Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | வாசகர் கடிதம் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம்
- ரமேஷ் கோபாலகிருஷ்ணன்|பிப்ரவரி 2025|
Share:
1984. மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம். எங்கள் ஊரில் அந்த நாட்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ரசிகர் மன்றம். எங்கள் தெருவில், பொரிக்கடை முருகன் அண்ணனுக்கு நாலு கடைகள் ஒரே வரிசையில் இருந்தன. அதில் ஒரு கடையில்தான் ரவி அண்ணன் ஒர்க்‌ஷாப் இருந்தது. அங்கு காலியாக இருந்த இன்னொரு கடையில் ரசிகர் மன்றம் வெகுவேகமாக திட்டமிடப்பட்டு கோலாகலமாகத் திறக்கப்பட்டது.

ரவி அண்ணன்தான் தலைவர். மன்சூர், கணேஷ் கருணாநிதி, சிவக்குமார், ராஜா, தண்டபாணி இன்னும் பலர். இவங்க எல்லாருமே எங்களுக்கு அண்ணங்கதான். இவங்க எல்லாரும் மன்றத்துல பொறுப்புல இருந்தாங்க.

மன்மத ராஜாக்கள் படம் அந்த வருஷம் பொங்கலுக்கு ரிலீஸ். அப்ப ஊருல ஏழெட்டு ரசிகர் மன்றங்கள் இருந்துச்சு. தேர்வீதியில் ரஜினி, கமல் ரசிகர் மன்றம் இருந்துச்சு. அவங்க படங்க ரிலீஸ் ஆகும்போது அந்த வீதிப் பசங்க ஆட்டம் தாங்காது. அந்த வீதிக்காரப் பசங்களுக்கும் எங்களுக்கும் எப்பவும் ஆகாது. அவனுங்க எங்கள எதிலும் சேத்திக்கமாட்டானுங்க. நாங்களுந்தான் அவனுங்கள எதிலும் சேத்திக்கமாட்டோம்.

அந்த வருஷம் பொங்கலுக்கு ரஜினியின் 'நான் மகான் அல்ல' படமும் ரிலீஸ். அதனால தேர்வீதி பசங்க செம கெத்தா இருந்தானுங்க.

அந்த நேரத்துல எங்க வீதில ரசிகர் மன்றம் ஆரம்பிச்சதுதான் ஒரு பரபரப்பை ஏற்படுத்துச்சு. ரவி அண்ணன் எப்ப நளினி ஃபேன் ஆனாருன்னு எல்லாம் எங்களுக்குத் தெரியாது. ரவி அண்ணன் அவங்க பிரண்ட்ஸ் குரூப் எப்பவுமே செம அலப்பறை செய்வாங்க ஊருக்குள்ள‌.

கோயில் திருவிழாவுக்கு கம்பம் நட்டு, திருவிழா முடியற வரைக்கும் சாயங்காலம் பறை, வாத்தியத்தோட இளவட்டப் பசங்க தப்பாட்டம் கம்பத்தைச் சுத்தி குதிச்சு ஆடுவாங்க. கம்பம் குதிக்கறதுன்னு சொல்லுவோம். ரவி அண்ணனும் அவங்க பிரண்ட்சும் கம்பம் குதிக்கக் களம் இறக்கிட்டாங்கன்னா அவ்வளவு அழகா தப்பாட்டம். மூச்சப் புடிச்சு ஆடுவாங்க.ஆடி முடிச்சு.சும்மா ஒரு எத்துல எல்லாரும் விசில் அடிச்சு, எம்பிக் குதிப்பாங்க பாக்கணுமே! கூட்டம் கெறங்கிப் போயிடும். கை தட்டல் கொள்ளாது.

வயசுப் பொண்ணுங்க கம்பத்துக்கு தினமும் மஞ்சத்தண்ணி ஊத்தறதுக்காக வருவாங்க. அவங்க பாக்கணும்னே இவனுக சும்மா சுத்திச் சுத்திப் பட்டைய கெளப்பி ஆடுவாங்க. அவங்க ஆடி முடிச்சு கொஞ்சம் பிரேக் எடுக்கும்போது சின்னப் பசங்க‌ எங்க குரூப் இடையிலே ஆடுவோம். தேர்வீதிப் பசங்க எங்களப் பாத்து சொணங்கிப் போயிடுவானுங்க. அவனுங்களுக்கு பெருசா ஆட வராது. அப்ப நாங்க செமயா கெத்து காட்டுவோம்.கூட்டத்துல ஆடறவங்களுக்கு சோடா, கலர், சர்பத், மோருன்னு நெறய ஸ்பான்சர் செய்வாங்க. ரவி அண்ணன், அவங்க‌ பிரண்ட்ஸ் தயவுல நாங்க பூந்து வெளையாடுவோம். எதையும் விட்டு வெக்கமாட்டோம்.

ரவி அண்ணன் கார், பைக் ரிப்பேர் வேலைல செம திறமையான ஆளு. லிங்கமுத்து அண்ணன் கிட்டதான் வேல பழகுனாரு. ஒரு ரெண்டு மூணு வருசத்துக்குள்ளயே இங்க ஒர்க்‌ஷாப் வெச்சுட்டாரு. அண்ணன் கடை எப்பவும் கலகலன்னு இருக்கும். எங்க வயசுப் பசங்க எல்லார் கிட்டயும் செம பிரண்ட்லியா இருப்பாரு. எங்க செட்ல நாங்க எல்லாரும் லூனா, சுவேகா, டிவிஎஸ் 50ன்னு டூ வீலர் வண்டி ஓட்டிப் பழகுனது அண்ணன் கடைலதான். அப்ப நாங்க வெச்சிருந்த‌ லெவன் ஸ்டார் கிரிக்கெட் டீமை மதிச்சு எங்களுக்கு சியாமளா ஸ்டோர்ல கிரிக்கெட் பேட் வாங்கிக் குடுத்தது ரவி அண்ணன்தான்.

வெள்ளிக்கிழமை ராத்திரி பூஜை போட்டு, திருஷ்டி சுத்திட்டுதான் கடையச் சாத்துவாரு. தேங்காய், வெல்லம், பொரி கடலைக்கு ராத்திரி எட்டு மணியில இருந்தே நாங்க அண்ணன் கடையிலதான் இருப்போம். என்னிக்காவது பக்கத்துல இருக்குற ஓணவாய் அண்ணாச்சி ஸ்டால்ல இருந்து புரோட்டா சால்னா எல்லாருக்கும் எங்க‌ளுக்கும் வரும். ஞாயித்துக்கெழம கேரம் போர்டு விளையாடறது, பெரிய ரேடியோ செட்டுல மத்தியானம் சிறுவர் உலகம் கேக்கறது, கடைக்குப் பின்னாடி காலி இடத்துல கிரிக்கெட் வெளயாடறது.இப்படி நெறய நேரம் நாங்க ரவி அண்ணன் கடையிலதான் இருப்போம்.

இப்ப உங்களுக்கு விஜி அண்ணனை அறிமுகப்படுத்தணும். விஜி அண்ணன் கட்சி, வியாபாரம், லே-அவுட் பிஸினஸ்னு ஊர்ல பெரிய ஆளு. விஜி அண்ணன் வண்டிங்களுக்கு எல்லாம் ரவி அண்ணன்தான் வேல செஞ்சு குடுப்பாரு. ரவி அண்ணனும் விஜி அண்ணனும் ரொம்ப பிரண்ட்ஸ்.கிட்டத்தட்ட ஒரு வயசு. ஒரே ஸ்கூல்ல படிச்சவங்க. விஜி அண்ணன் கடைக்கு வந்து முன்னால சேர் போட்டு உக்காந்தா வீதியிலயே அமைதி வந்துரும்னா பாருங்க. இதனாலயே ரவி அண்ணன் செம கெத்து ஆயிட்டாரு.

ரசிகர் மன்றத்துக்கு நெறய‌ பணம் செலவு செஞ்சதும் விஜி அண்ணன்தான். அந்த அண்ணனுக்குப் பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல. 'மன்மத ராஜாக்கள்' படம் செண்பகம் தியேட்டர்ல ரிலீஸ். பக்கத்துல மலர் தியேட்டர்ல 'நான் மகான் அல்ல’ ரிலீஸ். நாங்க தேர்வீதி பசங்களுக்கு முன்னாடி பட்டைய கெளப்பணும்னு அந்தப் பொங்கலுக்கு தீயா வேல செஞ்சோம். எங்க தெருவில் பெரும்பாலும் எல்லாருக்கும் முதல் நாள், முதல் ஷோ டிக்கெட். முடிஞ்சா உடனே காசு வசூல் பண்ணிட்டு டிக்கெட். இல்லயா.அப்பறமா குடுங்கன்னு, மன்சூர் அண்ணன்தான் வீடு வீடாக் குடுத்தாங்க. நம்ம விஜி அண்ணன் இருக்கும்போது பணத்துக்கு என்னடா பயம்னு. ஒரு தில்லுதான்.

மன்றம் திறப்பு விழா. அப்புறம் ஒரு நாலஞ்சு நாள்ல படம் ரிலீஸ். விஜி அண்ணன்தான் மன்றத்தத் திறந்து வெச்சாரு. அந்த வருசம் பொங்கல் லீவு மறக்கவே முடியாது. ம‌ன்றம் திறப்பு விழா அன்னிக்கு எங்க எல்லாருக்கும் சட்டைல ரசிகர் மன்றம் பேட்ஜ். அதெல்லாம் அந்த வயசுல ரொம்ப புதுசு எங்களுக்கு.

மன்றம் திறப்பு விழா முடிஞ்சு, முதல் ஷோவுக்கு வர்றவங்களுக்கு சாக்லேட் வெச்சு 'தங்கள் வருகைக்கு நன்றி' அட்டைகள். லேடீஸ்க்கு ரோஜாப்பூ, சாக்லேட் வெச்சு நன்றி அட்டைகள், முதல்ல வர்ற லேடீஸ் கொஞ்சம் பேருக்கு சில்வர் பாத்திரம். கட் அவுட் செய்யறத வேடிக்கை பாக்கறது. பட்டாசு எடுத்து பத்திரப்படுத்தி வெக்கறது. ஸ்கிரீன் மேல வீசறதுக்கு லாட்டரிச் சீட்டு, கலர் பேப்பர், ஜிகினா பேப்பர் எல்லாம் சிறுசு சிறுசா வெட்டி சின்னச் சின்ன சாக்குப்பைல கட்டி வெக்கறது. நாள் பொழுது போறதே தெரியல.

விஜி அண்ணன் சொல்லி, விஜி அண்ணனுக்காகத்தான் இந்த ரசிகர் மன்றம் திறந்ததுன்னும்.விஜி அண்ணன் இன்னும் கொஞ்ச நாளில் படம் தயாரிக்கப் போறதாவும் பேச்செல்லாம் இருந்துச்சு. ரவி அண்ணன் லவ் மேட்டர் பத்தியும் அவங்களுக்குள்ள கிண்டல் பண்ணி பேசிக்குவாங்க. ரவி அண்ணன் லவ் பத்தியோ, யாரை லவ் பண்றாருன்னோ எங்களுக்கு எதுவும் தெரியாது.

படம் ரிலீஸ். ரசிகர் மன்ற முதல் காட்சி. ஹவுஸ்ஃபுல். வந்த கூட்டத்தில் முக்கால்வாசி எங்க தெரு, அதைச் சுத்தி உள்ளவங்கதான். நாங்க எல்லாரும் காலைல எட்டு மணிக்கே தியேட்டர் போயிட்டோம். ரவி அண்ணன் அவங்க பிரண்ட்ஸ் எல்லாரும் வேட்டி சட்டையில் செமயா கலக்கறாங்க. மன்சூர் அண்ணன் செண்பகம் தியேட்டர்லதான் வேல பாத்தாரு. அவருதான் லேடீஸ் பாக்ஸ் டிக்கெட் கவுண்டர்ல டிக்கெட் குடுப்பாரு. எங்க செட் பசங்களுக்கும் பாக்ஸ் பால்கனியில்தான் டிக்கெட். எல்லாம் ரவி அண்ணன், விஜி அண்ணன் தயவுதான். ரவி அண்ணன் அவங்க பிரண்ட்ஸ் எல்லாரும் பால்கனியில.

ரவி அண்ணன் கடைக்கு எதிர்வீட்டுல இருந்த அக்கா காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்துச்சு. எப்பவும் சிரிச்ச முகம். செம அழகா இருப்பாங்க. அக்காவும் அவங்க பிரண்ட்ஸ் கொஞ்சம் பேரும் பால்கனியில் இருக்காங்க.

பூவை அள்ளி வீசறது. கலர் பேப்பர் வீசறது. விசில் சத்தமும் ஆட்டமும். ரவி அண்ணனும் அவங்க பிரண்ட்ஸ்ம் செம ரகள. எதிர்வீட்டு அக்காவுக்கு அன்னிக்கு சில்வர் குத்துவிளக்கு, ரவி அண்ணன்தான் குடுத்தாரு. இன்டர்வெல்ல எல்லாருக்கும், அக்காவுக்கும் அவங்க பிரண்ட்ஸ்களுக்கும், முட்டை போண்டா, ரோஸ் மில்க் எல்லாம் ரவி அண்ணன்தான் வாங்கிக் குடுத்துச்சு. அதுக்கு அக்கா தேங்ஸ் சொல்ல ரவி அண்ணன் அப்படியே மேல பறக்குது.

படம் முடிஞ்சதும் வெளியே வந்தோம். அன்னிக்கு தியேட்டர்ல ரவி அண்ணனுக்கும் விஜி அண்ணனுக்கும் பிரச்சினை ஆயிடுச்சு. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சட்டைய புடிச்சி அடிச்சிக்க போயிட்டாங்க. ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினைன்னு யாருக்கும் தெரியல. நீ செஞ்ச துரோகத்தை நான் மறக்கவே மாட்டண்டான்னு விஜி அண்ணன் கத்தறாரு. நீ செஞ்சதுதாண்டா துரோகம்னு ரவி அண்ணன் சத்தம் போடறாரு. மன்சூர் அண்ணன்தான் ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டாரு. என்ன நடக்குதுன்னே எங்க யாருக்குமே புரியல.

அதுக்கப்புறம் விஜி அண்ணன் கடைக்கு வரவே இல்லை. ஏதோ பணம் குடுத்து வாங்குனதுலதான் பிரச்சனை, ரசிகர் மன்றம் ஆரம்பிக்கச் சொன்னதே விஜி அண்ணன்தான். அவ்வளவு பணம் செலவு பண்ணதும் அவருதான்.அந்த கணக்கு வழக்குலதான் பிரச்சனை ஆயிடுச்சு... இப்படி ஆளாளுக்கு ஏதேதோ சொன்னாங்க. ஆனா உண்மையில என்ன பிரச்சனைன்னு யாருக்கும் தெரியல. விஜி அண்ணனோட ஒயிட் அம்பாசடர் அப்படியே ரவி அண்ணன் வேலை செய்யாமலேயே கடையிலேயே கெடந்துச்சு.

அன்னிக்கு ராத்திரி, மன்சூர் அண்ணன்கிட்ட ரவி அண்ணன் அப்படி அழுகுது. "எப்படியாவது நீயும் நம்ம பிரண்ட்சும் தாண்டா எங்களச் சேத்து வெக்கணும். அவன் குறுக்க வந்து குழப்பற மாதிரி தெரியுதுடா. அதனால தாண்டா தியேட்டர்லயே பிரச்சனை வந்துச்சு. நீயும் தங்கச்சியும்தாண்டா அவகிட்ட பேசணும். கல்யாணத்துக்கு ஒத்துக்க வெக்கணும். இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்த முடிக்கணும்டா. அவ இல்லன்னா செத்துருவண்டான்னு" ஓன்னு அழுகுது. மன்சூர் அண்ணந்தான் சமாதானப்படுத்தி தேத்துனாரு.

அப்புறம் ஒரு ரெண்டு மூணு நாள் இருக்கும். திடீர்னு அந்த அக்காவுக்கும் விஜி அண்ணனுக்கும் கல்யாணம் நடந்துடுச்சு. வெளியூர்ல பண்ணிக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டதும் வீதியே பரப‌ரப்பாயிடுச்சு.

அதுல இருந்து ரவி அண்ணன் கடைப்பக்கமே வரல. கடைல வேல செஞ்ச பசங்க, மிச்சம் இருந்த வண்டிகளை எல்லாம் வேல பாத்தும் பாக்காம அப்படி அப்படியே செட்டில் பண்ணி விட்டாங்க. கடையும் அப்படியே ரொம்ப நாள் பூட்டியே கெடந்துச்சு. அந்த சம்மர் லீவுல கடையை திடீர்னு காலி பண்ணிட்டாங்க. ரொம்ப நாள் கழிச்சுதான் எங்களுக்குத் தெரிஞ்சுச்சு, ரவி அண்ணன் மன்சூர் அண்ணனோட பெரியம்மா மகன்கூட துபாய் போயிடுச்சுன்னு. அங்க ஒர்க் ஷாப் வேல பாக்குதுன்னு.

கொஞ்சம் வருஷம் இருக்கும். விஜி அண்ணனை ஏதோ தகராறுல கறிக்கடை சந்துல வெட்டிக் கொன்னுட்டாங்க. ஊரே கதிகலங்கி போயிடுச்சு.

கொஞ்சம் நாள் முந்தி ரவி அண்ணனை ஏர்போர்ட்ல பாத்தேன். அவரு பையன் சிங்க‌ப்பூர்ல இருந்து வர்றான்னு ரிசீவ் பண்ண வந்த்திருந்தாரு. அப்ப‌டியே இருக்காரு. வயசே தெரியலே. எதையும் மறக்கல. அன்னிக்கு எப்படியோ.அப்படியே. அதே அன்பு. அன்னிக்குதான் நான் ரவி அண்ணனுக்கு என் பணத்துல காபி வாங்கி குடுத்தேன்.

ரொம்ப நேரம் மனசுவிட்டுப் பேசுனாரு. "விவரம் இல்லாத முட்டாள்தனம்டா. அவ. அவனத்தான் ஆசப்பட்டிருக்கா. ஸாரி... அவங்கன்னு சொல்லணும். பணம், வசதி. அதான். நான் பெருசா தெரியலபோல. இப்ப பாரு. அவ்வளவு சம்பாதிச்சு இருக்கேன். என்னப் புடிச்சிருக்குன்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அது என் முட்டாள்தனம். இதுல என்னன்னா நானும் அவனும் அவ்வளவு பழகியிருந்தும் இதை மாத்திரம் பேசிக்கவே இல்ல. இதுதான் விதின்னா, நாம பேசியிருந்தா மாத்திரம் எல்லாம் மாறிப்போகுமா என்ன? இதுல அவன் தப்பு ஒண்ணுமே இல்ல. விஜி தங்கமானவன். எவ்வளவு செஞ்சிருக்கான் தெரியுமா. அவனப் புரிஞ்சிக்காம நாந்தான் அறிவில்லாம அவன் செத்ததுக்குகூட போகல. நான் எவ்வளவு பெரிய பாவிடா. அவன் பொண்ணு கல்யாணத்துக்கு போயிருந்தேன். தங்கத்துல செயின் வாங்கிப் போட்டேன்."

அண்ணன் முகத்துல அவ்வளவு பெருமை, சந்தோஷம்.

"அவன் படத்தை ஃபிளக்ஸ்ல பாத்துட்டு மனசு தாங்கலடா. அவன் குழந்தைங்க நிமிந்து மேலுக்கு வந்துடுச்சுங்க. ஆண்டவன் அவங்கள நல்லா வெச்சிருக்கணும். அது போதும்"

அப்படியே அவர் கையைத் திருப்பிக்காட்டினார். "அவன் எப்பவும் எங்கூடத்தான் இருக்கான்."

ரவி அண்ணன் கையில் 'நளினிப்ரியன் விஜி' ன்னு பச்ச குத்தி இருக்கு.
ரமேஷ் கோபாலகிருஷ்ணன்,
பியோரியா, அரிசோனா
Share: 




© Copyright 2020 Tamilonline