|
|
 |
"கொள்ளிட நதிகட்கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் வீடணனுக்குச் சற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டுபண்ண, வீடணன் இப்பெருமாளை இவ்விரு நதிகட்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றே கிடாத்தினான்"
என்னும் வசீகரத் தமிழில் பாப்பாக்குறிச்சி கிருஷ்ணய்யங்கார் 1908-ம் ஆண்டில் பதிப்பித்த தசாத்யாயீயில் ஸ்ரீரங்கம்பற்றி வருகிறது. அந்த ஆன்மீகச் சிரமங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை என்பதால் நேராகச் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்றும் அழைக்கப்படும் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி செய்த 1250-1268 காலத்து ஸ்ரீரங்கத்துக்குச் சடுதியில் போகலாம்.
ஹொய்சள மன்னன் கண்ணனூர்க்குப்பம் என்னும் இன்றைய சமயபுரத்தை தன் இரண்டாம் தலைநகராக்கி அங்குள்ள கோவிலில் பொன் வேய்ந்ததோடு ஒரு மாபெரும் தங்கப் புதையலைப் பதுக்கி வைத்தான்.
ஹொய்சள மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த நாள் ஒன்றில் சூரிய கிரகணத்தின் போது சோமளாகிரி மலைத்தொடர் பிளந்தது. அடுத்த நாள் பார்த்தால் மலையில் பிளவுகளுக்கிடையே பாளம் பாளமாய் பொற்படிமங்கள் கதிரவனின் ஒளியில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தன. அத்தனையும் அபரஞ்சிப் பொன்.
இந்தப் பொன்னைக் கைக்கொள்ள வேண்டாமென அவனது அமைச்சர் புலம்பினார். ஆனால் அதை உதறித்தள்ளி அப்பொன்னைக் கைப்பற்றிகொண்டான் அந்த அரசன். அந்த அபரஞ்சிப் பொன்னைக் கொண்டு, தான் கட்டிக்கொண்டிருந்த ‘போசலேஷ்வரம்' சிவன் கோவில் முழுவதையுமே பொன்னால் நிர்மாணித்து, திருவரங்கம் கோவிலைவிட அதிகப் புகழ்பெற வேண்டுமென ஆசைப்பட்டான்.
எட்டாவது திருச்சுற்று தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது. இதற்கு ‘அடைய வளைந்தான் திருச்சுற்று' என்ற பெயர் இன்றைய தமிழ்மொழி வளத்தின் காரணமாக அடைவளஞ்சான் என்று மருவிவிட்டது. அந்தத் தெருவில் எட்டு படிகள் வைத்து உயரமான தாழ்வாரமும் மூன்று கட்டும் கொண்ட வீட்டில்….
"ஏண்டி! தேர்த்தமாடின கையோட தலையைப் பின்னிக்கப்படாதா? அதுக்குள்ள என்ன வெளையாட்டு?"
"இரும்மா! இந்தப் பல்லாங்குழி ராத்ரிலேர்ந்து முடிய மாட்டேங்கறது!"
"ஏண்டி யாரானு தன்னந்தனியா பல்லாங்குழி வெளையாடுவாளோ?'
"இரு கோமளி! நம்மாத்து குட்டி புத்திசாலின்னா! தானே அதுல ஒரு சிக்கல கொண்டுவந்து தானே அத நிவர்த்தி பண்றாப்பல வெளையாடறா! அந்த புத்திசாலித்தனத்த ச்லாகிக்க வாண்டாமா? நீ ஆடுறி சின்னக்குட்டி!"
"ஏன்னா நா அவள தலைபின்னிக்க கூப்ட்டா நீங்க என்ன.."
"இருக்கட்டும்டி! கொழந்த புத்திசாலியா ஏதோ பண்றது. அதக் கெடுப்பானேன்! வரட்டும் அதுவா முடிச்சுட்டு வந்தப்றம் தலை பின்னிவிடேன்! நீ வேணா பாரு இந்தக்குட்டி என்னமோ பெருசா சாதன பண்ணத்தான் பொறந்திருக்கு!"
"அடப்போங்கன்னா! ஆச்சு இன்னம் ரெண்டு வருஷத்ல பெரிவளாய்டும். உடனடியா கல்யாணத்துக்குப் பாருங்கோ. ரங்கன் அருளால நல்ல எடமா அமையணூம்!"
