Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
ச. மதனகல்யாணி
- பா.சு. ரமணன்|ஜூன் 2026|
Share:
ச. மதனகல்யாணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஃப்ரெஞ்சுக்கும், ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தவர். ஃப்ரெஞ்ச் அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'செவாலியே' விருதைப் பெற்றவர். அக்டோபர் 05, 1938 அன்று, புதுவை முருங்கப்பாக்கத்தில், தளவாய் கிருஷ்ணசாமி - ராஜாம்பாள் இணையருக்குப் பிறந்தார். தந்தை காவல்துறை ஆய்வாளர். அவரது பணி நிமித்தம் பல்வேறு ஊர்களில் வாழ நேர்ந்ததால் மதனகல்யாணியின் பள்ளிப்பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது.

தமிழோடு, ஃப்ரெஞ்சைத் துணை மொழியாகக் கற்றார். உயர்நிலைக் கல்வியை 'செயின்ட் ஜோசப் ஆஃப் குளினி'யில் ஃப்ரெஞ்சுப் பிரிவில் படித்தார். 1951ல் ஃப்ரெஞ்சு 'செர்த்திபிக்கா'வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 'ஃப்ரெஞ்சு பிரவே' முடித்தார். ஃப்ரெஞ்சுக் கல்லூரியில் இளங்கலை 'பக்காலோ ரேயா' பயின்றார். பாரிஸ் பல்கலைக்கழகம் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1973ல், கர்நாடகா தார்வார் பல்கலைக் கழகத்தில், ஃப்ரெஞ்சில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழில் புலவர் பட்டம் பெற்றார். ஃப்ரெஞ்சு மொழி கற்பித்தல் தொடர்பான பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார்.



ச. மதனகல்யாணி, லிசே பிரான்சே பள்ளியில் தமிழ் மொழியோடு ஃப்ரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர் பணியை ஏற்றார். 1979 முதல் 1990 வரை புதுச்சேரி அல்லையன்ஸ் பிரான்சேவில் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், கர்நாடகா தார்வார் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். கணவர், சண்முகானந்தன். இவர்களுக்குப் பிள்ளைகள் மூவர்.

மதனகல்யாணி தமிழிலிருந்து ஃப்ரெஞ்சுக்கும், ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தார். ஆங்கிலத்திலிருந்து ஃப்ரெஞ்சுக்கும் சில நூல்களை மொழிபெயர்த்தார். ஃப்ரெஞ்சின் முக்கியமான ஆக்கங்கள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டு வந்தார். தமிழிலிருந்து சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்கள் உள்ளிட்ட சிலவற்றை ஃப்ரெஞ்ச்சில் மொழியாக்கம் செய்தார். அமெரிக்கா, ஃப்ரான்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றினார். மாணவர்களுக்குத் தமிழ், ஃப்ரெஞ்சு மொழிகளைக் கற்பித்தார். தனது படைப்பிலக்கிய, மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்காக ஃப்ரெஞ்சு அரசிடமிருந்து 'ஒபிசியே' (2011), 'செவாலியே' (2002), சிறுகதைக்கான விருது (1995), சிறந்த கவிதைக்கான பரிசு (1997), இலக்கிய விருது (1998) போன்ற பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றார். புதுச்சேரி அரசிடமிருந்து, 'கலைமாமணி விருது (2007), 'விடுதலைப் பொன்விழா மகளிருக்கான விருது' (2004) உள்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றார்.

ச. மதனகல்யாணி நூல்கள்
தமிழிலிருந்து ஃப்ரெஞ்சுக்கு: சிலப்பதிகாரம், புதுச்சேரி நாட்டுப் புறப்பாடல்கள், புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள், கரையெல்லாம் செண்பகப்பூ (சுஜாதா), கம்பனோடு ஒன்றும் பிரஞ்சிலக்கியங்கள், ஆராதனை, தூறல், பாரதியார் பாடல்கள்
ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கு: குட்டி இளவரசன் (மூலம்: அன்த்துவான் தெ சேன்த் எக்ஸூபெரி), கொள்ளைநோய் (மூலம்: ஆல்பெர்ட் காமூ), புதுச்சேரி வணிகத்தள ஊரின் வரலாறு (மூலம்: ழெரார் துய்வால்), தந்தை கோரியோ (மூலம்: பால்சாக்)


ச. மதனகல்யாணியின் வாழ்க்கை வரலாற்றை அ. லட்சுமிதத்தை எழுதினார். இந்நூலைக் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. மதனகல்யாணி, மே 13, 2023 அன்று காலமானார். இவர் புதுச்சேரியின் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பாளர். ஃப்ரெஞ்சு மொழி அறிஞர்களுள் ஒருவர்.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline