|
|
 |
"அம்மா" என்று மாமியாரை அழைத்துக்கொண்டே உள்ளே வந்தாள் கீதா. "என்னம்மா?' என்ற மாமியாரிடம், "மூணாவது ஆத்து, அதுதாம்மா, நித்ய மல்லி கொடி பூத்துக் குலுங்குமே, அந்த பஜனை மாமியோட நாட்டுப்பொண் ராஜியும் பால் பூத்துக்கு வந்திருந்தா. பேச்சுவாக்குல 'உங்க கோத்திரம் என்னன்னு' கேட்டா. நானும் ஸ்ரீவத்ச கோத்திரம்னு சொன்னேன்" என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றுவிட்டாள்.
மாமியார் வசுமதி அதிகாலையில் குளித்துவிட்டு பேரக் குழந்தைகளுக்கு இட்லி சட்னியும் பெரியவர்களுக்கு சத்துமா கஞ்சியும் செய்துவிட்டு, ஸ்ரீராம நாமம் எழுத அமர்ந்தார். ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும். "பாட்டி, பாட்டி" என்று கூப்பிட்டுக்கொண்டே ரூமிலிருந்து வெளியில் ஓடிவந்த பேத்தி வைஜயந்தி, 'சகோத்திரம்னா என்ன பாட்டி'? என்று கேட்டாள். அவள் கண்கள் அழுது சிவந்திருந்தன. "ஏண்டி அழுதியா?" என பாட்டி கேட்க, பாட்டியின் மடியில் முகத்தைப் புதைத்து அழ ஆரம்பித்தாள் வைஜயந்தி. "யாருடி அந்தப் பையன்?" என நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் பாட்டி. "மூணாவது ஆத்து பஜனை மாமியோட பேரன் ராகவன்" அழுதுகொண்டே சொன்னாள் பேத்தி.
"ராகவனை எப்படித் தெரியும் உனக்கு? நாம் இந்தாத்துக்கு வந்த உடனே நீ கேம்ப்பஸ்ல செலக்ட்டாகி வேலைக்கு சென்னை போயாச்சு. அடுத்த மாசமே கொரோனா லாக்டவுன் வந்துடுத்து. அப்புறம் எப்படி?" என்று அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினார் பாட்டி.
வைஜயந்தி நடந்தவற்றை ரீவைண்ட் செய்தாள். "நானும் அவனும் ஒரே ஆபீஸ் பாட்டி. லாக்டவுன் அறிவிப்பு வந்தவுடன் லக்கேஜோட நான் பஸ்ஸுக்காக காத்துண்டிருந்தேன். அப்போ ராகவனும் அங்க வந்தான். ஆமா நீ ஸ்ரீதர் குரூப்லதானே இருக்க. எந்த ஊருக்குப் போகணும்? டிக்கெட் வாங்கிட்டியா?" எனக் கேட்டான், மதுரைக்குப் போகணும்னு பதில் சொன்னேன். நானும் மதுரைதான். என்னோட பொட்டிய வச்சிண்டு இங்கேயே நின்னுண்டிரு. நான் போயி ரெண்டு பேருக்கும் டிக்கெட் வாங்கிண்டு வரேன் என்று சொல்லிவிட்டு, கூட்டத்தில் முட்டி மோதி டிக்கெட் வாங்கி வந்தான் ராகவன்.
பஸ் செங்கல்பட்டில் நின்றது. "என்ன சாப்பிடற?" என ராகவன் கேட்க "ஒன்றும் வேண்டாம் " என்றாள் வைஜயந்தி. "பட்டினியோட மதுரை வரைக்கும் போக முடியாது. சூடா தோசை வாங்கிண்டு வரேன், சாப்பிடு" என்று சொல்லிவிட்டு தோசை வாங்கிக் கொடுத்தான். "ஆமா இத்தனை நாழி உன் பேரே கேக்கலையே. ஐ ஆம் ராகவன்" என்று கூறினான். "என் பெயர் வைஜயந்தி".
பக்கத்தில் ராகவன் இருக்கும் தைரியத்தில் நன்றாக உறங்கினாள் வைஜயந்தி. காலையில் பஸ் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தடைந்தது. கீழே இறங்கியவுடன், "எங்க போகணும்?" என்று ராகவன் கேட்டவுடன் "டிவிஎஸ் நகர்" என்றாள் வைஜயந்தி. "ஓ மை காட்! நானும் அங்கேதான். ஆமா, எந்த ரோடு?" "ஸ்ரீனிவாசா ரோடு". "ஓ காட்! உன்னை எப்படி மிஸ் பண்ணினேன்?" என ராகவன் சொல்ல, வைஜயந்திக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவளுடைய களையான முகத்தையும் சிரிப்பையும் பார்த்து காதல் வயப்பட்டான் ராகவன். வைஜயந்திக்கும் அவனை ஓரளவு பிடித்துப் போய்விட்டது. "எங்க வீடும் அதே ரோடுதான். பஜனை மாமி ஆம்னு சொன்னா எல்லோருக்கும் தெரியும். என்னோட பாட்டிதான் அது. எங்காத்து வாசல்ல நித்யமல்லி பூத்திருக்கும்" என்றான். "நாங்க அங்க வந்த உடனேயே நான் மெட்ராஸில் வேலைக்கு வந்துட்டேன்" என்றாள் வைஜயந்தி. "சரி வா, ஆட்டோல போலாம். உன்னோட போன் நம்பர் சொல்லு" என்றவன் அவளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து , தன் நம்பரை ஸேவ் பண்ணச் சொன்னான். இருவரும் ஆட்டோவில் ஏறிச் சென்றனர்.
ஆட்டோ டிவிஎஸ் நகரை நெருங்கியவுடன் "நான் இண்டியன் பேங்க் கிட்ட இறங்கிக் கொள்கிறேன்" என்றாள் வைஜயந்தி. அவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு "நான் அங்க இறங்கிக்கறேன். நீ ஒங்காத்து வாசல்ல இறங்கிக்கோ" என்றான் ராகவன்.
ஊருக்கு வந்த ஒரு வாரத்திலேயே வைஜயந்தியை தன்னுடைய குரூப்புக்கு மாற்றிக்கொண்டு அடிக்கடி அவளுடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டான்.
இப்படியாக ஆரம்பித்த அவர்கள் காதல், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்தது. கொரோனா கட்டுப்பாடுகளில் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எப்படியும் சென்னைக்குத் திரும்பும்போது தானும் வைஜயந்தியும் திருமணம் செய்துகொண்டு தம்பதியாகச் செல்லவேண்டும் எனத் தீர்மானித்தான் ராகவன்.
அவனுடைய எண்ணத்தை அறிந்தவள்போல் அவனது பாட்டியும் "ஏண்டிம்மா ராஜி, காலாகாலத்துல ராகவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ண வேண்டாமா? அவனுக்கும் வயசு 27 ஆறது." என்றார். "இந்த கொரோனா டயத்துல என்ன பண்றதும்மா?" என ராஜி சொல்ல "எல்லாம்தான் ஆன் லைன்ல இருக்கே. பொருத்தம் பாத்துட்டு, வீடியோ கால்ல பேசிட்டு, அப்புறமா ஒருதரம் நேர்ல பாத்து பேசிண்டா போச்சு" என்றார் பாட்டி.
இதுதான் சரியான சமயம் என்று ராகவன் வைஜயந்தியைப் பற்றிச் சொன்னான். "ரொம்ப நல்லதாப் போச்சுடா. எங்களுக்கும் வேலை மிச்சம். அவா இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆறது. அதுக்குள்ள கொரோனா வந்துடுத்து. ரொம்ப பேசிப் பழக முடியல. சகோத்திரமா இல்லாம இருந்தா போதும்" என்று பாட்டி சொன்னவுடன் ராகவனுக்கு ஒரே குஷி. "பெருமாளே! வேற கோத்திரமா இருக்கணும்" என்று வேண்டிக் கொண்டான்.
அதற்காகத்தான் அவனது அம்மா ராஜி, காலையில் கோத்திரம் குறித்து விசாரித்திருக்கிறார். ஸ்ரீவத்ச கோத்திரம் எனத் தெரிந்தவுடன் பாட்டி "என்னடா இது சகோத்திரமானா இருக்கு. இப்ப என்ன பண்றது?" என்று கூற, தன் வாழ்க்கையில் கோத்திரம் ஒரு வில்லனாக மாறும் என்று கனவிலும் நினைக்காத ராகவன், வைஜயந்திக்கு ஃபோன் செய்து புலம்பி விட்டான்.
வைஜயந்தியும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், இதோ பாட்டியிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாள். "ப்பூ இதுதானா சமாச்சாரம்? முதல்ல அழுகைய நிறுத்திட்டு, ராகவனுக்கு கால் பண்ணி அவா பாட்டிகிட்ட ஃபோனைக் குடுக்கச் சொல்லு" என்றார். வியப்புடன் பார்த்த பேத்தியிடம் "என் ராஜாத்திக்குப் பிடிச்ச பையனா பார்க்க வேண்டியது என்னோட வேலைடி கண்ணு" என்றார்.
வைஜயந்தி ராகவனைக் கூப்பிட, அவனும் தன் பாட்டியிடம் கொடுத்தான். "யாரு பஜனை மாமியா? நமஸ்காரம். நான் வைஜயந்தியோட பாட்டி பேசறேன். கொழந்த இப்பதான் விஷயத்தைச் சொன்னா. இன்னைக்கு நாள் ரொம்ப நன்னாயிருக்கு. நீங்க எல்லோரும் இன்னைக்கு சாயந்திரம் எங்காத்துக்கு வாங்களேன் பேசலாம்" என்றார். "என்ன மாமி சகோத்திரமா இருக்கே!" என்று ராகவனின் பாட்டி சொல்ல, "அதெல்லாம் பரவாயில்ல. நீங்க வாங்கோ, எல்லாம் நல்ல விஷயம்தான்" என்று இவர் சொல்ல ஒரே புதிராக இருந்தது.
பாட்டிகள் இருவரும் வீட்டில் உள்ள ஆண்களிடம் விஷயத்தைச் சொல்லி, எப்படியும் இந்த முயற்சி நல்லபடியாக முடியவேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
ராகவன் வீட்டில் ஒரு பக்கம் பாட்டி நித்யமல்லி பூவைத் தொடுத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் அம்மா செவன் கப் செய்து கொண்டிருந்தாள். "பேராண்டி ராகவா! அவாத்துக்குப் போறச்ச ஞாபகமா ஃபுல் பேண்ட் போட்டுக்கோடா" என்று கிண்டலடித்தாள் பாட்டி.
வைஜயந்தி வீட்டில் மாமியாரும் மருமகளும் பஜ்ஜி சொஜ்ஜிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
மாலை ஐந்து மணி அளவில் ராகவன் தனது பாட்டி, தாத்தா, அம்மா, அப்பாவுடன் வைஜயந்தி வீட்டிற்கு வந்தான். இரண்டு குடும்பங்களும் கலந்து பேசியதில், இருவருக்கும் பொதுவான உறவினர்களைப் பற்றித் தெரியவர, அனைவருக்கும் மகிழ்ச்சி. வைஜயந்தி வந்து சபைக்கு நமஸ்காரம் செய்தாள். பிங்க் கலர் சுடிதாரில் பார்க்க மிகவும் லட்சணமாக இருந்தாள். ராகவனின் பாட்டி "அம்மாடி ராஜி. கொழந்தைக்கி தலையில அந்தப் பூவ வச்சிவிடு" எனச் சொல்ல, ராஜியும் அப்படியே செய்தார்.
"எல்லாம் ஓகே, ஆனா கோத்திரம்" என்று ராகவனின் பாட்டி இழுக்க, வைஜயந்தியின் தாத்தா பேசினார். "எங்க கோத்திரமும் ஸ்ரீவத்ஸம் தான். ஆனா..." என்றவுடன் "என்ன அனா ஆவன்னா" என்று அனைவரும் அவர் முகத்தைப் பார்க்க "எங்க பேத்தி வைஜயந்தி கௌண்டின்ய கோத்திரம். ஏன்னா அவ எங்க பொண்ணு வயித்துப் பேத்தி" என்று முடித்தார். அங்கு ஒரே சிரிப்பலை மகிழ்ச்சி ஆரவாரம்.
"கார்த்தால ராகவனோட அம்மா கோத்திரம் என்னன்னு கேட்டதும், விஷயம் என்னன்னு தெரியாம எங்க நாட்டுப் பொண்ணு எங்க கோத்திரத்தை சொல்லியிருக்கா. அதனால்தான் ஒரு சின்ன சலசலப்பு.
"எங்க பொண்ணும் மாப்பிள்ளையும் பஞ்சாப் ஸ்டேட்ல ஆதம்பூர்ல ஏர் ஃபோர்ஸ்ல டாக்டரா இருக்கா. அவா மாமியார் மாமனார் அமெரிக்கால பெரிய பிள்ளைகிட்ட இருக்கா. எங்க பேத்தி பி.ஈ. படிக்க இங்கே எங்களோட வந்து தங்கி, படிப்பு முடிஞ்சு வேலையும் கிடைச்சிடுத்து. நாங்க எல்லா விஷயத்தையும் பொண்ணு, மாப்பிள்ளை, அவா அப்பா அம்மா எல்லார் கிட்டயும் சொல்லிட்டோம். நன்னா விசாரிச்சு எங்களுக்குத் திருப்தினா, மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்கச் சொல்லிட்டா. எங்களுக்கு பரம திருப்தி. உங்க அபிப்ராயம் என்ன?" என்று முடித்தார் தாத்தா.
ராகவனுடைய தாத்தாவும் "என்னடா ராகவா? எங்களுக்கும் சம்மதம்னு சொல்லிடட்டுமா" என்று கேட்க, "இன்னுமா சொல்லல?" என்று ராகவன் கேட்க அங்கே சிரிப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை. |
|
உமா ஹைமவதி ராமன், பெங்களூரு, இந்தியா |
|
|
|
|
|
|
|