Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
அலமாரி
பாரதியார் சொன்ன கதை: புழுவும் எறும்பும்
- அரவிந்த்|செப்டம்பர் 2026|
Share:
கதை என்றால் பலருக்கு அதிக விருப்பம். அதனால்தான் சிலர் எடுத்ததற்கெல்லாம் கதை எழுதுகிறார்கள். பாட்டிமார்கூடக் கதை சொல்கிறார்கள். பாரதியாரும் கதை சொன்னார். இவைகளில் பாட்டிமார் கதை மிக நீளம். அதற்குத் தலையுமிராது. காலுமிராது. அந்த ரகத்தில் எழுதுபவர்கள் கதையும் அப்படித்தான். ஐந்தாறு நாளைக்குக்கூடப் படிக்கலாம். கேட்கலாம். இறுதியில் எல்லாம் வழவழா! ஏதாவது கருத்து? விலைக்கு வாங்கினால்தான். பாரதியார் கதை அந்த ரகத்தைச் சேர்ந்ததில்லை. அது அளவில் சிறிதுதான். ஆனால் கருத்து? ஆழம்! நீளம்! அழகு! அனைத்தும் நிறைந்தவை. அதை அவர் காலத்திலேயே அறிந்தவர் சிலர். அவர்களில் வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார் ஒருவர்.

இருவரும் ஏககாலத்தில் சுதேசமித்திரன் காரியாலயத்தில் வேலை செய்தார்கள். பெயரளவில் எப்படி ஒத்துக் கூடினார்களோ, அப்படியே மற்றவைகளிலும். ஆம்! ஒருவர் வீரகவி. மற்றவர் வரகவி அல்லவா? ஒன்றுபட வேண்டியதுதானே? அதிலும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற தாரக மந்திரத்தை வீரகவி, வரகவியிடம் கூறினால், அதற்காக ஒரு கதையையும் சொன்னால் வரகவி சும்மா இருப்பாரா? அதை அப்படியே (பழைய ஆனந்த விகடனில்) எழுதிவிட்டார்.

1905ல் ஒருநாள். பொழுது மலைவாயிலில் விழுந்தருணம். மஞ்சள் வெய்யில். இளந்தென்றல். வீரகவியும் வரகவியும் தங்கள் காரியாலயத்தில் (சுதேசமித்திரன்) இருந்து வெளியே வந்தனர். அப்பொழுது அங்கு உத்தியோக உழைப்பில் அலுத்த பறவைகளும் (தங்கள் தங்கள் காரியாலயங்களில்) கூண்டில் இருந்து வெளிப்பட்டு, தாராளமாய் மூச்சைவிட்டுக் கொண்டு சென்றன. அதனால் சென்னை அரண்மனைக்காரத் தெரு முழுதும் புத்தீசல் போன்ற உத்தியோகஸ்தர் கும்பலாகவே இருந்தது. அதைக் கண்டார் வீரபாரதி. சும்மா இருப்பாரா?

அவரோ ஒரு சுதந்தர வீரர். "ஊருக்கு நல்லது சொல்வேன். எனக்கு, உண்மை தெரிந்தது சொல்வேன். யாருக்கும் அஞ்சிடமாட்டேன். இங்கு, யாவரும் ஒன்றெனக் கொள்வேன்" என்று கூறும் ஒப்பற்ற தியாகி.

புல்லடிமைத் தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமன நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி


என்று விளக்கிய இணையற்ற வீரர். அவர் நிலையற்ற நெல்லிக்காய் மூட்டைபோன்ற உத்தியோகஸ்தர்களைக் கண்டால், கேட்பானேன்? அவ்வளவுதான்! பார்த்தார் வரகவியை. அவரும் திரும்பினார். உடனே, "பாரதி, பார்! குழிவிழுந்த கண்கள். பொலிவிழந்த முகம். களிமண் நிறைந்த தலை. முண்டாசென்னும் மூட்டை. இவைகளைச் சுமந்துகொண்டு செல்லும் அடிமைகளை. அந்தோ! சிவ சிவ. நெஞ்சு பொறுக்கு தில்லையே! இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து விட்டால்! என்று ஒழியுமோ இந்த அடிமை வாழ்க்கை" என்று கூறிக் கொண்டே நடந்தார். வரகவியும் பின்தொடர்ந்தார். இருவரும் கடற்கரையை அடைந்தனர். புல் தரையிலும் அமர்ந்தனர்.

அங்கு ஒரு சிறு புழு நெளிந்து நெளிந்து நகர்ந்து சென்றது. கண்டார் வீரகவி. கதை சொல்லத் தொடங்கிவிட்டார். வீரகவி கதை சொல்லத் தொடங்கி விட்டால் வரகவி பதில் கூறுவதே இல்லை. அவர் மட்டிலுமா? யாராய் இருந்தாலும் சரிதான். "உம்" போட வேண்டியதுதான். அதேபோல் வரகவியும் "உம்" போட்டார். அதை "அவர் பேசும்போது நான் குறுக்கே பேசுவது கிடையாது. அவரிடம் எனக்கு மரியாதையுடன் கூடிய பக்தி உண்டு. அது என்னை அறியாமலே அவரிடம் எனக்கு ஏற்பட்டதாகும்" என்கிறார் சமார்த்தியமாக வரகவி. எப்படி இருந்தால் நமக்கென்ன? நமக்கு வேண்டியது கதையும் கருத்தும். அவ்வளவுதான் வரகவி "உம்" போடப் போட வீரகவியின் கதையும் தொடர்ந்தது.

"பாரதி, இதோ பார்! அழகான புழு ஒன்று நகர்ந்து செல்கிறது. இதன் உடம்பில் மேடு, பள்ளம், கோணல், வளைவு, கொம்பு. மயிர் ஒன்றும் இல்லை. இந்தப் புழு சிறந்த ஞானி! "சென்றது கருதார். நாளைச் சேர்வதும் எண்ணார்" என்றபடி முன் பின் கவலையே இது கொள்வதில்லை. "பதறின காரியம் சிதறும்" என்பது புழுவுக்கு நன்றாய்த் தெரியும். இது பல கலைகள் படித்திருக்கிறது. அதுவுந் தவிர இந்தப் புழு மிகவும் கீர்த்தி பெற்ற நீரிலே பிறந்தது. இதன் சுற்றத்தார்களில் பலர் நேர்த்தியான இறகுகள் படைத்தவர். வானத்திலே பறந்து அங்குள்ள தத்துவங்களை எல்லாம் உணர்ந்து புகழ் பெற்றவர். உயர்ந்த மரக்கிளைகளின் மீது சென்று, அங்குள்ள பூக்களின் தேனைப் பருகி ஆநந்தம் அடைந்ததாகச் சரித்திரம் இருக்கிறது.

இந்தப் புழு பட்டுப்பூச்சி கோத்திரத்தில், வண்ணாத்திப் பூச்சி குலத்தில் பிறந்தது. இதற்கு இரக்க குணம் அதிகம். இது உணவுக்காக மற்றோர் உயிரைக் கொலை செய்யாது. 'அஹிம்ஸா பரமோ தர்ம' என்ற வேத விதிப்படி இது நடந்து வருகிறது.

அடுத்து ஊர்ந்து செல்லும் சிற்றெறும்புகளைப் பார்! அது சிறிதும் அழகில்லாத உருவம். அதற்கு உடலிலோ சதைப்பற்றுச் சிறிதுமில்லை. உருவமா, கணக்கா எதுவுமில்லை. வித்தையும் ஞானமும் சிறிதுகூடக் கிடையாது. ஆயினும் எப்போதும் முயற்சி; எப்போதும் சலனம். இப்போது வயிறு நிறைந்தாலும் சரி. மறுபடியும் உடனே புறப்படும். நாளைக்கு வேண்டிய உணவைத் தேடும். அது மட்டுமா? கோடைநாளிலே மாரிக்காலத்துக்கு வேண்டிய உணவைக்கூடத் தேடிவைத்துக் கொள்ளும். எப்போதும் அவசரம்! எப்போதும் அவசரம்!

இந்தச் சிற்றெறும்புகளிலும் சிலவற்றிற்கு இறகுண்டு. ஆயினும் அவ்விறகு வண்ணாத்தி பூச்சி, பட்டுப் பூச்சிகளின் சிறகுகளைப் போல அதிக உயரம் பறக்க ஏற்றவையல்ல. அவை அழகும் சக்தியுமில்லாத இறகுகள். அந்த எறும்புக்கு கோத்திரமுமில்லை; குலமும் இல்லை. அதற்கு இரக்க குணமும் கிடையாது. அத்துடன் கோபமும் குரூர விருத்தியும் அதிகம். அது தன் உணவுக்காக எதையும் கொன்று தின்றுவிடும்.

அத்தகைய எறும்பையும் இந்தப் புழுவையும் பற்றிய விருத்தாந்தம் ஒன்று கூறப்போகிறேன். கவனி! ஒருநாள் ஒரு புழு இப்படித்தான் தன்னிச்சையாய்ப் போய்க் கொண்டிருந்தது. எறும்பு ஒன்று அதை அணுகியது. புழு உடனே எறும்பைப் பார்த்து, "தூர விலகிப்போ. கிட்ட வராதே" என்றது. ஏன் தெரியுமா? எறும்பு இறைச்சி தின்னும் பிராணி.

எறும்பு, புழு சொன்னதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் அருகே சென்றது. "எங்கே வந்தாய்?'' என்று கேட்டது புழு.

"உன்னைத் தின்னும் பொருட்டு." என்றது எறும்பு.

"அட சவமே (சவமே, சவமே என்று அடிக்கடி பாரதியார் தம் வார்த்தையிற் கலந்து பேசுவது வழக்கம்) எம்முடைய உடலின் பருமன் என்ன? உன்னுடைய உருவம் எவ்வளவு? உன்னை ஒருகணத்தில் நசுக்கிப் போடுவேன். என்ன துணிபு! விலகிப்போ" என்று கட்டளை இட்டது புழு. இதற்குள் எறும்பு புழுவை நெருங்கி அதன் உடலின் மத்தியைத் தன் சிறிய பற்களினால் கடித்துப் பற்றிக் கொண்டது.

"சண்டாளப் பயலே! நீ நாசமாய்ப்போக! விடடா!" என்று கூச்சலிட்டு உடலை மாறி மாறி வளைத்தது புழு.

சிற்றெறும்பு ஒன்றையும் கவனிக்கவில்லை. அப்பால் புழு சிற்றெறும்பைப் பார்த்து "என் அப்பனே! அதிகமாக நோகிறதடா! உனக்குக் கோடி புண்ணியமுண்டு. விட்டுவிடடா!" என்று பிரார்த்தனை செய்து கெஞ்சியது. எறும்பு இதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. ஆயினும் புழுவைத் தனியே இழுப்பது அதற்குச் சிரமமாய் இருந்தது. ஆகவே அது புழுவை விட்டுவிட்டுப் போய்விட்டது.

உடனே புழு, "தொலைந்தான் தாசி மகன்; நாம் பிழைத்தோம்" என்று கூறிக்கொண்டே நகர்ந்தது. அடுத்திருந்த ஒரு செடியின் நிழலை அடைந்தது. அமைதியாக ஜபம் பண்ணுகிற பாவனையில் இருந்தது.

இதற்குள் கூட நான்கு சிற்றெறும்புகளுடன் பழைய எறும்பு அங்கு வந்துவிட்டது. புழு அதைக் கண்டதும் ஓடப்பார்த்தது. முடியவில்லை. துணைக்கும் யாரும் வரவில்லை. அதற்குத் துணை யார் வருவர்! எறும்புகளுக்குள் ஐக்கிய பாவம் உண்டு. ஒன்றுக்கு நான்கு உதவி புரியும். உடனே ஒடிவரும். ஒத்துழைக்கும். புழுக்களுக்குள் அப்படி இல்லை. ஒரு புழுவை மற்றொரு புழு கவனிக்காது. அவரவர் பாடு! தலைக்கு மேலே பாரம்! அவருக்கு நாம் துணை செய்யப் போனால் நமக்கும் ஏதேனும் துன்பம் வந்தாலும் வரும். அப்பப்பா! வேண்டவே வேண்டாம். வழியோடு போகிற சனியனை விலைக்கு வாங்கிக் கொள்வதா என்று ஒவ்வொரு புழுவும் சித்தாந்தம் செய்துகொண்டு சும்மா இருந்துவிடும்.

ஆகவே உடல் பருத்த புழு தனித்து நின்றது. ஒன்று திரண்டு வந்த சிற்றெறும்பு ஐந்தும் கூடி அதைக் கொன்று தின்றும் விட்டன. இதே போல்தான் இருக்கிறது நம் சமூகமும்! (இன்றும் அப்படித்தான் இருக்கிறது நம் சமுதாயம்).

"பாரதி! எறும்பைப்போல் இருப்பது நல்லதா? புழுவைப்போல் இருப்பது நல்லதா? ஆலோசித்துப் பார்!" என்று கூறி விரைந்தெழுந்தார் வீரகவி.

ஒன்று பட்டா லுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்?

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிர முண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி - ஒரு
தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதர ரன்றோ?

வந்தே மாதர மென்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குது மென்போம்.


என்று பாடிக்கொண்டே வேகமாக நடந்தார். அவரைத் தொடர்ந்து வரகவியும் சென்றார். கதையும் முடிந்தது.
தொகுப்பு: அரவிந்த்
(உ.அரு. அருணாசலம் செட்டியார் எழுதிய ‘வீரகவி பாரதியார் (பாவன்மை)’ நூலிலிருந்து)
Share: 




© Copyright 2020 Tamilonline