றார்.

கோவில் திருவிழாக்களில் பாடத் தொடங்கினார். அசாத்தியக் குரல் வளமும் சங்கீத ஞானமும் கொண்டிருந்த டி.என். சங்கரநாதனின் பாடல்களுக்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. பல ஊர்களுக்கும் சென்று ஆலயத் திருவிழாக்களிலும், பிற நிகழ்வுகளிலும் பாடினார்.

ஒரு சமயம் ஆலயத் திருவிழா ஒன்றில் பாடிக் கொண்டிருந்த சங்கரநாதனின் குரலைக் கேட்ட அக்காலத்தின் பிரபல பொம்மலாட்டக் கலைஞர் மணி ஐயர் கவரப்பட்டார். சங்கரநாதனைத் தனது குழுவில் சேர்த்துக்கொள்ள விரும்பினார். சங்கரநாதனின் வீட்டிற்குச் சென்று தனது 'கும்பகோணம் மங்கள கான சபா'வில் இணைந்து பணியாற்ற வேண்டிக் கொண்டார். சங்கரநாதன் சம்மதித்தார். அது அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது.

வள்ளி திருமணம், அரிச்சந்திரா தொடங்கி பல பாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் அளித்தும், பாடியும், பொம்மலாட்டக் கலைஞராகச் சிறந்த பங்களிப்பை நல்கினார். சங்கரநாதனின் திறமையைக் கண்டு வியந்த மணி ஐயர், அவரைத் தனது வளர்ப்பு மகனாகவே கருதினார்.

இக்காலகட்டத்தில் 'பாமா' என்பவருடன் சங்கரநாதனுக்குத் திருமணம் நிகழ்ந்தது. குடும்பம் பெரிதானது. வருவாய்த் தேவை அதிகரித்தது. இந்நிலையில் மணி ஐயர் நோய்வாய்ப்பட்டார். சபையை நடத்தும் பொறுப்பை அவரது சகோதரி மகன் ஸ்ரீனிவாசன் ஏற்றுக் கொண்டார். அவர் சங்கரநாதனை உதாசீனம் செய்தார். அதனால் சங்கரநாதனுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இந்நிலையில் திடீரென மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டார் சங்கரநாதன். பொம்மலாட்டமோ மாலையில் தொடங்கி இரவெல்லாம் நடக்கும். பார்வைக் குறைவு காரணமாக பொம்மலாட்டம் மற்றும் பிற பணிகளில் சங்கரநாதனால் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது.



குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. இந்நிலையில் சங்கரநாதனின் நண்பர்களான புல்புல்தாரா இசைக்கலைஞரும், வங்கி ஊழியருமான பால வேலாயுதமும் மிருதங்கக் கலைஞர் பட்டீஸ்வரம் செல்லையாவும், சங்கரநாதனை பொம்மலாட்டக் குழு ஒன்றைத் தொடங்கும்படிக் கேட்டுக் கொண்டனர். தாங்கள் அதற்கு உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தனர். பார்வையிழந்த தன்னால் எப்படி நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்று சங்கரநாதன் தயங்கினார். ஆனால், நண்பர்களும், குடும்பத்தினரும் உதவுவதாக வாக்களித்து அவரை ஊக்குவித்தனர். அதன்படி 'ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா' என்ற பொம்மலாட்டக் குழு தொடங்கப்பட்டது. முதல் வாய்ப்பு புதுக்கோட்டை வெள்ளை பிள்ளையார் கோவில் நிர்வாகத்திடம் இருந்து வந்தது.

முதல் நிகழ்ச்சி 'வள்ளி திருமணம்'. அவரிடம் பொம்மைகள் இல்லாததால் தானே புதிய பொம்மைகளை உருவாக்கி நிகழ்ச்சியை நடத்தினார். அதற்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து வாய்ப்புகள் பெருகின. ஊதியம் குறைவாகக் கிடைத்தாலும் மனநிறைவுடன் கலைச் சேவையாகத் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் உறுதுணையுடன் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தார் சங்கரநாதன். தியாகராஜர் கீர்த்தனைகளைப் பொம்மலாட்டப் பின்னணியில் பாடி மக்களின் பாராட்டினைப் பெற்றார். ஸ்ரீ விநாயகர் புராணத்தை நடத்தி சிறார்களின் மனம் கவர்ந்தார்.

1968ல் காஞ்சி மடம் நடத்திய 'ஆகம சில்ப சதஸ்' விழாவில், காஞ்சி மஹாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, டி.என். சங்கரனுக்கு 'நாதன்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். டி.என். சங்கரன் அந்தப் பட்டத்தைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு அன்று முதல் 'டி.என்.சங்கரநாதன்' ஆனார்.