"அதான் உப்பிலி இருக்கானே! இவளுக்கேத்தவன்னு ஆச்சாரியாரே சொல்லிடலியா! அத்தன பாசுரமும் என்னமா சொல்றான் தெரியுமா? தேசிகரே சொல்லியிருக்கார். அவன் கோவில்ல உசந்த எடத்துக்கு வந்துருவான்னு! அவனுக்கு வாக்கப்பட்டு நம்ம குட்டியும் ராஜ பரிபாலனம் பண்ணுவோடி!"
★★★★★
இங்கே மதுரையை ஆண்டுவந்த முதலாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனுக்கு, அதாவது எம் ஜிஆருக்கு வந்தனத்துடன் நீங்கள் நன்கு அறிந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுக்கு, கண்கள் விரிந்த செய்தி இந்த அபரஞ்சிப் பொன் விஷயம்.
உடனே ரத்த நாளங்கள் தெறிக்க ஜடாவர்மன் கொக்கரித்தான். "இதோ இருக்கிறது கண்ணனூர்க்குப்பம்! எடு படையை!"
"வேண்டாம் மன்னா! அது ஹொய்சளர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தாலும் கோவில் ஸ்தலம். அதன்மீது படையெடுத்தால் நமக்கும் துக்கம் சம்பவிக்கும்!"
"ஓய்! என்ன மந்திரி நீர்! ஆலோசனை சொல்லச் சொன்னால் பின்வாங்கச் சொல்கிறீர்!"
"இல்லை மன்னா! நான் சொல்லுவது……!"
"இப்படி வாரும்! விஷயம் தெரியுமா? ஹொய்சளன் அந்தக் கோவிலில் பொன் வேய்ந்து வைத்திருக்கிறான்! கூடவே ஏதோ அபரஞ்சிப் பொன்னாமே, அதை வேறு ஏகத்துக்கும் ஒளித்து வைத்திருக்கிறானாம்.போய் அவனை அடித்துப்போட்டு அள்ளிகொண்டு வந்துவிடுவோம்!"
"இல்லை மன்னா! அது தோஷப்பொன்னாம்! அதனால் நமக்கு கேடுதான் வரும்!"
"அமைச்சரே! நீர் எப்போதிலிருந்து இந்த தோஷ சமாச்சாரங்களையெல்லாம் நம்ப ஆரமித்திருக்கிறீர்? நான்காவது திருமணத்திற்குப் பிறகா?"
அமைச்சர் வெட்கத்துடன் "போங்கள் மன்னா" என்று சொன்னாரா என்பது பற்றி நமக்கு அதிகாரபூர்வத் தகவல் இல்லை.
★★★★★
"வாடா உப்பிலி! என்ன காலம்பரவே வந்துட்ட? கோவிலுக்குப் போலியா?"
"ஆய்டுத்து மாமா! இன்னிக்கு ஆச்சாரியார் நம்மாழ்வார் பாசுரம் "சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு" இருக்கோல்லியோ அதுபத்தி விளக்கம் சொன்னார்!"
"அதுல என்னடா விசேஷம்?"
"மாமா அதோட பாஷ்யம் சொல்றப்ப திருப்பதி மலைதான் சிந்திப்பவருக்கு மோட்சம் தரும்னு சொல்லிட்டு ஒரு கேழ்வி கேட்டார்1"
"என்ன கேழ்விடா?"
"பாசுரத்துல மோட்சம்ங்கற வார்த்தையே வரலியே! அப்ப எப்படின்னு! நாந்தான் பதில் சொன்னேன் மாமா?"
"அட ஆமால்ல! எனக்குமே அந்தக் கேழ்வி இருக்குடா? சொல்லு நீ என்ன விளக்கம் சொன்னே?"
"பாபம் புண்ணியம் இரண்டும் நீங்கிய சமன்கொள் வீடுங்கறாரே நம்மாழ்வார் அதுதான் மோட்சம்ன்னேன். ஆச்சாரியார் ரொம்ப சந்தோஷப்பட்டு ஆசிர்வாதம் பண்ணினார் மாமா!"
"சமத்துடா நீ! என்ன அழகா சொல்லிப்டே!"
"மாமா இதச் சொன்னது யாரு தெரியுமா? நம்ம குட்டிதான்! அவளுக்குப் பாசுரத்துக்கு அர்த்தமெல்லாம் அப்படியே தெரிஞ்சுடறது! ரங்கன் அனுக்கிரகம் அதீத புத்திசாலித்தனமா வந்து ஒட்டிண்டு இருக்கு!"
"ஏதேது குட்டியா இதெல்லாம் சொல்லித்து! அட்டேயப்பா! சந்தோஷண்டா எனக்கு! நீங்க ரெண்டு பேரும்……சரி, சரி வா! மாமி இன்னிக்கு அக்கார அடிசல் பண்ணிருக்கா ஒரு வாய் சாப்ட்டுட்டு அப்றமா குட்டியோட வெளையாடுவியாம்!"
★★★★★
அதீத இறைபக்தியால் கோவில்களுக்கு நன்கொடை வழங்குவதை ஒரு நியதியாகவே கொண்டிருந்த சடையவர்மனுக்கு இந்த அபரஞ்சித் தங்கம் உறுத்தியது. வீர சோமேஸ்வரன் ஆட்சிக்கு வந்தவுடன் 1262ல் சடையவர்மன் படையெடுப்பைத் துவக்கி, ஹொய்சளர்களை தொம்சம் செய்து தங்கத்தையும் மற்ற கோவில் பொக்கிஷங்களையும் பிடுங்கிக்கொண்டான்.
"மன்னா! போதும் இந்தப் படையெடுப்பு! எவ்வளவு உயிர்கள் பலி!
"சரி அமைச்சரே! இப்போது இந்தத் தங்கத்தை நான் அரங்கனுக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்ன செய்யலாம் சொல்லும்?"
"மன்னா! தச்சு முழத்திலே ஏழு முழம் இருக்கும் நம் பட்டத்து யானைமேல் இந்தப் பொக்கிஷங்களை ஏற்றித் துலாபரமாக அரங்கனுக்கு அளித்துவிடுவோம்!"
"மிக நல்ல யோசனை! யார், உம் நாலாவது மனையாள் தெரிவித்தாரா?"
ஆஸ்தான மண்டபமே அதிரும் சிரிப்பு.
"நடக்கட்டும் துலாபாரம்!"
"என்ன அமைச்சரே! பொன்னைத் திருவரங்கத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டீரா?"
"ஒரு சிக்கல் மன்னா?"
"என்னய்யா சிக்கல்! பொதி சுமக்கும் பட்டத்து யானைக்கு இடக்கரடக்கல் நோயா? இல்லை எடை போடும் வீரர்களுக்கு ஏதானும் ஸ்த்ரீ சம்மந்தமாக…."
"இல்லை! இல்லை அரசே! திருவரங்கத்துக்கோவில் பெரியோர் நம் ஸ்வர்ண தானத்தை ஏற்க மறுக்கிறார்கள்!"
"என்ன, நான் கொடுக்கும் தானத்தை ஏற்க மறுப்பா?"
"ஆம் அரசே!"
"ஏன் நீர் ஏதானும் தோஷம் அது இதுவென்று புரளி கிளப்பிவிட்டீரா?"
"அபசாரம்! நான் வாயே திறக்கவில்லை மன்னா! ஹொய்சள அமைச்சரின் புதல்வி…..?"
"மறுபடி பெண் சமாச்சரமா? அவளுக்கு என்னவாம்?"
"அவள்தான் திருவரங்கத்து ஆச்சாரியர்களிடம் சொல்லியிருக்கிறாள். இந்த அபரஞ்சிப்பொன் கொண்டவர், அது இறையே ஆனாலும் துன்பம் சம்பவிக்கும் அதனால் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று!"
"என்ன சோதனை அய்யா இது? அவனவன் பொன்னைக் கண்டால் வாயையும் பிருஷ்டத்தையும் பிளக்கிறான்! இந்த ஆச்சாரியர்களுக்கு ஏன் இந்த மூட நம்பிக்கை!"
"ஆகவே, மன்னர் மன்னா! தாங்களே வந்து அவர்களிடம் பேசினால் ஒருவேளை அவர்கள் மசிந்து ஏற்கலாம்!"
"ஒரு மன்னன் சண்டை போடலாம், அரசாட்சி செய்யலாம். இப்படி கோவில் கோவிலாகப் போய்க் கெஞ்ச வேறு வேண்டுமா? என்ன பிழைப்பய்யா இந்த அரசப்பிழைப்பு! சரி! என் பட்டத்து யானையைத் தயார் செய்யுங்கள். அதற்கான எடைக்கு எடை பொன்னையும் பொருளையும் ஏற்றித் திருவரங்கம் கோவிலுக்குச் சமர்ப்பிக்க சடையவர்ம சுந்தரபாண்டியன் வருவதாகத் தகவல் அனுப்புங்கள்!"
சடையவர்மர் வரும் சேதி வந்தவுடனேயே திருவரங்கத்தின் கோவில் மண்டபத்தில் கூடிப் பேச ஏற்பாடாயிற்று. அன்றைய ஸ்ரீரங்கத்து வாசிகளுக்கு தினமும் இரண்டு வேளை கோவிலுக்கு வந்து அரங்கனை தரிசிப்பதும் வேளாவேளைக்கு சாப்பிட்டுத் தூங்குவதுமின்றி வேறு பெரிய வேலை ஏதுமில்லை போல. மண்டபத்தில் கூட்டம் என்றவுடன் அதென்ன அப்படியாப்பட்ட அக்கப்போரென்று பார்க்கக் கூடிவிட்டார்கள்.
"என்ன தேசிகரே! பட்டத்து யானையே துலாபாரமாக நம் அரங்கனுக்கு வரப்போறதாமே! பாண்டிய மன்னரே நேரில் வறாராம்?"
"பாராட்ட வேண்டிய சமாஜாரமில்லையா! பாண்டியன் சைவனய்யா! அவனே வைஷ்ணவ அரங்கனுக்கு தானமளிக்கிறான் என்பதுபெரிய விஷயமய்யா!"
"ஆனாலும் இதுல ஒரு வில்லங்கம் இருக்காமே?"
"வில்லங்கமா?"
"அது அபரஞ்சித் தங்கமாம். தோஷமானதாம்.ஹொய்சாளர்களை அழித்துவிட்டு இப்போது பாண்டியனிடம் வந்திருக்கிறது. எதற்கு வம்பு என்று அவன் அதைத் திருவரங்கத்துக்குத் தானமாகத் தருகிறான்!"
"அபரஞ்சிப்பொன் எவ்வளவு தெரியுமா?"
"அதிகமோ?
"ஓய்! அதிகமா! ஏழு தச்சு முழம் உயரமய்யா அந்தப் பட்டத்து ஆனை! அதோட எடைக்கு எடை தங்கம்னா எத்தனை இருக்கும், அடேயப்பா!"
"அரசனுக்காகவேனும் ஆச்சாரியார் அதை வாங்கிக்கொள்ளலாம். உலகளந்த பெருமாளுக்கு எந்த தோஷம் என்ன பண்ணிப்பிடும்!"
"அப்படிச் சொல்லாதேயும்! ஆச்சாரியாருக்கு தெரியாதா?"
"அதில்லைங்காணும்! பாண்டியன் மறுபடி மறுபடி போன ரெண்டு வருஷமா வந்து கேட்டுண்டே இருக்கானாமே!"
ஆச்சாரியர்களும் கோவில் பெரிய மனிதர்களும் என்ன செய்வது என்று தவித்தார்கள். இத்துணைப் பொன் கோவிலுக்குக் கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் தோஷமிருக்கிறதாமே? கேடு வரும் என்றல்லவா பயங்காட்டுகிறார்கள்!
★★★★★
"மாமா! நா குட்டிய அழச்சிண்டு கோவிலுக்குப் போறேன்! நீங்க வரேளா?'
"இப்ப என்னடா உப்பிலி கோவில்ல விசேஷம்! ஆச்சு கோவில் நடைய சாத்தற நாழி வந்துருமே?'
"இல்லடி! இன்னிக்கு ஆச்சார்யர் கூட்டம் வரச்சொல்லி இருக்கார்!"
"என்னத்துக்குன்னா?'
"அதான் ஜடாவர்மன் ரெண்டு வருஷமா கேட்டுண்டு இருக்கானே அந்த அபரஞ்சிப் பொன்ன திருக்கோவில்ல ஏத்துக்கணும்னு. அதுபத்தி முடிவு எடுக்கப்போறா?"
"ஏன்னா அதுதானே அந்த ஆர்யபடாள் வாசல்ல வெச்சிருக்கா?"
"அதேதாண்டி! சரி கொழந்தேளா நீங்க போய் கோவில்ல வெளையாடுங்கோ. நா ஆச்சார்யார் கூட்டத்துக்கு போய்ட்டு வரும்போது உங்கள அழச்சிண்டு வந்துர்றேன்!"
கோவில் மண்டபத்தில் ஆச்சார்யரும் பட்டரும் இன்னும் பல சாஸ்த்ரோக்தப் பெரியவர்களும் கூடியிருக்க முன்னால் ஸ்ரீரங்கத்து வாசிகள் ஆர்வத்தோடும் வம்புக்கான விஷய தாகத்தோடும் கூடியிருந்தனர்.
"இங்க எதுக்காகக் கூடியிருக்கோம்னு உங்களுக்கெல்லாம் தெரியும்!"
பல தலைகள் ஆமோதிப்பாக ஆடின.
"அத்தனை தங்கத்தையும் நமது அரங்கனுக்குத் தர்றதுக்குப் பெரிய மனசு வேணும். அது ஜடாவர்ம சுந்தரபாண்டியனுக்கு இருக்கு!"
"இல்லியா பின்னே? அதோட ஆளுயர ஸ்வர்ண விக்கிரகம் பண்ணிக் கொடுத்திருக்கான். துலா புருஷ மண்டபம் கட்டியிருக்கான். எவ்வளவோ பொன்னும் மணியுமா அரங்கனுக்குக் கொடுத்திருக்கானே!"
"அது மட்டுமா? ரத்னாங்கியும், பெரிய பெருமாளுக்கு மாணிக்கத்தால் திருவாபிஷேகமும், வைரத்தால் திருவாபிஷேகமும் சாதித்திருக்கிறானே!"
"ஆக இதே மாதிரிதான் அபரஞ்சிப் பொன்னையும் சுவாமிக்கு தானமாக்கறேன்னு சொல்றார் ராஜா!"
"ஆனாலும் எங்க்களுக்கு மனசுல கிலேசம் இருக்கு ஸ்வாமின்!
"என்ன கிலேசம்?
"தங்கமே தோஷம்ங்கறா? போறாத்துக்கு கொள்ளை அடிச்ச தங்கம் வேற!"
"சண்டையிட்டு வெற்றி பெற்று சந்தானத்தைக் கொள்ளையடிப்பது யுத்த தர்மம்தானே? அதனால அரசருக்கெல்லாம் என்ன ஆகப்போறது?"
"எனக்கென்னமோ அபரஞ்சி தோஷம் அவனோட குலத்தை சும்மா விடாதுன்னு ஒரு பயம் இருக்கு!"
"வேண்டாமய்யா! நம் வாயால் சொல்ல வேணுமா! நாம ஜடாவர்மனை வாழ்த்துவோம். அரங்கனுக்கு இத்தனை செய்தவா யாருமே இல்லையே. பார்த்தீரா, இப்பவே ஸ்வாமி என்னமா ஜொலிக்கறார், தகதகன்னு! அபரஞ்சிப் பொன்னும் வந்து சேர்ந்தா, ரங்கனோட தேஜஸே மனுஷாளை உருக்கிடுமே சுவாமின்!"
பேச்சின் சப்தம் உயரவே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளும் அங்கே வந்து வேடிக்கை பார்த்தனர்.
ஆச்சாரியார் குறுக்கிட்டார். "இப்ப சிக்கல் அந்தப்பொன்னை வாங்கிண்டால் சீரங்கத்துக்கு கேடு வரும்ங்கறதா?'
பல தலைகள் ஆமோதித்தன.
"நிச்சயம் வரும்! இல்லேன்னா, இத்தன செல்வத்தை யாரு வாரிக் குடுப்பா?"
"திருஆனைக்காவுக்கு குடுக்கறதுதானே?'
"அதெப்படி குடுப்பார் ராஜா! அவர் சைவராச்சே! அதான் நம்ம வைஷ்ணவா கோவிலுக்கு குடுக்கறார். கெடுதல் வந்தா வைஷ்ணவாளுக்குதானே வரும்!"
"தோஷமெல்லாம் சுவாமிய என்ன பண்ணிப்பிடும்?'
"சீரங்கம் புண்ய க்ஷேத்ரம்! நமக்கு ஒண்ணும் ஆகாது! பெருமாள் பாத்துப்பார்!
ஆச்சார்யர் குறுக்கிட்டார்.
"எல்லோரும் ஒரு முடிவுக்கு வாங்கோ!"
"ஆச்சாரியாரோட எண்ணம் என்னன்னு…?"
"எனக்கு லேசா கிலேசம் உண்டு! ஆனானப்பட்ட ராமபிரானே சாபத்தாலதானே சீதா பிராட்டியைப் பிரிந்து, கானகம் ஏகி, அலைந்து திரிந்து… யாரா இருந்தா என்னய்யா, சாபம் விடுமா?"
பட்டரும் இன்னம் சில பெரியவர்களும் ஆமோதித்தனர்.
"இதுல என்ன குழப்பம் இருக்கு?"
ஒரு மெல்லிய இளங்குரல் மழலை இன்னும் மாறாமல் ஒலிக்க, கூட்டமே திரும்பிப் பார்த்தது.
"குட்டி! நீ சும்மா இரு! இது பெரியவா விஷயம்!"
உப்பிலி குட்டியின் கையைப் பிடித்துத் தடுத்தான். கூட்டத்தில் இருந்த குட்டியின் தந்தை வரதன் எழுந்து மன்னிப்புக் கேட்கும் பாவனையில் நின்றார்.
ஆச்சாரியார் கண்களை இடுக்குப் பார்த்தார்.
"யாரு அது? இங்க வா கொழந்தை!"
குட்டி தன் பட்டுப்பாவாடையை லேசாக உயர்த்திப் பிடித்தபடி தைரியமாகக் கூட்டத்தின் முன் சென்று ஆச்சாரியாரிடம் நின்றது.
"யாராத்துக் குழந்தைம்மா நீ?"
குட்டி திரும்பி எழுந்து நிற்கும் தந்தையைப் பார்த்தது.
"அட! நீ சீமாந்தாங்கி வரதன் பொண்ணா? உன்னோட ஆயுஷ் ஹோமத்துக்கு நானே வந்தேனே?"
"சுவாமின்! க்ஷமிக்கணும். குழந்த ஏதோ அதிகப்ரசிங்கித்தனமா…."
"இல்லை இல்லை வரதா! நாம கூட்டம் போட்டு அபிப்ராயம் கேட்கும்போது குழந்தை முன் வந்திருக்கா. அவளையும் கேப்போமே!"
கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.
"நப்பின்னை பொண்ணா? அது லங்கிணியாச்சே!"
"பெரியவான்னு மரியாதை இல்லாம என்ன வளர்த்திருக்கான் வரதன்!
"சீமாந்தாங்கியோனோ, அவன் வாழப்பட்டையில அடிப்பான். இது வார்த்தையால அடிக்கறது!"
"எல்லாரும் செத்த அமைதியா இருங்கோ! கொழந்தே! நீ சொல்லும்மா! என்ன பண்ணலாம்?'
குட்டி தயக்கமின்றி பேசியது. "உடனே எல்லா பொன்னையும் கோவிலுக்கு எடுத்துக்கலாம்!"
"தோஷம் வரும்ங்கறாளே?'
"பெருமாள் மேல நம்பிக்கை இருக்கறவாளுக்கு தோஷம்னு ஏதானும் உண்டா மாமா?"
"இல்லைதான்! ஆனாலும் சாபம் நம்மை துன்புறுத்துமே?"
"கஷ்டம் நஷ்டம் எல்லாத்துக்கும் அவரே பொறுப்பு! அவரென்ன நம்ம மாதிரி மனுஷரா? 'நீ இதப் பண்ணினியா, இந்தா உனக்கு தண்டனை'ன்னு குடுக்கறதுக்கு? அவரா தரார்! அவரே வேணுமின்னா எடுத்துப்பார். நமக்கு நல்லது பண்ற பெருமாள் கஷ்டம் வந்தா மட்டும் கை விட்டுறுவாரா?"
"நீ பேசறதிலயும் ஒரு நியாயம் இருந்தாலும்…."
"ஏன் சந்தேகம்? ராஜா குடுத்துருக்கார். நாம வாங்கிப்போம். அத்தனை தங்கம் இருந்தா எத்தன நல்லது பண்ணலாம்! இன்னும் எவ்ளோ பேருக்கு அன்னதானம், கன்னிகா தானம், கோதானம், வித்யா தானம்னு பண்ணலாம்."
"அது சரிம்மா குழந்தை! அந்த அபரஞ்சிப்பொன் பத்தி என்ன சொல்லியிருக்கு கேட்டியா? அந்த த்ரவ்யம் ஸ்பரிகரரான ஸ்வாமிக்கு திருவுள்ளமாகாத படியாலே இரண்டு வருஷமா மறிப்பட்டு கிடக்கே!"
"திருவுள்ளம்ங்கறது நாம சொல்றதுதானே! இப்ப நான் சொல்றதக் கேட்டு ராஜா குடுத்த பொன்னை வாங்கிண்டா திருவுள்ளமாய்டுமே!"
"அதனால பெருந்துன்பம் வரும்ங்கறாளே!"
"கஷ்டம் வந்தா பெருமாள் இருக்காரோல்லியோ! நாமெல்லாம் ரங்கனச் சுத்திதானே இருக்கோம். அவராலதான் நம்ம வாழ்க்கையே நடக்கறது!"
ஆச்சாரியார் ஆடிப்போனார்.
"குழந்தே! உன் வாய்லேர்ந்தா இந்த வார்த்தைகள் வந்துது! இல்ல இல்ல அந்த ரங்கனே வந்து பேசினா மாதிரி இல்ல பேசிப்ட்டே!"
ஆச்சாரியார் குழந்தையின் தலைமீது கை வைத்து ஆசிர்வாதம் பண்ணினார்.
"வரதா! இங்க வா!"
சீமாந்தாங்கி வரதன் கூட்டத்துலிருந்து வந்து வரதன் கைகட்டி வாய் பொத்தி ஆச்சாரியாரின் அருகில் வந்து பவ்யமாக நின்றான்.
"ஏண்டா இது மனுஷக்குழந்தையாவே தெரியலியே! ரங்கனே வந்து சொல்லிட்டாப்லன்னா இருக்கு. என்ன சொல்றேள், நாம அந்த பொன்னை வாங்கிக்கலாம். அதனால வர்ர நன்மை தீமைகளுக்கு ரங்கனே பொறுப்பு. நாம உளமார அவனைச் சேவிச்சுண்டே இருப்போம், சரியா?"
தலைகள் ஆடின. வாய்கள் முணுமுணுத்தன. வரப்போகும் சுபிட்சத்தை எதிர்நோக்கி கண்களும் ஆசைகளும் விரிந்தன.
"மாமா! நா வெளையாடப் போகட்டா?"
"இரும்மா கொழந்தே! அந்த ஹாரத்தைக் கொண்டாடா!"
ஆச்சார்யார் கோவிலுக்கு தானமாய் வந்த ஒரு ரத்தின ஹாரத்தை எடுத்துக் குழந்தையின் கழுத்தில் போட்டார்.
"க்ஷேமமா இரும்மா! வரதா! இவள கொழந்தை குட்டின்னே கூப்ட்டுண்டு இருக்கோமே! எத்தன புத்திசாலியா இருக்கா!"
வரதன் தலை குனிந்து கண்ணில் நீர் பெருக ஆச்சாரியாரை வணங்கினான்.
"வரதா! அவளுக்கு என்ன நாமகரணம் செஞ்சு வெச்சே?"
"பூமித்தாயோட பேரு. சகல சம்பத்துக்களும் அவளுக்கு வாய்க்கணும்னு ஆசையாய் வசுந்தரான்னு பேர் வெச்சோம் சுவாமி!"
"பொருத்தமான பேருதான்! இவ மட்டுமில்ல இவளோட பரம்பரை வாரிசுகளும் இவள மாதிரியே புத்திசாலித்தனத்திலயும் முடிவெடுக்கறதுலயும் சூடிகையா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்றேன்!"
"….நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே……."
குதூகலமாகப் பாடிக்கொண்டே குட்டி, இல்லை இல்லை, வசுந்தரா, மீண்டும் விளையாட்டைத் தொடர ஓடிப்போனாள்.
ஆச்சாரியர் ச்ரேஷ்டர். தர்மவான். அரங்கனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரின் வாக்கு பொய்க்காது.
பொய்க்கவில்லை |
|
ஜெயராமன் ரகுநாதன், சென்னை |
|
|
|
|
|
|
|