Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ரங்கனும் நானும்
- ஜடாதரன்|ஆகஸ்டு 2026|
Share:
மீசை வைத்துக் கொண்டபிறகு இந்த 'சுய க்ஷவர' வேலையே பெரும் தொல்லையாகப் போய்விட்டது. மீசையின் ஆசையைத் தியாகம் செய்யவும் மனமில்லை. 'நாற்பது வயதில் என்ன ஐயா, இந்தக் கண்ணறாவி வேண்டிக் கிடக்கிறது' என்று என்னுடைய புதுத் தோற்றத்தை வயதுடன் இணைத்துக் கண்டனம் செய்த 'மைனாரிடி'களும் இருந்தனர். ஆனால் ரங்கனின் மனத்தில் உதித்த ஓர் ஐடியாவை உதாசீனம் செய்ய நான் தயாராக இல்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் அவனுடைய பிடிப்பில் நான் கட்டுண்டு கிடந்த போது. மீசைப் பகுதியை மாத்திரம்

ஞாபகப் பிசகாய் 'ஸோப்' போடாமல் வழித்துக் கொண்டு வந்தவன் திடீரென்று ஒரு பேருண்மையைக் கண்டுபிடித்து விட்டவன் போல எனக்கு விளக்கினான்.

"ஸார்! இப்படியே விட்டுப் பாருங்களேன். உங்களுடைய முகத்துக்கு அலாதிக் களை கட்டுதே மீசை!"

நானும் பார்த்தேன். ஏதோ ஒரு புது மாதிரி 'பவிஷு' வந்துவிட்டாற் போலத் தோன்றியது. ஒட்டிய கன்னங்களுக்கும், நீண்ட மூஞ்சிக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! நமக்கும் ஓர் அழகு வேண்டும் என்று உள்மனத்தில் எழுந்த எண்ணத்தின் பிரமையா? ரங்கன் கேலிக்காக எதையும் சொல்பவனல்ல. அவன் நட்பில் எனக்கு நம்பிக்கையுண்டு.

"ஒங்களுக்கு எடுப்பா அமைஞ்சு போச்சு, ஸார்! ஒரு நாலஞ்சு மாசங்களுக்கு 'ஸெல்ப் செய்து கொள்கிற போதெல்லாம் மீசையை மாத்திரம் இங்கே வந்து 'டிரிம்' பண்ணிக்குங்க! இவ்வளவு வருஷங்களா எனக்கு எப்படி இந்த ஐடியா தோணாமல் போச்சு. அதான் ஸைக்கிள் இருக்குதே, வீடு ஊர்க் கோடியில் இருந்தாலும் ஒரு மிதி மிதிச்சால் வந்துடலாங்களே."

வீட்டினுள் நுழைந்தபோது என் மனைவி 'இதென்ன கூத்து?' என்ற பல்லவியுடன் வரவேற்றாள். குழந்தைகளெல்லாம் புதிதாக. வந்த விருந்தாளியைப் பார்ப்பதுபோல் எட்ட நின்றே வளைய வந்தனர். காரியாலயத்தில் ஒரே பரபரப்பு. என் இடத்துக்கு வராத நண்பர்கள் எல்லாம் கும்பலாக விசாரித்து விட்டுப் போனார்கள். வராந்தாவில் நடக்க முடியவில்லை. 'இப்பத்தான்யா நீ பார்க்கும்படியா இருக்கே' என்று இரண்டொருவர் பகிரங்கமாகவே என் இவ்வளவு வருஷத்திய தோற்றத்தை எத்தனை பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை வாய்விட்டுச் சொல்லிப் போயினர். ஜனநாயக ரீதியில் ரங்கன் வைத்த மீசை அங்கீகாரம் பெற்றுவிட்டது. ஆனால்...? கிராமத்திலிருந்து அப்பா வந்தார். அன்று மாலை வீட்டினுள் நுழையும்போது, சின்னப் பையன்போல் அப்பாவுக்கு எதிரே எப்படித் தலை காட்டுவது என்ற தவிப்புடன் நுழைந்தேன்.

குழந்தைகள் எல்லோருமாகச் சேர்ந்து தாத்தாவுக்கு. முன்கூட்டியே சொல்லி வைத்துவிட்டாற்போலத் தோன்றியது. வழக்கம்போல் அப்பா சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். நான்தான் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், "மீசை வைத்துக்கொண்டிருக்கிறேன் அப்பா! உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபம்...?'' என்று இழுத்தேன்.

எழுபது வயது அப்பா! உலகம் அறிந்தவர். சிரித்தார். "எனக்கென்னடா ஆட்சேபம்? இதெல்லாம்தான் இப்போது 'பாஷனா'கப் போய்விட்டதே. அந்தக் காலத்தில் உன் சித்தப்பா பம்பாயிலே எல்.எல்.பி. படிக்கிறபோது இப்படித்தான் இருப்பான்."

அப்பா என்றால் அப்பாதான். மீசை வைத்துக்கொண்டிருந்த சித்தப்பா வக்கீலுக்குப் படித்துவிட்டுத் திருச்சியில் ஏராளமாகச் சம்பாதித்த பின்னர் இளம் வயதிலேயே காலமாகி விட்டார். பல வருஷங்களுக்குப் பிறகு மீசையின் சாயலில் இழந்துவிட்ட தம்பியின் தோற்றத்தை ஒரே பிள்ளையான என்னிடம் நினைவுகூர்ந்து கண் கலங்கினார்.

மாதம் ஒருமுறை கிராப்புக்காகத்தான் எங்கள் சந்திப்பு என்றிருந்தது போக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை ரங்கனிடம் ஆஜரானேன். ரங்கனைக் கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாகத் தெரியும் எனக்கு. பெரம்பூருக்கு வந்த புதிதில் அவனிடம்தான் என் தலையைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கத் தொடங்கினேன். முதல் சந்திப்பை இன்னமும் நான் மறக்கவில்லை.

ஸ்டேஷனுக்கு எதிரேயிருந்த 'ராயல் சலூனில்' அப்போது அவன் வேலை செய்துகொண்டிருந்தான். எந்தப் புத்தகத்தையும் படிக்காமலே 'நண்பர்களைச் சிநேகம் செய்துகொள்வதெப்படி' என்ற அருங்கலையைத் தன் தொழில் துறைக்காகத் தெரிந்து வைத்திருந்தான். என் பட்டணத்து முதல் 'கிராப்பை' அவன்தான் வெட்டினான். என்னுடைய 'ரெட்டை' மண்டையிடம் எனக்கே ஒரு வெறுப்பு. குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வெந்நீர் ஊற்றிப் பிடித்துவிடப்பட்டிருந்த போதிலும் என் தலையெழுத்துடன் இரட்டை மண்டையும் சாசுவதமாகி விட்டது.

ரங்கன் பொறுமையுடன் கிராப் செய்தான். கிளம்பும்போது வாத்ஸல்யத்துடன் "ரொம்பவும் அதிர்ஷ்டமா இருப்பீங்க ஸார் நீங்க! தலையின் 'ஷேப்'பைப் பார்த்தே சொல்லி விடுவேன், ஸார்" என்ற புகழுரையையும் கூறி வைத்தான். முகஸ்துதிக்கு மசியாதவன் யார்? அந்த நிமிடம் முதலே என் ஆப்த நண்பனாகவே அவனைத் தீர்மானித்து விட்டேன். பிறகு யாரும் என் தலையைத் தொடவிட்டதில்லை நான்.

என் அதிருஷ்டத்தில் என்னைவிட அவனுக்குத்தான் நம்பிக்கை அதிகம். எப்போதாவது நான் அபூர்வமாக எழுதும் கதைகளைப் படித்துவிட்டு, கிராப் செய்துகொள்ள வரும்போது மறக்காமல் பாராட்டி மகிழ்வான்.

"பிரமாதமாய் எழுதித் தள்ளிட்டீங்களே, ஸார்! ஒவ்வொருத்தன் எழுதறதைப் படிச்சா எனக்கு எப்படி வருது தெரியுமா? உங்களுக்கு நிச்சயம் என்னிக்காவது ஒரு' சான்ஸ்' அடிக்கத்தான் போகுது, பாருங்களேன்" என்று அங்கலாய்ப்பான்.

ரங்கன் பேசுவது ஒரு வேதாந்தியினுடைய பேச்சாகவே இருக்கும். ஆனால் லௌகீக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பில்லாத மரக்கட்டை அல்ல அவன்.

ஹைரோடில் பத்து வருடங்களுக்கு முன்பு தனிக் கடை வைத்த பின் ஏழைப் பெண்ணாகப் பார்த்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டான் ரங்கன். இப்போது நான்கு குழந்தைகளுக்குத் தகப்பனாகவும் ஆகிவிட்டான். குடும்பத்தைப் பாசத்துடன் போற்றிக் காப்பாற்றும் அவன் பாங்கே மிகவும் சிலாகிக்கக் கூடியது. கடைக்குப் பின்புறமே வீடு. தனிக் கடை வைத்துவிட்டோம் என்கிற கர்வத்தில் ஆடம்பரத்துக்கு ஆட்களை வைத்துக் கூத்தடிப்பவன் அல்ல அவன். உறவுப் பையன்கள் சிலரைப் பரிவுடன் தயார்செய்து, பேராசையால் அவர்கள் ஓடிவிட்ட பிறகும் பரிவு காட்டும் சமரச நோக்கு அவனுடையது.

ரங்கனுக்குத் தெய்வ நம்பிக்கை அதிகம். கடையில் பெரிதாகப் பிள்ளையார் படம் மணத்துடன் கொலுவிருக்கும். ஒரு பக்கத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகளின் படம்; மற்றொரு புறம் மௌன சுவாமிகளின் உருவம் பூக்கோலத்துடன் திகழும். சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பு அவன்மேல் விழுந்து விட்டது. நோயாளியான அண்ணனின் குடும்பப் பராமரிப்பு அவனையே சார்ந்தது. தாய், தகப்பன் கிடையாது, ஒரு கிழப் பெரியப்பாதான் – அப்பனுடன் கூடப் பிறந்தவர் - ரங்கனுக்குக் கார்டியன்.

ரங்கனின் குழந்தைகளைக் கட்டி மேய்த்துக் கொண்டு கடை வாசலில் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்பதுதான் பெரியப்பாவின் வேலை. மனைவியைக் கொண்ட இடத்திலும் வசதியில்லை. அவர்களையும் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளத் தயங்க மாட்டான். பீடி, சிகரெட் முதலிய கெட்ட பழக்கங்கள் அவனை அண்டுவதற்கே அஞ்சும். உழைத்துச் சம்பாதித்து உற்றாரையும், உறவினரையும் மகிழ்விப்பதையே ஒரு நிறைவாகக் கருதுவான்.

மெஷினும், கத்தியும், கத்தரியும், சீப்பும் அவன் கைகளின் லாகவத்தில் சிறப்பாகச் செயல்பட்டு ரங்கன், கிராப்புக்குத் தனி மவுசையே ஏற்படுத்தி யிருந்தன. அவரவர் அந்தஸ்துக்கேற்ப இதமாகப் பேசுவான். வாழ்க்கையின் கஷ்டங்களைக் கண்டு பொருமுவான்; வசதிகள் பெருகிவிட்ட நாகரிகத்தையும் மெச்சுவான். ரயில்வே ஒர்க் ஷாப், மில் தொழிலாள இளைஞர்களுக்கு 'ரங்கன்' என்றால் உயிர்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு இருந்த பெரம்பூராகவா இருக்கிறது இப்போது? தொழிலகங்கள் பெருகிவிட்டன; புதிய வீடுகள் ஏராளமாக முளைத்து விட்டன. நெரியும் ஜனத்திரளுக்கு ஏற்ப, புதிய சலூன்களும், லாண்டரிகளும், மற்றக் கடைகளும் வியாபாரத்தை அதிகமாக்கி என்றுமில்லாத அளவுக்கல்லவா சுறுசுறுப்பை உண்டுபண்ணி விட்டன?

ரங்கன் கடையிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவனிடம் 'கிராப்' செய்துகொண்ட ஹைஸ்கூல் பையன்கள் மடமடவென்று வளர்ந்து, வேலைக்குப் போய் ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும் புது உலகத் துடிப்பை உணர்ந்து கொண்டவர்களாய்ப் பறந்து கொண்டிருந்தனர்.

அதிக வருவாய்க்கேற்பச் செலவழித்துப் பழக்கப்பட்டுவிட்ட ரங்கனுக்குக் கையில் கொஞ்சம் காசு தங்கவில்லையே என்ற குறை இலேசாகத் தலைநீட்டியது. என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. கணிசமாகப் பணம் புரட்டி உறவுப் பையன் ஒருவனை வரவழைத்து மளிகைக் கடை ஒன்று போட்டான். போன வருஷம் நடந்தது இது. ஆறு மாதம் 'பிஸினஸ்' நடந்தது. போதிய அநுபவம் இல்லாமல் கடை நொடித்துப் போய் விட்டது.

'இடி' விழுந்தது போல் ஆகிவிட்டான் ரங்கன். ஆனால் பேச்சில் தைரியம் குறையவில்லை.

"என்ன ரங்கா, புதிய வியாபாரம் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையா?" என்று சமயசந்தர்ப்பம் தெரியாமல் கேட்டுவிட்டேன் அப்போது. "அதெல்லாம் நமக்குச் சரிப்படாது ஸார்! நம்ப தொழில்தான் நமக்கு லாயக்கு. அதற்குக் கொடுப்பினை வேண்டும். ஸார், எல்லோரும் அவசரமாகப் பணம் பண்ணுகிறார்களே என்று நானும் ஆசைப்பட்டு ஒரு முயற்சி செய்தேன். தோற்றுப் போனேன். என் கத்திரியும், மிஷினும்தான் எனக்குச் சோறு போடும். மற்றவை வீண் ஆசை." என்று அந்தத் தோல்வியை ஒரு பெரிய வாழ்க்கைப் படிப்பினையாக ஒப்புக் கொண்டுவிட்டவன் போலப் பேசினான். ஆனாலும் பணம் பண்ணவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு அந்த முயற்சியில் வீழ்ந்துவிட்ட அவனை உள்ளூற ஓர் ஏக்கமே பிடித்துக் கொண்டுவிட்டது போலத் தோன்றியது. எவ்வளவு வேகத்துடன் அந்த விபரீத ஆசை எழுந்ததோ, அதே வேகத்தில் வீழ்ச்சியையும் அது கொண்டு வந்துவிட்டது.

கட்டை குட்டையான வாளிப்பான உடல் ரங்கனுக்கு. நோயே அறியாதவன். அடிக்கடி ஆயாசம் கொள்ளலானான். கடன் தொல்லை வேறு புதிதாக அழுத்தின. முன்போல் எல்லா வாடிக்கைக்காரர்களையும் அவனே கவனித்து அனுப்ப முடியவில்லை. அரை மனத்துடன் வேறு வழியின்றி ஓர் ஆளைக் கடையில் சேர்த்துக் கொண்டான்.

இந்தத் தடவை. 'கிராப்பு'க்குச் சென்ற போது ரங்கனின் உடம்பைப் பார்த்ததும் எனக்கே 'பகீ'ரென்றது. உடம்பைப் பார்த்துக்கொள்ளுமாறு யோசனை கூறினேன். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அவன் கண்ணெதிரிலேயே என் தலை அவனுடைய உதவியாளனுக்கு மாற்றப்பட்ட நிலைமையை வருத்தத்துடன் அங்கீகரித்து மூலையில் உட்கார்ந்து கொண்டான்.

"ஸாருக்குப் பார்த்துச் செய்யணும் கோவிந்தா, வேறு ஒருத்தர்கிட்டேயும் அவர் வெட்டிக்கிட்டதில்லை. இந்தப் பதினைஞ்சு வருஷங்களாய்" என்று பெருமையுடன் சொன்னவன், "மீசையை மாத்திரம் நீ விட்டுவிடு. நான் கடைசியிலே சரி பார்த்து அனுப்பறேன்" என்று கூறினான்.

அவன் குழந்தைகள் இருவர் 'நாஸ்தா'வுக்காகக் கடையினுள் ஓடி வந்தனர். நான் இதுவரை காணாத சலிப்புடன் அவர்களுக்குக் காசு கொடுத்து விரட்டினான். வேறொருவர் அப்போதுதான் கிராப்பை முடித்துக்கொண்டு கிளம்பினார்.

"என்ன ரங்கா, இந்தத் தடவையிலேருந்து ஒண்ணே கால் ரூபாயா? வர வர என்ன ஏறிக்கிட்டே போகுது?"

ரங்கன் கோபப்படவில்லை; ஆனாலும் பெரிதாகக் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டான், அந்த ஆயாசத்திலும். "இன்னும் பத்து வருஷங்கள் கழிச்சுப் பாருங்க, என்ன ஆகப் போவுதுன்னு. ஒரு கிராப்புக்கு ஐந்து ரூபாய். 'ஹேர் டிரஸ்ஸிங் கார்ப்பரேஷன்'னு ஒண்ணு வந்துடும். பெரிய கட்டடத்திலே ஏராளமான ஆட்கள் அவனவன் இஷ்டப்படி இருப்பானுங்க. தலைகளையெல்லாம் செடி வெட்டற மாதிரி வெட்டித் தள்ளிக்கிட்டு இருப்பானுங்க. ரங்கன் கை 'சொகுசு' கிராப்பெல்லாம் இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். என்னை மாதிரி ஆளுங்களெல்லாம் பெரிய ஹேர் டிரஸிங் ஆபீஸரா எழுநூறு, எண்ணூறு என்று சம்பளம் வாங்கிக்கிட்டு, தூரத்திலே நின்னபடியே, சாய்வாக ஒரு பார்வை பார்த்து, 'ஒ.கே.'ன்னு சொல்லிக்கிட்டிருப்போம். கவுண்டரிலே ஐந்து ரூபா செலுத்தி ரசீது வாங்கினாத்தான் நாற்காலியிலேயே ஒக்கார்த்தி வைப்பாங்க; அதுக்கு 'க்யூ'விலே நிக்கணும். அப்போ என்ன சொல்லப் போறீங்களோ, தெரியாது."

சிரித்துக்கொண்டே போய்விட்டார் அந்த மனிதர். ஆனால் ரங்கனுடைய வர்ணனை ஒரு பெரும் காட்சியாக என் மனக்கண் முன்பு விரிந்தது. காலம் தலைதெறித்து ஓடுகிற வேகத்தில் அதை வெறுங் கற்பனையாகவே என்னால் பாவிக்க முடியவில்லை. சிரிப்பை என்னாலும் அடக்க முடியவில்லை. ரங்கன் என்னையும் விடவில்லை. தொடர்ந்து கூறினான்! "என்ன ஸார், நான் சொல்றது நடக்காதுன்னுட்டா சிரிக்கிறீங்க. நானும் நீங்களும்தான் அன்னிக்கு இருந்த மாதிரியே இப்பவும் இருந்துக் கிட்டிருக்கோம். உலகம் எப்படிப் பறக்குது, தெரியுமா? நீங்க ஆபீசிலே இடுப்பை ஒடிச்சுக்கிட்டு ஓர் இருநூறு ரூபாயும், பத்தாமப் போனா முப்பதுக்கும், நாப்பதுக்கும் கதை எழுதி இன்னும் கொஞ்சமும் சம்பாதிப்பீங்க. நான் என்ன வாழ்ந்தேன்? எவ்வளவு சம்பாரிச்சிருப்பேன்? கையில் காலணா தங்கல்லே. ஆனா எதிர்காலம் இப்படியே இருந்துடாது. சின்னச்சின்னத் தொழில்களுக்கெல்லாம் இனிமே எங்கே மவுசு? இப்பவே நம்ப பயலுக இந்தத் தொழிலுக்கு வர மாட்டேங்குது. அப்போ, ஹேர் டிரஸிங் கார்ப்பரேஷன்தான் பெரிசா வைப்பாங்க! என்னையெல்லாம் எழுநூறு, எண்ணூறுன்னு பெரிய ஹேர் டிரஸிங் ஆபிசராப் போடாமெ, என்ன செய்வாங்க! எனக்கும் அந்த மாதிரி மொத்தமா ஏதாவது பார்த்தால்தான் வி
டியும் போல் தோணுது. ஏன் ஸார், நீங்களும் ஒரு நல்ல கதையா எழுதி 'சினிமா சான்ஸ்' தள்ளிட்டு நாலாயிரம், ஐயாயிரம் தட்டிக் கிட்டுப் போகப்படாது? எவ்வளவு நாட்களாச் சொல்லிக்கிட்டிருக்கேன். உங்ககிட்டே!"

ரங்கன் அதிகாரியாகிப் போய், நான் பின் தங்கிவிடப் போகிறேனோ என்ற பச்சாத்தாபத்தில் என்னிடம் காட்டிய பரிவு, அவன் உள்ளத் தூய்மையை நினைத்து வியக்கச் செய்தது. மனிதர்களில் ரங்கன் எவ்வளவு உயர்ந்தவன்! மறக்காமல் அவன் தன் கையாலேயே மீசையை 'டிரிம்' செய்து அனுப்பினான்.

பத்து நாட்களுக்கு அந்தப் பக்கமே தலை காட்டவில்லை நான். ரங்கனின் எச்சரிக்கையை மறந்து ரேஸரில் என் இஷ்டப்படி மீசையை அலங்கோலமாக்கிக் கொண்டு அதன் கோர சொரூபத்தைக் கண்ணாடியில் காணச் சகிக்காமல் மீண்டும் ரங்கனையே புகலடைய விழைந்தேன்.

கடை வாசலில் பெரியப்பா கிழவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். உள்ளே ரங்கனைக் காணோம். யாருமே இல்லையா? அந்த மௌனமே என்னுள் ஒரு பயங்கர அவஸ்தையைத் தோற்றுவித்தது.

"பெரியவரே, ரங்கன் இல்லியா?" கிழவர் எனக்குப் பதில் சொல்ல மெதுவாக எழுந்தார். கொஞ்சம் செவிடு வேறே.

"சாமி! உங்களுக்குத் தெரியாதுங்களா?"

நான் வாயடைத்து நின்றேன்.

"ரங்கன் போயிட்டானுங்க சாமி!, போயிட்டானுங்க. இன்னிக்கு அஞ்சு நாளா. போன போன சனிக்கிழமை திடீர்னு வீட்டுலே மயக்கமா விழுந்துட்டான். ஆஸ்பத்திரி வண்டியிலே எடுத்துப் போட்டுக்கிட்டு, பெரிய ஆஸ்பத்திரிலே கொண்டு போய்ச் சேர்த்தோம். என்னமோ இருதய நோவுங்களாம். ரெண்டு நாளைக்கு உயிருக்கு மன்றாடிக்கிட்டுக் கிடந்தான். செவ்வாய்க் கிழமையண்ணிக்கு எல்லாம் அடங்கிப் போச்சுங்க. நாலு குழந்தைகளையும், அவளையும் இப்படி நிர்க்கதியா விட்டுட்டுப் போயிட்டானே சாமீ! உங்களுக்குத் தெரியாமப் போயிடுச்சுங்களா?"

வயதில் தளர்ந்த அந்த உடல் விம்மிக் கேவியது! உலகமே சுழல்வதுபோல் இருந்தது எனக்கு. ரங்கனுக்கு மரணமா? அதை எப்படி நான் நம்புவேன்? அவன் மனைவியும், குழந்தைகளும் இனி ஆதரவின்றித் தவிப்பார்களே?

எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும் நல்லவனாக வாழ்வதையே உயர்ந்த லட்சியமாகக் கடைப்பிடித்த அந்தச் செயல்வீரனின் நிழலில் அண்டியிருந்தவர்களுக்குத் தவிப்பு ஏது?

உள்ளே கண்ணாடியில் தெரிந்த என் உருவம் கண் கலங்கி நின்றது. அழுவதற்குக் கூடத் தெம்பில்லையா? கோயில் கிளி மாதிரி மனம் மாத்திரம் 'ரங்கா, ரங்கா' என்று ஓயாது அலறியது. எனக்கு வரப்போகும் அதிருஷ்டத்தைக் காணாமல் எப்படி ரங்கன் என்னை விட்டுப் பிரிந்தான்? என் மீசையிலும் முகத்திலும் அழகைக் கண்ட அந்தக் கலைஞனை இனி எப்போது காண்பேன்?

வீட்டுக்குத் திரும்பியதும் முதல் காரியமாக மீசையை வழித்து எறிந்தேன். ரங்கனுடைய பிரிவின் துக்கத்தைக் கொண்டாடும் புனிதச் சடங்காகவே அதை மதித்தேன். களையிழந்த என்னுடைய முகம் கண்ணீரைக் கொட்டி அவன் ஞாபகத்துக்காக அழுது தீர்த்தது.
ஜடாதரன்
Share: 




© Copyright 2020 Tamilonline