கண் பிரச்சனையால் மிகவும் மனம் வருந்திய சங்கரநாதன் குலதெய்வத்தையும் அம்பாளையும் வேண்டிக் கொண்டார். தஞ்சாவூர் மருத்துவர் நவமணி என்பவரைச் சந்தித்து தனக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். மருத்துவர் அவரது விழிகளைப் பரிசோதித்துவிட்டு, "வாய்ப்புக் குறைவுதான்; மருத்துவம் பார்த்தாலும் குணமடையுமா என்று தெரியாது. இருந்தாலும் முயல்கிறேன்" என்று கூறினார்.

குறித்த நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் உள்பட அனைவரும் ஆச்சரியப்படும்படி சங்கரநாதனின் வலது கண்ணில் மட்டும் பார்வை திரும்பியது. அதுமுதல் மிகவும் தீவிரமாக பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டார் சங்கரநாதன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் சென்று பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். ஆலயங்கள், ஆதீனங்கள், மடங்கள், சமஸ்தானங்கள் மட்டுமல்லாமல் மதுரை கம்பன் கழகம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தென்னகக் கலை பண்பாட்டு மையம், டெல்லி தமிழ்ச் சங்கம், மும்பை தமிழ்ச் சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், கொச்சின் தமிழ்ச் சங்கம் எனப் பல இடங்களுக்கும் சென்று பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெற்றார். 1989ல் பம்பாயில் நடைபெற்ற 'அப்னா உத்சவ'த்தில் 'ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா' நடத்திய பொம்மலாட்டம் நற்சான்று பெற்றது. 1986ல் தேசியக் கலை, பண்பாடு நிகழ்ச்சியில் நடத்திய பொம்மலாட்டம் மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாராட்டைப் பெற்றது.



ஹரிச்சந்திரா, வள்ளி திருமணம், அருணகிரிநாதர், சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், சங்கரதாஸ் சுவாமிகள் கதை, நாயன்மார் வரலாறு போன்ற தலைப்புகளில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார் அவற்றோடு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகங்களையும் நடத்தினார்.

டி.என். சங்கரநாதனின் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், 'சொந்தமடி நீ எனக்கு', 'சிவப்பு மலர்கள்', 'ஆவாரம்பூ', 'இந்தியன்' உள்ளிட்ட திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. சில தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலும் இடம்பெற்றன.

டி.என். சங்கரநாதன் தனது கலைச் சேவைகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பாட்னா தமிழ்ச் சங்கம் அளித்த 'இசைத்தென்றல்', தமிழக அரசின் கலைமாமணி, காஞ்சி சங்கர மடம் வழங்கிய மணிவிழா விருது, குடந்தை சங்கீத வித்யாலயாவின் 'நாத கான சுடரொளி', திருவாடுதுறை ஆதினத்தின் 'கைப்பாவை கலைமணி', கோவை திருநேரிய தமிழ் மன்றத்தின் 'பாவைக் கூத்திசைக் கலைஞர் மாமணி', திருச்சி கலைக்காவேரி இசைக் கல்லூரியின் 'கலைக்காவேரி' விருது, 'மதுரை கம்பன் கழகம்' வழங்கிய விருது, சங்கீத நாடக அகாதமி விருது, சென்னை ரசிகா ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய 'ரசிக கலாபாரதி', டெல்லி சங்கீத நாடக அகாடமியின் 'யுவ புரஸ்கார்' போன்றவை அவற்றில் முக்கியமானவை.

டி.என். சங்கரநாதன், டிசம்பர் 28, 2019 அன்று காலமானார். அவரது மறைவுக்கு முன்பே, 'ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா'வை நடத்தும் பொறுப்பை அவரது மூத்த மகன் முருகன் ஏற்றுக் கொண்டிருந்தார். சங்கரநாதனின் மறைவுக்குப் பின் பிள்ளைகள் முருகன், ரவி, கோபி மூவரும் ஒன்றிணைந்து பொம்மலாட்டக் குழுவை நடத்தி வருகின்றனர். அவர்களது பிள்ளைகளும் மூன்றாவது தலைமுறையாக இந்தக் குழுவில் பங்களித்து வருகின்றனர்.

டி.என். சங்கரநாதனின் கலைச்சேவை என்றும் நினைவு கூரத்தக்கது.

முகநூலில்: facebook.com

(தகவல் உதவி: நன்றி: suriyachandran.blogspot.com
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline